Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Tuesday, July 17, 2012

வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது


புனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை.
 
உண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். நோன்பானது உடல் உள, ஆன்மிக ரீதியாகவும் முஃமின்களுக்கு பயன் அளிப்பதனை, பல் நன்மைகளை வழங்குவதனை காண்கின்றோம்.
 
புனித நோன்பு பசியின் கொடுமையை, வறுமையின் வன்மையை ஒவ்வொருவருக்கும் மானசீகமாக, செயல்முறையில் உணர்த்தி நிற்கும் பாங்கு எவ்வளவு அற்புதமானது? பசியின் ருசியை அறியாது தாகத்தின் கசப்பை உணராது சுக போகத்தில் வாழ்ந்த ஒருவன் எல்லா மனிதர்களும் தன்னைப் போன்றே வாழ்கின்றார்கள் என்று நினைக்கலாம். ஆனால், நோன்பு இத்தகைய மனிதனுக்கும் பல உண்மைகளை நிதர்சனமாக உணர்த்தவல்லதாக அமைகின்றது.
 
உண்மையான சமவுடைமைக்கும் பூரண சமத்துவத்திற்குமான தெளிவான வெளிப்பாடாக நோன்பு இருக்கின்றது என்றால் அது மிகைப்படக் கூறியதாக அமையாது. அல்லாஹ் நோன்பை அறிமுகப்படுத்தி அனைவருக்குமான வரியாக விதித்துள்ளான். இந்த வரியை மாட மாளிகையில் வாழும் குபேரனும் செலுத்த வேண்டும். குடிசையில் வாழும் பாமர ஏழையும் கொடுக்க வேண்டும்.
 
காய்ந்த குடல்களை, காலியான வயிறுகளை, பசியின் அகோரத்தை தணித்துக் கொள்ளத் துடிக்கும் ஜீவன்களை அனைவரும் நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது. நோன்பு உள்ளம் உருகி, மனம் கசிந்து, ஏழைகளின் கண்ணீர் துடைக்க வேண்டும் என்ற உணர்வு எல்லோர் உள்ளங்களிலும் பிரவாகம் எடுக்க புனித நோன்பு வழி அமைக்கின்றது.
 
நபி யூஸுப் (அலை) அவர்கள் எகிப்து நாட்டின் வளங்களுக்கும் நிதித்துறைக்கும் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் அதிகம் நோன்பு நோற்று வந்தார்கள். இதற்கான காரணம் அவர்களிடம் வினவப்பட்ட போது அவர்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்தது.'நான் சாப்பிட்டு பசியாறிய நிலையில் இருந்தால் ஏழையின் பசியை மறந்து விடுவேனோ என்று பயப்படுகின்றேன். அதனால் அதிகம் நோன்பு நோற்று வருகின்றேன்' என்றார்கள்.
 
புனித ரமழானில் நாங்கள் அனுஷ்டிக்கும் நோன்பு சமூகத்தில் உள்ள ஏழைகள், அநாதைகள், அகதிகள் போன்றோர் மீது எங்களில் கருணை பிறக்க வழியமைக்க வேண்டும். அது எங்களில் ஈகையை வளர்க்க வேண்டும். நபி(ஸல்) அவர்களும் ஏனைய காலங்களை விட ரமழானில் அதிகமாக தானதர்மங்களை செய்பவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
 
ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கொடை கொடுப்பதில் மனிதர்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். குறிப்பாக அன்னார் ரமழானில் மிகக் கூடுதலாக வாரி வழங்கும் தன்மை படைத்தவர்களாக இருந்தார்கள் என அறிவிக்கின்றார்கள் நபித்தோழர்கள்.
 
'தர்மத்தில் சிறந்தது ரமழானில் வழங்கப்படும் தர்மமாகும்' என்றும் நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
 
சமூகத்தில் அனாதரவற்றோரின் அவலங்களை நினைத்துப் பார்ப்பது, அவர்களின் துயர் துடைக்க முடியுமான வழிகளில் முனைப்புடன் செயற்படுவது ஒரு பொறுப்பான சன்மார்க்கக் கடமையாகும் என்பதனை நாம் உணராமல் இருக்கக் கூடாது.
 
