அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்று 30.4.2014இல் தொடங்கும் காட்டுப்பள்ளி தர்கா கந்தூரியைத் தடை செய்ய
வேண்டி, மாவட்ட ஆட்சியருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் மனு ஒன்றை அனுப்பியது
(இணைப்பு1).
அதைத் தொடர்ந்து நேற்று (29-04-2014) மாலை 4 மணி அளவில் பட்டுக்கோட்டை
கோட்டாட்சியர் அலுவலகத்தில் 'சமாதானக் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டு,
கந்தூரிக் கமிட்டியினரும் கந்தூரியை எதிர்க்கும் அதிரை தாருத் தவ்ஹீத்
அமைப்பினரும் அழைக்கப்பட்டிருந்தோம்.
கலந்து கொண்டவர்கள்:
அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக
1. எம்.பி. அஹ்மத் (அமீர்)
2. ஜமீல் எம் ஸாலிஹ் (செயலர்)
3. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
4. கமாலுத்தீன் (இஸ்லாமியப் பயிற்சி மையப் பொறுப்பாளர்)
5. அஹ்மது ஹாஜா
6. மாஜுதீன்
கந்தூரிக் கமிட்டி சார்பாக
1. எம்.எம்.எஸ் ஷேக் [அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு கமிட்டித் தலைவர்]
2. சுல்தால் அப்துல் காதர் (36)
3. மஸ்தான் கனி
4. பத்ருஸ் ஸமான் ( மதார் சா)
5. அப்துல் வாஹித் (கித்தில்)
தொடக்கமாக, கோட்டாட்சியரின் முன்னுரையை அடுத்து எங்களிடம் கருத்துகள்
கேட்டபோது, தாருத் தவ்ஹீத் தொடங்கப்பட்ட 1982லிருந்து 32 ஆண்டுகால தாருத்
தவ்ஹீதின் பிரச்சாரங்களில் இதுவரைக்கும் எந்தவொரு சிறு அசம்பாவிதமும்
நடந்ததில்லை என்பதையும் சட்டம்-ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில்
இதுவரை நாங்கள் நடந்துகொண்டதில்லை என்பதையும் தகவலாகப் பதிவு
செய்துகொண்டு, "எங்களுடைய கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்து அதை மாவட்ட
ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்று நகரக் காவல்துறை ஆய்வாளர் எங்களை
அழைத்தார். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது; அதற்குத் தடை வேண்டும்
என்ற எங்களுடைய உறுதியான கருத்துகளை ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து
மூலமாக அனுப்பிவிட்டோம்" என்றும் சுட்டிக் காட்டினேன். "லா இலாஹ
இல்லல்லாஹ்வின் பொருள் உங்களுக்கே தெரிந்திருக்கும். வழிபாடுகள் அனைத்தும்
அல்லாஹ் ஒருவனுக்கே என்று அதற்குப் பொருள். கந்தூரியை வழிபாடு என்று
நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். கந்தூரிக் கமிட்டியினரும் வழிபாடு என்றே
குறிப்பிடுகின்றனர். இரண்டு பேருக்கு வழிபாடுகள் என்பது இஸ்லாத்தில்
கிடையாது. உள்ளூரிலும் வெளியூரிலும் வசூல் செய்து, ஒருவருடைய இறந்த தினத்தை
மேள தாளங்களோடு மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது கந்தூரிக் கமிட்டியாரின்
வழக்கமாக இருக்கிறது. இது எவ்வளவு மோசமான செயல்?
சட்டம்-ஒழுங்கைப் பற்றி மட்டும் உங்களுக்குப் பிரச்சினை. எங்களுடைய
பிரச்சினை என்னவென்றால், கந்தூரி என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதை
நிறுவச் சொல்லுங்கள்; நாங்களும் சேர்ந்து செய்கிறோம். கந்தூரி என்பது
இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை நாங்கள் நிறுவுகிறோம்; நிறுத்திவிடச்
சொல்லுங்கள்" என்று தீர்வு சொன்னேன்.
நாகூரிலும் அஜ்மீரிலும் முத்துப்பேட்டையிலும் போய் நிறுத்திவிட்டு வரும்படி அதிமேதாவித்தனமான பதிலை மதார் சா வைத்தார்.
"நாகூர் கந்தூரியைப் பற்றி நாகப்பட்டின ஆர்டிஒ ஆஃபிசிலும் முத்துப்பேட்ட
கந்தூரியைப் பற்றி திருவாரூர் ஆர்டிஓ ஆஃபீஸிலும் பேச்சுவார்த்தை நடக்கும்.
பட்டுக்கோட்டை ஆர்டிஓ ஆஃபீஸில் நாம் உட்கார்ந்திருப்பது
அதிராம்பட்டினத்துக் கந்தூரியைப் பற்றிப் பேசுவதற்காக" என்று விளக்கினேன்.
கந்தூரியை நிறுத்துவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்று கோட்டாட்சியர்
கூறிவிட்டு, கந்தூரியை அமைதியாக நடத்துவதற்கு உங்களுடைய கண்டிஷன் என்ன?
என்று கேட்டார். அதற்கு, "கந்தூரியே கூடாது என்பதுதான் அவர்களுடைய
கண்டிஷன்" என்று காவல்துறை ஆய்வாளர் பதிலளித்தார். நாங்கள் ஆமோதித்தோம்.
எம்.எம்.எஸ் ஷேக் அவர்கள் [அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி தலைவர்], கந்தூரிகள் ஆல் ஓவர் இந்தியாவில் நடப்பதாகக் குறுக்கிட்டார்.
