Thursday, February 25, 2010

ஹிஜாப்-வெற்றி


ஹிஜாப் எங்கள் வாழ்வின் எவ்வித முன்னேற்றத்திற்கும் தடையாக இல்லை என்பதை தங்களது சாதனைகள் மூலம் நிரூபித்து வருகின்றார்கள் முஸ்லிம் பெண்கள்.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கி வருகிற பிப்ருவரி 28ஆம் தேதி வரை கனடா நாட்டின் வான்கோவரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் பனிச்சறுக்குத் தொடர்பான பல போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஜியண்ட் ஸ்லாலோம் மற்றும் ஆல்பைன் ஸ்லாலோம் போட்டிகளில் ஈரான் நாட்டு சார்பாக ஹிஜாப் அணிந்துக் கொண்டே பங்கேற்கிறார் மர்ஜான் கல்ஹோர் என்ற முஸ்லிம் பெண். இவர் ஈரானின் சார்பாக கலந்துக் கொள்ளும் முதல் பெண்மணியாவார்.

ஈரான் சார்பாக துவக்க விழாவில் கொடியை ஏந்தி வந்தவரும் இவரே. 21 வயது மருத்துவ பட்டப்படிப்பு மாணவியான கல்ஹோர் கூறுகையில், "இந்த ஒலிம்பிக் எனது கனவாகும். எனது இந்த பங்கேற்பு ஈரானிய பெண்களை ஊக்குவிக்கும். பெரும்பாலான பெண்கள் பனிச்சறுக்கு போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நான் ஒரு முன்மாதிரியாக திகழ்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எனது தலைமுடியை மறைப்பதில் மிகவும் கவனமாக உள்ளேன். எனது தலைமுடி குட்டையானது. ஆதலால் ஒரு தொப்பியை அணிந்துள்ளேன். அதன்மேல் ஹெல்மட் அணிந்துள்ளேன்." என்கிறார் கல்ஹோர்.

விளையாட்டுப் போட்டிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துக் கொண்டு கலந்துக் கொள்வதற்கு மேற்கத்தியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, February 15, 2010

அல்லாஹ்வின் படைப்பின் அதிசயம்.




இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம்.

அது போன்ற அதிசயங்களில் ஒன்றுதான் பறக்கும் கிளி வடிவத்திலான அதிசயப் பூ.

இந்த பூ. வடிவத்தில் மட்டும் கிளிபோல் அல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் `பேரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

இறைவன் திருமறையில்..

நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன். (அல்குர்ஆன் 14:34)

by அபு அஹ்சன்

Sunday, February 14, 2010

இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம் பாகம் 2

மனிதத் தொடக்கம், மனிதனின் நிலை, அவனது சமுதாய நோக்கம். ஆகியவற்றில் உள்ள ஒரே மனித சமுதாய உணர்வின் மீது அசைவற்ற நம்பிக்கை வைத்திருப்பது (திருகுர்ஆன் 4:1, 7:189, 49:13)

மற்றவர்களாக ஆக்கிரமிப்பில் ஈடுபடாத வரை அவர்களது உயிர், உடமை, உரிமைகளுக்கு பாதுகாப்புத் தருவதில் உறுதியாக நிற்பது. (திருகுர்ஆன் 2:190-193,42:42)

நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ணத் தின் அடிப்படையில் சமாதானத்தை உறவு முறைகளில் கடைபிடித்தல். (திருகுர்ஆன் 8:61)

இஸ்லாமிய அரசாங்கத்தின் இறையாண்மைக்குச் சவால் விடுத்து, அதன் உரிமைகளைக் காலில் இட்டு மற்ற நாடுகள் மிதிக்கிறபோது, வேறு வழிகள் பயன் தராவிட்டால் தற்காப்பிற்காகப் போரிடலாம். (திருகுர்ஆன்; 2:190-195,216,218, 22:39-41)

மற்ற நாடுகள் பிரமாணிக்கமாக இருக்கிறவரை அந்த நாடுகள் செய்து கொண்ட உடன்படிக்கைகளை மதித்தல்-நிறைவேற்றுதல். (திருகுர்ஆன் 5:1, 8:55-56,58, 9:3-4)

உள்நாட்டில் அமைதியைக் கட்டிக் காத்து, மக்கள் நலத்தை மேம்படுத்துவது மாத்திரம் போதாது: ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், மனித குலத்தின் ஒட்டுமொத்தமான, பொதுவான முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும். இதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே வற்புறுத்தி வந்தார்கள். ஆகவே, உலக நலத்திற்காகச் சில சமயங்கள் பிரார்த்திப்பதோடு நின்று விடுகிற நாட்களில், மனித குல ஈடேற்றத்திற்காக முன்நிற்பதை, உழைப்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது. ஆகவேதான் இஸ்லாத்தை நாடு கடந்து வந்த நதி என்று அழைக்கலானேன்.

