Showing posts with label அழைப்புப்பணி. Show all posts
Showing posts with label அழைப்புப்பணி. Show all posts

Saturday, March 7, 2009

முஸ்லிம் அடிப்படைவாதி!!!

இஸ்லாத்தைப் பற்றித் தவறான பல கருத்துக்கள் குறிப்பாக செய்தி ஊடகங்களால் பரப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் கருத்துகள் திணிக்கபடுகின்றன. இச்சூழலில் நாம் மதி நுட்பத்துடன் அழைப்புப் பணிச் செய்ய கடமைப்பட்டுள்ளோம். சாதாரணமாக முஸ்லிம்களாகிய நாம் அழைப்புப் பணிச் செய்யும்போது, கருத்துகளை பூசி மெழுகும் பாணியைத்தான் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளை மதி நுட்பத்தைப் பயன்படுத்தி கலைக்கும் பணியை நாம் மேற்கெள்ள வேண்டும்.

உதாரணமாக முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் மக்கள் கூறும்போது, நான் "அடிப்படைவாதி" என்பவன் யார் என்ற கேள்வியை எழுப்புவேன். அடிப்படைவாதி என்பவர் ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது நம்பிக்கையின் அல்லது படிப்பின் அடிப்படைகளை பின்பற்றுபவர் ஆவார். உதாரணமாக ஒரு மருத்துவர் நல்ல மருத்துவராக இருக்கவேண்டும் எனில் மருத்துவத்தின் அடிப்படைகளை அறிந்து புரிந்து அதனை செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். மருத்துவத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதியாக இருக்காவிடில், அவர் ஒரு நல்ல மருத்துவராக இருக்க முடியாது. என்னை பொருத்தவரை ஒரு முஸ்லிம் அடிப்படைவாதி என்று என்னை அழைத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏனெனில் நான் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறிந்து புரிந்து அவற்றை பின்பற்றுபவனாக இருக்கிறேன். மனித குலத்திற்கு எதிரான ஏதாவது ஒரேயொரு அடிப்படை அம்சத்தை சுட்டிக் காட்டுமாறு இஸ்லாத்தை விமர்சிப்போருக்கு நான் சவால் விடுகிறேன். இஸ்லாத்தைப் பற்றி தெரியாத ஒருவர் இஸ்லாத்தின் சில அடிப்படை அம்சங்களை மனித குலத்திற்கு எதிரானது என்று எண்ணலாம். ஆனால் அவரது சந்தேகங்களுக்கு அறிவுப் பூர்வமாக விளக்கம் அளித்தால், எந்தவொரு மனிதராலும் மனித குலத்திற்கு எதிரான ஒரேயொரு விஷயத்தைக் கூட இஸ்லாத்தில் சுட்டிக்காட்ட முடியாது.

அடிப்படைவாதி என்பதற்கு பொருள், பழங்கால மதங்களில் ஏதாவது ஒன்றின் கோட்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுபவர் என்று ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி கூறுகின்றது. ஆனால் ஆக்ஸ்போர்ட் அகராதியின் புதிய பதிப்பை நீங்கள் படித்தால் இந்த பொருளில் சிறிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். புதிய பதிப்பில் பழங்கால மதங்களில் ஏதாவது ஒன்றில் குறிப்பாக இஸ்லாத்தின் கோட்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுபவரே அடிப்படைவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்லாம் என்ற வார்த்தை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே "அடிப்படைவாதி" என்ற சொல்லை கேள்விப் பட்டவுடனேயே, முஸ்லிமைப் பற்றிய எண்ணம் தான் ஒருவரது எண்ணத்தில் வரும். முஸ்லிம் என்றாலே அடிப்படைவாதி, பயங்கரவாதி என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

பயங்கரவாதி என்பவன் அப்பாவி மக்களை கதிகலங்க வைப்பவன் என்ற பொருளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். இந்த அடிப்படையில் எந்தவொரு முஸ்லிமும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. எந்தவொரு அப்பாவியையும், எந்தவொரு சமயத்திலும் முஸ்லிம் ஒருவர் கதிகலங்க வைக்கக் கூடாது. சமூக விரோதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து முஸ்லிம்கள் கதிகலங்க வைக்கவேண்டும். இப்படியே நாம் விரிவாக விளக்கிக் கொண்டே போகலாம். எனவே மதி நுட்பத்துடன் நாம் கருத்துகளை மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.


இளைஞர்களை பொருத்தவரையில், இஸ்லாத்தின் சத்தியச் செய்திகளை எடுத்துரைக்க அவர்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. உதாரணமாக நான் ஒரு மருத்துவராக ஆக வேண்டும் என்று விரும்பியதற்குக் காரணம் மருத்துவப் பணி ஒரு உன்னதமான பணி என்பதால் தான். ஆனால் அதனைவிட சிறந்த பணியை பின்னர் நான் கண்டேன்.

திருக்குர்ஆனில் இறைவன்:

(41:33) وَمَنْ اَحْسنُ قَوْلا ًمِّمَّنْ دَعَآاِلىَاللهِ وَعمِلَ صَاِلحا ًوَّقَالَ اِنَّنِيْ مِنَ الْمُسْلِمِيْنَ

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல)அமல்கள் செய்து: "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?)

எனவே மருத்துவப்பணியைவிட சிறந்த பணியாக அழைப்புப்பனி தென்பட்டபோது நான் அதனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். எனவே முஸ்லிமாகிய நாம் முஸ்லிம் என்று நம்மை அழைத்துக் கொள்வதில் வெட்கமடையத் தேவையில்லை. முஸ்லில்லாதவர்களின் உள்ளத்தில் உள்ள தவறான எண்ணங்களைப் போக்க நாம் மதி நுட்பத்துடன் முயற்சி செய்ய வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற போர்வையில் கடினப்போக்கை மேற்கொள்ளாமல் அன்புடனும் கணிவுடனும் முஸ்லிம் அல்லாதவர்களிடையே நாம் பணியாற்ற வேண்டும்.

டாக்டர் ஜாகீர் நாய்க் அவர்கள் ஒற்றுமை
இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி

Friday, March 6, 2009

நான் இஸ்லாத்தை தழுவிய விதம்???

நான் இஸ்லாத்தை தழுவிய விதம் பல திட்டங்கள் அமைந்தவை. நான் ஒரு திட்டம் வகுத்தேன். நான் சார்ந்த குழுவினர் ஒரு திட்டம் வகுத்தார்கள். அல்லாஹ் ஒரு திட்டம் போட்டு என்னை இஸ்லாத்தை தழுவச் செய்தான். திட்டம் வகுப்பதில் அல்லாஹ் மிக மேலானவன். என்னுடைய பருவ வயதில் நான் இஸ்லாத்திற்கு எதிரான தீவிர நோக்கம் கொண்ட ஒரு குழுவினரால் ஈர்கப்பட்டேன். இவர்களில் பெரும்பாலோர் அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்கள். இவர்கள் இப்பதவியில் இருந்துக்கொண்டே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி கொண்டிருந்தார்கள். அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லாமல் தங்கள் பதவிகளை தவறாக பயன்படுத்தினார்கள்.

என்னிடம் இயற்கையிலே அமைந்த துணிச்சல், தன்னம்பிக்கை பெண்ணுரிமைக்காக போராடும் தன்மையைக் கண்டு என்னை அவர்கள் அனுகி International Relations என்ற கல்விப் பயிற்சியை முடித்தால் எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றவும் அதனைக் கொண்டு அங்கு பெண்களுக்கு பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து போராட வேண்டும் என்று அவர்கள் கூறியது எனக்கு பொருத்தாமகத் தோன்றியது. எகிப்திய பெண்களை நான் தொலைக்காட்சியில் பார்த்ததில் அவர்கள் பளு, சுமை நிறைந்தவர்களாக கண்டதால் அவர்களை சுதந்திர இருபதாம் நூற்றாண்டிற்கு வழிகாட்ட நினைத்தேன்.

