Showing posts with label இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். Show all posts
Showing posts with label இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். Show all posts

Saturday, December 27, 2008

நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?

மரணத்துக்குப் பின்பு வரும் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உலகில் மூன்று கோட்பாடுகள் நிலவுகின்றன.

1. மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை என்று ஒன்று கிடையாது. மரணத்தோடு எல்லாம் முடிந்து விடுகிறது என்பது ஒரு கோட்பாடு.

2. மனிதன் செய்கின்ற நன்மைகள், பாவங்களைப் பொறுத்து - மீண்டும் மீண்டும் அவன் பிறவி எடுக்கின்றான் என்பது மற்றொரு கோட்பாடு.

3. "உலக முடிவு நாள்" அன்று - மரணித்து விட்ட எல்லார்க்கும் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டு, விசாரிக்கப் பட்டு - சுவர்க்கத்தையோ, நரகத்தையோ அடைந்து அங்கே நிரந்தரமாக மனிதன் தங்கி விடுகிறான் என்பது இன்னும் ஒரு கோட்பாடு.

இறைவனை மறுக்கும் பிரிவினர் - மரணத்துக்குப் பின் வரும் வாழ்க்கையையும் மறுக்கின்றார்கள். அப்படி ஒரு வாழ்க்கை கிடையாது, இருக்கவும் முடியாது என்பது அவர்கள் வாதம். மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டு என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும். யாராவது போய் பார்த்து விட்டு வந்தார்களா என்றும் கேள்விகள் எழுப்புகிறார்கள் அவர்கள்.



"மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுகிறது என்பதற்கு .என்ன ஆதாரம் என்றும், யார் போய் பார்த்து விட்டு வந்து இவர்களுக்குச் சொன்னார்கள்" என்றும் - நாமும் திருப்பிக் கேட்கலாம்.

மேலும் இவர்களோடு விவாதத்தைத் தொடரும் முன்பு ஒரு விஷயம்.

"மரணத்துக்குப் பின்பு வாழ்க்கை இல்லை, மரணத்தோடு எல்லாமே க்லோஸ் (close) - என்ற நம்பிக்கை என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.
இந்தக் கொள்கை ஏற்படுத்திய மிக முக்கியமான விளைவு - விரக்திக்கு இட்டுச் செல்லும் உலக வாழ்க்கையை நவீன மனிதர்களுக்கு வழங்கியது தான்!

நிரந்தரமான ஒரு வாழ்வைத் தான் - மனிதன் விரும்புகிறான். "மரணத்தோடு நாம் அழிந்து விடுகிறோம்" என்ற ஒலி நாராச ஒலியாகவே மனிதனுக்குப் படுகிறது.

மனோ தத்துவ மருத்துவர் ஒருவர் கூறுகிறார்:

"என்னிடம் வரும் நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் படித்தவர்கள், பட்டதாரிகள், வாழ்வில் பல வெற்றிகளை அள்ளிக் குவித்தவர்கள். அவர்கள் ஏன் மனோ வியாதிக்கு ஆளானார்கள்? திடீரென்று வருகின்ற மரணத்தோடு எல்லாமே முடிந்து போய் விடுகின்ற இந்த வாழ்க்கையில் எதைச் சாதித்து என்ன பயன் என்ற விரக்தி மனப்பான்மை அவர்களை திருப்தியற்ற வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுள்ளது."

இவ்வுலக வாழ்க்கை என்பது என்ன?

- தொடர்ந்து வருகின்ற துயரங்கள், சோகங்கள், கவலைகள்,

- முடிவே இல்லாத அநியாயங்கள், அக்கிரமங்கள், ஏமாற்று வேலைகள், மோசடிகள்,

- நீக்கிட முடியாத பசி, பட்டினி, நோய், வறுமை

- இவைகளைக் கொண்டது தான் மனித வாழ்வா? மனிதனுக்கு நிரந்தர அமைதியையோ, மகிழ்ச்சியையோ, தராத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா - என்ற சிந்தனை, உயிர்த் துடிப்புள்ள ஒரு மனிதனை செயலற்றவனாக ஆக்கி விடுகிறது. ஒரு கொள்கை வெற்றிடத்தை அவனுக்கு வழங்கி விடுகிறது!

அடுத்து - மனிதன் தனது செயலுக்கேற்ப பிறவி எடுக்கின்றான் என்ற கோட்பாடும் மனிதனுக்குத் தெளிவான சிந்தனையைத் தருவதில்லை! ஏனெனில் நமது பயணம் எங்கே துவங்கியது, எங்கே நாம் நிற்கிறோம், நாம் எங்கே செல்ல இருக்கிறோம் என்பது குறித்த தெளிவை இக்கொள்கை தந்து விட இயலாது.

தமிழில் வெளியாகும் ஒரு வார இதழில் படித்ததாக நினைவு:

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு மாணவன் ஒரு "ஈ" யைப் பிடித்துக் கொன்று விட்டான்.

ஆசிரியர் சொன்னார்: "இப்போது அந்த ஈயை நீ அடித்துக் கொன்று விட்டாய். அடுத்த பிறவியில் அந்த ஈ, மனிதனாக வரும். நீ ஒரு ஈயாகப் பிறவி எடுப்பாய். அப்போது அது உன்னைக் கொன்று விடும்."

மாணவன் எழுந்து சொன்னான்: "இல்லை சார்! சென்ற பிறவியில் நான் ஈயாக இருந்தேன். இந்த ஈ மனிதனாக இருந்தது. அப்போது அது என்னைக் கொன்று விட்டது. இப்போது அதனை நான் கொன்று விட்டேன். இத்துடன் பிரச்னை தீர்ந்து விட்டது!"

இப்போது சொல்லுங்கள்: மறு பிறவிக் கொள்கை மனிதனுக்குத் தெளிவைத் தருமா?

நல்லவனாகவோ, தீயவனாகவோ வாழ்ந்து விட்டு ஒவ்வொரு மனிதனும் மரணமடைகின்றான். மரணம் தான் ஒரு மனிதனின் முடிவு என்றால் - நல்லவனின் முடிவும் தீயவனின் முடிவும் ஒன்று தானா?

மக்கள் மீது அக்கிரமம் புரிந்தவனும், அக்கிரமத்துக்கு ஆளானவனும் மரணமடைகின்றார்கள்!