வறுமை மிகவும் கொடியது. அதனால் விளையும் ஆபத்துக்கள் பயங்கரமானவை.
 
வறுமையானது ஈமானுக்கே சவால் விடக்கூடியதாகும். பயங்கர வறுமையானது ஒருவனின் ஈமானையே பறித்து விடாது என்று கூறுவதற்கில்லை. இதனால்தான்
 
'வறுமையானது குப்ரையும் ஏற்படுத்திவிடக் கூடியது' என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
 
குப்ரிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபியவர்கள் அதனுடன் இணைத்து 'பக்ர்' என்ற வறுமையில் இருந்தும் பாதுகாப்புத் தேடியமை அவையிரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பையே எடுத்துக் காட்டுகின்றது.
 
வறுமையானது மனிதனின் ஈமானுக்கு மாத்திரமன்றி அவனது நடத்தைக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்தாக அமைவதுண்டு.
 
வறுமை ஒருவனை இழிசெயல்களுக்குத் தூண்டலாம். பண்பாடற்ற துர்நடத்தைகளுக்குத் தூண்டலாம். முறைகேடான விடயங்களில் ஈடுபடத் தூண்டலாம்.
 
'ஒருவன் கடன்காரனாகி விட்டால் பேசினால் பொய் சொல்லக் கூடும், வாக்களித்தால் மாறு செய்யக் கூடும்' என்று சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள்.
 
கொடிய வறுமையானது மனிதனின் சிந்தனையையும் அறிவையும் கூட பாதிக்க முடியும். இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: 'வீட்டில் உண்பதற்கு கோதுமை மா இல்லாத நிலையில் இருப்பவனிடம் சென்று ஆலோசனை கேட்காதே'
 
ஏனெனில் வீட்டில் உண்ண உணவின்றி இருப்பவன் சிந்தனை சிதறி அறிவு கெட்ட நிலையில்தான் இருப்பான். இந்த அடிப்படையில்தான் ஒரு நீதிபதி பசியுடன் இருக்கும் போது தீர்ப்புகள் வழங்கக் கூடாது என இஸ்லாமியச் சட்ட அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
 
குடும்ப அமைப்பின் சீர்குலைவுக்கும் வறுமையானது பல வழிகளிலும் காரணமாக அமைவதுண்டு. ஆரம்பமாக திருமணத்திற்கே தடையாக அமையும் வறுமை பின்னர் குடும்பங்கள் சிதறுவதற்கும் சீரழிவதற்கும் எவ்வளவு தூரம் வழி கோலுகின்றது என்பதனை நாம் அறிவோம்.
 
இத்தகைய பேராபத்துக்களை விளைவிக்கக் கூடிய வறுமை, ஒரு சமூகத்தில் நிலவுவது எவ்வளவு பயங்கரமானது? என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தப் பாரதூரமான ஆபத்தை நீக்க முயல்வது எத்தகைய மகத்தான பணியாக, நன்மையைத் தரக் கூடிய அமலாக அமையுமென்பதை நாம் உணரத் தவறக்கூடாது.
 
சமூகத்தில் உள்ள அநாதரவானவர்களை அரவணைக்காதவர்கள் அநாதைகளைப் பராமரிக்காதவர்கள் மார்க்கத்தையே பொய்ப்படுத்துபவர்கள் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். இத்தகையவர்கள் தொழுபவர்களாகவும் நோன்பு நோற்பவர்களாகவும் இருந்தாலும் சரியே.
 
இஸ்லாம் அநாதைகள் விடயத்தில் கூடிய கரிசனை காட்டுகின்றது. ஸூறதுல் அன்பியாவின் 41 வது வசனம், ஸூறதுல் ஹஷ்ரின் 7வது வசனம், ஸூறதுல் பகராவின் 177, 215, 82, ஸூறதுன்னிஸாவின் 36வது வசனம் போன்ற பல அல்குர்ஆன் வசனங்கள் அநாதைப் பராமரிப்பின் அவசியம் பற்றி வலியுறுத்துகின்றன.
 
