Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Sunday, March 18, 2012

தண்ணீர் : சேமிப்பீர் !


“தண்ணிர் சிக்கனம் தன்னலமற்ற சேவையாகும்”

இன்று மார்ச் 22  “ உலக தண்ணீர் தினம் ” கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நான்கில் மூன்று பங்கு நீரைக்கொண்டுள்ள இவ்உலகப் பரப்பளவில் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக உள்ள இத்தண்ணீரைக் இன்று நம்மில் அநாவசியமாக செலவழிப்பது வேதனையளிக்கக் கூடியதாகவே உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் நமதூர் மட்டுமல்ல பல ஊர்களிலும் ஏன் பல்வேறு நாடுகளிலும் கூட தண்ணீர் பற்றாக் குறையாகவே உள்ளது. எதிர்காலத்தில் இத்தண்ணீருக்காக உலக யுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பது வல்லுனர்களின் கருத்து.

“மழைநீர் சேமிப்பு மனிதர்களுக்கு பாதுகாப்பாகும்”

அல்லாஹ் நமக்களித்த அருட்கொடை “மழை” இம்மழை நீரைச் சேமிப்பதன் மூலம், நிலத்தடி நீர்வளத்தை பெருக்க இயலும்.
இத்தண்ணீருக்காக, எங்கோயோ ஒரு சகோதரன் வறண்ட தொண்டையோடு, உலர்ந்த நாக்கோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை நம்மிடம் வரட்டும்....................
இன்று நாம்................................. தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நமது பங்களிப்பாக அதைச் சேமித்து நாளை நமது சந்ததியினர் பயன்பெறும் வகையில் வழிவகுத்துக் கொடுப்போம் ( இன்ஷா அல்லாஹ் ! )

இறைவன் நாடினால் ! தொடரும்......................

Wednesday, March 7, 2012

“ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” - RTI !



1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.


3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.


4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.


5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.


6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.


7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.



தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம் ?



எடுத்துக்காட்டாக,


1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?


2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?


3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?


4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.


5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.


6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.


7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?


8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.


9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?


10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?


11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?


12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ?



இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.



மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர்,

காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,

( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 ,அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )தேனாம்பேட்டை, சென்னை - 600 018

தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580




மத்திய அரசு தகவல்கள் பெற :-
 
Shri Satyananda Mishra

Chief Information Commissioner

Room No.306, II Floor August Kranti Bhavan

Bhikaji Cama Place New Delhi - 110 066.

Phone:- 011 - 26717355



குறிப்பு : மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.


சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.



இறைவன் நாடினால் ! தொடரும்......................

Sunday, March 4, 2012

“நிலங்கள்” வாங்குவோர் கவனத்திற்கு !

சகோதரர்களே !   நாம் அனைவர்களும் இரவு பகல் என பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தில் நல்லதொரு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவது  என்பது நிதர்சனமான உண்மை. குறிப்பாக திருமணம் செய்தல், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள், இல்லப்பயன் தரும் பொருட்கள் வாங்குதல், பிள்ளைகளின் கல்வி, சகோதரிகளின் திருமணம், பெற்றோர்களின் மருத்துவ செலவு மற்றும் நமது அன்றாட செலவுகள் என எண்ணற்ற நம்முடைய ஒவ்வொரு கடமைகளையும் சிறிது சிறிதாக நிறைவேற்றிக் கொள்வோம்.
நமதூரில் வசிக்கக்கூடிய அனைத்து சகோதரர்களுக்கும் நிலம் வாங்கி வீடு கட்டுதல் என்பது ஒரு கடமையாகவோ அல்லது கனவாகவோ இருக்கும். மேலும் நமதூரில்  விற்கக்கூடிய மனைகளின் விலைகளை நன்கு அறிவீர்கள். இவ்வளவுத் தொகையை கொடுத்து வாங்கு முன் நாம் கவனமாக கீழ் கண்ட முறைகளைப் பின்பற்றி பாதிப்புகள் ஏற்படாதவாறு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மனைகள் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை :
1.    நிலத்தின் லே-அவுட் ( Layout ) போட்டு அதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
2.    நிலத்தின் பகுதி பத்து ஏக்கருக்கு ( அதாவது முப்பது “ மா “ ) குறைவாக இருந்தால், மாவட்ட டீ.டி.சி.பி. ( Directorate of Town and Country Planning – DTCP ) அலுவலகத்தின் அனுமதி தேவை.
3.    நிலத்தின் லே-அவுட்டில் சாலை வசதி, பூங்கா, பொது இடம் என்று இடங்களை ஒதுக்கிருக்க வேண்டும்.
இதனால் சாலை, குடிநீர், மின்சாரம் வசதிகள் விரைவில் நமது உள்ளாட்சியின் மூலம் கிடைக்ககூடிய வாய்ப்புகள் ஏராளம்,  மேலும் நாம் உடனடியாக வீடு கட்டும் சூழ்நிலை உருவானால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் மூலம் ‘ புதிய வரைபட அனுமதி ‘ என பல்வேறுப் பயன்களை அடையலாம்.
சொத்துகள் / மனைகள் வாங்கும் போது  என்ன  என்ன “ டாகுமென்ட்ஸ் “ கள் கவனிக்கப்பட வேண்டியவை ?
1.       பட்டா :  ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், ( Survey Number and Subdivision ), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

2.       சிட்டா  :  ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா ?  என்பதும் தீர்வை ( வரி ) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.

3.       அடங்கல் :  ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.

4.    வில்லங்க சான்றிதழ் ( Encumbrance Certificate ) :  22 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது. சொத்தின் உரிமை ( Ownership ) , சொத்தின் நான்கு எல்லைகள், பேங்க் அடமானங்கள், நீதி மன்ற வழக்குகள் இவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

5.    சொத்து ஆவணம் ( பத்திரம் ) :
1.    நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கப்படுகிறதா ? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது. உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் ( Guardian ) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.
2.    அதிகாரம் பெற்ற முகவர் ( Power of Attorney Holder ) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது. அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா ? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை. பவர் பத்திரப்பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், அதே சமயம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பவர் பத்திரம் பதிவு செய்தால், ரூ.1,000 கட்டணம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3.     மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
4.    முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா ( Original Deed ) அல்லது படி ஆவணமா ( Duplicate copy ) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.
5.    அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி,  திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.
6.    விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

இறைவன் நாடினால்  !   தொடரும்........................

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!