ஒடுக்குபவனும் ஒடுக்கப்பட்டவனும் மரணமடைகின்றார்கள்!

மக்களின் செல்வத்தைச் சுரண்டி ஆடம்பர வாழ்வை அனுபவித்தவனும், சுரண்டப்பட்ட ஏழையும் மரணமடைகின்றார்கள்!

அப்பாவிப் பெண் சிசுக்களும், அவர்களை உயிரோடு புதைத்தவர்களும் மரணமடைகின்றார்கள்!

பாவம் செய்தவனும், பாவங்களை ஏறெடுத்தும் பார்க்காதவனும் மரணத்தைச் சுவைக்கிறார்கள்!

தீயவன் தண்டனை அனுபவிப்பதில்லை!

நல்லவன் துன்பங்கள் நீங்கி வாழ்வதும் இல்லை!

இது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா?

மரணத்தோடு எல்லாம் முடிந்து போய் விடும் என்றால் "நான் ஏன் நல்லவனாக வாழ்ந்திட வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

அரசு தண்டிக்கும் - சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்பார்கள். சட்டங்கள் எல்லாக் குற்றவாளிகளையும் தண்டித்து விட்டதா? அரசே குற்றம் செய்தால் அவர்களைத் தண்டிப்பது எப்படி? அரசுக்குத் தெரியாமல் நடக்கின்ற குற்றங்களுக்கு எப்படி தண்டனை தர முடியும்?

சரி! இறைவனை நம்பி, நல்லவனாக வாழ்ந்து, ஒழுக்கங்களைப் பேணி, தீமைகளை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவனுக்கு என்ன பரிசை இந்த உலகம் தந்து விட முடியும்? (பார்க்க: அல் குர் ஆன் 45: 21-22)

நீதி வழங்கப் பட வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்விலும் ஆழமாகப் பதிந்துள்ள வேட்கை! அதனால் தான் அநீதிக்கெதிரான போராட்டங்களை நாம் மனித வாழ்வில் சந்திக்கின்றோம். ஆனால் அந்தப் போராட்டங்கள் எல்லாம் வெற்றியைச் சந்தித்ததா என்றால் அது தான் இல்லை!அது இந்த உலகத்தில் சாத்தியப் பட்டதே இல்லை!

எனவே தான், நீதிபதிக்கெல்லாம் மேலான நீதிபதியாகிய இறைவன் - மனிதர்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி நீதியை நிலை நிறுத்துகிறான்!

"உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவேன்" என்று இறைவன் சொல்லும்போது மனிதன் கேட்கிறான்:

"இது வியப்புக்குரிய விஷயம் தான்! நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா மீண்டும் எழுப்பப் படுவோம்?" இவ்வாறு எழுப்பப் படுவது என்பது அறிவுக்குப் புறம்பான விஷயமாகும்." (50: 3)

மறுமையை மறுக்கும் மனிதன் எடுத்து வைக்கும் இந்த வாதத்துக்கு இறைவன் எப்படி பதில் தருகிறான் பார்ப்போமா?

மனிதன் கேட்கிறான்: "நான் இறந்து விட்டால் உண்மையிலேயே மீண்டும் உயிர் கொடுக்கப் பட்டு எழுப்பப் படுவேனா? முன்பு அவன் எந்த ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த போது, நாம் தான் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?" (19: 66-67)

எழுதப் பட்ட ஏடு சுருட்டப் படுவதைப் போல நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் துவங்கினோமோ அவ்வாறேநாம் மீண்டும் படைப்போம். இது நம்முடைய பொறுப்பில் உள்ள ஒரு வாக்குறுதியாகும்! (21: 104)

பூமி வரண்டு கிடப்பதையும் நீர் காண்கின்றீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர் பெறுவதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கின்றீர். இது அல்லாஹ்வின் சான்றுகளீல் ஒன்றாகும். திண்ணமாக இறந்து விட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிர் ஊட்டுகின்றானோ, அந்த இறைவன் இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான். (41: 39)

இந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனும், அவற்றைப் படைப்பதனால் சோர்வு அடையாதவனுமாகிய அல்லாஹ், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்புவதற்கு ஆற்றல் உடையவனே என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா? (46:33)

அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்று திரட்ட முடியாது என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா? ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக் கூட மிகத் துள்ளியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம். (75:3-4)



ஆம்! மறுமை ஒரு சத்தியம் மட்டுமல்ல! சாத்தியமும் கூட!

courtesy:s.a.mansoor ali

Thursday, November 20, 2008

மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவது இழிவு!!!???

இவ்வுலகில் படிப்பு பதவி வியாபாரம் விவசாயம் இவற்றில் நமது கவனக்குறைவால் அறியாமையால் தோல்வி நஷ்டம் ஏற்பட்டால் இத்தோல்வி நஷ்டத்தைப் படிப்பினையாக வைத்து இரண்டாவது முறையோ அல்லது பலமுறை முயற்சி செய்து தோல்வியை வெற்றியாக மாற்றலாம். நஷ்டத்தை லாபமாக ஆக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆனால் நாம் நம்பும் மறுமையைப் பொறுத்தமட்டில் இரண்டாவது சந்தர்ப்பம் அறவே இல்லை. ஒரே முயற்சியில் வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லை என்றால் மாற்ற முடியாத மீட்க முடியாத நஷ்டமாக அது நம்மை நரகில் கொண்டு சேர்த்துவிடும். இதை மனதில் பதித்துக் கொள்வோம்.

இறைவன் எதை ஏவி இருக்கிறானோ அதைதான் நாம் செய்யவேண்டும். நமது முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காக ஒன்றைச் செய்து அதைக்கொண்டு மோட்சம் அடையலாம் என்று மனப்பால் குடிக்கக்கூடாது. பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரை குறையாக எழுதினாலும் மார்க் உண்டு. கேட்கப்படாத கேள்விகளுக்கு எவ்வளவு திறமையாக எழுதினாலும் கிடைப்பது பூஜ்யம்தான். அதுபோல் இறைவனால் ஏவப்படாததைச் செய்வதால் சுவர்க்கம் கிடைக்காது. இதையும் மனதில் பதித்துகொள்வோம்.