இஸ்லாமிய நாட்டில் இந்தப் பணியை தொடங்க இருப்பதால் நான் குர்ஆனையும், ஹதீதையும் இஸ்லாமிய வரலாறுகளையும் கற்றுக்கொண்டேன். நாங்கள் கொண்ட நோக்கப்படி இஸ்லாத்தை பற்றி பிரச்சாரத்தின் மூலம் திசை திருப்ப ஆரம்பித்தேன். அதனால் எனக்கு மிக பயமாகவும் இருந்தது. இதை முறியடிக்க கிறிஸ்தவத்தை கற்க எண்ணி மதிப்பும் மரியாதையும் உள்ள ஒரு (Ph.D in Theology, Harvard University) பேராசிரியரிடம் அனுப்பப்பட்டேன். நான் ஒரு சிறந்த பேராசிரியரிடம் தான் கிறிஸ்தவத்தை கற்க போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் உண்மை அப்படி அல்ல. காரணம் அவர் ஒரு (Unitarian Christian ) அதாவது மாதா, பிதா, பரிசுத்தஆவி என்ற கிறிஸ்தவ கொள்கையில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. உண்மையில் ஜீஸஸ் (ஈஸா நபி) அவர்களை இறைவனின் தூதர் என்றுதான் நம்புகிறார்.

இதனை நிரூபிக்க அவர் என்னிடம் பழைய பைபிள் மூல நூல்களை (Greek, Hebrew, and Aramaic) எடுத்து பைபிளில் எங்கெங்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று என்னிடம் நிரூபித்தார். இதைக் கண்டதும் நான் என் கிறிஸ்தவ மதத்தின் மீது உள்ள நம்பிக்கையை இழந்தேன். இருந்த போதிலும் எந்த நோக்கத்தோடு இந்தப் பணியில் சேர்ந்தேனோ என் எதிர்கால வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படித்து வந்தேன். இதற்கிடையில் இஸ்லாத்தை அறியும் பொருட்டு முஸ்லிம் சகோதரர்களிடம் உரையாடி வந்தேன்.

என்னுடைய ஆர்வத்தை கண்ட முஸ்லிம் சகோதரர் (MSA)என்னுடை சந்தேகங்களை களைந்து இஸ்லாத்தை மேலும் கற்றுக்கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ். அச்சகோதரருக்கு மென்மேலும் அல்லாஹ் நன்மையை அளித்தருள்வானாக!

ஒரு நாள் இந்த சகோதரர் என்னிடம் இருபது முஸ்லிம் சகோதரர்கள் (ஜமாஅத்) வந்திருப்பதாகவும் இஷா வேளைக்குப் பிறகு அதில் கலந்து கொள்ளும்படியும் கூறினார். நான் அங்கு சென்று கலந்து கொண்டேன். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். அவர் அதிகம் கிறிஸ்தவத்தை அறிந்தவராயிருந்தார். நானும் அவரும் பைபிளையும், குர்ஆனையும் பல கோணங்களில் காலை பஜ்ர் நேரம் வரை கருத்து பரிமாற்றமும் விவாதமும் செய்தோம்.

மூன்று ஆண்டுகளாக நான் இஸ்லாத்தைப் பற்றி சொல்லி கொடுக்கப்பட்டேன், வாதம் புரிந்தேன், குறை சொல்லப்பட்டேன் ஆனால் யாரும் என்னை இஸ்லாத்தை தழுவ அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இவர் என்னை இஸ்லாத்தை தழுவும்படி அழைப்பு விடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் என் இதயத்தை திறந்தான். நான் முஸ்லிமாக விருப்பம் தெரிவித்து கலிமாவை மொழிந்து நிம்மதி பெருமூச்சு அடைந்தேன். நான் எனது இறுதி நாள் வரை சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன். ஆமீன்!

source: www.islamzine.com
By Shariffa Carlo
தமிழில் ஜகபர் அலி சிங்கப்பூர்

Thursday, November 20, 2008

மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவது இழிவு!!!???

இவ்வுலகில் படிப்பு பதவி வியாபாரம் விவசாயம் இவற்றில் நமது கவனக்குறைவால் அறியாமையால் தோல்வி நஷ்டம் ஏற்பட்டால் இத்தோல்வி நஷ்டத்தைப் படிப்பினையாக வைத்து இரண்டாவது முறையோ அல்லது பலமுறை முயற்சி செய்து தோல்வியை வெற்றியாக மாற்றலாம். நஷ்டத்தை லாபமாக ஆக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆனால் நாம் நம்பும் மறுமையைப் பொறுத்தமட்டில் இரண்டாவது சந்தர்ப்பம் அறவே இல்லை. ஒரே முயற்சியில் வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லை என்றால் மாற்ற முடியாத மீட்க முடியாத நஷ்டமாக அது நம்மை நரகில் கொண்டு சேர்த்துவிடும். இதை மனதில் பதித்துக் கொள்வோம்.

இறைவன் எதை ஏவி இருக்கிறானோ அதைதான் நாம் செய்யவேண்டும். நமது முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காக ஒன்றைச் செய்து அதைக்கொண்டு மோட்சம் அடையலாம் என்று மனப்பால் குடிக்கக்கூடாது. பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரை குறையாக எழுதினாலும் மார்க் உண்டு. கேட்கப்படாத கேள்விகளுக்கு எவ்வளவு திறமையாக எழுதினாலும் கிடைப்பது பூஜ்யம்தான். அதுபோல் இறைவனால் ஏவப்படாததைச் செய்வதால் சுவர்க்கம் கிடைக்காது. இதையும் மனதில் பதித்துகொள்வோம்.

உலகத்தில் முன்னோர்களின் அறிஞர்களின் அனுபவம் ஆற்றல் நமக்கு பயன்படலாம். காரணம் அனுபவம் ஆற்றலை லாப நஷ்டமாக உலகிலேயே சந்தித்து அடைகிறார்கள். கண்கூடாகப் பார்க்கிறார்கள். ஆனால் மறுமை விஷயத்தில் மனிதனின் ஆற்றல் அறிவு செல்லாது. இதில் இறைவன் எதைச் சொல்கிறானோ அதைப் அப்படியே ஏற்றுச் செயல்படுவதே அறிவுடமையாகும்.

மனிதன் தனது அறிவு ஆற்றல் அனுபவத்தைக் கொண்டு செயல்படுவதும் கூடாது. அதை மற்றவர்களுக்கு போதிக்கவும் கூடாது. உலக விஞ்ஞான விஷயத்தில் முன்னோர்களைப் பின்பற்றுவது முன்னேற்றத்தை தரலாம். ஆனால் மார்க்க விஷயத்தில் பின்னேற்றத்தையும் தோல்வியைத்தான் அது தரும்.

ஆனால் முன்னோர்கள் செய்தது சரியாகத்தான் இருக்கும். முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்திருக்கமாட்டார்கள் என்று கூறுபவர்கள் கூற்றில் உண்மையில்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றக்கூடியவர்கள் அதை இவ்வுலகில் முதலில் செய்து காட்டவேண்டுமல்லவா? முன்னோர்கள் ஏழைகளாக இருந்தால் இவர்களும் ஏழைகளாக இருக்க ஆசைப்பட வேண்டுமல்லவா?

அவர்கள் குடிசையில் வாழ்ந்திருந்தால் இவர்களும் குடிசையில் வாழ ஆசைப்படவேண்டுமல்லவா? அவர்கள் கூழை குடித்து கந்தையை கட்டியிருந்தால் இவர்கள் கூழை குடித்து கந்தை கட்ட வேண்டுமல்லவா? இவை எல்லாம் இழிவு இவையெல்லாம் விட்டு சுகமாக வாழவேண்டுமென்று அல்லாவா அல்லும் பகலும் பாடுபடுகிறார்கள். அப்படியானால் இவர்கள் மத விஷயத்தில் மட்டும் முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்வது சரியா?

