Sunday, February 1, 2009

இஸ்லாம் பார்வையில்"இரத்த பந்தம்"

அபூ அய்யூப் அன்சாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், ""நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது, நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள்: ""தனது இரட்சகனை அஞ்சி, இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும், செல்வங்கள் பெருகும், அவரை அவரது குடும்பத்தினர் நேசிப்பார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஒரு கூட்டத்தில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் இருந்தால் அந்தச் சமுதாயத்தினர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்காது.'' (ஷு"ஃ புல் ஈமான் அல் பைஹகீ)


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""மறு உலகில் அல்லாஹ் தண்டிப்பதுடன் இவ்வுலகிலும் தண்டனை தருவதற்கு மிகத் தகுதியான குற்றம் உறவுகளைத் துண்டிப்பதை விடவும், அக்கிரமம் செய்வதை விடவும் வேறொன்றுமில்லை.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)


அல்லாஹ் அருளியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""நானே ரஹ்மான். நான் "ரஹிமை' (இரத்த பந்தத்தை)ப் படைத்தேன். அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன். யார் அதைச் சேர்த்துக் கொள்கிறார்களோ நானும் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். எவர் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன்.'' (ஸுனன் அபூதாவூத்)

ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆம்ரு இப்னு ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது: ""இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் நேசர்கள் அல்லர். என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தான். ஆயினும் அக்குடும்பத்தாருடன் எனக்கு இரத்த பந்தம் உண்டு. அதை நான் உபகாரத்தால் பசுமையாக்குவேன்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறினார்: ""அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: ""நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!