Showing posts with label முஸ்லீம். Show all posts
Showing posts with label முஸ்லீம். Show all posts

Wednesday, August 11, 2010

மறைவான வணக்கம்

இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:

    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183
    இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?
    நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.
    ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் 'ஸஹ்ரில்' சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.
    உறுதியான நம்பிக்கையின் அடையாளம்
    நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.
    அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!
    மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!
    இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! 'மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.
    சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.
    இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.
    யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.
    அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.
    செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்.

Wednesday, September 30, 2009

இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

(நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4


நன்றி: Readislam.net


அபூ பாத்திமா

Wednesday, November 5, 2008

அமெரிக்காவின் புதிய அதிபர் முபாரக் ஹுசைன் ஒபாமா!

அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா தேர்தெடுக்கப்பட்டுள்ளார.கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க மக்கள் தற்போது சவால்களை எதிர்நோக்குகிறார்கள் என்றும் அமெரிக்க மக்களின் கவலைகளை தாம் கவனத்தில் எடுப்பதாகவும் வெற்றி பெற்ற பிறகு தமது ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது தொடர்பில் தான் அமெரிக்க மக்களிடம் உண்மையாக நடந்து கொள்வேன் என்றும் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றும், ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள் வரும் போது மக்களிடம் கருத்துக்களை கேட்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது வெற்றியானது நாட்டில் மாறுதல் ஏற்படுவதற்கான ஒரு உண்மையான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கருத்து வெளியிட்டுள்ளார் பராக் ஒபாமா.

இராக் மற்றும் அமெரிக்காவிடையே புதிய பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், அமெரிக்கப் படைகள் தமது நாட்டிலிருந்து வெளியேற ஒரு திட்டமிட்ட கால அட்டவணை தேவை என்பதை இராக் முன்னெடுத்து வருகிறது. எனவே இந்த நிலைப்பாட்டை பொறுத்த வரை தற்போது அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ள ஜான் மெக்கெயினை விட அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா அவர்கள் நெருக்கமாக இருப்பதாக இராக்கியர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் இராக்கின் முன்னுரிமைகளை விட அமெரிக்காவின் முன்னுரிமைகள் என்ன என்பது குறித்துதான் புதிய அதிபரின் கொள்கைகள் இருக்கும் என்கிற கவலைகளும் இருக்கின்றன.

ஒபாமா அவர்களின் வெற்றியை இராக் வரவேற்றுள்ள போதிலும், மற்ற அரசியல்வாதிகள் நாடு இன்னமும் ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு நிலையில் இருக்கும் வேளையில் அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம் எனக் கோரியுள்ளனர்.

ஆப்கானிய அதிபர் தமது நாட்டின் ஆதரவு அமெரிக்காவுக்கு உண்டு என்றும், தமது அரசு அமெரிக்க அரசை பெருமளவு சார்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார். ஆப்கானின் மிக சக்தி வாய்ந்த கூட்டணி நாடாகவும் அந்நாட்டுக்கு பெரிய அளவில் உதவிகளை அளிக்கும் நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு துருப்புகளால் ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்படுவது மேலும் அதிகரிக்கின்றன என்கிற கூறப்படுகின்ற நிலையிலும், மக்களிடையே இது தொடர்பில் விரக்தி மேலோங்கி வரும் நிலையிலும் ஆப்கான் அதிபரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களின் வேலைகள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படாமல், அமெரிக்காவுக்கு உள்ளேயே செய்யப்படுவதை தாம் ஊக்குவிக்கப்போவதாக ஒபாமா அவர்கள் கூறியிருப்பது, இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் பெருகிவந்த அவுட்சோர்சிங் துறையை பாதிக்கக்கூடும் என்றும், இது இந்திய நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் அதிபர் தேர்ததலோடு நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளதை ஆப்பிரிக்காவிலுள்ள மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
தென்னாப்பிரிக்காவின் அதிபர் தொடக்கம், சோமாலியாவின் அதிபர் வரை ஆப்பிரிக்காவின் பல தேசத்து தலைவர்கள் தமது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவின் வெற்றி, உலகத்தை மேம்பட்ட ஒரு வாழ்விடமாக்க விழையும் கனவை அனைவராலும் காண முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளது என்று நெல்சன் மண்டேலா கருத்து கூறியுள்ளார்.

பராக் ஒபாமாவின் தந்தையின் நாடான கென்யாவில் வியாழக்கிழமை அவரது வெற்றியை கொண்டாடும் முகமாக தேசிய விடுமுறையாக அதிபர் ம்வாய் கிபாக்கி அறிவித்துள்ளார்.

அதிபராக அவர் பதவியேற்றுக் கொள்ள இன்னமும் 75 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில், தமது புதிய ஆட்சியில், பாதுகாப்பு, நிதித்துறை, வெளியுறவுச் செயலர் உட்பட பல்லாயிரம் அதிகாரிகளை அவர் தேர்தெடுத்து நியமிக்க வேண்டியுள்ளது. புதிய அரசு எப்படிபட்ட புதிய பாதையில் செல்லப் போகிறது என்பதில் அடுத்த 70 நாட்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆக,ஸ்பானிஷ் பேசும் மக்கள்,அயல்நாட்டை சேர்ந்த அமெரிக்க வாழ் மக்கள்,எல்லா நாடுகளையும் சேர்ந்தமுஸ்லீம் மக்கள்,ஆப்ரோ-அமெரிக்க (கறுப்பின)மக்களின் பேராதரவு,மற்றும் வெள்ளை இன மக்களின் ஆதரவும் ஒபாமாவுக்கு கிடைத்து,அதிபர் ஆகிவிட்டார்.அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பதவி அளிக்கிறான்.அப்பதவியை அவர்கள் இப்போது எப்படி பயன் படுத்தப் போகிறார்கள்,அதன் மூலம் எல்லா மக்களின் நலன்களும் பேணப்படுமா என்பதே இப்போதிய கேள்வி?

புதிய அதிபருக்கு உலக முஸ்லிம்கள் மற்றும் அதிரை மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!