ஏழைகளாக இருப்பதைவிட குடிசையில் வாழ்வதைவிட கூழை குடித்து கந்தையைக் கட்டுவதைவிட மிகப்பெரும் இழிவு இறைவன் கொடுத்த மார்க்கத்தை விட்டு மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவது இழிவு மாதிரமல்ல, மறுமையில் மாபெறும் நஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டால் அவர்களால் அவ்வாறு சொல்ல முடியாது.

இவ்வுலகின் சாதாரணத் துன்பங்களை விட்டு விடுதலைப்பெற பெரும் முயற்சி எடுக்கும் மனிதன் மறுமையின் மாபெரும் துன்பங்களை உணர்ந்திருந்தால் புரிந்திருந்தால் அதை விட்டும் விடுதலை பெற முயற்சிக்காமல் இருக்க முடியுமா? சொர்க்கத்திற்கு போனாலும் நரகத்திற்கு போனாலும் முன்னோர்களைப் பின்பற்றியே நடப்போம் என்று சொல்லமுடியுமா?

சாத்தான் மனிதர்களைப் பல வழிகளில் முயற்சி செய்து நரகப்படுகுழியில் தள்ளுகிறான். முதலில் இறைவனை மறுக்கும் நாஸ்திகனாக்கப் பார்க்கிறான். அதில் அவன் தோல்வி கண்டால் மனிதன் இறைவனை ஏற்றுக்கொண்டால் இறைவனுக்கு இணைவைத்து அதன் மூலம் நரகில் விழச்செய்கிறான். இதற்காக அவன் பயன்படுத்தும் உபாயம் முன்னோர்களின், அரிஞர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்ற ஒரு பக்தி உணர்வை உண்டாக்குவதாகும். இதில் பெரும்பாலோர் சிக்கிவிடுகிறார்கள். முன்னைய அறிஞர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லியே மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டுப் போகிறார்கள்.

கடந்த கால சரித்திரத்தை உற்று நோக்கினால் இஸ்லாத்தை மிகவும் கடுமையாக எதிர்த்த அபூலஹப், அபூஜஹீல் இன்னும் இவர்கள் போன்ற வழிகேடர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள், இறை தண்டனைக்கு ஆளானவர்கள் என்ன கூறினார்கள்? நமது அறிஞர்கள் நமது முன்னோர்கள் முட்டாள்களா? மார்க்கம் தெரியாதவர்களா? நீ புதிதாதகச் சொல்ல வந்துவிட்டாயோ! அவர்களைவிட நீ மிகவும் அறிந்துவிட்டாயோ? அவர்கள் எல்லாம் வழி தவறியவர்களா? நரகவாதிகளா? என்று அடுக்கிக்கொண்டே போய் மக்களை வழி கெடுத்தார்கள்.

இறுதிவேதம் அல்குர்ஆனில் கூற்று இதனை உறுதிபடுத்துகிறது

2:170. மேலும், ''அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ''அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காாியத்தைச் செய்து விட்டால், ''எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்" என்று சொல்கிறார்கள். ''(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.

31:21. ''அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ''(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)

ஆகவே இறுதி வேதத்தின் உண்மையான நிலையை உணர்ந்து இறைவனின் முன்னோர்களின் அடிச்சுவட்டை கைவிட்டு உண்மையான மார்க்கத்தின் பால் திரும்பாறு இஸ்லாம் உலக மக்களை அழைத்துக் கொண்டேயிருக்கிறது.

Tuesday, November 4, 2008

அடடே இது விளம்பர உலகமப்பா

விளம்பரம் இன்றி தொழில் மட்டுமல்ல,எதுவும் மக்களை சென்றடைவதில்லை.பளிச்சென்ற பற்களை காட்டித்தான் டூத் பேஸ்ட் விற்கமுடியும்!இது மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டுமல்ல-நாளிதழ்கள்,மாத இதழ்கள் போன்ற பிரிண்ட் மீடியாக்களுக்கும் பொருந்தும்.(பெஸ்ட் கண்ணா பெஸ்ட்,புதுசு கண்ணா புதுசு,ஹிஹி,இது குங்குமம் விளம்பரங்கோ)இது அதிரை எக்ச்பிரசுக்கும் பொருந்தும்.(அட்லீஸ்ட் வாய் வழி விளம்பரமாவது).ஆக,விளம்பரம் அவசியம்.(அடடே இது விளம்பர உலகமப்பா).

இன்று விளம்பரம் தொலைக் காட்சி,இன்டர்நெட்,பத்திரிக்கை,ரேடியோ,படங்கள்,கட் அவுட்கள்,பிட் நோடிஸ்கள்,சுவர்,மற்றும் டிஜிடல் என விளம்பரம் எல்லா வகையிலும் வியாபித்துள்ளன.சரி,சரி,அதுக்கு என்ன ? என கேள்விகள் எழலாம்.இதன் விடை,இந்த விளம்பர யுகத்தை ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது?இஸ்லாத்தின் அழகிய நெறியை பாரெல்லாம் பரப்ப,இவ்விளம்பரத்தை நாமும் ஏன் பயன்படுத்தக்கூடாது?

பொதுவாக,தொலைக் காட்சி,இன்டர்நெட்,ரேடியோ,பத்திரிகைகள்,என இஸ்லாம் குறித்த விவரங்கள் உலா வருவது நாம் அறிந்ததே.நான் சொல்ல விழைவது,"சுவர் விளம்பரங்கள்" பற்றியதே.

உதாரணமாக நம் ஊரை எடுத்துக்கொண்டால்,ஒரு தெருவில் பல சீர்கள்(லைன்கள்) இருக்கும்.ஆக,அந்த லைனில் உள்ள ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து,வீட்டாரின் முன் அனுமதி பெற்று,நல்ல அழகு கையெழுத்தில்,பெரிய எழுத்துக்களில் ஆயில் பெயிண்டிங் கொண்டு திருக் குரான்,ஹதீஸ் வசனங்களை எழுதி வைத்தால்,அப்பக்கம் போவோர் வருவோர் கண்களில் பட்டு குரான்,ஹதீஸ் வசனங்கள் மனனம் ஆகும்,மேலும் அல்லாஹ்வின் அச்சமும்,உதாரணமாக,விபச்சாரம்,குடி,வட்டி,ஷிர்க் வைத்தல்,தர்கா வழிபாடு போன்ற செயல்களால் அல்லாஹ்வின் கோபம் ஏற்பட்டு,நரகம் கிடைக்கும் என்பதையும்,தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ்,போன்ற கடமைகளை செய்வதன் மூலம் கிடைக்கும் கூலியும் அதன் பால் வரும் சொர்க்கம் போன்ற கருத்துக்களையும் மக்களிடம் விளம்பரப் படுத்தினால் இன்ஷா அல்லாஹ்,இதன் மூலம் பயன் கிடைக்கும்.

நம் ஊரின் விசாலமான தெருக்களும்,அந்த தெருக்களினூடே உள்ள லைன்களையும் கணக்கிட்டால் நிறைய குரான் ஹதீஸ் எழுத முடியும்.அப்ப என்ன சுவர் விளம்பரம் எழுத ரெடிதானே!

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்

ஆதாரம் புகாரி

Thursday, October 30, 2008

”ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர், ஆச்சார்யண ஸமன் வித...

சில வாரங்களுக்கு முன்பு,இந்து வேதங்களில் இஸ்லாம் பற்றியும்,ஏக அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என அவைகள் கூறும் கூற்றுக்கள் பற்றியும்,நபிகள் கோமான் ஸல் பற்றியும் உள்ள இந்து வேத சமஸ்கிருத மந்திரங்கள் குறித்து பார்த்தோம்.அவற்றில் சில இப்போது..!

பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் பூரணமாக:

”ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர்
ஆச்சார்யண ஸமன் வித
மஹாமத் இதிக்கியாத
சிஷ்ய சாகா ஸமன்வித
நிருபஸ்சேவ மஹாதேவ
மருஸ்தல நிவாஸினம்”
(பவிஷ்ய புராணம் 3,3,5-8)

இதன் பொருள்:

“அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்). அவர் பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார்.”

மேலும் அதே புராணத்தில் அந்த ஆசாரியாரின் இனம், தோற்றம்,பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் கூறப்பட்டுள்ளது.

