Friday, July 30, 2010

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன்                                              தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்   இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர் களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.

அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.

இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …

கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.

அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர். மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !

இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.

இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
 
பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள : +91 99658 92706

Thanks : Samarasam Tamil Fortnightly ,May 16-31,2010

தகவல்: முதுவை ஹிதாயத்

Tuesday, July 27, 2010

அல்லாஹ்வையே கூலியாகக் கொண்ட - அருட்கொடை மாதமே வருக!!!



நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு  நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 கை நீட்டியவர்களுக்கு கையிலுள்ளதைக் கொடுத்து கண்ணீரைத் துடைக்கத் தூண்டும் காருண்ய மிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்த மனிதவள மேம்பாட்டிற்கு வழி வகுத்த மாமறைக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
  
தலையில் பிறந்தோன் காலில் பிறந்தோன், என்று ஆதிக்க வர்க்கத்தினர் பூட்டிய அடிமை விலங்கை உடைத்தெறிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்றுக்கூறி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திய சங்கைமிகு குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கருப்பன் - சிவப்பன் என்ற நிறவெறியை காலில் போட்டு மிதித்து அனைவரும் ஆதம் என்ற ஒரு மனிதரின் பிறப்புகளே என்று முழங்கிய அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அழகிய உபதேசங்களை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

பெண் இனத்தின் உடலில் உயிரோட்டம் இருக்கிறதா ? என்ற ஆய்வுக்குட்படுத்திய சித்ரவதையிலிருந்து மீட்டெடுத்து அவளும் உன்னைப் போன்ற மனித இனமே என்று முழங்கி பெண் இனத்தை அழிவிலிருந்து மீட்டி சமூக நீதிக்காத்த திருமறைக்குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஆண்டவன் பெயரால் அப்பாவி மக்களை சுரண்டி வயிறு வளர்த்த புரோகிதக் கூட்டங்களை ஒழித்துக்கட்டி அல்லாஹ் ஒருவன் என்றக் கொள்கையை முழங்கிய மாமறைக் குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

அன்புள்ள சகோதரர்களே !
நன்மைகள் அதிகரிக்கவும் பாவங்கள் மன்னிகப்படவும், நல்ல எண்ணத்துடன் ரமளான் மாதத்தை அணுகுங்கள்.
ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.' நூல்: புகாரி. 1899.

ரமலான் மாதத்தில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) கூறினார். நூல்: புகாரி.1901


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அதிரை ஏ.எம்.பாரூக்

Tuesday, July 20, 2010

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்?

சமீபத்தில் பெரியார்தாசன் ‘அப்துல்லாஹ்’ ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.           தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன்.

திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி – அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். தீவிர அம்பேத்கர் இயக்கத் தவராகத் திகழ்ந்த சு. ராஜேஸ்வரன் மொழி, இனம், பொதுவுடைமை, கம்யூனிசம் எனும் இவையெல்லாம் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க இயலாதவை; உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாதவை என்பதைத் தெளிந்து, ஏகத்துவத்தை ஏற்று அதன் வழிதான் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதை உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார். சு. ராஜேஸ்வரன் இப்போது சு. ராஷித் அலியாகவும் இவரது மனைவி சாந்தி இப்போது சாரா பீவியாகவும் சமுதாயச் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

இஸ்லாத்தில் இணைவதற்குத் தனக்கு அடிப்படைச் சிந்தனையாக அமைந்தது எது என்பதை இதோ அவர் விளக்குகிறார். மொழியாலோ, இனத்தாலோ, பொதுவுடைமையாலோ, கடவுள் மறுப்பாலோ சமூகத்தில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் சாதிய கட்டமைப்பு ஒழிக்கப்படாதவரை அது ஓர் உண்மையான நிலையான சமத்துவமிக்க சமுதாயமாக இருக்க சாத்தியமே இல்லை என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியலை மையமாக கொண்டதே எனது கருத்தியல்.

மொழி, இனம், பொதுவுடைமை, கடவுள் மறுப்பு என்கிற கருத்து நிலைகளை மையமாக வைத்துக் கொண்டு சதுரங்கம் விளையாடுகிற அலங்காரமான அரசியல்வாதிகளை அல்லது சீர்திருத்தவாதிகளைக் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க கூடிய மூல செயல் வடிவமான சாதி ஒழிப்பை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டே வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. சாதி ஒழிப்பைக் கூர்மைப்படுத்தினால் இந்துத்துவம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும்… என்பதை இவர்களெல்லாம் அறியாதவர்கள் அல்ல.