இஸ்லாம்;; ஒரே உலகத்திற்கு நம்மை அழைக்கிற ஒளிவிளக்கு...
உலகத்தின் பல்வேறு சின்னதும் பெரிதுமான பிரசங்கத் தொட்டிகளிலிருந்து ஒரே மாதிரி எடுத்துச் சொல்லப்படுகிற தத்துவார்த்தம் ஒன்று உண்டென்றால் அது ஒரே உலகம் தான்.

உலகம் ஒன்றாக இல்லை என்பதற்குக் காரணம், உலகத்தின் அடிப்படை அழகான மனிதனும் ஒன்றானவன் இல்லை என்பதுதான். அடையாளம் காண்பதற்காகவே மனிதன் வெவ்வேறாகப் படைக்கப்பட்டான். இப்படித்தான் திருகுர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் உலகம், மதம், மொழி, இனம், நாடு என்கிற அடித்தளத்தில் பிரிந்தும், பிளந்தும் கிடக்கிறது.

ஒருவரிடமிருந்து, மற்றொருவர் எதற்காக வேறுமாதிரி படைக்கப்பட்டாரோ அந்த அடிப்படை அவசியத்தையே மனிதகுலம் தாறு மாறாக்கி விட்டது. தாமஸ் மூரிலிருந்து, ஹெச்.ஜி. வெல்ஸ் வரை-அவருக்குப் பிற்பாடும் ஒரே உலகம் கனவுலக சஞ்சாரமாகவே அமைந்துள்ளது.

இப்போது பல்வேறு நாடுகளின் அரசுப் பிரதிநிதிகளின் இரவு உணவுக்குப் பின்னரான மயக்கம் கலந்த பேச்சுகளில் மாத்திரமே இந்த ஒரே உலகம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவை வழிநடத்தும், புதிய ஒரே உலகத்திற்கான அறைகூவலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாம் ஒன்றுதான் அந்த ஒரே உலகத்திற்கான வழி என்பதாகத் தோன்றுகிறது. உலகின் ஒருமை என்பது சில சமுதாயங்கள் ஒன்று சேர்ந்து விடுவது அன்று. சில நாடுகள் ஒரு தலைப்படுவதும் அன்று. இவ்வாறான ஏற்பாடு செய்யப்படுகிற அமைதி, கடந்த காலத்தில் உலக அமைதிக்கே குந்தகம் உண்டாக்கியிருக்கிறது. வரலாற்றில் இதற்கு நிரம்ப உதாரணங்கள் உண்டு. ஒருவர் மற்றொருவரைத் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொன்றால் அது தண்டனைக்குரிய குற்றம் என்றாகி விடுகிறது.

ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கொல்லுகிறபோது, அதன் ஆத்மாவை நெறித்து அழிக்கிறபோது, வெற்றி பெறுகிறவர்களும், தோற்றுப்போகிறவர்களும் தங்களுக்காகப் போரிட்டவர்கள், படுகொலைகளில் ஈடுபட்டவர்களைப் பாராட்டி மகிழுகிறார்கள்.
ஆகவேதான் சில வேளைகளில் ஒரு நாடு கரை கடந்த தேசப்பற்றால் எரிகிறபோது அது ஒரே உலகம் என்கிற தத்துவத்தற்கு எதிராக போகிறது.

தேசப்பற்று அவசியமே. அது அடுத்த நாட்டை வெறுப்பதாக இருத்தல் ஆகாது. நாடு, நாமே ஏற்றுக்கொண்ட ஏற்பாடுதானே! இதில் அடுத்த நாட்டை வெறுப்பதற்கு எங்கே இடமிருக்கிறது?

இவ்வளவு முயன்றும் ஒரு நாட்டை ஏன் நம்மால் ஒற்றுமைப்படுத்த முடியவில்லை? எந்த அடிப்படைகளில் நாட்டு மக்களை ஒன்று சேர்க்க முயலுகிறோமோ, அந்த அடிப்படைகளே தவறானவையாக இருக்கின்றன. இன அடிப்படையில் தனது மக்களை ஒன்று சேர்க்க ஒருவர் முயலுகின்றார். சமயப் பிரிவினைகள் தலைதூக்குகிறபோது, இன ஒற்றுமை எடுபடாமல் போகிறது.

மற்றொருவர் சமய அடிப்படையில் தமது மக்களை ஒன்று திரட்ட முனைகின்றார். இனப் பிரிவுகள் தலைகாட்டி இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகின்றன. தேசீயம் என்கிற அடிப்படையில் வேறொருவர் மக்களை ஒன்று திரட்ட முற்படுகிறார். ஆனால், பல்வேறு மொழிகள், மொழி உணர்வுகள், அதனதன் வரலாறுகள், செழுமைகள், பாரம்பரியங்கள் தேசீய அடிப்படையில் சேர இயலாமல் இந்த முயற்சியை அழித்து விடுகின்றன. காரணம் மொழிதான் மனிதனின் கடைசியான மானச் சின்னம். அந்த மொழியை அவமானப் படுத்திவிட்டு, நாட்டொருமை பேசுவது வீண்வேலை.