”அவர்கள் ‘கத்னா (லிங்கசேதி) செய்வார்கள்,
குடுமி வைக்கமாட்டார்கள்,
தாடி வைத்திருப்பார்கள்,
மாமிசம் உண்பார்கள்,
சப்தம் போட்டு (அதான்) அழைப்பார்கள்,
முஸைல (முஸல்மான்) என அழைக்கப்படுவார்கள்”
என்று அது கூறுகிறது (பவிஷ்ய புராணம், 3:25:3)

மேலும் காண்க;
அதர்ணவேதம் 20வது காணம்,
ரிக்வேதம், மந்திரம்:5, சூக்தம்:28

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள்,
திருக்குர்ஆனில்:2:127. இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது
”எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினர்).2:128.

”எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”2:129.
”எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும் பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (என்றும் பிரார்த்தித்தார்கள்)

இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை, மார்க்கம், சமுதாயம் ஆகியவை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்படடிருந்தது.

இறைத்தூதர் மோசே (மூஸா (அலை) அவர்களின் முன்னறிவிப்பு பழைய ஏற்பாட்டில்:”உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார், அவருக்கு செவிகொடுப்பீர்களாக! (உபாகமம்,18:15)”

உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்” (உபாகமம், 18:18)

புதிய ஏற்பாட்டில்:மோசே (மூஸா (அலை) பிதாக்களை நோக்கி, உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார், அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்காளக. (அப்போஸ்தலர்,3:22)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய புதல்வர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றியவர்களே இஸ்ரவேலர்கள். அவர்களுடைய சகோதரர் இஸ்மாயீல் (அலை) அவர்களது பரம்பரையில் வந்தவரே இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. (இப்னு கஸீர் அடிக் குறிப்பு)

இந்து நண்பர்களே,நீங்கள் பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம் இஸ்லாம்தான்,நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரே தலைவர் நபிகள் நாயகம் மட்டுமே.சிந்தியுங்கள்.அல்லாஹ் நேர்வழி தர போதுமானவன்.இதே போல் பழைய,புதிய ஏற்பாட்டிலும் நபிகள் நாயகம் குறித்து முன் அறிவிப்பு உள்ளதை கிறிஸ்தவ நண்பர்கள் http://egathuvam.blogspot.com என்ற தளத்தில் காணலாம்.

Sunday, October 26, 2008

மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்!

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்-குர் ஆன் 4:170)

இறைவன், அனைத்து மனிதர்களையும், தன்னிடமிருந்து உண்மையை கொண்டு வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு தூதராக ஏற்றுக்கொள்ளுமாறு அழைக்கிறான். இறைவனின் தூதர் என்பவர், இஸ்லாமிய பார்வையில், நபிமார்களை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் ஆவார். நபி என்பவர் இறைவனின் உதவியுடன், எதிர் காலத்தைப் பற்றி முன் கூட்டியே சொல்பவர் ஆவார். தூதர் என்பவர் இறைவனால் நியமிக்கப்பட்ட, இறைவனிடமிருந்து பெறப்பட்ட செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு ஆசிரியரைப் போன்றவராவார்.

வஹீ என்பது இறைவனிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் குறிக்கும் சொல். இஸ்லாமிய மரபுப்படி அனைத்து தூதர்களும் நபிமார்கள் ஆவார்கள். ஆனால் அனைத்து நபிமார்களும், தூதர்களாக ஆக மாட்டார்கள். ஆப்ரஹாம், மோஸஸ், ஜீஸஸ் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அனைவர்களும் தூதராவார்கள்.
ஏன் ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைவனின் தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மோஸஸ் மற்றும் ஜீஸஸ் வேதங்களில் சொல்லப்பட்டவைகளை பூர்த்தி செய்தவர் ஆவார்.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தவறே இல்லாத குணத்துக்கு சொந்தக்காரர். அவர்கள் வாழ்ந்த ஒரு பரிபூரணமான வாழ்க்கையை பாதுகாக்கப்பட்டது போல உலகில் வேறு எந்த மனிதரின் வாழ்க்கையும் பாதுகாக்கப்படவில்லை. அவர்களின் மார்க்க போதனைகளும், நற்குணங்களும் தற்கால உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. அவர்கள் இறைவனிடமிருந்து கொண்டு வந்த திருகுர்ஆன், மிகச் சிறந்த அற்புதமாக மட்டும் இல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை பாதுகாக்கப்பட்ட ஒரே வேத நூலாகவும் உள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில், அவர்களும் அவர்கள் கொண்டுவந்த வேதமும் உண்மையானதாக உள்ளது. ஆகையால் யார் இந்த மனிதரைப் பற்றி அறியவில்லையோ, அவர்கள் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். யார் இந்த மனிதரை நம்புகிறாரோ அவர் இறைவன் சொல்வதைப் போல இந்த உலகத்தில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்வார். மேலும் மரணத்திற்குப் பிறகு சுவர்க்கத்தில் நிரந்தரமாக வசிப்பார். யாராவது ஒருவர் இந்த மனிதரை நிராகரித்தால் (அதன் மூலம் அவரை அனுப்பிய இறைவனை நிராகரித்தால்) இறைவனுக்கோ அல்லது அவனுடைய தூதருக்கோ எந்த ஒரு தீங்கும் இல்லை. மாறாக அது நிராகரிப்போருக்குத்தான் தீங்காக முடியும். இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானது. அவன் அனைத்தையும் நன்கு அறிந்தவனாகவும் அவன் கட்டளையிடுவ உள்ளான்.

M. அன்வர்தீன்

Saturday, October 25, 2008

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரே மாபெரும் தலைவர்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலம் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தையதாகும். அதற்கு முன்னர் இக்கொள்கையை முன்மொழிந்த பல ஆயிரம் தீர்க்க தரிசிகள் இவ்வுலகில் பிறந்து மறைந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையை முன் மொழிந்த காரணத்திற்காக அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்; உதைக்கப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; பலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொண்டு மனித இனத்தை ஒரே கொள்கையின்பால், ஒரே நம்பிக்கையின்பால் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்பதற்காக அத்தூதுவர்கள் போராடினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி போராடிய அவர்களையே ஒரு குழு கடவுளாக ஆக்கி அவர்களது பெயரால் சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத் தூதுவர்களாக வந்தவர்களை இறைவனாக(கடவுளாக)வே அம்மக்கள் மாற்றியமைத்து விட்டனர். இயேசு, ஆப்ரஹாம், மோஸே, இஸ்மவேல், நோவா போன்ற இறைத் தூதுவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் (ஸல்)அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே இறைத்தூதர் என முஸ்லிம்கள் நம்புவதில்லை. மாறாக இறுதித்தூதர் என நம்புகின்றனர். ஏனைய தூதர்களைப் போன்று இவர்களும் ஓரிறைக் கொள்கையையே முன்வைத்தார்கள். அத்துடன் தமக்கு முன் வாழ்ந்த தூதர்கள் மரணித்த பிறகு அவர்களின் கொள்கை மக்களால் சிதைக்கப்பட்டது போன்று தனது கொள்கையும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லா முனேற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அதனால்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட இவ்வேளையிலும் இஸ்லாம் மாசு படாமல் இருக்கிறது. நான் இறைவனின் தூதன், ஓரிறைக் கொள்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் இறைவன் (கடவுள்) அல்ல, என்னிடத்தில் கடவுள் அம்சம் எதுவும் கிடையாது. நானும் உங்களைப்போன்ற மனிதனே! உங்களைப் போன்று உணவு அருந்துகிறேன்; பருகுகிறேன்; உறங்குகிறேன்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறேன். அதோடு ஓரிறைக்கொள்கையை போதிக்கிறேன் என ஓங்கி முழங்கி, அவர்களது காலில் விழ வந்தவர்களை விழக்கூடாதெனத் தடுத்து, என் காலில் மட்டுமல்ல எவர் காலிலும் விழவே கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். குனிந்து கும்பிடு போடுவதை கொடுமை என்றார்கள். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தக் கிரியைகளையும் மனிதர்களுக்குச் செய்யக்கூடாது என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரும்போது சபையில் எவருமே எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டு அமுல்படுத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களது தோழர்கள் தங்களது உயிரினும் மேலாக நேசித்தார்கள். இருந்தும் தன்னை இறை (கடவுள்) அந்தஸ்திற்கு உயர்த்த அவர்கள்இடம் தரவில்லை. இறை அந்தஸ்த்திற்கு தன்னை உயர்த்த அவர்களது வாழ்நாளிலேயே மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்கள். தன்னை வரையக் கூடாது. உருவப்படன் எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடை விதித்திருந்தார்கள். இன்றைய காலத்தில் உருவப் படங்கள் எல்லாம் பக்திகுரியவைகளாக ஆகி விட்ட நிலையை நாம் காண்கிறோம்.