உலகத்தில் முன்னோர்களின் அறிஞர்களின் அனுபவம் ஆற்றல் நமக்கு பயன்படலாம். காரணம் அனுபவம் ஆற்றலை லாப நஷ்டமாக உலகிலேயே சந்தித்து அடைகிறார்கள். கண்கூடாகப் பார்க்கிறார்கள். ஆனால் மறுமை விஷயத்தில் மனிதனின் ஆற்றல் அறிவு செல்லாது. இதில் இறைவன் எதைச் சொல்கிறானோ அதைப் அப்படியே ஏற்றுச் செயல்படுவதே அறிவுடமையாகும்.

மனிதன் தனது அறிவு ஆற்றல் அனுபவத்தைக் கொண்டு செயல்படுவதும் கூடாது. அதை மற்றவர்களுக்கு போதிக்கவும் கூடாது. உலக விஞ்ஞான விஷயத்தில் முன்னோர்களைப் பின்பற்றுவது முன்னேற்றத்தை தரலாம். ஆனால் மார்க்க விஷயத்தில் பின்னேற்றத்தையும் தோல்வியைத்தான் அது தரும்.

ஆனால் முன்னோர்கள் செய்தது சரியாகத்தான் இருக்கும். முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்திருக்கமாட்டார்கள் என்று கூறுபவர்கள் கூற்றில் உண்மையில்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றக்கூடியவர்கள் அதை இவ்வுலகில் முதலில் செய்து காட்டவேண்டுமல்லவா? முன்னோர்கள் ஏழைகளாக இருந்தால் இவர்களும் ஏழைகளாக இருக்க ஆசைப்பட வேண்டுமல்லவா?

அவர்கள் குடிசையில் வாழ்ந்திருந்தால் இவர்களும் குடிசையில் வாழ ஆசைப்படவேண்டுமல்லவா? அவர்கள் கூழை குடித்து கந்தையை கட்டியிருந்தால் இவர்கள் கூழை குடித்து கந்தை கட்ட வேண்டுமல்லவா? இவை எல்லாம் இழிவு இவையெல்லாம் விட்டு சுகமாக வாழவேண்டுமென்று அல்லாவா அல்லும் பகலும் பாடுபடுகிறார்கள். அப்படியானால் இவர்கள் மத விஷயத்தில் மட்டும் முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்வது சரியா?

ஏழைகளாக இருப்பதைவிட குடிசையில் வாழ்வதைவிட கூழை குடித்து கந்தையைக் கட்டுவதைவிட மிகப்பெரும் இழிவு இறைவன் கொடுத்த மார்க்கத்தை விட்டு மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவது இழிவு மாதிரமல்ல, மறுமையில் மாபெறும் நஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டால் அவர்களால் அவ்வாறு சொல்ல முடியாது.

இவ்வுலகின் சாதாரணத் துன்பங்களை விட்டு விடுதலைப்பெற பெரும் முயற்சி எடுக்கும் மனிதன் மறுமையின் மாபெரும் துன்பங்களை உணர்ந்திருந்தால் புரிந்திருந்தால் அதை விட்டும் விடுதலை பெற முயற்சிக்காமல் இருக்க முடியுமா? சொர்க்கத்திற்கு போனாலும் நரகத்திற்கு போனாலும் முன்னோர்களைப் பின்பற்றியே நடப்போம் என்று சொல்லமுடியுமா?

சாத்தான் மனிதர்களைப் பல வழிகளில் முயற்சி செய்து நரகப்படுகுழியில் தள்ளுகிறான். முதலில் இறைவனை மறுக்கும் நாஸ்திகனாக்கப் பார்க்கிறான். அதில் அவன் தோல்வி கண்டால் மனிதன் இறைவனை ஏற்றுக்கொண்டால் இறைவனுக்கு இணைவைத்து அதன் மூலம் நரகில் விழச்செய்கிறான். இதற்காக அவன் பயன்படுத்தும் உபாயம் முன்னோர்களின், அரிஞர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்ற ஒரு பக்தி உணர்வை உண்டாக்குவதாகும். இதில் பெரும்பாலோர் சிக்கிவிடுகிறார்கள். முன்னைய அறிஞர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லியே மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டுப் போகிறார்கள்.

கடந்த கால சரித்திரத்தை உற்று நோக்கினால் இஸ்லாத்தை மிகவும் கடுமையாக எதிர்த்த அபூலஹப், அபூஜஹீல் இன்னும் இவர்கள் போன்ற வழிகேடர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள், இறை தண்டனைக்கு ஆளானவர்கள் என்ன கூறினார்கள்? நமது அறிஞர்கள் நமது முன்னோர்கள் முட்டாள்களா? மார்க்கம் தெரியாதவர்களா? நீ புதிதாதகச் சொல்ல வந்துவிட்டாயோ! அவர்களைவிட நீ மிகவும் அறிந்துவிட்டாயோ? அவர்கள் எல்லாம் வழி தவறியவர்களா? நரகவாதிகளா? என்று அடுக்கிக்கொண்டே போய் மக்களை வழி கெடுத்தார்கள்.

இறுதிவேதம் அல்குர்ஆனில் கூற்று இதனை உறுதிபடுத்துகிறது

2:170. மேலும், ''அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ''அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காாியத்தைச் செய்து விட்டால், ''எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்" என்று சொல்கிறார்கள். ''(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.

31:21. ''அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ''(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)

ஆகவே இறுதி வேதத்தின் உண்மையான நிலையை உணர்ந்து இறைவனின் முன்னோர்களின் அடிச்சுவட்டை கைவிட்டு உண்மையான மார்க்கத்தின் பால் திரும்பாறு இஸ்லாம் உலக மக்களை அழைத்துக் கொண்டேயிருக்கிறது.

Tuesday, November 11, 2008

பேண்ட்டும் போடலாம், வேஷ்டியும் கட்டலாம், லுங்கியும் அணியலாம் !!!