ஒருவர் மொழி அடிப்படையில் அம்மொழி பேசுவோரை ஒன்றிணைக்க முயலுகின்றார். அதிலும் அவர் தோல்வியே பெறுகின்றார். காரணம் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணம் படைத்தோர் என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தலைகாட்டி விடுகின்றன. நீங்கள் ஒன்றாக்க நினைக்கிற மனிதத் தொகுதி மண்புழுவைப் போல பிரிந்து கொண்டே போகிறது! ஏன்?

மனிதர்களைப் பிரிக்கிற, பேதப்படுத்துகிற அடிப்படை அலகுகளை வைத்துக் கொண்டு அவர்களை ஒன்று சேர்க்கிற மடத்தனத்தில் இவர்கள் இறங்குகிறார்கள், இம்மாதிரியான தவறான முயற்சிகளுக்கும் வரலாற்றில் வெற்றி வந்ததுண்டு. ஆனால் அந்த வெற்றி நீடித்ததாகவோ, நிலைத்ததாகவோ இருந்ததில்லை.

முதலாவதாக நம்மில் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தில் ஒரு மகத்தான மகரந்தம் மாத்திரமே என்பதை உணர வேண்டும். வானத்தை, அதில் இயங்கும் பல்வேறு கோளங்களை, தாளகதி தப்பாமல் இயங்கும் உடுக்களை, இரு சுடர்களை எண்ணிப் பார்த்தால் இயற்கையில் ஒரு ஒழுங்கு இருப்பது புலப்படும்.

வலம்புரிஜான்

Thursday, February 11, 2010

இந்தியாவின் நாயகன்


பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரபல நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் ஒருவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில் 7 முஸ்லிம்களும் இடம் பிடித்துள்ளனர். டாக்டர் ஜாஹிர் நாயக் 89வது இடத்தை பிடித்துள்ளார்.ஆனால் இந்துமத குருவாக கருதப்படும் பாபா ராம்தேவிற்கு 99-வது இடமும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு 100-வது இடமுமே கிடைத்துள்ளது. இந்தப்பட்டியல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசின் துணை ஏடான சண்டே எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்படுள்ளது.

இதர முஸ்லிம்கள் பிடித்துள்ள தரவரிசை வருமாறு:

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஹ்மத் பட்டேல்(10-வது இடம்). ஏ.ஆர்.ரஹ்மான்(31-வது இடம்), அமீர்கான்(39-வது இடம்),
ஷாருக்கான்(47-வது இடம்),
உமர் அப்துல்லாஹ்(57-வது இடம்),
அஸீம் பிரேம்ஜி(60-வது இடம்).

100 சக்தி வாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் 89-வது இடத்தைப் பெற்றிருக்கும் ஜாஹிர் நாயக்கிற்கு 44-வயது ஆகிறது. 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆன்மீக தலைவர்கள் பட்டியலில் டாக்டர் ஜாஹிர் நாயக் பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டில் அவர்கள் இருவரையும் முந்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஜாஹிர் நாயக் சமீபத்தில் வெளியான உலகை அதிகம் ஈர்த்த 500 முஸ்லிம்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அமெரிக்காவிலிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

டாக்டர் ஜாஹிர் நாயக்கைப் பற்றி சண்டே எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது. "சூட் கோட்டை அணிந்து ஆங்கிலத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் இவாஞ்சலிஸ்ட் ஜாஹிர் நாயக் சக்தி வாய்ந்த பேச்சாளர். இவரது உரையை இவர் நிறுவியுள்ள Peace TV யின் வாயிலாக 125 நாடுகளைச்சார்ந்த 100 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள். கடந்த ஆண்டு வட அமெரிக்காவிலும் Peace TV தனது ஒளிபரப்பை துவங்கியது. இவ்வலைவரிசையின் உருது சானலை 50 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள்.

கடந்த 14 ஆண்டுகளில் இவர் 1300 பொதுநிகழ்ச்சிகளில் உரை நிகழ்த்தியுள்ளார். இதில் 100 உரைகள் கடந்த 2009 ஆம் ஆண்டிலாகும். கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் நடைபெற்ற Peace Conference இல் 10 லட்சம் மக்கள் கலந்துக்கொண்டனர். டாக்டர் ஜாஹிர் நாயக்கின் உரையை மட்டும் கேட்க 2 லட்சம் மக்கள் கூடினர். இதில் மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹீமும் உட்படுவார்.

இந்த ஆண்டு டிசம்பரில் Peace TV பெங்காளி மொழியில் அலைவரிசையைத் துவக்குகிறது. செய்திச்சானல்களை 2012 அல்லது 2013 ஆண்டுல் துவக்கும்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!