Tuesday, November 23, 2010

அழகிய அணிகலன்கள் பகுதி 1


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த வலைப்பூவில் எழுத வாய்ப்பு கிடைத்தும் சில பல காரணங்களால், என்னால் உடனே எழுத இயலவில்லை. இதற்கு மேலும் தள்ளிப்போடுவது நல்லதல்ல என்பதால் ஒரு சிறிய தொடரை ஏக இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.  Husn-E-Akhlaq என்னும் இந்த தொடர், அழகிய குணங்களைப் பற்றியது. இந்த குணநலன்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் முன்னோடி என்றால் அது மிகையாகாது. முற்காலங்களில், இஸ்லாம் வேகமாகவும் வேரூன்றியும் வளர்ந்து கொண்டிருந்தபோது பிள்ளைகளுக்கு akhlaaq அல்லது குணனலன்கள் கற்றுக்கொடுக்கவே தனி துறையும், அதில் ஆசிரியர்களும் இருந்தனர். இமாம் மாலிக் அவர்கள் முதன் முதலில் கல்வி கற்க செல்லும் பொழுது அவரின் தாயும் சொன்னது என்ன, ”முதலில் நீ, உன் ஆசிரியரின் குணங்களை கற்றுக் கொள், அவரைப்போல வாழ ஆசைப்படு, அதன் பிறகே இல்ம் அல்லது படிப்பு”. ஆக, நம் முன்னோர்கள், இஸ்லாத்தில் குணநலன்களுக்கு எவ்வளவு மதிப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால், இப்போதைய வாழ்க்கை முறையில், குணநலன்கள் ஒரு பொருட்டாகவே இல்லாமல் போய்விட்டது. உலகம் முழுதும் சேவை செய்த அன்னை தெரசாவிற்கு தரப்பட்ட நோபெல் விருதை போரினாலும், போலி சட்டங்கள் மூலமும் உலகின் கால்வாசி மனிதர்களை சிறையிலும், தன் நாட்டிலேயே கைதியாகவும் வைத்திருக்கும் அமெரிக்க அதிபருக்கும் தரும்போதே நாம் தெரிந்து கொள்ள இயலும், நாம் எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். க்ஹைர். அல்லாஹ் போதுமானவன். நம்மால் இயன்றது என்ன, நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் அழகிய குணநலன்களை பேண வைப்பதும், அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுமே ஆகும். இன்ஷா அல்லாஹ், இதன் முதல் பாகத்தை இப்பொழுது காண்போம்.


“மேலும் நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணமுடையவராக இருக்கின்றீர்” [அல்-கலம்: 4]

இந்த திருக்குர்ஆனின் ஆயத்தில், அல்லாஹ் கூறுவது என்ன? மனிதர்களுக்கு எந்த குணங்கள் நல்லவை என  சொல்லப்பட்டனவோ அத்தனை பெருங் குணங்களும் அத்தனையும் நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்டுள்ளன என்பதையே. சிறு வயது முதல் தன் வாலிப வயது வரை நபிகளார் (ஸல்) அவர்களுக்கு சேவை செய்வதையே பாக்கியமாய் பெற்ற அனஸ் (ரலி) அவர்களின் கூற்றே இதற்கு மீண்டும் அழகு சேர்க்கிறது,

“நான் நபிகள் நாயகத்திடம் 10 வருட காலம் வேலை செய்திருக்கிறேன். ஒரு போதும் அவர்கள் என்னைச் ‘சீ’ என்று கூடச் சொன்னதில்லை. ஏதாவதொரு விடயத்தைச் செய்தால் ‘ஏன் இப்படிச் செய்தாய்’ என்று கேட்டதில்லை. நான் ஏதாவது ஒன்றைச் செய்யவில்லையானால் ‘ஏன் இதைச் செய்யவில்லை’ என்றும் கேட்டதில்லை” [நூல்: புகாரி, முஸ்லிம்].
நம்மிடம் வேலை செய்யும் யாரும் நம்மைப்பற்றி இப்படி கூற முடியுமா? அல்லது நம்முடன் வேலை செய்யும் நண்பர்களாவது?? இத்தகைய ஒரு புகழுரையை நபிகள் நாயகம் (ஸல்) தவிர வேறெந்த உலக தலைவர்களிடம் நாம் காண இயலாது, உயிருடன் இருப்பவர்கள், இறந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இன்னும் காணலாம்.