கிறிஸ்வர்களானாலும், இஸ்லாமியர்களானாலும் அடிப்படையில் நாம் தமிழர்கள். சிறுபான்மை சமுதாயத்தவர் பொங்கல் கொண்டாடுவதில்லை. அதை ஒரு இந்து மதவிழா போன்று நினைத்துப் புறக்கனிப்பதைப் பார்க்க முடிகிறது. எந்த மதத்தவரும் சொந்தம் கொண்டாட முடியாத, குறிப்பாக கிறிஸ்த்தவர்களும், இஸ்லாமியர்களும் கொண்டாடி தமிழர் விழாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. எனெனில் அதற்குப் பல பெயர்கள் சூட்டி அதை ஒரு மதப்பண்டிகையாக ஆக்க கடுமையான முயற்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குர்ஆனிலோ, இஸ்லாத்திலோ அது வலியுறுத்தப் படாவிட்டாலும் உங்கள் அமைப்பின் சார்பாக பொங்கள் திருவிழாவை அனைவரும் கொண்டாட நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

வேல்முருகன் - மதுரை



சகோதரர் வேல்முருகன் அவர்கள் நல்ல அழகான விஷயங்களை கோரிக்கைகளாக முன் வைத்தார்கள். இது சம்பந்தமாக சில விஷயங்களை இங்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.அவைகளை வைத்து தமிழுக்கோ தமிழர்களுக்கோ நான் எதிரி என நீங்கள் முடிவு கட்டிவிடக் கூடாது. வேஷ்டி அணிவது இந்துக்களின் கலாச்சாரம் எனவும் சாறம்(கைலி) அணிவது இஸ்லாமியர்களின் கலாச்சாரம் எனவும் நினைக்கிறார்கள். உடைகளில் பேதம் காட்டக்கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. உடையைப் பொறுத்த வரையில் அவரவர்களின் உடலமைப்புக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதை அணிவதில் தடை ஏதுமில்லை. முஸ்லிம்களுக்கென்று தனி ஆடை இஸ்லாத்தில் இல்லை.

பேண்ட்டும் (முழு நீளக் காற்சட்டை) போடலாம். வேஷ்டியும் கட்டலாம். லுங்கியும் அணியலாம். ஆனால் மறைக்க வேண்டிய பகுதிகள் மறைக்கப் பட வேண்டும். பட்டு ஆடையை ஆண்கள் அணியக்கூடாது. காவி நிறத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் இம் மூன்று விதிகளைத் தவிர வேறெதுவுமில்லை.

காற்று வீசும்போது வேஷ்டியின் மூலம் தனது அவயங்களை மறைத்துக் கொள்ள முடியாது எனக் கருதும் ஒருவர் லுங்கி அணியலாம். அதுவும் பாதுகாப்பானது அல்ல எனக் கருதுபவர் முழுநீள காற்சட்டை அணிந்து கொள்ளலாம். இங்கு கலாசரம் எனக் கூறிக்கொண்டு நமக்கிருக்கும் வசதி வாய்ப்புகளை சீரழிப்பது சிறப்பல்ல. மாட்டு வண்டியில் செல்வதுதான் நமது கலாசாரம் என எடுத்துக் கொண்டு பிடிவாதம் கொள்வது சரியல்ல. போக்குவரத்தில் வந்து விட்ட நவீனங்களை, முன்னேற்றங்களை பயன் படுத்திக் கொள்கிறோம். உடையிலும் அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதில் தவறு என்ன இருக்கிறது? அதுபோன்று ஒரு கலாச்சார விழா நமது நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்ற காரணத்திற்காக அதைச் செய்யும்படி எவரையும் வற்புறுத்த முடியாது. பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாடப் படுகிறது எனக் கூறப்படுகிறது.

அறுவடை செய்பவர்கள் தங்கள் தானியம் தமது வீட்டிற்கு வந்தடையும் வேளை மகிழ்ச்சியில் மூழ்குவது இயல்பே! இவர்கள் கொண்டாடினால் அதற்கு அர்த்தம் உண்டு. ஆனால் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்களால் இது கொண்டாடப்படுகிறது.

தானியத்தைப் பற்றி எதுவுமறியாத, விவசாயத்தைப் பற்றி எந்தக் கவலையுமற்ற சென்னைவாசிகள் ஆந்திர விவசாயிகளின் அரிசியை வாங்கி உண்ணுகின்றனர். உண்ணும் இவர்களைக் கொண்டாடுமாறு கேட்டு இவர்கள் கொண்டாடினால் அது இயல்பான கொண்டாட்டமாக இருக்காது. அவர்களின் மனோ நிலை சந்தோசமானதாய் இருப்பதற்குப் பதிலாக பண்டிகை வந்துவிட்டதே! செலவாகி விடுமே என்ற கவலை நிறைந்ததாகவே காணப்படும். இது ஒன்று.

இரண்டவது, எந்த நேரத்திலும் மனிதன் பகுத்தறிவை இழந்து விடக்கூடாது என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய விதிகளில் ஒன்று. எந்த நிலையிலும் மனிதனை விட மேம்பட்டதாக எப்பொருளையும் நினைக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற மிருகங்களை விட எல்லா வகையிலும் மனிதன் உயர்ந்தவன் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்த அடிப்படை விதிகளுடன் பொங்கல் விழாவை நோக்கும்போது அதிக முரண்பாடுகளை அங்கே காண முடியும்.

மாடுதான் எல்லாவற்றையும் தந்தது என நம்மிக் கொண்டு அதற்கு நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் மாட்டுப் பொங்கல் என்ற ஒரு வழிபாட்டைச் செய்கிறார்கள். அப்படி ஒரு கலாச்சாரத்தில் கேள்வி கேட்ட சகோதரர் வேல்முருகன் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட உண்மை நிலை அதுதான். மாட்டைக் கூம்பிடுகிறார்கள். அதற்கு வழிபாடு செய்கிறார்கள்.

மனிதனுக்கு ஏற்ற வகையில் தானாக இயங்கும் சிந்தனை மாட்டுக்கு கிடையாது. அதை எதற்கு நாம் பயன்படுத்துகிறோமோ அதை அது செய்யும் உழுதல், குத்துதல், சண்டையிடுதல் போன்ற வேலைகளுக்கு பழக்கப்படுத்தி நாமே அதைப் பயன்படுத்துகிறோம். நாம் அதைப் பயன்படுத்தி விவசாயம் செய்திருக்க அதற்கு பூஜை வழிபாடு எதற்கு? இதைச் செய்ய முற்படுகின்ற போது கடவுள் வழிபாடு போன்ற ஒரு தோற்றம் உண்டாகி விடுகிறது.

