Sunday, December 14, 2008

இஸ்லாம் என்பது என்ன? PART 1

இஸ்லாம் - புதிய தொடர் ஆரம்பம்

அறிமுகம்

இந்த உலகத்திற்கொரு படைப்பாளன் உண்டு. ஜீவன் அளித்து காற்றும் நீரும் வசப்படுத்தித் தந்து பூமியை வாழத் தகுந்த இடமாக்கிய இறைவன். நாம் இங்கு எவ்வாறு வாழ வேண்டும் இந்த வாழக்கையின் உண்மையான இலட்சியம் என்ன என்பதையும் தீர்க்கதரிசிகள் மூலம் நமக்குக் கற்றுத் தந்தான். நாம் இவ்வுலகில் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதைப் பற்றி நிச்சயமாக நமது மரணத்திற்குப் பின் நமது இறைவனால் விசாரிக்கப்படுவோம். அங்கு புண்ணியம் செய்தவர்களுக்கு நன்மையும் பாவம் செய்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும். எனவே படைத்த இறைவன் மனிதனுக்கு வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வாழ்வதே மனிதனின் வாழ்க்கை இலட்சியம் ஆகும்.

நமது அகில உலகங்களின் இறைவனால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அடங்கிய வேதமே திருக்குர்ஆன். முஹம்மது நபியின் மூலம் அதனை இறைவன் மக்களுக்கு எத்திவைத்தான். இதனை அறிந்தவர்களும் அறியாதவர்களும் நமக்கிடையே உள்ளனர். இதனை அறியாதிருக்கும் மக்களை இவ்வாழ்காட்டுதல்களின் பால் அழைத்தல் அதனை அறிந்தவர்களின் மீது கடமையாகும். இந்தச் செய்தியை தமிழ் மக்களுக்கு எத்திவைக்கும் நோக்குடன் இத்தொடர் வெளியிடப் படுகிறது.

திரு எம்.எம் அக்பர் அவர்களின் இஸ்லாம் பற்றிய புத்தகத்திலிருந்து இங்கே செய்திகள் பதியப்படும். இன்ஷா அல்லாஹ்.

இறைவா! உண்மையான மார்க்கத்தை மக்களிடம் எத்தி வைப்பதற்கான எளிய முயற்சி இது. உன்னால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்கான முயற்சி. இதனை நற்கூலிக்கு உரித்தானதாக ஏற்றுக் கொள்வாயாக.
================================================

இஸ்லாம் என்ற அரபிப் பதத்திற்கு சமர்ப்பணம் என்றும் சமாதானம் என்றும் பொருள் உண்டு. அகிலங்கள் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து வாழ்வதன் மூலம் பெறக்கூடிய சமாதானமே இஸ்லாம் ஆகும். வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவனின் விதி விலக்குகளுக்கேற்ப ஒழுங்கு படுத்திக் கொண்டு வாழ்வதே இஸ்லாம் என்பதன் கருத்தாகும்.

இஸ்லாத்தை தோற்றுவித்தது யார்?

பகுத்தறிவும் சிந்தனை சக்தியும் நன்மை தீமைகளைப் பிரித்தறியும் தன்மையும் வழங்கி மனிதர்ளை இப் பூமியின் பிரதிநிதிகளாக நியமித்த படைத்த இறைவனே அவர்கள் தமது வாழ்வின் பல்வேறு துறைகளிலும் கடைபிடிக்கவேண்டிய விதி விலக்குகள் கற்றுக் கொடுப்பதற்கு அவசியமான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளான். அதற்காகவே அவன் தீர்க்கதரிசிகளை நியமித்தான். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சமூகத்தினருக்கு அனுப்பப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளும் கற்பித்தது இறைவனின் விதி விலக்குகளுக்கேற்ப வாழ்வை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதுவே. சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு முழமையாக அடிபணிதல், அதாவது இஸ்லாத்தையே அவர்கள் அனைவரும் எடுத்துக்கூறினர். அதுவே அவர்களின் கொள்கையாகவும் இருந்தது. அவர்களுடைய உபதேசங்களும் கட்டளைகளும் இறை வெளிப்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. தெய்வ சமர்ப்பணத்தின் சித்தாந்தம் - இஸ்லாம் - ஏதேனும் மனிதன் வகுத்த கொள்கை அன்று. மனிதனுக்கு அவனது இறைவனால் இறைத் தூதர்கள் வாயிலாக வகுத்தளிக்கப்பட்ட உண்மையான மார்க்மே இஸ்லாம் என்பதே நிதர்சனமான உண்மை.

முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?

படைத்த இறைவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவன் என்பதே முஸ்லிம் என்ற பதத்தின் பொருள் ஆகும். தெய்வீக விதிவிலக்குகளுக்கேற்ப தனது வாழ்வை ஒழுங்கு படுத்தியவனே முஸ்லிம். உண்மையான நம்பிக்கையினதும், செயல்பாடுகளினதும் அடிப்படையிலேயே ஒருவர் முஸ்லிமாக முடியுமே ஒழிய ஜென்மத்தின் அடிப்படையில் அல்ல.

எவ்வாறு ஒருவர் முஸ்லிமாக முடியும்?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மது (அவர்கள் மீது இறைவனின் அன்பும் அருளும் உண்டாவதாக) அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன் என்ற சாட்சியத்தின் இரண்டு வசனங்களை நாவால் மொழிவதுடன் அதனடிப்படையில் வாழ ஒருவர் உறுதி மொழி எடுத்து விட்டால் அவர் முஸ்லிமாகி விட்டார்.

by அபூ அப்திர்ரஹ்மான்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!