அகமதாபாத்: குஜராத் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் முதல்வர்
நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கை
அகமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறித்து கலவர வன்முறையால்
பாதிக்கப்பட்டோர் அதிருப்தியும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர்
கொல்லப்பட்டனர். அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ்
முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் உயிரோடு
எரிக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். முதல்வர் நரேந்திர
மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின்
மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடந்து உச்சநீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன்
தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு
புலனாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம்
சாட்டப்பட்டுள்ள 59 பேருக்கும் தொடர்பில்லை என தெரிவித்தது. இதனால்
வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.
ஆனால் இதை ஜாகியா ஏற்கவில்லை. விசாரணை முறையாக நடக்கவில்லை என்று கூறி
மீண்டும் விசாரிக்க வேண்டு கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
முதலில் இந்த வழக்கை விசாரித்த, அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஜாப்ரிக்கு
அனுமதி தந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஜாகியா, அகமதாபாத்
நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பி.ஜே.கனத்ரா விசாரணை
நடத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று
தீர்ப்பளித்தார். அதில், இந்த கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான
ஆதாரம் ஏதுமில்லை என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின்
அறிக்கையை ஏற்பதாக கூறி உத்தரவிட்டார்.
இதுகுறித்து மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டோர் அதிர்ச்சியும், ஏமாற்றமும்,
அதிருப்தியும் வெளியிட்டனர்.
ரூபா மோடி என்பவர் கூறுகையில்,இது குல்பர்க் சொசைட்டி மட்டும்
சம்பந்தப்பட்டதல்ல. மாறாக, 2002 மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை
பேரின் துயரமும் அடங்கியதாகும். ஜாகியா தன்னால் முடிந்தவரை போராடி விடடார்.
ஆனால் பலன் கிடைக்காதது வருத்தம் தருகிறது என்றார்.
சாய்ரா சிந்தி என்பவர் கூறுகையில், யாருமே எங்களது துயரத்தைக்
கண்டுகொள்ளவில்லை.. நீதித்துறையைத்தான் நம்பியிருந்தோம். ஆனால் எங்களது மன
உறுதியை குலைத்து விட்டது இந்தத் தீர்ப்பு. இருப்பினும் எங்களது கடைசி
மூச்சு வரை நாங்கள் போராடுவோம் என்றார் அவர்.
சலீம்சந்தி என்பவர் கூறுகையில், நிறைய சாட்சிகள் உள்ளன. நீதித்துறை
மீ்ண்டும் அவற்றைப் பார்க்க வேண்டும், பரிசீலிக்க வேண்டும் அதிகாரப்பசி
கொண்டோருக்கு நீதி கிடைத்து விடக் கூடாது என்றார்.
கஸம் மன்சூரி என்பவர் கருத்து தெரிவிக்கையில், ஒரே நிமிடத்தில்தீர்ப்பு
வந்து எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. கலவரத்தில் நான் எனது
குடும்பத்தினர் 10 பேரை இழந்து விட்டேன். நீதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டை
நாடுவோம் என்றார்.
Read more at: http://tamil.oneindia.in/news/india/the-affected-speak-out-190352.html
Read more at: http://tamil.oneindia.in/news/india/the-affected-speak-out-190352.html