Wednesday, October 24, 2012

அரஃபா நாள் நோன்பு

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில்தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.

அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள்அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்தவருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977.

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதைநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 172

அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதைநடைமுறைப் படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்தவேண்டும்.

அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள்என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில்காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில்பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ளவசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வசதியைப்பயன்படுத்தவில்லை.
எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்தகணக்குப் படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத்தேவையில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறைபார்த்த கணக்குப் படி ஒன்பதாம் நாளில் நோன்பு நோற்க வேண்டும்.

நூல்: நோன்பு, நூலாசிரியர்: பி.ஜைனுல்ஆபிதீன் அவர்கள்.


அதனடிப்படையில் (24-10-12 புதன்) இரவு ஸகர் செய்து வியாழன் அரஃபாநோன்பு நோற்க வேண்டும், தாயகத்தில் வியாழன் இரவு ஸகர் செய்து வெள்ளிஅன்று நோன்பு நோற்க வேண்டும் நீங்களும் நோன்பு நோற்று, உங்கள்குடும்பத்தினரையும் நண்பர்களையும் நோன்பு நோற்க ஆர்வமூட்டுங்கள்அல்லாஹ் அருள்புரிவான்.

Sunday, October 14, 2012

PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்


எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!


நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும்  எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.

ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும்  2 MP மட்டுமே வைத்து இருந்த பாஜக, பாபர் மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 88 MPக்களுடன் ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு ரத யாத்திரை மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை' என்ற சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க வைப்பதற்கு பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த அளவு முட்டாள்த்தனமானது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது, இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.

இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்) அதிராம்பட்டினத்தில் ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி இருந்த செக்கடி குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் முதல் நாளே போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' என்று. 'என்ன பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு வேணும்...? 'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' அவ்ளோதான் மேட்டர். விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. அடுத்தநாள், காலையில்... பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது... PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த மேடை உடைக்கப்பட்டு... கீற்று பிய்த்து எறியப்பட்டு...  மைக் செட் லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது என்ற நியூஸ்..!

'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன் நான்' என்ற நிம்மதியான எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது காதுக்குள்..! இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆக வில்லை..! இடம் தான் கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது.  நான் என்னதான் காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் எனது செவிப்பறையை தட்டி எனது சிந்தைக்குள் சென்ற அவர் சொன்ன விஷயம் இதுதான்...........

"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம்  பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.

அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. அந்த பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா இருக்குமோ..? என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் விட்டேன்..! காரணம், எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் வந்தது. "பொது சிவில் சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)

இதேகாலகட்டத்தில்... பல வருடங்களாக மத்ஹப் சட்டங்களை படித்து (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள குளறுபடிகளை கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், ஹனபி ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க ரீதியில் நபி ஸல் அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில் இது நிச்சயம் பிழையானவையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓதவேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம் செல்வது, என்ன செய்வது, என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்... 

தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய் டிவியில் ஒருவரின் சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது. 'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும் இது... உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நாம் நினைச்ச படியே நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...' என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும் அவரைப்பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்... 'இவர்தாண்டா அவர்' என்று..!

அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை 'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் பார்த்தேன். அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் அவர்மீது எனக்கு ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது.  அதேநேரம், 'இவரையா இத்தனை காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?' என்று உள்ளுக்குள் துணுக்குற்றேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின் பேச்சை கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நான்... 'இவரை மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம் அவர்கள் பேச்சை கேட்டு எப்படி விலகி ஓடினேன்' என்று என்னை நானே அவமானத்தால் நொந்து கொண்டேன்.

சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... 'மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

அப்படியாக, ஓரிரு வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது. அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது , கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்தபுகாரி ஏழாவது பாகம்  யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர். 

இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது. ஆமாம்..! அவர் உரையின் படி...  நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..? 

அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
 .
மேலும்,  விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.

அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால்  அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷாஅல்லாஹ்.

இப்படி, என்னைப்போல... எண்ணற்றோர் சரியான இஸ்லாமிய பாதையை தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.

கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.

Wednesday, August 15, 2012

இளம் பிறை கண்டு ..


