Sunday, May 11, 2014

அதிர்ச்சி செய்தி!கவனமாகப் படிக்கவும்!!

சென்னையைச் சேர்ந்த அந்த இளம்பெண், தன் சக அலுவலக நண்பருடன் எடுத்த புகைப்படங்களை எப்போதோ ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. அதன் பிறகு, மனைவியின் ஃபேஸ்புக்கைப் பார்த்த கணவர், அந்த போட்டோவை பார்த்துக் கொந்தளித்திருக்கிறார். பிரச்னை முற்றிப்போக... அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் 29 வயது பரந்தாமன். இவருடைய மனைவி சத்யாவின் செல்போனில், தட்டாம்பாளையத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி ஸ்ரீதர், ஆபாச வார்த்தைகளைப் பேசித் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். கணவரிடம் சத்யா சொல்ல, உறவினர்களுடன் சென்று ஸ்ரீதரை எச்சரித்துள்ளனர். ஆனாலும், மாதக்கணக்காக தொல்லை தொடரவே போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போதும் தொல்லை ஓயாத நிலையில், ஒருகட்டத்தில் மனைவி மீதே பரந்தாமனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஜனவரி 17 அன்று பூச்சிக்கொல்லி விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டு விட்டார். சத்யாவின் புகாரின் பேரில் தற்போது ஸ்ரீதரை தேடிக் கொண்டிருக்கிறது போலீஸ். ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் என்று பிஞ்சுக் குழந்தைகளுடன் பரிதாபமாக நிற்கிறார் 25 வயது சத்யா!
மத்திய இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சமீபத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கும் விஷயத்தில்கூட, தகவல் தொழில்நுட்பத்தின் கோரக் கரங்கள் படிந்திருக்கின்றன. 'ட்விட்டர்' மூலமாக கணவன், மனைவி மற்றும் கணவனின் புதுத்தோழி என்று வர்ணிக்கப்படும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தரார் ஆகியோரிடையே நடந்த பகிரல்கள், மரணத்துக்கு முக்கிய காரணமாக வர்ணிக்கப்படுகிறது.
செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய பக்கங்கள் என்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி படுவேகமெடுத்து முன்னேறிக் கொண்டிருக்க, அதைவிட படுவேகமெடுத்துக் கொண்டிருக்கின்றன... இந்தத் தொழில்நுட்பங்களை வைத்து நடத்தப்படும் குற்றங்கள். அதற்கு ஒரு சோற்றுப் பதம்தான் மேற்கண்ட கொடூரச் செய்திகள். பல குடும்பங்களின் அமைதிக்கு, ஆப்பு வைத்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற விவகாரங்களால் பெரும்பான்மையாக பாதிக்கப்படுவது பெண்களே!
ஃபேஸ்புக் விவாகரத்து!
இதைப் பற்றி சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமன்.
''இன்றைய சூழலில் ஒரு பெண்ணைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்று ஃப்ரெண்ட் ஆனாலே போதும். 'தன் குடும்பம், தான் எங்கே குடியிருக்கிறேன்’ என்பதில் ஆரம்பித்து, தினசரி நடவடிக்கைகள் வரை ஒன்று விடாமல் 'ஃப்ராங்க்’காகப் பகிர்ந்துகொள்கிறார்கள். தான் போட்ட 'போட்டோ’ அல்லது 'போஸ்ட்’டுக்கு மற்றவர்கள் 'லைக்ஸ்’ போடாமல் விட்டுவிட்டால்கூட, மன உளைச்சல் அடைகிற அளவுக்கு ஃபேஸ்புக் வியாதி, இளைய தலைமுறையை ஆட்டிப்படைக்கிறது.
முன்பெல்லாம் விவாகரத்துக்காக நீதிமன்றம் வரும் தம்பதிகள், போலீஸிடம் புகார் கொடுத்த நகல் அல்லது எஃப்.ஐ.ஆர் நகலைக் கொண்டு வருவார்கள். இன்றைக்கோ மனைவி/கணவர் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்த புகைப்படத்தையோ, அவர்களது பதிவையோ பிரின்ட் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். நம்மிடம் சுயகட்டுப்பாடு இல்லாததே இதற்கெல்லாம் காரணம்'' என்று சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், சமீபத்திய விஷயங்கள் சிலவற்றைப் பகிர்ந்தார்.
''ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் அந்தப் பெண், தன் அலுவலக டூரின்போது சக அலுவலர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் சக நண்பரின் கை, இந்தப் பெண்ணின் இடுப்பில் பட்டிருப்பது போல உள்ள புகைப்படத்தை, அவரது அலுவலக நண்பர்கள் ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்திருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பிறகு, புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த மாப்பிள்ளை பையன், 'எனக்கு இந்தப் பெண் வேண்டாம்’ என்று திருமணத்தை நிறுத்தியதோடு, அந்தப் பெண்ணைப் பற்றி மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ள... இதுவரை அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடக்கவேயில்லை.
'என் அம்மாவை கேவலமாகச் சித்திரித்து ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறாள் என் மனைவி. அதற்கு அவளுடைய நண்பர்கள் அடித்த கமென்ட்டைப் பாருங்கள்’ என்று அனைத்தையும் அள்ளிக் கொண்டு வந்து காண்பித்ததோடு, விவாகரத்து வாங்கித் தாருங்கள் என்று வந்து நின்றார் ஒரு கணவர். எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. குடும்ப விஷயம் என்பது கண்ணாடி போன்றது. அதை யார் யாரிடம் பகிர வேண்டும் என்ற வரைமுறை தெரியாமல் பொது சபையில் பகிர்வதால் வரும் வினைகள்தான் இவையெல்லாம்'' என்று ஆதங்கப்பட்டார், அழகுராமன்.
மூன்றாவது கண் வில்லன்கள்!
நமக்கே தெரியாமல், பொதுக் கழிவறைகள், ஹோட்டல்களின் படுக்கை அறை மற்றும் குளியல் அறைகள், பெரிய பெரிய துணிக்கடைகளின் டிரயல் ரூம்கள்... என பல இடங்களிலும் மூன்றாவது கண்ணாக கேமரா ஒளிந்திருப்பது சர்வசாதாரணமாகி விட்டது. இப்படி எடுக்கப்படும் பெண்களின் போட்டோக்களில் இருக்கும் தலையை வேறொரு நிர்வாண உருவத்துடன் பொருத்தி, அந்தப் பெண்ணின் வாழ்வைச் சீரழிக்கும் சைபர் குற்றவாளிகள் அதிகரித்துக் கொண்டுள்ளனர். எல்லோர் கைகளிலும் செல்போன்கள் இருப்பதால், பக்கத்து வீட்டு குளியல் அறை ஜன்னல் வழியாக அந்த வீட்டுப் பெண்களைத் தாறுமாறாக படம்பிடித்து, இணையங்களில் உலவவிடுவதும் அதிகரித்துள்ளது!
சைபர் குற்றங்களின் வீரியம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் கேட்டபோது, ''மார்டன் உலகத்தில் செல்போன் வைத்திருப்பதை ஒரு கௌரவமாகவே கருதுகிறார்கள். அதிலும் கேமராவுடன் கூடிய உயர்ரக செல்போன்தான் பலருடைய சாய்ஸாக இருக்கிறது. எதைப் பார்த்தாலும் அதில் படம் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எதிர்பாராதவிதமாக நம் செல்போனை தொலைத்துவிட்டால் போதும்... குடும்ப விவரங்களிலிருந்து அந்தரங்கம் வரை அனைத்தும் அடுத்தவரால் திருடப்பட்டுவிடும். அதனால் செல்போனில் எப்போதும் ஒரு செக்யூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக்கொள் வது மிகவும் நல்லது. மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவும் பல குற்றங்கள் அரங்கேறிவிடுகின்றன. இந்த விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் இன்றைக்கு எந்த சந்தேகம் வந்தாலும் கூகுளிடம்தான் கேட்கிறார்கள். தானாகவே வந்து விழும் சில இணைய பக்கங்கள், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் குழந்தைகளை உலவ விடாதீர்கள்.
பாசக்கார கணவனால், மோசம் போகக்கூடும்!