தீனைப் பொய்ப்பிக்கின்றவன் யார்? என்பதனை விளக்க வந்த ஸூறா அல்மாஊன்: ''அவன்தான் அநாதைகளைக் கடிந்து விரட்டுபவன்'' என்று கூறுகின்றது.
 
ஏழைகளை ஆதரிக்காதவனும் வறுமையை ஒழித்துக் கட்டத் தனது பங்களிப்பைச் செலுத்தாதவனும் தீனை உண்மைப்படுத்தாதவனாகவே கொள்ளப்படுகின்றான். மார்க்கத்தைப் பொய்ப்பிக்கின்றவனைப் பற்றி குறிப்பிடும் ஸூறா அல்மாஊன்:
 
''அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டவும் மாட்டான்''என்று கூறுகின்றது.
 
இங்கு, அல்லாஹுத்தஆலா தானும் ஏழைகளுக்கு உணவளித்து பிறரையும் அதன் பால் தூண்டி வறுமையை ஒழித்து பசியை விரட்டும் பணியில் ஈடுபடாதவரைப் பற்றியே குறிப்பிடுகின்றான். தனிப்பட்ட முறையில் தானும் ஏழைகளுக்கு உணவளிக்கும் அதே நேரத்தில் பிறரையும் பிறரையும் அதற்காகத் தூண்டி வறுமை ஒழிப்பு முயற்சியை ஓர் அமைப்பாக கூட்டாக மேற்கொள்ளும் விடயத்தில் ஒருவர் தனது பங்களிப்பை செலுத்தாத வரை மார்க்கத்தைப் பொய்ப்பிப்பவராகவே கருதப்படுகின்றார்.
 
அல்குர்ஆன் மற்றும் பல இடங்களிலும் இதே கருத்தை வலியுறுத்துகின்றமையைக் காண முடிகின்றது.
 
''நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசுவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கும் படி தூண்டவுமில்லை. ஆகவே, இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் வடியும் சீழைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக் கூறப்படும். அதனைக் குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் புசிக்க மாட்டார்கள்''
 
''ஜாக்கிரதை! நீங்கள் அநாதைகளை கண்ணியப்படுத்து வதில்லை. ஏழைகளுக்கு உணவளிக்கும் படி தூண்டுவதும் இல்லை. பிறருடைய வாரிசுப் பொருளைப் பேராசையுடன் விழுங்குகின்றீர்கள். மேலும், நீங்கள் மிகவும் அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள்'' என்றெல்லாம் அல்குர்ஆன் கண்டிக்கின்றது.
 
தான் தனிப்பட்ட முறையில் தனி மனிதன் என்ற வகையில் தன் மீதுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றினால் போதுமானது, சமூகக் கடமைகளை நிறைவேற்றும் தேவை தனக்கில்லை என நினைத்துச் செயற்படுவோருக்கு இந்த வசனங்கள் பெரும் சாட்டையடி கொடுக்கின்றன.
 
உண்மையில் அநாதைகளை அரவணைக்கத் தூண்டாத வணக்கங்கள், ஏழைகளை ஆதரிக்கத் தூண்டாத இபாதத்கள் போலியானவையும் பகட்டானவையுமாகும். இத்தகைய வணக்கங்களால் நன்மையன்றி கேடே விளையும் எனக் கூறுகின்றது அல்குர்ஆன்.
 
நாம் நிறைவேற்றும் தொழுகையும் அனுஷ்டிக்கும் நோன்பும் பிற வணக்கவழிபாடுகளும் எமது உள்ளங்களுக்கு பக்குவத்தையும் பண்பாட்டையும் வழங்கி சகோதர மனிதர்களுக்கு நன்மை செய்ய, நல்லது செய்ய தூண்டுபவையாக அமைய வேண்டும். அப்போதுதான் இபாதத்துகள் அர்த்தமுள்ளவையாக, நன்மை பயக்கக் கூடியவையாக அமையும்.
 
'எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும், எவர் (ஆடை கொடுத்தோ அல்லது குறைகளை மறைத்தோ) ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான். ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கின்றான்'
 
ஈகையினதும் கருணையினதும் மாதமான இந்த புனித ரமழானில் சமூகத்தில் உள்ள வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி இந்த நபிமொழி குறிப்பிடும் ஈருலக பாக்கியங்களை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முயல்வோமாக.
 

அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத், இலங்கை

Saturday, June 11, 2011

நாளை துவக்க விழா:தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல்


வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை, நாளை மாலை மத்திய அமைச்சர் வாசன் துவக்கி வைக்கிறார். இதற்கான கட்டண விவரங்கள், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"பிளமிங்கோ லைனர்ஸ்' என்ற தனியார் நிறுவனம் சார்பில், "ஸ்காட்டியா பிரின்ஸ்' பயணிகள் கப்பல் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கும் இயக்கப்படவுள்ளது. இருவழித் தடத்திலும், மாலை 6 மணிக்கு புறப்படும் இக்கப்பல், மறுநாள் காலை 8 மணிக்கு (14 மணிநேரம்) மறுமுனையை சென்றடையும். துவக்கத்தில், வாரம் இருநாட்கள் இயக்கப்படவுள்ள இச்சேவை, பின், வாரம் மூன்று முறையாக அதிகரிக்கப்படவுள்ளது. ஒன்பது அடுக்குகளைக் கொண்ட இந்த,"ஏசி' கப்பலில், 1,044 பயணிகளும், 200 ஊழியர்களும் பயணம் செய்யலாம். ஒன்பது மாலுமிகளைக் கொண்ட இக்கப்பல், மணிக்கு 13 முதல் 18 கடல் மைல் வேகத்தில் செல்லும். 111 எக்கனாமி வகை அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 2 சிறப்பு வசதி அறைகள், 22 டீலக்ஸ் அறைகள், 169 சூப்பர் டீலக்ஸ் அறைகள், 11 முதலாம் வகுப்பு அறைகள், 2 சூட் அறைகள் என, மொத்தம் 317 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் 250 பேர் அமர்ந்து உணவு உண்ணக்கூடிய ஓட்டல், மீட்டிங் ஹால், மருத்துவமனை, நடன அரங்கம், பார் ஆகியவை உள்ளன. 300 டன் சரக்குகளையும் கொண்டு செல்ல முடியும்.

 இங்கிருந்து கொழும்பு செல்ல, குறைந்தபட்ச கட்டணம், 2,990 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 19,550 ரூபாய். கொழும்புவில் இருந்து தூத்துக்குடி வர குறைந்தபட்ச கட்டணம், 3,128 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 20,470 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவக்க விழா சிறப்பு கட்டணம், 2,243 ரூபாய். கப்பலுக்குச் சென்றவுடன் தரப்படும் குளிர்பானம் மற்றும் வரையறுக்கப்பட்ட இரவு உணவு விலை ஆகியவையும் பயணக் கட்டணத்தில் அடங்கும். இதுதவிர, கப்பலிலுள்ள கேன்டீனிலும் பணம் கொடுத்து தேவைக்கேற்ப உணவுப் பொருட்களை வாங்கலாம். இதில், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு, கட்டணச் சலுகையும் உண்டு. இதற்கான டிக்கெட் விற்பனை உரிமத்தை, தூத்துக்குடி மூன்று தனியார் நிறுவனத்தினர் பெற்றுள்ளனர். டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.

 கப்பலில் பயணம் செய்பவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்பே வரவேண்டும். டிராவல்பேக், லேப்-டாப் பேக் உள்ளிட்ட ஏதாவது இருபொருட்களை தங்களது அறைக்கு எடுத்துச் செல்லலாம். இதுதவிர, எக்கனாமி வகுப்பு பயணிகள், 100 கிலோ எடை வரையும், முதல் வகுப்பு பயணிகள், 200 கிலோ எடை வரையும் லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். வெளியில் வாங்கப்பட்ட மதுபானங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

 இக்கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இலங்கை சென்றவுடன், அவர்களுக்கு அந்நாட்டு அரசு சார்பில், சுற்றுலா விசா வழங்கப்படும். 30 நாட்கள் வரை இது செல்லுபடி ஆகும். அதற்குள், அவர்கள் கொழும்பிலிருந்து தூத்துக்குடி வர வேண்டும்.