அதுவரை பொறுமையாக இருந்த அமீர் அவர்கள் தம்மை ஆங்கிலத்தில்
கோட்டாட்சியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, "இந்தியா முழுக்கவும்
நடந்தாலும் கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு முரணானது" என்பதை ஆங்கிலத்தில்
எடுத்துக் கூறினார். கந்தூரி எதிர்ப்பாளர்களின் வீட்டுக்கு எதிரே
வேண்டுமென்றே பாட்டும் கூத்தும் நெடிய நேரம் நடத்துவது வழக்கமாயிருக்கிறது
என்ற அமீரின் குற்றச்சாட்டுக்கு, "பெண்கள் கூட்டம் நின்றால், கூத்து
நடக்கத்தான் செய்யும்" என்று மஸ்தான் கனி கூறியதும் ஹாஜாவுக்குப் பற்றிக்
கொண்டது. மறைந்த சகோ. அபுல்ஹஸன் அவர்களின் வீட்டுக்கு எதிரே நடந்த நீண்ட
நேரக் கூத்தும் அதற்கு எதிர்வினையாக மிளகாய்த் தண்ணீர் அபிஷேகமும்
நடத்தப்பட்டதை எடுத்துச் சொல்லி, யார் வீட்டுப் பெண்கள்? முஸ்லிம் வீட்டுப்
பெண்கள் வீட்டுக்கு எதிரே கூத்துப் போடுவதுதான் வழிபாடா? அப்படி நடந்தால்
கலவரம் ஏற்படாதா? எனப் பொங்கிவிட்டார். கோட்டாட்சியர் அமைதிப்படுத்த
முயன்றபோது, தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே மேலத்தெரு கந்தூரி
ஊர்வலத்தில் கொலைவெறியுடன் தாக்கப்பட்டதையும் தனக்கு இழைக்கப்பட்ட
அநீதியால் பாதிக்கப்பட்டு இன்றுவரை ச்சார்ஜ் ஷீட் போடப்படாமல் காவல்துறை
இழுத்தடிப்பதையும் தான் ஹஜ்ஜுக்குப் போவது தாமதப்படுவதையும்
எடுத்துரைத்தார்.
மேலத்தெருவில் கந்தூரிக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதாக நிஜாமுத்தீன்
கூறியபோது எம்.எம்.எஸ் ஷேக், மேலத்தெரு கமிட்டிதானே கந்தூரி நடத்துகிறது?
மேலத்தெருவில் எதிர்ப்பு எப்படி வரும்? எனக் கேட்டார். அதற்கு, "நாளைக்கு
மேலத்தெரு ஜமா அத் கூட்டத்தைக் கூட்டுவோம். அப்போது தெரியும் எவ்வளவு
எதிர்ப்பு இருக்கிறதென்று" என்று நிஜாமுத்தீன் புள்ளி வைத்தார். கந்தூரி
முடிந்து கூட்டுவோம் என்று எம்.எம்.எஸ் ஷேக் பதிலளித்தார். நிஜாமுத்தீன்
விடாமல், "நாளைய கந்தூரிக்கு எதிர்ப்பு எவ்வளவு எனத் தெரிந்துகொள்வதற்குக்
கந்தூரி முடிந்தபின் கூடி என்ன பிரயோஜனம்?" என்று எதிர் கேள்வி கேட்டபோது
பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத பேச்சுகள் குறுக்கிட்டன.
அல் பாக்கிதத்துஸ்ஸாலிஹாத் பள்ளி அருகில் பதட்டம் இருப்பதை நிஜாமுத்தீன்
பதிவு செய்தபோது, மதார் சா "அவர்களில்தான் யாராவது சிலர் பிரச்சனை
உண்டாக்குவார்கள்" எனப் பழியை எங்கள் மீது சுமத்தப் பார்த்தார். அதற்கு,
"L&O பிரச்சனை வரக்கூடாது என்பதால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு
வந்துள்ளோம். L&O problem உண்டு பண்ணிதான் தீர்வு என நாங்கள் நம்பினால்
அதையும் நாங்கள் செய்வோம். இரண்டாம் தர வேலை செய்ய மாட்டோம். நீங்கள் அதை
விரும்பினால் அமைதிப் பேச்சு வார்த்தை மெத்தேடை மாற்றிக்கொள்வோம். எப்படி
வசதி?" என நிஜாமுத்தீன் எதிர்க் கேள்வி வைத்தார்.
"மழையில்லாமல் செடிகளெல்லாம் கருகிக் கிடக்கின்றன. எங்கள் வீட்டுக்கு
அருகில் வைத்துதான் வெடி விடுகிறார்கள். தீ விபத்து நடப்பதற்கு
முன்னெப்போதையும்விட இந்த வறட்சி காலத்தில் வாய்ப்புகள் அதிகம்" என்பதை
மாஜுதீன் பதிவு செய்தார்.
இறுதியாக சமாதானக் கூட்ட நடவடிக்கைகள் ப்ரிண்ட் செய்து வந்தது.
அதிலிருந்த 'மேலத்தெரு ஜமாஅத்தினரும்' என்பதை நிஜாமுத்தீன் எதிர்த்ததில்
அது முழுதும் நீக்கப்பட்டது. காட்டுப்பள்ளிவாசல் என்பது காட்டுப்பள்ளி
தர்கா என்று திருத்தப்பட்டது. கடைத்தெரு சாலையின் வடக்குப் பக்கம்
முழுமையாகக் கந்தூரி ஊர்வலம் போகாது என்று கந்தூரிக் கமிட்டியினரால்
வாய்மொழியாக அளிக்கப்பட்ட உறுதியை எழுத்தில் (ஆறாவது ப்பாயிண்ட்டாக) இணைக்க
வலியுறுத்தினோம் (இணைப்பு).
http://adirainirubar.blogspot.com/2014/04/blog-post_30.html
No comments:
Post a Comment