உதாரணமாக, பாட்டன் முதல் தர போக்கிரியாக இருப்பார். அவருடைய உருவப்படம் வீட்டிலே தொங்க விடப்பட்டு ஊதுபத்தி கொழுத்தி கும்பிடு போடப்படுவதை தினமும் பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்குச் சிலை உண்டு. படம் உண்டு. நபிகளாருக்கு முன் வாழ்ந்த ஏசுவுக்கும் கூட சிலை உண்டு, சித்திரம் உண்டு. ஆனால் ஆயிரத்து நானூரு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படி ஏதும் இல்லை. மக்களை ஏமாற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தால் அறியாமைக்கால அம்மக்களை இலகுவாக ஏமாற்றியிருக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் 'ஏமாற்றாதீர்கள்; ஏமாறாதீர்கள்' என்பதுதான் அவர்களது போதனையாக இருந்தது. அவர்களது புதல்வர் இபுறாஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதை கவனித்த அம் மக்கள் இந்த இறப்புக்காக வானம் கூட துக்கம் அனுஷ்டிக்கிறது' எனப் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபிகளார் தாமும் பதிலுக்கு 'ஆமாம்' எனக் கூறி தலையாட்டி தன் பெருமையை, மதிப்பை உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக இப்படி எப்போதுமே சொல்ல வேண்டாம்; இது இறைவன் ஏற்படுத்திய நிகழ்வு. எவருடைய பிறப்பிற்காகவோ அல்லது இறப்பிற்காகவோ இது போன்று நிகழ்வதில்லை என அம்மக்களுக்கு பகுத்தறிவுப் போதனை நடத்தினார்களே தவிர பிழைப்பு நடத்த முன்வரவில்லை.

மார்க்கத்தின் பெயரால் சுரண்டிச் சம்பாதிக்கும் நோக்கில் காணிக்கை கொண்டு வருமாறு மக்களைப் பணிக்கவில்லை. கடைசி வரை தம் கரம் கொண்டு உழைத்தே சாப்பிட்ட உத்தமராகத்தான் நபிகள் நாயகம் இருந்தார்கள். ஆட்டும் பண்ணை நடத்தி அதன் வருமானத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மத ஸ்தாபகர், மதகுரு எனக் கூறிமக்களைச் சுரண்டவில்லை. தனது நாற்பதாவது வயது வரைக்கும் அவர் தன்னை இறைத்தூதர் எனப் பிரகடனப்படுத்தவில்லை. அப்போது அவர் ஒரு செல்வந்தர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர். செல்வம், சொல்வாக்கு, செலிப்பு எல்லாம் ஒருங்கே பெற்றும் திகழ்ந்தார். தன்னை இறைத்தூதர் எனப் பிரகனப்படுத்திய காரணத்தால் இவையனைத்தும் பறிபோனது. உடுத்திய உடையோடு ஊரை விட்டு விரட்டப் பட்டார்கள். அகதி நிலைக்கு ஆளானார்கள் தன்னை வளப்படுத்திக் கொள்ள, வசதி வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள மனிதர்கள் மதத்தை, இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள், நிறுவுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இருந்தவைகளை இழந்தார்களே தவிர மேலதிகமாக எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை.

முஸ்லிகளாகிய நாங்கள் நபி (ஸல்) அவர்களை கடவுள் என்றோ, இறைவனின் குமாரன் என்றோ ஒரு போதும் கூற மாட்டோம். எம்மை பெற்றெடுத்த எம் தாய், தந்தை எம் உயிர் உட்பட அனைத்தையும் விட மேலாக அவர்களை நாம் மதிப்போம். எந்த முஸ்லிமிடமாவது சென்று உன்னிடம் மதிப்பு வாய்ந்தது உன் தாயா? நபிகள் நாயகமா? எனக் கேட்டால் நபிகள் நாயகம் என சட்டென பதிலலிப்பான்.

ஆட்சித் தலைவராக, ஒரு மாபெரும் சாம்ரஜ்யத்தை உருவாக்கியவராக இருந்த நபிகள் நாயகம் மரணிக்கும்போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக அடகு வைக்கப்பட்ட நிலையில் இருந்த தென்றால் அவர்களது வாழ்வுஎவ்வளவு தூய்மையாக இருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள். வயிறு நிறைய தொடர்ந்து மூன்றுநாட்கள் உணவு உண்ட வரலாறே கிடையாது. சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் உணவு செய்து உண்டதில்லை.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரே ஒரு ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பார்கள். கோதுமை கிடைக்காத நாட்களில் பேரித்தம் பழங்களை உண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என அவர்களது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள்அறிவிக்கும் செய்தியைப் பார்க்கிறோம். இப்படி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வரலாறு படைத்திருப்பதுதான் அவர்களது மிகப் பெரும் சாதனை.

இன்று எந்த ஒரு அரசியல் வாதியானாலும் ஆன்மீக வாதியானாலும் ஏமாற்றுவதையே தகுதியாக வைத்திருக்கிறான். இதன் பெயர் ராஜதந்திரம், அதனைச் செய்பவன் பெயர் ராஜதந்திரி. ஏமாற்றுபவனுக்கு பதவி, பட்டங்கள் கூடுகின்றன. அவ்வாறு இந்த உலகில் 'ஏமாறாதீர்கள் ஏமாற்றாதீர்கள்' என அடுத்த வருக்கும் போதித்து தானும் வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் மட்டுமே. அவர்களுக்கிருந்த புகழ், மரியாதை, மதிப்புக்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம். அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்பட மக்கள் தயாராக இருந்த காலம் அது. பதினான்கு நூற்றாண்டு களாகியும் அவர்களது கொள்கையில் இன்னும் ஒரு கூட்டம் அசையா நம்பிக்கையுடன் இருந்து கொண்டு இருக்கிறது எனில் அதற்குக் காரணம் இறைக் கட்டளையுடனான அவர்களின் நற்பண்பு களாகும்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்க மாட்டோம்.எவருக்கும் கும்பிடு போடமாட்டோம். எம்மைப் போன்று மல ஜலத்தைச் சுமந்திருக்கும் மனிதர்களுக்கு நாம் எப்படி கும்பிடு போடுவது? அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும் அல்லது ஆன்மீகவாதியாக இருக்கட்டும். ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் தானே! அவர்களது காலில் விழுந்து உஙகளை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா? என்ற உணர்வையூட்டி மக்களை மீட்டெடுத்த மகான் நபிகள் நாயகம் அவர்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் இவ்விரண்டையும் நம்புவதற்குப் பெயர்தான் இஸ்லாம். மேலே சொன்ன இரு பகுதி விளக்கங்களும் இவற்றுள் பொதிந்துள்ளன.

ஆகவே, ஒரே இறைவனை நம்ப வேண்டும் அந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டுச் சென்ற இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும்.அவர்கள் காட்டிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும். இதனடிப்படையில் புனித குர்ஆனில் எவைகள் சொல்லப்பட்டிருகின்றனவோ அவைகளும், நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தவைகளும்தான் இஸ்லாம்.

