Showing posts with label அண்ணல் நபி(ஸல்). Show all posts
Showing posts with label அண்ணல் நபி(ஸல்). Show all posts

Tuesday, November 23, 2010

அழகிய அணிகலன்கள் பகுதி 1


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த வலைப்பூவில் எழுத வாய்ப்பு கிடைத்தும் சில பல காரணங்களால், என்னால் உடனே எழுத இயலவில்லை. இதற்கு மேலும் தள்ளிப்போடுவது நல்லதல்ல என்பதால் ஒரு சிறிய தொடரை ஏக இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.  Husn-E-Akhlaq என்னும் இந்த தொடர், அழகிய குணங்களைப் பற்றியது. இந்த குணநலன்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் முன்னோடி என்றால் அது மிகையாகாது. முற்காலங்களில், இஸ்லாம் வேகமாகவும் வேரூன்றியும் வளர்ந்து கொண்டிருந்தபோது பிள்ளைகளுக்கு akhlaaq அல்லது குணனலன்கள் கற்றுக்கொடுக்கவே தனி துறையும், அதில் ஆசிரியர்களும் இருந்தனர். இமாம் மாலிக் அவர்கள் முதன் முதலில் கல்வி கற்க செல்லும் பொழுது அவரின் தாயும் சொன்னது என்ன, ”முதலில் நீ, உன் ஆசிரியரின் குணங்களை கற்றுக் கொள், அவரைப்போல வாழ ஆசைப்படு, அதன் பிறகே இல்ம் அல்லது படிப்பு”. ஆக, நம் முன்னோர்கள், இஸ்லாத்தில் குணநலன்களுக்கு எவ்வளவு மதிப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால், இப்போதைய வாழ்க்கை முறையில், குணநலன்கள் ஒரு பொருட்டாகவே இல்லாமல் போய்விட்டது. உலகம் முழுதும் சேவை செய்த அன்னை தெரசாவிற்கு தரப்பட்ட நோபெல் விருதை போரினாலும், போலி சட்டங்கள் மூலமும் உலகின் கால்வாசி மனிதர்களை சிறையிலும், தன் நாட்டிலேயே கைதியாகவும் வைத்திருக்கும் அமெரிக்க அதிபருக்கும் தரும்போதே நாம் தெரிந்து கொள்ள இயலும், நாம் எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். க்ஹைர். அல்லாஹ் போதுமானவன். நம்மால் இயன்றது என்ன, நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் அழகிய குணநலன்களை பேண வைப்பதும், அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுமே ஆகும். இன்ஷா அல்லாஹ், இதன் முதல் பாகத்தை இப்பொழுது காண்போம்.


“மேலும் நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணமுடையவராக இருக்கின்றீர்” [அல்-கலம்: 4]

இந்த திருக்குர்ஆனின் ஆயத்தில், அல்லாஹ் கூறுவது என்ன? மனிதர்களுக்கு எந்த குணங்கள் நல்லவை என  சொல்லப்பட்டனவோ அத்தனை பெருங் குணங்களும் அத்தனையும் நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்டுள்ளன என்பதையே. சிறு வயது முதல் தன் வாலிப வயது வரை நபிகளார் (ஸல்) அவர்களுக்கு சேவை செய்வதையே பாக்கியமாய் பெற்ற அனஸ் (ரலி) அவர்களின் கூற்றே இதற்கு மீண்டும் அழகு சேர்க்கிறது,

“நான் நபிகள் நாயகத்திடம் 10 வருட காலம் வேலை செய்திருக்கிறேன். ஒரு போதும் அவர்கள் என்னைச் ‘சீ’ என்று கூடச் சொன்னதில்லை. ஏதாவதொரு விடயத்தைச் செய்தால் ‘ஏன் இப்படிச் செய்தாய்’ என்று கேட்டதில்லை. நான் ஏதாவது ஒன்றைச் செய்யவில்லையானால் ‘ஏன் இதைச் செய்யவில்லை’ என்றும் கேட்டதில்லை” [நூல்: புகாரி, முஸ்லிம்].
நம்மிடம் வேலை செய்யும் யாரும் நம்மைப்பற்றி இப்படி கூற முடியுமா? அல்லது நம்முடன் வேலை செய்யும் நண்பர்களாவது?? இத்தகைய ஒரு புகழுரையை நபிகள் நாயகம் (ஸல்) தவிர வேறெந்த உலக தலைவர்களிடம் நாம் காண இயலாது, உயிருடன் இருப்பவர்கள், இறந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இன்னும் காணலாம்.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(ஆலே இம்ரான் :159)


ஏற்கனவே பொறுமைக்கும் அழகிய குணங்களுக்கும் பெயர் பெற்ற திருத்தூதருக்கு(ஸல்), அல்லாஹ் இன்னும் அழகிய முறையில் இங்கு இன்னும் மெருகூட்ட வழிமுறைகளை சொல்லித்தருகின்றான். இறைத்தூதரின் அழகிய குணங்களை போற்றியதோடு நில்லாமல், அல்லாஹ் கூறுகின்றான், தலைவர் என்றால் செருக்குடன் தனியே நிற்காதீர், மாறாக, எல்லா விஷயங்களிலும் உங்களை பின் தொடர்பவர்களை கலந்தாலோசித்து செயல்படுத்துங்கள் என்று. இதே போல பத்ரு யுத்தத்தின் கைதிகளின் விஷயத்திலும் அல்லாஹ்வின் எச்சரிக்கை உங்களுக்கு நினைவிருக்கும். அவர் நபி என்பதற்காக அல்லாஹ் தன் கோபத்தை தடுத்து வைக்கவில்லை, மாறாக, அவர் மக்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்தார் எனவே அண்ணலார் மேல் வரவிருந்த ஆபத்தை தடுத்து வைத்ததாக இறைவன் கூறுவான். எவ்வளவு உண்மை? இன்று வீட்டு விஷயம் முதல் நாட்டு மக்கள் விஷயம் வரை தான்தோன்றியாக நடந்துகொள்ளும் தலைவர்களுக்கு இது பாடமல்லவா? ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதை விட சிறந்த ஓர் அறிவுரை எங்கேயும் காண இயலுமோ??