நமக்குத் தெரியாமலே நம்மை சிக்க  வைக்கக் கூடிய வலிமை உள்ளவை இந்த சைபர் க்ரைம்கள். அல்லது, வலிய போய், அறியாமை காரணமாக நாமே சிக்கிக்கொள்வதும் நடந்துவிடும். பெரும்பாலான பெண்கள், தங்களுக்கு மிக நெருக்கமான ஆண்களாலேயே இதுமாதிரியான குற்றங்களில் சிக்கிக்  கொள்கிறார்கள். உதாரணத்துக்கு...  கணவ னும்  மனைவியும் நெருக்கமாக  இருப்பதை,  கணவரே செல்போன் மூலமாக படம்  எடுக்கிறார். அதை மனைவி தடுக்க நினைத்தால், 'உன் மீதுள்ள பாசத்தால்தான் எடுக் கிறேன். நீ வெளியூர் சென்றால், அந்த வீடியோவை பார்த்து உன் நினைவை ஆற்றிக் கொள்வேன்' என்றெல்லாம் பேசி, சமாளிப் பார் கணவர். இந்தப் பேச்சில் மயங்கி  மனைவியும் சம்மதித்துவிடுவாள்.
ரகசியமாகவே இருக்கும் இந்த வீடியோ... ஒருவேளை கணவரின் செல்போன் தொலைந் தாலோ, ரிப்பேருக்கு போனாலோ, அல்லது கணவன் - மனைவி இடையே மோதல் வந் தாலோ... ஏதாவது ஒரு வகையில் வெளியில் வந்து, மனைவியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.
செல்போனில் பேசுவதிலும் கவனமாக  இருக்க வேண்டும். காதலர்கள் பேசிக்கொள் ளும் கொஞ்சலான உரையாடல்கள், கண வன் - மனைவி இடையேயான ரொமான்ஸ் பேச்சுக்கள் என பலவற்றையும், செல் போனில் இருக்கும் ரெக்கார்டு ஆப்ஷன் மூலமாக மிகச்சுலபத்தில் பதிவு செய்துவிட முடியும். அத்தகைய ஆபாச குரல் பதிவுகளை 'யூடியூப்’-ல் வெளியிட்டு, சம்பந்தப்பட்ட வரை அவமானப்படுத்தவும் மிரட்டவும்கூட வாய்ப்பிருக்கிறது.
சைபர் க்ரைமை பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் க்ரைம்களில் கொலை, கொள்ளை, கடத்தல் முதலியவற்றுக்குக் குற்றத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுகிறது. கையில் போன் இருக்கிறதே என்று வெளி யிடங்களில் யாரையாவது நாம் புகைப்படம் எடுத்தால், அதுவும்கூட நம்மை சைபர் க்ரைம் விஷயத்தில் சிக்க வைக்கும் அள வுக்குக் கொண்டு செல்லும் ஆபத்து காத் திருக்கிறது. எனவே, விழிப்போடு இருப்பது தான் புத்திசாலித்தனம்'' என்று எச்சரிக்கை செய்தார், வே.பாலு.
பொது இடங்களில் வரம்பு மீறாதீர்!
'இதுபோன்ற சூழலில் ஒரு பெண் எப்படி ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்’ என்பதுபற்றி பேசிய ஓய்வுபெற்ற டி.ஜி.பி- யான திலகவதி ஐ.பி.எஸ்., ''ஆண் நண்பருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், நெருக்கம் காண்பிக்காத அளவுக்கு 'ஃப்ரெண்ட்லி’யாக போஸ் கொடுங்கள். ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது, 'நம்மை யாரும் கவனிக்கவில்லை’ என்று நினைத்து, வரம்பு மீறி புகைப்படம் எடுப்பதோ அல்லது போஸ் கொடுப்பதோ வேண்டவே வேண்டாம். இன்றைக்கு எல்லோரது கைகளிலும் கேமரா செல்போன்கள் தவழ்கின்றன. 'நமக்கே தெரியாம நம்மை இஷ்டத்துக்கு படம் எடுக்க மற்றவர்களால் முடியும்’ என்பதால், பொது இடங்களில் ஆடைகளில் கவனமாக இருங்கள். அதேபோல, வெளியிலோ அல்லது ஹோட்டல்களுக்கோ செல்லும்போது, உங்கள் மீது தேவையில்லாமல் ஃப்ளாஷ் ஒளி பட்டால், தைரியமாக விசாரணையில் இறங்கி சந்தேகப்படுபவர்களின் கேமராவை செக் செய்துவிடுங்கள். இதையெல்லாம் மீறி ஏதாவது ஒரு புகைப்படம் காரணமாக நீங்கள் பிரச்னையை சந்திக்க நேர்ந்தால், அஞ்சாமல் எதிர்த்துப் போராடுங்கள். அதைவிட்டு மனம் உடைவதோ... தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்வதோ முட்டாள்தனமானது'' என்றார், அழுத்தமாக.