இளம் பிறை கண்டு ..
இளம்சிறார்கள்  ..
நாளை பெருநாள் .என்ற
நல்லதொரு சேதியை ...
நள்ளிரவு வரை
சொல்லித்திரிவர்..

எப்ப விடியும் பொழுது
என்று உறங்கும்
சிறார்க்கு தக்பீர் முழக்கம்
 தருமே மகிழ்வை ...

உறவு தரும் பெருநாள் காசு ..
நல்ல வரவு .என்று சொல்லும்
செல்லங்களின் உள்ளம் பொங்கும்
மகிழ்வால்..நாளும் ..
கூடுதல் சொந்தங்கள் ..
கூடுதல் வரவு ...
உறவுகள் தரும் காசு ..
 உள்ளத்தில் நீங்கும் மாசு ..
 
உற்றார் உறவினர் தந்த காசுக்கு  
உம்மாவும் கணக்கு கேட்பாள் ..
ஒன்றுக்கு 
இரண்டாக . காசுகளை கொடுத்து  
உறவை இரட்டிப்பாக்க...
சுவையான  
பெருநாள் பண்டங்களும்...
தமிழ் சொல்லுக்கு 
சுவையூட்டும்
வட்டிலாப்பம் ,
கடற்பாசி 
இடி யாப்பம்,
இறைச்சியானம் .
பொரிச்ச ரொட்டி என்ற சொல் 
நாவில் நீரூறும் ..
செவியில் தேனூறும் 

இவை யனைத்தும் ஒன்று கூடி 
பசியாறுதல் .என்றழைத்து 
தமிழ் தன்னை மகிழ்விக்கும் ..
பசியாறல் முடிந்து விட்டால் 
பகல் உணவு மறந்து போகும் 
பகலெல்லாம் பசித்திருந்த 
பழக்கமாக இருக்குமென்ற ஐயம் வேண்டாம் 
பசியாறா ..பக்குவமாய் நிறைந்ததனால் ...

இன்னும் ஒன்று சொல்ல வேண்டும் 
பழங்கால வளம் தன்னை
பதிவாளர் சொல்லுகையில் 
தொல்லை தரும் காகம் தனை
தன கால் சிலம்பால் கிழவி 
விரட்டிடுவாள் என்று ..

அது போல 
பெருநாள் தொழுகை முடித்து விட்டு 
வீதியிலே வரும்போது ..
மாமா ..பெருணா காசு என 
சிலர்  துரத்திடுவார் ..
ஐந்து,பத்து என  ரூபாய் நோட்டு தன்னை
கொடுத்து 
நடை பயில்வார்


உல்லாசம் பொங்கும்  
உவகை பொங்கும் பெரு நாளில் 
பள்ளிக்கு செல்லும் வழிஒன்று என்றால் 
திரும்பி வரும் வழி வேறாக 
இருக்க வேண்டும் .


மலக்குகளின் துஆக்கள்  கிட்டும்  
பெருநாளின் சுகம் தன்னை
சுபமாக பெற்றிடுங்கள் ....  

இறுதி வேதம் குரானையும்
இறுதி நபி போதனையும் 
இதயம் ஏந்தி 
செயல் படுவோம்
இன்ஷா அல்லாஹ்,
வெற்றியும் பெற்றிடுவோம்.

பாலஸ்தீனம் ,
காஷ்மீர்
பர்மா,
செச்சன்யா
சிரியா 
இன்னும் 
எங்கு நம் மக்கள் 
அத்துமீறலுக்கு ஆளாகி
வதைபடும் சோதனைக்கு
அல்லாஹ்விடம் கையேந்தி 
கண்கள் சொரிந்து
மன்றாடுவோம்
இந்நாளில்-
வல்லோனும் ஏற்றிடுவான்
நம் உம்மத்தின் வாழ்வில் 
விளக்கேற்றி வைத்திடுவான் 


அதிரை சித்திக் 

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் 
 

Saturday, August 11, 2012

ஒரு நிமிடம்..! ஒரு துளி கண்ணீர்...! ஒரு வேளை பிரார்த்தனை..!