இன்னுமொரு விஷயம் என்னவெனில், நாம் லட்சங்கள் பல செலவு செய்து மாற்று மதத்தவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதை விட்டும், ஆயிரங்கள் செலவு செய்து குறும்படங்களோ, காணொளிகளோ படைத்து தாவாஹ் / Dawah செய்வதைக் காட்டிலும் மிக அதிக சக்தியை கொண்டது நாம் நடந்து கொள்ளும் விதம். உதாரணத்திற்கு சகோதரி யுவோன் ரிட்லியைப் பாருங்கள், நம்மிடம் இப்பொழுது பரப்பப்படும் பொய்களைப்போல உண்மையிலேயே இந்த சகோதரியை கைதியாக வைத்திருந்தபோது நடந்து கொண்டிருந்தால் இத்தகைய ஒரு சகோதரியை நாம் பெற்றிருக்க முடியுமா?? இன்னும் இந்த லின்க்கில் பார்த்தீர்களானால், சிறு குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கொண்டும் நாம் கவனிக்கப்படுகிறோம் என்பது புலப்படும். இன்ஷா அல்லாஹ், இன்னும் கற்றுக் கொள்வோம் அழகிய குண நலன்களை. அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களின் குணங்களில் 10% சதவிகிதமாவது நம் வாழ்விலும் மேம்படுத்த முயல்வோம். மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ். வ ஸலாம்.

Thursday, November 4, 2010

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்

காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!  (அல்குர்ஆன் 89:1, 2)

இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது...
(
துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்'; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும்  புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிர' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ 688

(
துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறமும்'அய்யாமுத்தஷ்ரீக் நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட சிறந்ததல்ல? என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிஹாதை விடவுமா? என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்து புறப்பட்டு இரண்டையும் இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 969

இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடையவுள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில் இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும். மனித இனத்தின் உயர்வுகளுக்கு வழிகாட்டும் ஏக இறைமார்க்கம், இம்மாதத்திலும் மனிதர்கள் இறையருளையும் இறையச்சத்தையும் பெறுவதற்குண்டான நேரிய காரியங்களைக் கற்றுத் தருகிறது.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ரா, அரஃபா தின நோன்பு, பெருநாள் தொழுகை,குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களிலும் அதைத் தொடர்ந்து அய்யாமுத்தஷ்ரீக் நாட்களிலும் அனுகூலமாயிருப்பதை உணரலாம்.

அந்த நாட்களில் 'லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்,அல்ஹம்துலில்லாஹ் ஆகியவற்றை அதிகமாக கூறுங்கள்' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானி)

அரஃபா தினத்தில் (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் நாள்) நோன்பு நோற்பது, அதற்கு முந்தைய ஒரு வருடம், அதற்கடுத்த ஒரு வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுகதாதா(ரலி) நூல்: திர்மிதீ680 எனவே அரஃபா தினத்தன்று  நோன்பு நோற்பது நபிவழியாகும்.

பெருநாள்!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது,மதினாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனாவாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'இந்த இரு நாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது? எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அறியாமை காலத்தில் (இந்நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம் என்றனர். (அதைக்கேட்ட) அல்லாஹ்வினதூதர்(ஸல்) அவர்கள் 'நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்குப் பதிலாகவும்'அள்ஹா (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், ஃபித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான்' என்று கூறினார்கள்.  அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபுதாவுத் 1004

அறியாமைக் காலத்திலிருந்த இரு நாட்களுக்குப் பகரமாக  மாட்சிமைமிக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு நல்கிய நாட்கள்தான் இந்த இரு பெருநாட்கள். இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) நிகழ்த்துவதோடு வேறு சில காரியங்களைச் செய்வதும் நபிவழியாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உண்ணும் வரை ஈதுல்ஃபித்ர் பெருநாளன்று (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஈதுல் அள்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1756

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஈது (தொழுகை)க்கு நடந்தவர்களாக வந்து, (தொழுதபின்) நடந்தே திரும்பிச் செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் ஸஅது(ரலி)  நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1070

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்;முதலில் தொழுகையையே துவக்கு வார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப் பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப்பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: புகாரி 956

நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்கு) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகி இருப்பார்கள். உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி 974

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 960

(
ஈதுல்)ஃபித்ருவிலும், (ஈதுல்)அள்ஹாவிலும் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் ருகூவின் தக்பீர் நீங்கலாக (இரண்டு ரக்அத்களிலும் கிராஅத்துக்கு முன்) ஏழு-ஐந்து தக்பீர்களை கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவுத் 1043

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 'யார் நமது தொழுகையைத் தொழுது, நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத் தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். பரா பின் ஆஸிப்(ரலி) நூல்: புகாரி 955
 
பெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும்,வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 986

பெருநாட்களையும், திருநாட்களையும் வீணான கேளிக்கைகளிலும் ஆடம்பரங்களிலும் திளைத்துக் கழிக்கின்ற உலகோர்க்கு மத்தியில் அந்த தினங்களையும் இறைவனுக்கு உவப்பான வழிகளில் கண்ணியப்படுத்தச் செய்யும் மார்க்கத்தின் அம்சங்களை கடைப்பிடிப்போமாக! அல்லாஹ் கருணையாளன்!

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!