இவர்களை பொறுத்தவரை முதலில் இந்துத்துவத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டுதான் மற்ற எல்லா வகையான சீர்திருத்தத்தையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் அடிமைகள் இருந்தால்தானே தனக்கான தளம் இருக்கும். அப்படிப்பட்ட தளம் இருந்தால்தானே அதன் மேலே வலுவாக நின்று கொண்டு தொடர்ந்து கூச்சல் போட முடியும். அப்படி கூச்சல் போட்டால் தானே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனது பிழைப்பை நடத்த முடியும் என்கிற தீர்க்கமான முற்போக்கான அறிவாளிகள்தாம் இந்த தேசம் முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துநிலை சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தாம் அவற்றால் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எவ்விதமான சமூக விடுதலையையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பதையும் உணர முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான தீர்வு சமூக சீர்திருத்தமா? அல்லது சமூக விடுதலையா? என்கிற கேள்வி வருகிறபோது சமூக விடுதலைதான் என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தான் நிரந்தரமானது என்கிற உண்மையை அறிவுத் தளத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், தனது அற்ப பிழைப்பு வாதத்துக்காக விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை விட்டு விட்டு வெறும் சீர்திருத்தநோக்கிலேயே செயல்பட்டு வரும் இவர்களை எண்ணி நெஞ்சம் ரணமாகிறது.

மொழியால், இனத்தால், பொதுவுடைமையால் கடவுள் மறுப்பால் மக்களை ஒன்று சேர்ப்பதாகவும் அதன் மூலம் சமத்துவம் உருவாகும் என்றும் சொல்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுகிறது. மொழியாலும் அந்த மொழி பேசுகிற இனத்தாலும் ஒன்றுபடலாம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஊரை உருவாக்கும்போதே சேரியை உருவாக்கி அந்த மக்களைத் தீண்டதகாதவர்களாக்கிப் பொதுப் பாதை, பொதுக்குளம், பொதுக்கோயில் இப்படி அனைவருக்கும் பொதுவான அனைத்து வகையான இடத்திலிருந்தும் தள்ளிவைத்து அவர்கள் வாழும் சேரி, குடிசைகளைக் கொளுத்திக் கொலை வெறித் தாண்டவம் ஆடியது யார்? ஜெர்மானியமொழி பேசுகிற ஜெர்மானியர்களா? அல்லது சீனமொழி பேசுகிற சீனர்களா? இல்லையே விளிம்பு நிலை மனிதர்கள் தாய்மொழியாக கொண்ட அதே தமிழ் மொழி பேசுகிற தமிழ் இனம்தானே.

பொதுவுடையைப் பேசுகிற கம்யூனிசவாதிகளாவது உழைக்கும் வர்க்கமெல்லாம் ஒரே வகைப்பாடுகளில் உள்ளவர்கள், நமக்குள் வர்க்க வேற்றுமைதவிர சாதிய வேற்றுமைகள் எதுவும் கிடையாது. உழைக்கும் வர்க்கம் என்கிற அடிப்படையில் ஒரே இடத்தில் வாழ் விடங்களை அமைத்துக் கொள்வது, சமூக ஒழுங்கிற்கு உட்பட்டு உழைக்கும் வர்க்கத்தாரின் யாருடைய வீட்டிலும் யாரும் திருமண பந்தம் வைத்துக் கொள்வது என்கிற செயலாக்கத்தைக் கொண்டு வந்தார்களா? மாநில அளவில் வேண்டாம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கிராம அளவிலாவது இந்தியாவின் எந்த மூலைப் பகுதியிலேனும் ஒரு புரட்சிகரமான கிராமத்தை அவர்களால் உருவாக்க முடிந்ததா? (சாதிய கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் மார்க்சியம் செல்லுபடியாகாது) என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தானே இன்று உண்மைக்குச் சாட்சியாக நிற்கிறது.)

கடவுள்தான் சாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வழிநடத்துகிறது என்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் சாமிதான் காரணம் என்றும் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொல்லி வந்தார்களே இவர் களாவது சாதி ஒழிப்பை முன்னெடுத்தார்களா? சாதி மறுப்புத் திருமணங்கள், வாழ்விடங்கள் குடியிருப்புகள் என ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது போன்ற அடிப்படையான விஷயங் களில் ஒன்றிணைந்தார்களா? கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் புரோகிதர் மறுப்பில் கவனம் செலுத்தியவர்களால் பாவம் சாதி மறுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை போலும். (இப்படி கூறுவதனால் பகுத்தறிவாதிகளைக் குற்றம் குறை சொல்லுவதாகவோ அவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகவே எண்ணி மிகுந்த பிணக்கு கொள்வார்கள்.)