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(ஆலே இம்ரான் :159)


ஏற்கனவே பொறுமைக்கும் அழகிய குணங்களுக்கும் பெயர் பெற்ற திருத்தூதருக்கு(ஸல்), அல்லாஹ் இன்னும் அழகிய முறையில் இங்கு இன்னும் மெருகூட்ட வழிமுறைகளை சொல்லித்தருகின்றான். இறைத்தூதரின் அழகிய குணங்களை போற்றியதோடு நில்லாமல், அல்லாஹ் கூறுகின்றான், தலைவர் என்றால் செருக்குடன் தனியே நிற்காதீர், மாறாக, எல்லா விஷயங்களிலும் உங்களை பின் தொடர்பவர்களை கலந்தாலோசித்து செயல்படுத்துங்கள் என்று. இதே போல பத்ரு யுத்தத்தின் கைதிகளின் விஷயத்திலும் அல்லாஹ்வின் எச்சரிக்கை உங்களுக்கு நினைவிருக்கும். அவர் நபி என்பதற்காக அல்லாஹ் தன் கோபத்தை தடுத்து வைக்கவில்லை, மாறாக, அவர் மக்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்தார் எனவே அண்ணலார் மேல் வரவிருந்த ஆபத்தை தடுத்து வைத்ததாக இறைவன் கூறுவான். எவ்வளவு உண்மை? இன்று வீட்டு விஷயம் முதல் நாட்டு மக்கள் விஷயம் வரை தான்தோன்றியாக நடந்துகொள்ளும் தலைவர்களுக்கு இது பாடமல்லவா? ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதை விட சிறந்த ஓர் அறிவுரை எங்கேயும் காண இயலுமோ??

இன்னுமொரு விஷயம் என்னவெனில், நாம் லட்சங்கள் பல செலவு செய்து மாற்று மதத்தவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதை விட்டும், ஆயிரங்கள் செலவு செய்து குறும்படங்களோ, காணொளிகளோ படைத்து தாவாஹ் / Dawah செய்வதைக் காட்டிலும் மிக அதிக சக்தியை கொண்டது நாம் நடந்து கொள்ளும் விதம். உதாரணத்திற்கு சகோதரி யுவோன் ரிட்லியைப் பாருங்கள், நம்மிடம் இப்பொழுது பரப்பப்படும் பொய்களைப்போல உண்மையிலேயே இந்த சகோதரியை கைதியாக வைத்திருந்தபோது நடந்து கொண்டிருந்தால் இத்தகைய ஒரு சகோதரியை நாம் பெற்றிருக்க முடியுமா?? இன்னும் இந்த லின்க்கில் பார்த்தீர்களானால், சிறு குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கொண்டும் நாம் கவனிக்கப்படுகிறோம் என்பது புலப்படும். இன்ஷா அல்லாஹ், இன்னும் கற்றுக் கொள்வோம் அழகிய குண நலன்களை. அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களின் குணங்களில் 10% சதவிகிதமாவது நம் வாழ்விலும் மேம்படுத்த முயல்வோம். மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ். வ ஸலாம்.

3 comments:

  1. வரதட்சணை பிரியர்களுக்கு செருப்படி கொடுத்தார் அந்நியன்

    ReplyDelete
  2. // நாம் லட்சங்கள் பல செலவு செய்து மாற்று மதத்தவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதை விட்டும், ஆயிரங்கள் செலவு செய்து குறும்படங்களோ, காணொளிகளோ படைத்து தாவாஹ் / Dawah செய்வதைக் காட்டிலும் மிக அதிக சக்தியை கொண்டது //
    வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள் பணி சிறக்கவும்,அல்லாஹ் தங்கள் மேல் அவன் கருணை பொழியவும் செய்வானாக.ஆமீன்

    ReplyDelete
  3. பின்னூட்டங்களுக்கும், து’ஆவுக்கும் நன்றி, சகோதரர்களே.. :)

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!