வண்ண வண்ண மின் விளக்குகளால் 
மின்னும் மினாராக்கள்...
வித விதமான 
அரேபிய பேரீச்சம் பழங்கள்
பல ரகங்களில் பழ வகைகள் ...
பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி...
தாகம் தணிக்க குளிர் பழச் சாறு...
இப்தார் விருந்தால் இடமின்றி தவிக்கும்
பள்ளி வாசல்கள்...
அசைவ உணவின்றி முழுமை பெறாத
சஹர் நேர சாப்பாடு...

இவ்வாறாக பகலில் நோன்பும் மாலை நேரங்களில் கடை வீதிகளில் பெருநாள் துணி எடுப்பதுமாக நம்மிடையே கண்ணிய மிகு ரமலான் மாதம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. 
அருள்மிகு மாதத்தை நாம் ஆனந்தமாய் அனுபவித்து வரும் நிலையில் நம் சகோதர முஸ்லிம்கள் அஸ்ஸாம்மியான்மர்சிரியாபாலஸ்தீனம்இராக் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அனுபவித்து வரும் இன்னல்களை கவனிக்கத் தவறிவிட்டோம். எனவே தான் அவர்கள் படும் துன்பங்கள் நம் உள்ளத்தில் எந்த வித உருத்தளையும் ஏற்படுத்தவில்லை.

புனித ரமளானை இறையில்லங்களில் கழிக்க வேண்டிய  முஸ்லிம்கள்  இன்று நிவாரண முகாம்களில் இருட்டறையில் தங்கள் வாழ்நாட்களை கழித்து வருகின்றனர். நாம் நோன்பு துறக்க கஞ்சி குடித்து வரும் நிலையில்அங்குள்ள மக்கள் நோன்பு  வைக்கவே கஞ்சியின்றி பட்டிணி கிடந்து வருகின்றனர்.

பெருநாள் நெருங்கி வரும் நிலையில் நம் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் புத்தாடைகளை எடுப்பதற்காக கடை கடையாக ஏறி இறங்கி கொண்டிருக்கிறோம். ஆனால் அஸ்ஸாம்மியான்மரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் உடுப்பதற்கு மாற்று துணி கூட இல்லாமல் கிழிந்த ஆடைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதைகளாகி விட்ட நிலையில் நூற்றுக்கனக்கான இளம் பெண்கள் தங்கள் கணவர்களை துப்பாக்கி  குண்டுகளுக்கு  பலி கொடுத்து விட்டு விதவைகளாக கண்ணீர் வடித்து வருகின்றனர். குடியிருந்த இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டதால் வானமே கூரையாக தங்கள் வருங்காலத்தில் தாட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


பல இடங்களிலும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் பிரியாணி விருந்துடன்
உணவு திருவிழாவாக விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கோ சரியான உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். பசியால் அழும் குழந்தைகளுக்கு கால் வயிறு உணவு அளிக்கக் கூட வழியில்லாமல் பெற்றோர்கள் சாப்பாட்டுத் தட்டுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

நம் செல்லப் பிள்ளைகள் மீது உச்சி வெயில் பட்டாலே உள்ளமெல்லாம் கொதிக்கிறது. ஆனால் மியான்மரில் பல பச்சிளம் குழந்தைகள் கொடூரமான தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ரமலான் நோன்பை கூட நிம்மதியாக வைக்க முடியாமல் தங்கள் ஈமானையும்உயிரையும் காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம் சகோதரர்கள் அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இருண்டு போன எதிர்காலத்தையும் அழிந்து போன நிகழ்காலத்தையும் எண்ணி வெட்ட வெளியில் நிர்கதியாக நின்று கொண்டிருக்கின்றனர்.
          சொந்த நிலத்தையும்சொந்த பந்தங்களையும் இனக் கலவரங்களில் இழந்து விட்டு வயதான பெற்றோரையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஒதுங்க இடமில்லாமல் நாடோடிகளாக அலைந்து கொண்டிருக்கும் மக்களுக்காக புண்ணிய மிகு மாதத்தில் உடனடியாக நாம் செய்ய வேண்டியது ஒரு நிமிடம் மனதார சிந்தும் ஒரு துளி கண்ணீரும் அவர்களில் பாதுகாப்பிற்காக இறைவனின் முன்பு உளமாற கேட்கும் ஒரு வேளை பிரார்த்தனையும் தான்.
          இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து நம் அனைவரையும் வல்ல இறைவன் பாதுகாப்பானாக! ஆமீன்.

HABEEBUR RAHMAN

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!