தம் கரங்களால் செய்த ஒரு பொருளான பானைக்கும் பூஜை செய்கிறார்கள். அதற்கு சில கோலங்கள் இட்டதும் புனிதத் தன்மை வந்துவிட்டதாக மக்கள் நினக்கிறார்கள். மாட்டுக்கும் கோலம் போட்டு கடவுளாக ஆக்கியது போல் இதுவும் அமைந்து விடுகிறது. இப்போது இஸ்லாத்திற்கு நேர் எதிர் மாறான கொள்கை செயற்பாடுகள் வந்து நுழைந்து விட்டன.ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்திருக்கலாம். அந்த நிலமைக்கு அதை நீங்கள் கொண்டு வாருங்கள் ஆட்சேபனை இன்றி எல்லோரும் கொண்டாடுவோம்.

கும்பிடக்கூடிய. பலதெய்வ வணக்கங்களை உண்டாக்கக்கூடிய விதத்தில் அவ்விழாக்கள் செல்லும்போது அதிலிருந்து ஒதுங்கி விடுமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. நாம் தவிர்த்துக் கொள்ள காரணம் இதுவே தவிர காழ்ப்புணர்ச்சியல்ல.

Thursday, November 6, 2008

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால்........

கேள்வி: மறுபிறவி இருப்பது உண்மையா?

மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள். இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும். அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிலிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது.
ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை. அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

Wednesday, October 22, 2008

'த்வம் ஏகம் வரண்யம் த்வம் ஏகம் சரண்யம் த்வம் ஏகம் ஜகத் காரணம் விஸ்வரூபம்'

கேரளாவில் உள்ள 'டயலாக் செண்டர்' நடத்திய 'சிநேக சங்கமம் நிகழ்ச்சியில் ஓர் இந்து சகோதரர் கேட்ட கேள்வியும் அதற்கு டயலாக் செண்டர் இயக்குனர் ஷேக் முஹம்மத் காரகுன்னு அளித்த விளக்கமும்!

முஸ்லிம்கள் நினைப்பது போல் நாங்கள் பல தெய்வ நம்பிக்கையாளர்களோ பல தெய்வங்களை வணங்குபவர்களோ அல்ல...! இறைவன் ஒருவனே என்று நம்பி இறைவனை வழிபடுபவர்கள் தாம்! சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதற்குக் காரணம், இறைவனை நினைவு கூற்வதற்கும், இறைவன் பக்கம் கவனத்தை மையப்படுத்துவதற்கும்தான்! அப்படியிருக்க, நீங்கள் ஏன் உருவ வழிபாட்டை குறை சொல்கிறீர்கள்? ஏன் அதை எதிர்க்கிறீர்கள்?

இஸ்லாம் இறைவனின் ஏகத்துவத்தை அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும்; அவனுக்கு மட்டுமே வழிபடவேண்டும் என்று வலியுறுத்துகிறது. இறைவனுடை சிறப்புகளிலும் பண்புகளிலும் அதிகாரத்திலும் அவனுக்குப் பங்காளிகளை ஏற்படுத்துவது மன்னிக்க முடியாத பாவமாக இஸ்லாம் கருதுகிறது. அதனால்தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் உருவ வழிப்பாட்டை மறுக்கிறோம்.

1.இறைவன் உருவ மற்றவனும் பார்வைக்கு புலப்படதவனும் ஆவான் என்றுதான் இந்து மதம் உள்பட உலகின் எல்லா மதங்களும் சொல்கின்றன. கேனோபநிஷத்தில் இவ்வாறு உள்ளது

'யன்மனஸா ந மனுதே யே நாஹுர் மநோ மதம் ததேவ பிரம்ம த்வம் வித்தி நேதம யதிக முபாஸதே (1:6)

(மனத்தால் அறிய முடியாததும், ஆனால் மனதுக்கு அறியக்கூடிய ஆற்றலை அளித்ததும் எதுவோ அதுவே பிரம்மம் என அறிக. 'இதுதான் பிரம்மம்' எனக்கருதி உபாசிக்கப்படுவது எதுவும் பிரம்மம் அல்ல.)

'யச்சக்ஷுஷா ந பஷ்யதி யேன சக்ஷும்ஷி பஷ்யதி ததேவ பிரம்ம த்வம் வித்தி நேதம் யதித முபாஸதே' (1:7)

(கண்களால் காண முடியாததும், கண்களுக்குப் பொருள்களைக் காணும் ஆற்றலை அளித்ததும் எதுவோ அதுவே பிரம்மம் என அறிக. இதுதான் அது என உபாசிக்கப்படும் எதுவும் பிரம்மம் அல்ல.)

'யது ஷ்ரோத்ரேன நஸ்ருனோதி யேன ஷ்ரோத்ரமிதம் ஷுர்தம் ததேவ பிரம்ம த்வம் வித்தி நேதம் யதித முபாஸதே

(செவிகளால் கேட்க முடியாததும், கண்களுக்குப் பொருள்களைக் காணும் ஆற்றலை அளித்ததும் எதுவோ அதுவே பிரம்மம் என அறிக. 'அதுதான் இது' என உபாசிக்கப்படும் எதுவும் பிரம்மம் அல்ல.)

இறைவன் உருவமற்றவன் என இந்துமதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. உபநிஷத்துகள் இறைவனைக் குறிப்பிடும்போது உருவமற்றவன் என்றே குறிக்கிறது.