துவள வைத்த தோழி!
சைபர் குற்றங்கள் பற்றி பேசிய மதுரை எஸ்.பி-யான பாலகிருஷ்ணன், ''இன்டர்நெட், ஃபேஸ்புக், எஸ்.எம்.எஸ் போன்றவற்றில் நடக்கும் குற்றங்கள் மட்டும் சைபர் குற்றங்கள் இல்லை. எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றங்களும் சைபர் குற்றங்களையே சாரும். ஸ்கைப், வாய்ஸ் சாட், இன்டர்நெட் சாட்... என பெண்களிடம் சாட் செய்வதோடு ரெக்கார்ட் செய்துகொண்டு, அந்தரங்கமான பேச்சுக்களையும், அந்தரங்க உறுப்புகளையும் படம்பிடித்து வேறொரு படத்துடன் சேர்த்து வெளியிடுவது; ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது; பொது இடங்களில் பெண்களுக்கு தெரியாமல், அவர்களைப் படம் எடுப்பது/ வெளியிடுவது... போன்றவையும் சைபர் குற்றங்களே.
மதுரையில் உள்ள பிரபலமான கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பயன்படுத்தியுள்ளார். அந்தப் புகைப்படத்தை எடுத்த சைபர் க்ரைம் குற்றவாளிகள், 'இவர் கால் கேர்ள்’ என குறிப்பிட்டு அந்த பெண்ணின் செல் போன் எண்ணையும் கொடுத்துவிட்டனர். இது தொடர்பாக நாங்கள் விசாரித்து பார்த்ததில், 'அந்த மாணவியுடன் படிக்கும் தோழிதான் குற்றவாளி’ என்பதைக் கண்டுபிடித்தோம். அவர்களுக்கு இடையிலான பிரச்னையில் இதுபோன்று செய்துவிட்டதாக அந்தத் தோழி வாக்குமூலம் கொடுக்க, அதிர்ந்து போனோம்'' என்று சொன்ன பால கிருஷ்ணன், அடுத்து சொன்னது பேரதிர்ச்சி!
வில்லனாக மாறிய தோழியின் கணவன்!
''தான் குளிக்கும் வீடியோ, 'யூடியூப்’-பில் உலவிக் கொண்டிருப்பதாக ஒரு பெண் பத றிக் கொண்டு எங்களிடம் ஓடி வந்தார். களத் தில் இறங்கி விசாரித்தபோது எங்களுக்கே பலத்த அதிர்ச்சி. அந்தப் பெண், தன் தோழி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே குளித் திருக்கிறார். அப்போது 'டூத் பிரஷ் மைக்ரோ கேமரா’ மூலம், தோழியின் கணவனே படம் பிடித்து, 'யூ டியூப்’-ல் உலவ விட்டிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், தோழியின் கணவன் கைது செய்யப் பட்டு... அவனுடைய செல்போனில் இருந்த அந்த வீடியோ பதிவு அழிக்கப்பட்டதுடன், இணையத்திலிருந்தும் நீக்கப்பட்டது.
இதிலிருந்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்... குற்றங்கள் எங்கே, எப்போது, எப்படியெல்லாம் நடக்கும் என்பதை யாருமே யூகிக்க முடியாது என் பதைத்தான். ஆம், கூட இருந்து கொண்டே அத்தனையும் செய்வார்கள். சொந்த வீட்டி லேயே வெகு ஜாக்கிரதையாக வாழ வேண் டும் என்கிற அளவுக்கு நெருக்கடிகள் முற்றிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், வெளியிடங்களுக்குப் போகும்போது, இரு நூறு சதவிகித பாதுகாப்பு உணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்!

தமிழகத்துக்கு 2வது இடம்!
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுக்க 86 கோடியே 16 லட்சம் செல்போன் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. உத்தரப்பிரதேசம் 12.16 கோடி என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்திலும், 7.18 கோடி என்ற எண்ணிக்கையுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது
சமீபத்தில் வெளியான மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, 'இந்தியாவில் மட்டும் செல்போன்கள் மூலம் இணையதளம் பயன்படுத்து வோர் எண்ணிக்கை வருகிற மார்ச் மாதத்துக்குள் 15 கோடியே 50 லட்சமாக உயரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'உடனடி நடவடிக்கை அவசியம்!’