Monday, October 20, 2008

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்

இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்!

உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும், எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து பக்குவப்படுத்தி பரிபாலிப்பது அனைத்துமே அந்த ஒரே இறைவனின் கையில்தான் இருக்கிறது என்ற ஓர் (கடவுள்) இறைக் கொள்கையை நம்பிக்கை கொள்வதாகும்.

இது தவிர முஸ்லிம் அல்லாத சிலரும் ஒரு கடவுள் கொள்கையை போதித்து இருக்கிறார்கள்; சொல்லியுமிருக்கிறார்கள்; நம்பியுமிருக்கிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியை நானும் நீங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே, 'ஒருவனே தேவன் என்பது ஒரு புதுக்கொள்கையல்ல. இஸ்லாம் மாத்திரம் போதித்த போதனையுமல்ல. அதிகமானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் இஸ்லாம் கூறும் அக்கொள்கைக்கும் மற்றவர்கள் போதித்த கொள்கைக்குமிடையில் பல பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

ஒரு கடவுள்தான் உண்டு என்று சொல்லி நிறுத்திகொள்ளாமல்இறைவனுக்கென்று சில இலக்கணங்களை, வரையரைகளை, விதிமுறைகளை முன்வைத்து இவைகளை மீறிச் செயல்படக் கூடாது எனக் கட்டளையிட்டு, ஏனையோரின் கொள்கையிலிருந்து வேறுபட்டுத் திகழ்கிறது இஸ்லாம்.

இறைவன் என்பவன் எந்தத் தேவையுமற்றவன்.தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் எப்பொருளும் இறைவனா(கடவுளா)க முடியாது. உதாரணமாக, மனிதன் சிலவற்றுக்கு காணிக்கை செலுத்துகிறான். இப்படிச் செய்வதன் மூலம் நமது தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் அப்பொருள் இறைவனாக முடியாது.
இறைவன் என்பவன் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. மனிதர்கள் இறைவனுக்கு எந்த காணிக்கையையும் செலுத்தக்கூடாது. அப்படிச் செய்யும்போது இறைவனை (கடவுளை) பலவீனமானவனாக நாம் ஆக்கி விடுகிறோம். மனிதர்களிடம் நிறைய பலவீனங்கள் காணப்படுவதை நாம் அறிவோம். இளமை முறுக்கோடு எந்த மனிதனும் தொடர்ந்து வாழ்ந்ததில்லை. முதுமை அடைகிறான். நோய் நொடிகளுக்கு ஆளாகிறான். கவலை, துன்பம் போன்றவை அவனை ஆட்கொள்கின்றன.இப்படி பல்வேறு பலவீன நிலைகளை மனிதன் அடைகிறான். இறுதியில் மரணமும் கூட அவனைத் தழுவிக் கொள்கிறது. ஆனால் இறைவன் இவை அனைத்தையும் விட்டு பரிசுத்தமானவன்.
இறைவன் (கடவுள்) நேற்று இளமை பிடிப்போடு இருந்தான். இன்று வயதாகி விட்டது என்று நாம் கூறினால் நாளை வேறொரு இறைவனை தேட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இறைவன் நோய், முதுமை, மறதி, மரணம் போன்ற மனிதனுக்கேற்படுகின்ற உபாதைகள் எதற்குமே உட்படாதவானாக இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் ஒருவரிடம் சென்று நாளைக்குச் திருப்பித் தருவதாகக்கூறி கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருப்போம். பின்னர் அதை மறந்து விடுவோம். சில நாட்களுக்குப் பின் அவன் வந்து கேட்டால் காரணத்தைக் கூறி அதை திருப்பித் தந்துவிடுவோம். இது மனித இயல்பு. இது போன்ற மறதி இறைவனுக்கு உண்டு என நம்புவது எப்படிப் பொருந்தும்?
துன்பத்தில் மாட்டிக் கொண்ட ஒருவன் 'இறைவனே (கடவுளே!) என்னைக் காப்பாற்று' என மன்றாடும் வேளையில் இறைவன் தூங்கிக் கொண்டிருந்தான் எனில் இவனது அழைப்புக்கு அவனால் எப்படி பதில் கொடுக்க முடியும்? மனிதர்கள் அனைவருமே ஒரே நேரத்தில் உலகில் தூங்குவதில்லை. இரவில் தூக்கம் வராத ஒருவன் இறைவா! (கடவுளே!) எனக் கூக்குரலிடுகிறான். அதே போல் நோயால் வேதனைப்படுபவன் கதறுவான்.இவைகளை செவிமெடுப்பவனாக இறைவன் இருக்க வேண்டும்.எனவே, தூக்கம், மறதி,மலஜலம் கழிப்பது போன்ற அனைத்து பலவீனங்களையும் விட்டு பரிசுத்தமானவனாக இருப்பவனே இறைவனா(கடவுளா)க இருக்க முடியும்!

இறைவன் பெண்களுடன் குடும்பம் நடத்துவதாக சில கொள்கை கோட்பாடுகள் கூறுகின்றன. இஸ்லாம் இதை முற்றிலும் மறுக்கிறது. இறைவன் மனைவி, மக்களை விட்டும் தேவையற்றவனாக இருக்க வேண்டும். மனிதனுக்கு இருப்பதைப் போன்று இறைவனுக்கும் இத்தேவைகள் இருக்குமென்றால் தன் அடியார்களான மனிதர்களின் தேவைகளை அவனால் எப்படி நிறைவேற்ற முடியும்? சுருக்கமாகச் சொன்னால் பலவீனமும் தேவையும் இறைவனுக்கு இருக்கவே கூடாது. இதை உள்ளடக்கிய கடவுள் கொள்கையைத்தான் இஸ்லாம் முன் வைக்கிறது. இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கை பற்றிய இரு முக்கிய நம்பிக்கைகளில் முதலாவதாகும்.

ஒரே கடவுளை அதுவும் நாம் விவரித்த முறையில் ஏன் நம்ப வேண்டும்? ஏழு,பத்து கடவுள்கள் உண்டு என்று நம்பினால் என்ன குறைந்துவிடும்? நமக்குள் எழுகின்ற இந்த சந்தேகங்களுக்கும் இஸ்லாம் ஒரு தெளிவை முன்வைக்கிறது. ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை நம்பினால் நமது பகுத்தறிவு செயலிழந்து போகும். மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.

உதாரணமாக கடவுளுக்கு நாம் செலுத்தும் காணிக்கை விஷயத்தை சற்று உற்று நோக்குவோம். நாம் செலுத்தும் காணிக்கையை கடவுளா பயன்படுத்துகிறான்? இல்லை.நம்மைப் போன்ற ஒருவர் கடவுளுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையை எடுத்துச் செல்கிறார். இங்கே நாம் ஏமாற்றப்படுகிறோம். நாம் விரும்பி ஒருவருக்கு இனாமாகக் கொடுப்பது வேறு விஷயம். இறைவனின் (கடவுளின்) பெயரால் ஏமாற்றப்படுவது அநியாயமல்லவா? இறைவன் (கடவுளர்கள்) பல உண்டு என்று நம்புகின்றபோது கடவுளின் பெயராலேயே மனிதர்கள் கூறு போடப்படுபடுகிறார்கள். பிரிவுக்கு இது ஒரு வழி வகுக்கிறது. இறைவன் ஒருவன் தான் என்று சொல்லுகின்ற போது மனிதர்கள் அனைவருமே ஒன்று என்ற கோட்பாடு வலுவடைகிறது. இஸ்லாம் இதைத்தான் சொல்லுகிறது.

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அநேக ஆண், பெண்களை (வெளிப்படுத்திப்) பரவச் செய்தான். திருக்குர்ஆன் 4:1

எல்லா மனிதர்களுக்கும் மூல அடிப்படை (ஆதம், ஹவ்வா என்ற) ஒரு ஆண் பெண்தான் இருக்கிறார்கள். அந்த ஜோடியே இவ்வளவு பெருக்கம் அடைந்து இருக்கிறது. இவர்கள் பல்கிப் பெருகி ஜாதி, மொழி, நாடு ரீதியாக சிதறிப்போய் உள்ளனர். அடிப்படையில் எல்லோரும் ஒன்றுதான். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், புத்தம், நாத்திகர் யாராயினும் அவர்கள் அனைவரும் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்களே! அந்த மூல ஜோடியை படைத்தவனே இறைவன் (கடவுள்) என இஸ்லாம் இயம்புகிறது.

p.zainul abideen.