மேற்படி கொள்கைவாதிகளிடம் கேட்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் உண்டு. இங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிக மிக சாதாரண அடிப்படையானவைகள் மட்டும்தான். இதற்கே இவர்களிடம் பதில் இருக்காது. அவர்களைப் பார்த்து, அம்பேத் கரியம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்; உங்களின் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகளுக்கான கருத்தியலால் சாதி ஒழிக்கப்பட்ட சமத்துவ சமூகத்தை இன்றுவரை ஏன் உருவாக்க முடிய வில்லை. அப்படியானால் “சாதிய கட்டமைப்பை அழித்தொழிக்காமல் எந்த கருத்தியலும் மக்களிடம் புரட்சியை உருவாக்காது. அப்படி ஒரு புரட்சி நடக்காமல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க முடியாது” என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் பேரறிஞர் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னவைதாமே இன்றைக்கும் விளிம்புநிலை மனிதர் களாக, பஞ்சைப் பராரிகளாக குடிசைகளிலே வாழ்க்கை நடத்தும் கடைசி மனிதர்களுக்கு உண்மைகாட்சியாய் நிற்கிறது. அத்தனை பெரிய அறிவு படைத்த மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1936 ம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழிகளாக (Annihilation Of caste) மிகத் தீர்க்கமான கருத்தியலை முன் வைத்தார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு நிற்கும் வரை விளிம்பு நிலை மனிதர் களுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் இறுதியாக தனது நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடும் மிகுந்த ஆதங்கத்தோடும் அதிர்ச்சியோடும் சொன்னார்கள்.

சாதியத்தின் மூலம் இழிவுகளையும் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளையும் உருவாக்கியது இந்துத்துவம்தான். இப்படி மனிதனைச் சாதி ரீதியாகக் கொடுமைப்படுத்திய கொடூரம் உலகத்தின் எந்த மூலையிலும் நடத்தப் படவில்லை. ஆகவே இந்திய தேசத்தில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் எவராக இருந்தாலும் இந்துத்துவம் என்கின்ற ஒன்று ஒழிக்கப்பட்டால்தான் சமத்துவம் சாத்தியமாக்கப்படும் என்பதையும் இந்துத்துவத்தை ஒழிக்க முனையும் முன்பாக முதலில் தன்னை இந்து அல்லாதவனாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் தன்னை ஒரு இந்துவாகவே நிலைப்படுத்திக் கொண்டேதான் இந்துத்துவத்தை வேரறுக்கப் போகிறேன் என்கிறார்கள். இது விந்தையாக இருக்கிறது.

ஒரு மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அந்த மரத்தை ஆணி வேரோடு சாய்க்கமுடியாது என்பது எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான உண்மையோ அதைப் போன்றுதான் மேற்படியாளர்களின் இந்துத்துவ ஒழிப்பு என்பதும் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர், நம்மை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கடைசி மனிதனாகக் குடிசையிலே உட்காரவைத்து சமூகத்தில் உள்ள அனைத்துக் கொடூரங் களையும் செய்து வருகின்ற இந்து சமூகத்தில் இருந்து நம்மை நாமே வெளியேற்றிக்கொண்டு தான் நம்மீது திணிக்கபட்டுள்ள சாதிய இழிவைத் துடைக்க முடியுமே ஒழிய வேறு எத்தகைய தீர்வும் சாத்தியமானது அல்ல என்று உறுதிபட கூறினார்.

அதனடிப்படையிலேயே மொழியும் இனமும் எம்மைசமமாகப் பார்க்க வில்லை. பொதுவுடைமையும் கம்யூனிசமும் எமது இழிந்த நிலையை ஒழிக்கவில்லை, ஆகவே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிய சகதியில் உழலுவதைவிட இறைவனை ஏற்று கொண்டாவது சாதியத்தை ஒழிப்பதுதான் எமக்கான சமூக விடுதலை என்று உறுதியாக எண்ணியே “லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்கிற உயிர்ப்பான வரிகளை நெஞ்சம் நிறையச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்”

நன்றி : இனிய திசைகள்.(ஏப்ரல் 2010)

Saturday, July 17, 2010

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை!

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன்,மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார்.அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும்,இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன். "இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்."ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத். மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிரார்த்திப்போம்.

Monday, July 5, 2010

மேற்கல்விக்காக ஏங்கும் ஏழை சகோதரனுக்கு உதவிடுங்கள்.

    ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


மாணவன் பெயர்:அஹமது
தந்தை பெயர்:        ஷேய்க் அப்துல்லா
தாய் பெயர்:           சகர் பானு
படிப்பு:                     12th standard
வயது                      18
மதிப்பெண்            962
அந்த மாணவனின் தந்தை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.தாய் EPS பள்ளியில் உஸ்தாதாக பணி புரிந்து கொண்டுள்ளார்.

மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில்,எப்படியும் மேற் படிப்பு படித்து முன்னேற வேண்டும் என துடிக்கும் இவருக்கு உதவ யாரும் இல்லாத நிலை.

இவருடைய இச் சூழ்நிலையை எண்ணி,அல்லாஹ்வுக்காக,இவருடைய கல்விக்கு உங்களால் முடிந்த அளவு உதவி,அல்லாஹ்வின் நல் அருளை பெற்றுக் கொள்வோம்.

அந்த மாணவனின் தொடர்பு முகவரி
 S.AHAMAD
29/12 GODOWN STREET,
ADIRAMPATTINAM
CONTACT # 9843535710

தகவல் உதவி :அப்துல் ரஜாக்
கலிபோர்னியா

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!