'நிர்கத ஆகாராது ஸ நிகாரா' - எவன் ஒருவனுக்கு ஆகிருதி(உடம்பு) ஒன்றும் இல்லையோ அவனே இறைவன் (சுவாமி தயானந்தசரஸ்வதி, சத்யார்த்த பிரகாசம், ஆர்ய பிராதேசிக பிரதிநிதி சபா,பஞ்சாப் பக்கம்38)

சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதுகிறார்:
இறைவன் உருவமற்றவன்; ஏனெனில் உருவமுள்ளவனாக இருந்தால் வியாபகனாய் (எங்கும் நிறைந்து) இருக்க முடியாது. வியாபகனாய் இல்லையெனில் அனைத்தும் அறிபவன் போன்ற குணங்கள் அவனிடம் இருக்க வாய்ப்பில்லை. பரிச்சனாமாய பொருளில் உள்ள குணம், கர்மா, சுபாவம் போன்றவையும் பரிச்சினங்களாகவே இருக்கும். அதுமட்டுமல்ல இறைவன் உருவம் உள்ளவன் எனில், தட்ப வெப்பங்கள், நோய்கள், தோஷங்கள், குறைகள் போன்ற பாதிப்புகளில் இருந்து விலகி இருக்க முடியாது. ஆகவே இறைவன் உருவமற்றவன் என்பதே தீர்மானமான உண்மை. (சத்யார்த்த பிரகாசம் பக்கம் 288)

குர்ஆன் கூறுகிறது:

அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்கமுடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான். ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமான தெளிவான ஞானமுடையவன். அல்குர்ஆன் 6:101-103

உருவமற்றவனும் பார்வைகளுக்கு எட்டாதவனுமாகிய இறைவனுக்கு உருவம் கற்பிப்பது செயற்கையானதாகும். சத்தியத்தை கற்பனையுடன் கலக்கும் செயல். அது இறைவனைப் பற்றிய கருத்தை நம்பிக்கையாளர்களிடம் உருவாக்குகிறது. அதனாலேயே அது இறைவன் மீது இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகிறது. இது தொடர்பாக பிரமானந்த சுவாமி சிவயோகி எழுதுகிறார்:

நமது தந்தையினுடைய அல்லது குருவினுடைய படங்களை வைத்து அவர்கள் இல்லாதபோது பார்த்து மகிழ்கிறோம்; வணங்குகிறோம்; அதே போல் கோவிலில் இறைவனின் சிலையை வைத்து பூஜித்து மகிழ்கிறோம். அப்படிச் செய்யாவிட்டால் அற்ப அறிவு படைத்தவர்களுக்கு இறைவன் இருக்கிறான் என்பதைப் புரிய வைப்பது எப்படி? என்று சிற்பிகள் வாதாடுகிறார்கள்.

இது அபத்தமான வாதம். தந்தையையும் குருவையும் நேரில் நிற்க வைத்து போட்டோ எடுக்கிறோம். அதில் அவர்களின் ஆகிருதியும்(உடம்பு) உண்டு. ஆனால் இறைவனுக்கு 'உடல்' இல்லை. பிறகு எப்படி படமாக சிலையாக எடுக்கமுடியும்? சிற்பிகளும், ஓவியர்களும் செதுக்குவதும் வரைவதும் எல்லாம் இறைவன் ஆகிவிட முடியுமா? அல்லது இவர்கள் செதுக்குவதும் வரைவதும்தான் இறைவன் என்று இவர்களுக்கு யார் சொன்னது? இப்படி உருவங்கள் சிலைகள் மூலம் இறைவனையும் வழிபாட்டு முறைகளையும் தவறாக புரிய வைப்பது அனர்த்தனமாகும். (நூல்: சிலை வழிபாடு ஒரு விமர்சனம் பக்கம்28-29)

2.நம்மீது கவனம் குவிய வேண்டும் என்பதற்காக நம்மை நினைவு கூறவேண்டும் என்பதற்காக யாரேனும் குரங்கு படத்தையோ, நாய் படத்தையோ வைத்து பூஜை செய்வதை நாம் விரும்புவோமா? நிச்சயம் விரும்ப மாட்டோம். காரணம் குரங்கும் நாயும் நம்மைவிட சாதாரண தாழ்வான படைப்புகள் என நாம் அறிந்திருக்கிறோம். அதே போல், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் இறைவனால் படைக்கப்பட்டவை; அவனுடம் ஒப்பீடு செய்ய முடியாத அளவுக்கு சாதாரணமானவை. அவற்றில் ஏதேனும் ஒன்றை இறைவனை நினைவு கூற்வதற்கும், இறைவன் மீது கவனத்தைக் குவிப்பதற்கும் பிரதிஷ்டை செய்வது மாபெரும் அநீதியும் பாவமும் ஆகும்.

3.இறைவனை எப்படி வழிபடவேண்டும் என்று சொல்கிற உரிமை இறைவனுக்குத்தான் உண்டு. சிலைகளையோ, பொம்மைகளையோ வைத்துத்தான் தன்னை வணங்க வேண்டும் என்று இறைவன் கூறவில்லை. அது மட்டுமல்ல, சிலைகளையோ உருவங்களையோ வைத்துத் தன்னை வணங்கக்கூடாது என்றும் அழுத்தமாக கட்டளை பிறப்பித்துள்ளான்.

4.உண்மையான இறைவனை விடுத்து மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதோ, வழிபடுவதோ அடாத செயல் என்று இஸ்லாத்தைப் போலவே இந்து மதமும் சொல்லியுள்ளது.

சந்தோக்யோபநிஷத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
'ஓமித்யேத தக்ஷா முத்கீத முபாஸதே'

(ஓங்காரம் எவனுடைய பெயராக இருக்கிறதோ, எவனுக்கு எப்பொழுதும் அழிவே இல்லையோ அவனை மட்டுமே உபாசிக்க வேண்டும்; வேறு யாரையும் அல்ல.)

புகழ்பெற்ற இந்துமத சுலோகம் (ஸ்தோத்திரம்)ஒன்று இப்படிக் கூறுகிறது.
'த்வம் ஏகம் வரண்யம் த்வம் ஏகம் சரண்யம் த்வம் ஏகம் ஜகத் காரணம் விஸ்வரூபம்'

(உன்னை மட்டுமே வணங்குகிறோம்; உன்னிடம் மட்டுமே சரணடைகிறோம். உலகைப் படைத்ததன் முழுமுதற்காரணம் நீயே...! நீ மிகப்பெரியவன்)

ஸ்வேதா உபநிஷத் இவ்வாறு கூறுகிறது;
'தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதாநாம் பரமம் சதெய்வம் பதிம் பதீம்நாம் பரமம் பரஸ்தாது விதாம தேவம் புவனேச மீட்யம்'

சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதுகிறார்;
"துதித்தல், போற்றுதல், இறைஞ்சுதல், வனங்குதல்(உபாசனை)
இவையெல்லாம் மிக உயர்வான ஒருவனுக்கு மட்டுமே உரியன! அவனையே 'பரமேஸ்வரன்' (மாபெரும் இறைவன்) என்கிறோம். அன்பு, கருணை, இரக்கம், சத்தியம் போன்ற பண்புகள் அவனிடம் இருப்பது போல் வேறு யாரிடமும் இல்லை. ஆகவே மனிதர்கள் அந்தப் பரமேஸ்வரனை மட்டுமே துதித்துப் போற்றி வணங்கவேண்டும். வேறு யரையும் வணங்கக்கூடாது" (சத்யார்த்த பிரகாசம் பக்கம்12-13)

5.குழந்தைகளுக்கு சிறிய சட்டை வேண்டும், பெரிய சட்டை சரியாக இருக்காது. அதுபோல குறைந்த அறிவு உள்ளவர்களுக்கு உருவ வழிபாடு தேவை; பிரம்ம தியானம் செய்ய அவர்களால் இயலாது என்று வாதிடுகின்றனர்.