Sunday, October 19, 2008

கீழ்கண்ட வீடியோ/ஆடியோ பதிவுகள் மூலமாக இஸ்லாம் குறித்தும்,கிறிஸ்தவ கோட்பாடுகள் எவ்வாறெல்லாம் பைபிளுக்கே நேர் எதிரானவை என்பவை குறித்தும் அறியலாம்.

Is the Bible Word of God? Shaikh Ahmad Deedat Vs Rev. J.Swaggart (Video in English)
திரித்துவம் (Concept of Trinity) குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்! (Tamil Text + Video in English)
Is Terrorism a Muslim Monopoly? -By Dr. Zakir Naik (Video in English)
Was Jesus Christ Crucified? Debate Between Shaikh Ahmad Deedat Vs Floyd E. Clark (Video in English)
Is Bible True Word of God? Debate Between Shaikh Ahmad Deedat Vs Pastor Sjoberg (Video in English)

அரேபியா முதல் அலாஸ்கா வரை,எட்டுத்திக்கும் பரவும் இஸ்லாம்!

1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்டது உண்மையாகிறது. இது அப்துல் ஹக்கீம் குயிக் அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையின் எழுத்து வடிவம் ஆகும். இந்த வீடீயோ உரை பிரபல இஸ்லாமிய தொலைக் காட்சி சேனல் “ஹுதா” டி.வி. யில் ஒளிபரப்பப்பட்டதாகும் - peace train
________________________________________________________

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அவனது சந்தியும் சமாதானமும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள் மற்றும் அவர்களின் உற்ற தோழர்கள் அனைவரின் மீதும் என்றென்றும் உண்டாவதாக!முதலில் சுவர்க்கத்தின் வாழ்த்துரையாகிய “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதைக் கூறி உங்களை வாழ்த்துகிறேன்.

அல்லாஹ்விடமிருந்து இந்த சமுதாயத்திற்கு, இந்த உம்மத்திற்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய கிருபை என்னவென்றால் அவனுடைய அடியாரும், அல்லாஹ்வின் இறுதித் தூதருமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். நபி (ஸல்) அவர்கள் சுயமாக எதையுமே பேசியதில்லை. இறைவனிடமிருந்து வஹி மூலம் அருளப்பட்டதையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) அவர்களைப் போல முஹம்மது (ஸல்) அவர்களும் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த இறைவன் புறத்திலிருந்து அவனுடைய தூதுத் செய்தியைப் போதித்தார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு சிறப்புத் தகுதியை அல்லாஹ் தந்திருந்தான். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தோற்றத்தைக் காட்டினான். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே நபி (ஸல்) அவர்கள் வாழ்திருந்த போதிலும் இந்த பரந்து விரிந்த உலகின் பல்வேறு பகுதிகளை அவர்களால் பார்க்க முடிந்தது. அதன் மூலம் அவர்கள் காலத்திலும் சரி, ஏன் உலக சரித்திரத்தில் இது வரையிலும் கூட எந்த மனிதராலும் பார்த்திருக்க முடியாத காட்சியை நபி (ஸல்) அவர்களால் பார்க்க முடிந்தது.

ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -“நிச்சயமாக அல்லாஹ் எனக்கு பரந்து விரிந்த இந்த உலகின் எல்லைகளைக் காட்டினான். அவன் எனக்கு கிழக்கையும் காட்டினான், அவன் எனக்கு மேற்கையும் காட்டினான். மேலும் அவன் என்னிடம், என்னுடைய உம்மத்து (சமுதாயம்) நான் கண்ட எல்லை வரையிலும் பரவும் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய துல்லியமான ஒரு அற்புதக் காட்சி காட்டப்பட்டிருப்பதை நாம் அறிகிறோம். சத்தியத் திருத்தூதரான நபி (ஸல்) அவர்கள் உண்மையையே கூறியிருக்கிறார்கள்.இன்று இஸ்லாம் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிளெல்லாம் பரவுவதைப் நாம் பார்க்கிறோம்.

நாம் அரேபியாவிருந்து பார்த்தோமேயானால் பகல்-இரவு கோட்டிற்கு அருகிலுள்ள நியூசிலாந்தின் பாலினீஸியா (Polynesia) தீவுகளைச் சேர்ந்த மயோரி (Māori) இனத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள் என்று சமீபத்தில் நமக்கு வந்த தகவல்கள் கூறுகிறது. இது முன்னர் அறியப்படாத புதிய செய்தியாகும். இதன் மூலம் அரேபியாவின் கிழக்கின் கோடியிலிருந்தும் மக்கள் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.அரேபியாவின் மேற்கே எடுத்துக்கொண்டால், மொராக்கோ மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டினால் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கில் மக்கள் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள். இன்றளவும் அவ்வாறு தழுவிக்கொண்டிருக்கிறார்கள். மேற்கே தொடர்ந்து சென்றோமேயானால் ஹவாய் தீவுகளிலிருந்து மக்கள் அதிக அளவில் இஸ்லாத்தைத் தழுவுவது தெரிகிறது. சத்தியத்தை போதிக்க வந்த தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாமாகவே எதையும் கூறவில்லை. அவர்களுக்கு வஹீ மூலம் அருளப்பட்டதையே கூறியிருக்கிறார்கள்.

எனக்கு வடக்கின் மூலையிலுள்ள அலாஸ்கா என்ற பிரதேசத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அந்தப் பிரதேசத்தில் இயற்கையாகவே சில அசாதாரண நிகழ்வுகள் நடைபெறுகின்றது. நாங்கள் அலாக்ஸாவிற்கு கோடையில் சென்றோம். அங்கு மஃரிப் தொழுகைக்காக நாங்கள் காத்திருந்த போது இமாம் தமது கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “இது மஃரிப் தொழுகைக்கான நேரம்” என்று கூறினார். ஆனால் அப்போதும் வானத்தில் சூரியன் இருந்துக் கொண்டிருந்தது. அதே போல இஷாவுடைய நேரம் வந்ததும் இமாம் மீண்டும் தமது கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “இது இஷாத் தொழுகைக்கான நேரம்” என்று கூறினார். ஆனால் அப்போதும் சூரியன் வானத்தில் இருந்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு நாங்கள் தூங்குவதற்காக எத்தனித்த போது வானத்தைப் பார்த்தோம், அப்போதும் சூரியன் நடுபகலைப் போல் இருந்துக் கொண்டிருந்தது. இது “நடு இரவு சூரியன்” (mid night sun) என்றழைக்கப்படுகிறது. அல்லாஹ்வுடைய படைப்பான இந்த பூமியில் இது ஒரு வித்தியாசமான நிகழ்வாகும்.