சைபர் வில்லன்களிடம் சிக்காமலிருக்க, மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் தரும் டிப்ஸ்...
ஃபேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களைப் போடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். செல்போனில் வேண்டாத, பெயர் தெரியாத அழைப்புகள் வந்தால், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்துப் பேச வைக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் முகம் தெரியாத நபர்கள் நட்பு கோரிக்கை எழுப்பினால் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
  ஃபேஸ்புக்கில் நடக்கும் குற்றங்கள் குறித்து ஃபேஸ்புக்கில் 'ரிப்போர்ட்’ பகுதியில் 'க்ளிக்’ செய்து புகார் தந்தால், உடனே ஃபேஸ்புக் நிர்வாகத்தினர், அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கு உங்கள் புகாரை பரிந்துரை செய்வார்கள். நாங்கள் துரிதமாக நடவடிக்கை எடுப்போம். 'தமிழக காவல்துறை’ என்ற வெப்சைட்டில் புகார் கொடுத்தால், உங்களைப் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்துக்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தருவோம்.
 செல்போன், எம்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ்., ட்விட்டர், இணைய பக்கங்கள் என்று எந்த ரூபத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் வந்தாலும், அதைப் பற்றி உடனடியாக உரிய வகையில் நடவடிக்கைக்கு உட்படுத்துங்கள். அதைவிடுத்து, 'தானாகவே சரியாகிவிடும்’ என்று நினைத்தால், அதுவே எதிரிக்கு இடம் கொடுத்தது போலாகிவிடும். பிறகு, அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

பெண்களே... மிகவும் கவனமாக இருங்கள்!
 உங்களது ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுக்க ஒரு கூட்டமே திரிகிறது என்பதை மறவாதீர்கள். பொது இடங்களில் நடக்கும்போதுகூட உங்களைப் புகைப்படம் எடுத்து, அதை இணையத்தில் உலவவிடும் நாசக்காரர்கள் இருக்கிறார்கள். பசியால் அழும் பிள்ளைக்கு பால்கொடுக்கும் தாயைக்கூட இந்தச் சதிகாரர்கள் விட்டுவைப்பதில்லை. மறைந்து நின்று புகைப்படம் எடுத்து அட்டூழியம் செய்கிறார்கள்.  
 'ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்' என்று உங்களது கைபேசியை அறிமுகம் இல்லாத நபர்கள் கேட்டால், தரவே தராதீர்கள். தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் போன் பேசத்தான் அதை வாங்கினார்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்து கைமாறிய நொடிகளில்கூட உங்கள் போனை வைத்து, வில்லங்கங்களை விலைக்கு வாங்கித் தந்துவிடுவார்கள்.
 செல்போனை ரிப்பேருக்கு கொடுக்கும் போது, மறக்காமல் புகைப்படங்களை அழித்து விடுங்கள். மெமரி கார்டை அகற்றிவிட்டு கொடுங்கள். கான்டாக்டில் இருக்கும் எண்களை யும் கூட கணினியில் சேமித்துக் கொண்டு, செல் போனில் இருந்து அகற்றிவிட்டே கொடுங்கள்.
 முன்பின் தெரியாதவர்களை ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இணைக்காதீர்கள். முடிந்தவரை பிரச்னைகள் எழக் காரணமாக தெரியும் நபர்களை, நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவது நல்லது. ஃபேஸ்புக்கில் ஒவ்வொருமுறை எழுதும்போதும் கவனமாக எழுதுங்கள். உங்களது எழுத்தே உங்களை சிக்க வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடும் ஜாக்கிரதை!

தண்டனைகள் பலவிதம்..!
சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தால், ஐ.டி சட்டம் 2008-ன் படி மூன்று ஆண்டுகள் முதல், ஆயுள் வரை தண்டனையாக வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவர்களில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது, குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிடுவது, ஆண் - பெண் இருவரின் உடல்பாகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளியிடுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால், அவர்கள் ஜாமீனில் வரமுடியாத சட்டங்களின்படி கைது செய்யப்படுவார்கள்.