6.உருவ வழிபாடு செய்பவர்களில் பெரும்பாலோர் விக்கிரகங்களுக்குத் தனிப்பட்ட சிறப்பும் தகுதியும் புண்ணியமும் கற்பிப்பவர்களாகவே இருக்கிறார்கள். யாருடைய சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ அவருடைய சைதன்யம் இறங்கி வருகிறது என்பதே உருவ வழிபாட்டுக்காரர்களின் நம்பிக்கை. கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக எனில் அதற்குச் சிலைதான் வேண்டும் என்றில்லையே!

நடைமுறை வாழ்வில் தாங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் சிலைகளை மாற்றுவதற்குக்கூட அவர்கள் தயாரில்லை...! ஆகவே விக்கிரகங்கள் இறைவனை நினைவு கூர்வதற்கும், கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும்தான் என்ற வாதத்தில் உண்மை இல்லை. பல தெய்வ வழிபாட்டு முறைதான் அது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
7.இறைவன் இணை துணை இல்லாதவன்; மனிதர்களின் பார்வைக்குப் புலப்படாதவன் என்றே எல்லா மதங்களும் கூறுகின்றன. இறைவனைப் பொறுத்தவரை 'அவன் இன்ன பொருளைப் போன்றவன்' என்று கூட யாராலும் சொல்ல முடியாது. அதுமட்டுமல்ல, மனிதனின் கண்ணும் மனதும் எதன் மீதும் மையம் கொள்கின்றனவோ அதனுடைய பிரதி பிம்மம்தான் மனதில் பதியும். சிலைகளை வழிபடுபவர்களின் இதயங்களில் சிலைகளின் பிரதி பிம்மங்கள்தான் பதியுமே தவிர, இறைவன் இடம்பெற மாட்டான். இவ்வாறு இறைவனின் இடத்தை சிலைகள் கைப்பற்றி விடுகின்றன.

8.படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதனே...! ஆகவே மனிதன் தன்னுடைய கீழ்ப்படிதலையும் பக்தியையும் வழிபாடுகளையும் தன்னைப் போன்ற சக மனிதர்களுக்கோ, தன்னை விடக் கீழான படைப்புகளுக்கோ அர்ப்பணிப்பது அவனுடைய தகுதிக்கும் உயர்வுக்கும் ஏற்ற செயல் அல்ல...! அவ்வாறு செய்வது மனிதன் தன் இறைவனுக்குச் செய்யும் அநீதி மட்டுமல்ல; தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் அக்கிரமும் ஆகும் என்று இஸ்லாம் கூறுகிறது.

யார் இந்தப் பேரண்டத்தைப் படைத்தானோ, அனைத்து ஆற்றலும் அறிவும் யாரிடம் இருக்கிறதோ, யார் அனைத்தையும் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கின்றானோ அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும். இந்தத் தகுதிகள் எல்லாம் இருப்பது இறைவனிடம் மட்டுமே! இந்தத் தகுதியை மற்றவர்களுக்கு வழங்குவது பாவமாகும். இந்தக் காரணங்களால் தான் உருவ வழிபாடு - விக்கிரக ஆராதனை மாபெரும் பாவம் ஆகி விடுகிறது.

Monday, October 20, 2008

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்

இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்!

உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும், எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து பக்குவப்படுத்தி பரிபாலிப்பது அனைத்துமே அந்த ஒரே இறைவனின் கையில்தான் இருக்கிறது என்ற ஓர் (கடவுள்) இறைக் கொள்கையை நம்பிக்கை கொள்வதாகும்.

இது தவிர முஸ்லிம் அல்லாத சிலரும் ஒரு கடவுள் கொள்கையை போதித்து இருக்கிறார்கள்; சொல்லியுமிருக்கிறார்கள்; நம்பியுமிருக்கிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியை நானும் நீங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே, 'ஒருவனே தேவன் என்பது ஒரு புதுக்கொள்கையல்ல. இஸ்லாம் மாத்திரம் போதித்த போதனையுமல்ல. அதிகமானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் இஸ்லாம் கூறும் அக்கொள்கைக்கும் மற்றவர்கள் போதித்த கொள்கைக்குமிடையில் பல பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

ஒரு கடவுள்தான் உண்டு என்று சொல்லி நிறுத்திகொள்ளாமல்இறைவனுக்கென்று சில இலக்கணங்களை, வரையரைகளை, விதிமுறைகளை முன்வைத்து இவைகளை மீறிச் செயல்படக் கூடாது எனக் கட்டளையிட்டு, ஏனையோரின் கொள்கையிலிருந்து வேறுபட்டுத் திகழ்கிறது இஸ்லாம்.