இஸ்லாத்தில் இத்தகைய சூழ்நிலைகளிலும் எவ்வாறு செயல்படுவது என்ற சட்ட நெறி முறைகள் இருக்கிறது.தொடர்ந்து நாம் வடக்கே சென்றோமேயானால், அங்கு மத்திய கிழக்கு நாடுகளைப் போல் சம அளவிளான பகலை உடையதாக அல்லாமல் இருக்கக் கூடிய பிரதேசங்களைக் காணலாம். அங்கு ஓரிரு மாதங்களுக்கு தொடர்ந்து பகலாகவும் மேலும் ஓரிரு மாதங்களுக்கு தொடர்ந்து இரவாகவும் இருக்கும். அந்தப் பிரதேசங்களை நாம் அடைந்தோமேயானால் நாம் அருகிலுள்ள நகரங்களின் நேரத்தைக் கணக்கிட்டு அந்த நேரங்களை நமது தொழுகைக்கான நேரமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

மேலும் சில அறிஞர்கள் மக்கத்துல் முகர்ரமாவின் நேரப்படி கணித்துக்கொள்ளலாம் என்பதாக கூறுகின்றனர். எனவே இஸ்லாம் என்பது எல்லாக் காலங்களுக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்புடையதாகக் கூடிய ஒரு (dyanamic) மார்க்கமாக இருக்கிறது.மேலும் அந்தப் பிரதேசங்களில் நாம் பனிக்கட்டியினாலே தமது வீடுகளை அமைத்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்கள் என்ற மக்களைச் சந்தித்தோம். அந்தப் பிரதேசமே கடுங்குளிர் உடையதாக இருக்கிறது. பனிக்கட்டியினால் அமைந்த அவர்களின் வீடுகளின் உட்பகுதியில் தோலினால் கூரையிட்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் கிருபையினால் அந்த வீட்டின் உட்புறம் இளம் சூடான பகுதியாக மாறிவிடுகிறது. இத்தகைய பிரதேசங்களிலும் இந்த எக்ஸிமோக்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள். இந்தப் பிரதேசம் பூமியின் வடக்கின் எல்லைப்பிரதேசமாகும்.இந்தப் பகுதியில் சில நேரங்களில் தட்ப வெப்பநிலை மைனஸ் 60 டிகிரியை எட்டுகின்ற அளவிற்கு மிகவும் கடுமையான குளிர் பிரதேசமாகும். அல்லாஹ்வின் அளப்பெருங் கிருபையினால் பூமியின் கடுங்குளிர் பிரதேசமான வடதுருவப் பகுதிகளிலும் இஸ்லாம் வளர்ந்து வருகின்றது.

எனவே உலகில் தற்போது நிகழும் அரசியல் குழப்பங்களிடையிலேயும் உலகின் அனைத்துப் பாகங்களிலும் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது. இஸ்லாத்தைப் பற்றி அறிவியல் நுணுக்கம் வாய்ந்த மீடியாக்களின் மூலம் தவறாக விமர்சிக்கப்பட்ட போதிலும் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகின்றது. ஏனெனில் இஸலாம் என்பது காகிதத்தால் உருவான மார்க்கமன்று! மாறாக இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கை நெறிமுறை ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் அரஃபாத் தினத்தன்று தமது தோழர்களுக்கு ஆற்றிய உரையான “இங்கே வந்திருக்கின்ற நீங்கள் இங்கே வராதவர்களுக்கு என்னுடைய செய்தியை எடுத்துக் கூறுங்கள்” என்று சொன்னதை நாம் மறந்து விடக்கூடாது.- அது தான் “ஒரே இறைவனை நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்ற செய்தியாகும்!- அது தான் “நாம் எவ்வித அநியாயங்களிலும், அடக்கு முறைகளிலும் ஈடுபடக் கூடாது” என்ற செய்தியாகும்!- அது தான் “வெள்ளையர்கள் கறுப்பர்களை விடவும் எவ்விதத்திலும் உயர்ந்தவர்களில்லை, அதே போல் கறுப்பர்கள் வெள்ளையர்களைவிட எவ்விதத்திலும் உயர்ந்தவர்களில்லை. மேலும் அரேபியர்கள், அரேபியர் அல்லாதவர்களைவிட எவ்விதத்திலும் உயர்ந்தவர்களில்லை, அதே போல் அரேபியர் அல்லாதவர்கள் அரேபியர்களைவிட உயர்ந்தவர்களில்லை. அவர்களிடையே வேறுபாடு எதில் உண்டு என்றால் அவர்களிடையே இருக்கும் இறையச்சத்தினால் தான்” என்ற செய்தியாகும்.- அது தான் ஆண்களுக்குப் பெண்களின் மீது உரிமைகள் இருக்கிறது. அது போன்று பெண்களுக்கும் ஆண்களின் மீது உரிமைகள் இருக்கிறது” என்ற செய்தியாகும்.- அது தான் “நீங்கள் இரண்டைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் காலமெல்லாம் வழி தவற மாட்டீர்கள், ஒன்று அல்லாஹ்வின் வேதம், மற்றொன்று றபி (ஸல்) அவர்களின் வழிமுறை” என்ற செய்தியாகும்.இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்தச் செய்தியானது அவர்களின் தோழர்களின் மூலம் உலகின் நான்கு மூலைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் இன்றளவும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு இஸ்லாத்தை வளர்ப்பது ஆயுதபலத்தினாலோ அல்லது வலுக்கட்டாயமாகவோ அல்ல! மாறாக அவர்கள் மக்களிடையே நடந்துக் கொள்ளும் முறைகளினால். உண்மையான இஸ்லாத்தை ஒருவர் தமது வாழ்வில் கடைப்பிடிக்கும் போது அது அவரது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பிரதிபலிக்கின்றது. அது ஆண்மீக வாழ்வை மட்டுமல்லாது உலக வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அது, பள்ளிவாசலில் மட்டுமல்லாமல் வெளியிலும் அவரது வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது. அவரது வியாபாரம் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். மேலும் அவர் தமது வியாபாரத்தில் நேர்மையாக இருக்க வேண்டும். அவர் பள்ளிக் கூடத்திலே நேர்மையாக இருக்க வேண்டும். எவ்வித ஏமாற்று வேலையும் செய்யாமல் நேர்மையாக பரீட்சை எழுத வேண்டும். மேலும் அவரது கை, கால், முகம், உடல் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருப்பதோட மட்டுமல்லாது அவர் தமது வாய் மற்றும் கண் ஆகியவற்றை தூய்மைப் படுத்தவேண்டும். அவரது முழு வாழ்வும் தூய்மையானதாக இருக்க வேண்டும். தன்மானம், அடக்கம் அவரது வாழ்வில் ஏற்படும். மேலும் ஒருவர் உண்மையாக இஸ்லாத்தைப் பின்பற்றும் போது அது அவரது பொருளாதார வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர் வட்டியின் அனைத்து சாயல்களிலிருந்தும் தவிர்ந்திருப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். அது அவரது அரசியல் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர் ஒரு அரசியல் கட்சியின் அடிமையாகவோ அல்லது அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களுக்கு அடிமையாகவோ மாறமாட்டார். ஆனால் அவர் அவரபை் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாக இருப்பார்.எனவே, நபி (ஸல்) அவர்களுக்கு பரந்து விரிந்த உலகின் பல்வேறு பாகங்கள் காட்டப்பட்டது. அவர்களுக்கு மலைகளும், பள்ளத்தாக்கும், ஆறுகளும், பாலைவனங்களும் காட்டப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் இந்த உலகின் கிழக்கு மற்றும் மேற்கின் எல்லைகளுக்கும் பரவும் என்று நமக்குத் அவர்களின் தோழர்களின் மூலம் தெரிவித்தார்கள். இது இந்த உம்மத்திற்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரும் கிருபையாகும்.

மறுமையில் உயிர்தெழுப்படும் நாளில் எல்லா நபிமார்களை விடவும் அதிக அளவில் இருக்கும் இந்த உம்மத்துக்கு கிடைக்கப் பெற்ற ஒரு அரும் பாக்கியம் ஆகும். ஆனால் நாம் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இருப்பதின் காரணமாக இறைவனின் இந்த அருள் நிறுத்தப்பட்டுவிடக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் தோழர்களின் காலத்தில் இஸ்லாம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது, எவ்வாறு மக்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.இவ்வுலகின் பல்வேறு பாகங்களிலுள்ள மக்களிடம் அழகிய இஸ்லாமிய மார்க்கத்தை எத்திவைப்பதற்கு இந்த சமுதாய மக்கள் முயற்சி எடுக்க வேண்டும் என நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். மேலும் நாம் வழி தவறிவிடக் கூடாது என்றும் இறைவனிடம் இறைஞ்சுவோம். இந்த சிந்தனைகளை உங்களிடையே வைத்து அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அவனது கருணையை புரிவானாக என்று கேட்டுக்கொள்கிறேன்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!