Showing posts with label தனி வாசல். Show all posts
Showing posts with label தனி வாசல். Show all posts

Friday, July 29, 2011

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது


அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899)
முஸ்லிம் (1957)

“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)


கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்



யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)


சுவர்க்கத்தில் தனி வாசல்


நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.
“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)


அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்


“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்”என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)
இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.


ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்,ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

அன்புடன்,நாஷித் அஹமத்
அபுதாபி

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!