இறைவன் என்பவன் எந்தத் தேவையுமற்றவன்.தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் எப்பொருளும் இறைவனா(கடவுளா)க முடியாது. உதாரணமாக, மனிதன் சிலவற்றுக்கு காணிக்கை செலுத்துகிறான். இப்படிச் செய்வதன் மூலம் நமது தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் அப்பொருள் இறைவனாக முடியாது.
இறைவன் என்பவன் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. மனிதர்கள் இறைவனுக்கு எந்த காணிக்கையையும் செலுத்தக்கூடாது. அப்படிச் செய்யும்போது இறைவனை (கடவுளை) பலவீனமானவனாக நாம் ஆக்கி விடுகிறோம். மனிதர்களிடம் நிறைய பலவீனங்கள் காணப்படுவதை நாம் அறிவோம். இளமை முறுக்கோடு எந்த மனிதனும் தொடர்ந்து வாழ்ந்ததில்லை. முதுமை அடைகிறான். நோய் நொடிகளுக்கு ஆளாகிறான். கவலை, துன்பம் போன்றவை அவனை ஆட்கொள்கின்றன.இப்படி பல்வேறு பலவீன நிலைகளை மனிதன் அடைகிறான். இறுதியில் மரணமும் கூட அவனைத் தழுவிக் கொள்கிறது. ஆனால் இறைவன் இவை அனைத்தையும் விட்டு பரிசுத்தமானவன்.
இறைவன் (கடவுள்) நேற்று இளமை பிடிப்போடு இருந்தான். இன்று வயதாகி விட்டது என்று நாம் கூறினால் நாளை வேறொரு இறைவனை தேட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இறைவன் நோய், முதுமை, மறதி, மரணம் போன்ற மனிதனுக்கேற்படுகின்ற உபாதைகள் எதற்குமே உட்படாதவானாக இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் ஒருவரிடம் சென்று நாளைக்குச் திருப்பித் தருவதாகக்கூறி கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருப்போம். பின்னர் அதை மறந்து விடுவோம். சில நாட்களுக்குப் பின் அவன் வந்து கேட்டால் காரணத்தைக் கூறி அதை திருப்பித் தந்துவிடுவோம். இது மனித இயல்பு. இது போன்ற மறதி இறைவனுக்கு உண்டு என நம்புவது எப்படிப் பொருந்தும்?
துன்பத்தில் மாட்டிக் கொண்ட ஒருவன் 'இறைவனே (கடவுளே!) என்னைக் காப்பாற்று' என மன்றாடும் வேளையில் இறைவன் தூங்கிக் கொண்டிருந்தான் எனில் இவனது அழைப்புக்கு அவனால் எப்படி பதில் கொடுக்க முடியும்? மனிதர்கள் அனைவருமே ஒரே நேரத்தில் உலகில் தூங்குவதில்லை. இரவில் தூக்கம் வராத ஒருவன் இறைவா! (கடவுளே!) எனக் கூக்குரலிடுகிறான். அதே போல் நோயால் வேதனைப்படுபவன் கதறுவான்.இவைகளை செவிமெடுப்பவனாக இறைவன் இருக்க வேண்டும்.எனவே, தூக்கம், மறதி,மலஜலம் கழிப்பது போன்ற அனைத்து பலவீனங்களையும் விட்டு பரிசுத்தமானவனாக இருப்பவனே இறைவனா(கடவுளா)க இருக்க முடியும்!

இறைவன் பெண்களுடன் குடும்பம் நடத்துவதாக சில கொள்கை கோட்பாடுகள் கூறுகின்றன. இஸ்லாம் இதை முற்றிலும் மறுக்கிறது. இறைவன் மனைவி, மக்களை விட்டும் தேவையற்றவனாக இருக்க வேண்டும். மனிதனுக்கு இருப்பதைப் போன்று இறைவனுக்கும் இத்தேவைகள் இருக்குமென்றால் தன் அடியார்களான மனிதர்களின் தேவைகளை அவனால் எப்படி நிறைவேற்ற முடியும்? சுருக்கமாகச் சொன்னால் பலவீனமும் தேவையும் இறைவனுக்கு இருக்கவே கூடாது. இதை உள்ளடக்கிய கடவுள் கொள்கையைத்தான் இஸ்லாம் முன் வைக்கிறது. இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கை பற்றிய இரு முக்கிய நம்பிக்கைகளில் முதலாவதாகும்.

ஒரே கடவுளை அதுவும் நாம் விவரித்த முறையில் ஏன் நம்ப வேண்டும்? ஏழு,பத்து கடவுள்கள் உண்டு என்று நம்பினால் என்ன குறைந்துவிடும்? நமக்குள் எழுகின்ற இந்த சந்தேகங்களுக்கும் இஸ்லாம் ஒரு தெளிவை முன்வைக்கிறது. ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை நம்பினால் நமது பகுத்தறிவு செயலிழந்து போகும். மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.

உதாரணமாக கடவுளுக்கு நாம் செலுத்தும் காணிக்கை விஷயத்தை சற்று உற்று நோக்குவோம். நாம் செலுத்தும் காணிக்கையை கடவுளா பயன்படுத்துகிறான்? இல்லை.நம்மைப் போன்ற ஒருவர் கடவுளுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையை எடுத்துச் செல்கிறார். இங்கே நாம் ஏமாற்றப்படுகிறோம். நாம் விரும்பி ஒருவருக்கு இனாமாகக் கொடுப்பது வேறு விஷயம். இறைவனின் (கடவுளின்) பெயரால் ஏமாற்றப்படுவது அநியாயமல்லவா? இறைவன் (கடவுளர்கள்) பல உண்டு என்று நம்புகின்றபோது கடவுளின் பெயராலேயே மனிதர்கள் கூறு போடப்படுபடுகிறார்கள். பிரிவுக்கு இது ஒரு வழி வகுக்கிறது. இறைவன் ஒருவன் தான் என்று சொல்லுகின்ற போது மனிதர்கள் அனைவருமே ஒன்று என்ற கோட்பாடு வலுவடைகிறது. இஸ்லாம் இதைத்தான் சொல்லுகிறது.

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அநேக ஆண், பெண்களை (வெளிப்படுத்திப்) பரவச் செய்தான். திருக்குர்ஆன் 4:1

எல்லா மனிதர்களுக்கும் மூல அடிப்படை (ஆதம், ஹவ்வா என்ற) ஒரு ஆண் பெண்தான் இருக்கிறார்கள். அந்த ஜோடியே இவ்வளவு பெருக்கம் அடைந்து இருக்கிறது. இவர்கள் பல்கிப் பெருகி ஜாதி, மொழி, நாடு ரீதியாக சிதறிப்போய் உள்ளனர். அடிப்படையில் எல்லோரும் ஒன்றுதான். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், புத்தம், நாத்திகர் யாராயினும் அவர்கள் அனைவரும் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்களே! அந்த மூல ஜோடியை படைத்தவனே இறைவன் (கடவுள்) என இஸ்லாம் இயம்புகிறது.

p.zainul abideen.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!