சென்னையில் கடந்த ஆண்டு 1,472 சைபர் க்ரைம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 27 புகார்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், 35 குற்றவாளிகள் கைதும் செய்யப்பட்டும் உள்ளனர். இந்தியா முழுவதும் ஓர் ஆண்டுக்கு சைபர் க்ரைம் சம்பவங்களில் வெறும் 21% அளவுக்குத்தான் புகார்களாக காவல் நிலையங்களில் பதிவாகின்றன. இந்தியாவில், இன்டர்நெட் மோசடிகள் மூலமாக, ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் அளவுக்கு பண மோசடிகள் நடக்கின்றன.
எப்படி புகார் செய்வது?
சைபர் க்ரைம் தொடர்பான புகார்களை, சென்னையைப் பொறுத்தவரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேரடியாகவும், நேரில் செல்ல இயலாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் மூலமாகவும், மெயில் ஐ.டி வழியாகவும் தெரிவிக்கலாம். தவிர, தமிழகத்தின் அனைத்து உள்ளூர் காவல் நிலையங்களிலும் சைபர் க்ரைம் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கலாம்.  
எஸ்.எம்.எஸ் : 95000 99100; போன் : 044 - 23452350; இ-மெயில் முகவரி:  cop@vsnl.net.

அதிர்ச்சிப் புகைப்படம்!
'சன் டிடெக்டிவ் ஏஜென்சி’ எனும் அமைப்பை நடத்தி வரும் தடயவியல் சிறப்பு நிபுணர் வரதராஜன், சொன்ன ஒரு தகவல், அதிர வைப்பதாக இருந்தது. ''சில மாதங்களுக்கு முன் டெல்லியில் ஒரு பள்ளி ஆசிரியையின் நிர்வாணப் புகைப்படம் நெட்டில் உலவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அந்த ஆசிரியை போலீஸில் புகார் கொடுத்தார். அவர்கள் எங்களிடம் அதை ஒப்படைத்தார்கள். பலவித பிரயத்தனங்களுக்குப் பிறகு, அந்த ஆசிரியையிடம் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவன்தான் குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்தோம். வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று அந்த மாணவனை திட்டியிருக்கிறார் ஆசிரியை. கோபமடைந்த மாணவன் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்தும்போதே கையில் வைத்திருந்த செல்போன் மூலம் அவரைப் புகைப்படம் எடுத்திருக்கிறான். தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்டு, வேறொரு நிர்வாணப் படத்துடன் 'மார்ஃபிங்’ செய்து, ஆசிரியையின் முகத்தை அதில் பொருத்தி நெட்டில் உலவ விட்டிருக்கிறான்'' என்று சொன்ன வரதராஜன்,
''இதுபோன்று நாடெங்கிலும் பல்வேறு சம்பவங்கள் தினந்தோறும் நடந்துகொண்டு இருக்கிறது. அதனால் புகைப்பட விஷயத்தில் ஒவ்வொருவரும், குறிப்பாக, பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். அதேசமயம், இதுபோன்ற புகார்களுக்கு உடனடியாக குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வசதிகளும், அதற்கு போதுமான நிபுணர்களும் தமிழகத்தில் இல்லை என்பது வருத்தமான விஷயம். அரசாங்கம் உடனடியாக திறமைவாய்ந்த நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, தண்டனைகள் வழங்க முடியும். இதன் மூலமாக மேற்கொண்டு குற்றங்கள் நடப்பதையும் குறைக்க முடியும்'' என்று சொன்னார்.

இந்தியா 2வது இடம்!
சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களை உலகெங்கிலும் உள்ள 60-க்கும் மேற்பட்ட நாட்டினர் பரவலாக பயன் படுத்துகின்றனர். இதில், 92 மில்லியன் (7.73%) பயன்பாட்டாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
17 வயது மற்றும் அதற்கு கீழ் : 11%
18-24 வயதினர் : 50%
25-34 வயதினர் : 28%
35-44 வயதினர் : 6.6%  
45-54 வயதினர் :  2.2%
55 வயது மற்றும் அதற்கு மேல் 2.2%
இவர்களில் 75 சதவிகிதத்தினருக்கும் அதிக மானோர், ஆண்களே என்பது, பெண்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய விஷயமாகும்!

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!