 இக்கப்பல் சேவை துவக்க விழா, நாளை மாலை தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் நடக்கிறது. மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன், கொடியசைத்து, கப்பலை இயக்கி வைக்கிறார். இச்சேவை மூலம் இந்தியா-இலங்கை நாடுகளிடையே கலாசாரம், பண்பாடு, சுற்றுலா, வணிகம் மேம்படும்.

Sunday, May 23, 2010

இலங்கை செல்கிறார் நாயக்

சர்வதேச  இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஸாகீர் நாயிக் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜம் இய்யதுஷ் ஷபாபின் ஏற்பாட்டில் கொழும்பு சுகதாச வெளியரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள மார்க்க சொற்பொழிவில் இவர் உரையாற்றவுள்ளார்.  

மத ஒப்பீட்டுத்துறை ஆய்வுத்துறை நிபுணரான  டாக்டர் ஸாகீர் நாயிக் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

கடந்த வருடம் இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 2009ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 100 இந்தியர்கள் என்ற பட்டியலில் 82ஆவது இடத்தை இவர் பெற்றிருக்கிறார்.


இதேபோன்று, இந்தியாவின் தலைசிறந்த 10 மார்க்க அறிஞர்களின் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்திலுள்ளார்
.


அவருடைய இணைய தள முகவரி 

http://irf.net/




Tuesday, June 16, 2009

இணைய வானொலி,அல்-மனார்!


உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு இணைய வானொலி!ஆம், அல்-மனார் எனும் பெயர் கொண்ட இவ்வானொலி இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகிறது.தினமும் அதிகாலை ஸுபுஹு தொழுகையிலிருந்து தொடங்கும் நிகழ்ச்சிகள்,இரவு பதினொன்று மணியுடன் நிறைவு பெறுகிறது.இதில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.உதாரணமாக,வெள்ளிக்கிழமை அன்று ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி நிரல்கள்:

மு.ப. 04.30 பஜ்ருக்கான அதான், துஆ,
திலாவதுல் குர்ஆன் (சூறதுல் பகறா)
மு.ப. 07.00 "ஸபாகுல் ஹைர்"
மு.ப. 08.00 செய்திகள்.
மு.ப. 08.30 நாளும் ஒரு தகவல்.
மு.ப. 09.00 இன்றைய நாளேடுகள்.
மு.ப 09.30 ஸவ்துன் நிஸா (மகளிர் ஓசை)
மு.ப. 10.30 இசையில்லா இனிய கீதம்
பி.ப. 11.00 சொற்பொழிவு.
பி.ப. 12.30 திலாவதுல் குர்ஆன்.
பி.ப. 01.30 செய்திகள்.
பி.ப. 02.00 தர்ஜூமதுல் குர்ஆன்.
பி.ப. 02.30 அல்-குர்ஆனும் நீங்களும் (வினா-விடை நிகழ்ச்சிகள்)
பி.ப. 04.30 பிராந்திய செய்திகள்.
பி.ப. 04.40 சொற்பொழிவு கோவை.எஸ். ஐயூப்.
பி.ப. 06.10 அல்குர்ஆன் விளக்க வகுப்பு
பி.ப. 07.30 செய்திகள்.
பி.ப. 08.00 இஸ்லாமியக் குடும்பவியல் தொடர்...
பி.ப. 09.00 நேயர் நேரம்.
பி.ப. 10.00 சொற்பொழிவு.
பி.ப. 11.00 நிகழ்ச்சி நிறைவு.

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் இந் நிகழ்ச்சியை பீஸ் டிரைன் தளம் மூலமாக சென்று,சத்திய உறவுகள் எனும் தலைப்பின் கீழ் சென்று,தமிழ் வானொலி மேல் சொடுக்கியும் அல்லது இந்த லிங்க் மூலம் சென்றும் கேட்கலாம்.

http://www.almanarmedia.com/home.html

இணைய ரேடியோ மூலம் மார்க்கப் பணி செய்யும் இந்த சகோதர,சகோதரிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!