ராமநாதபுரம்:ஏர்வாடி அருகே, பார்வையற்ற ஒருவர், விண்ணப்பித்து 14 ஆண்டுகளாகியும் ரேஷன் கார்டு கிடைக்காமல் தவித்து வருகிறார்.ராமநாதபுரம் ஏர்வாடி அருகே, வெள்ளையன் வலசையைச் சேர்ந்தவர் அப்துல்கனி, 45; பிறவியிலேயே பார்வை இழந்தவர். மனைவி அமீனாபீவி, நான்கு மகன்கள் உள்ளனர். பார்வையில்லாததால் வேலை கிடைக்கவில்லை.மூத்த மகன் கறிக்கடையிலும், மூன்று மகன்களும் ஏர்வாடி முத்தையாநகர் பள்ளியில் படித்து வருகின்றனர். மனைவி சில வீடுகளில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து, இதுவரை கிடைக்கவில்லை.
கலெக்டர் அருண்ராயிடம் மனு கொடுத்த இவர் கூறியதாவது: ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போதெல்லாம், வீட்டு வரி ரசீது இருந்தால்தான் தருவோம் எனக் கூறுகின்றனர். வாடகை வீட்டில் வசிக்கும் நான், வீட்டு வரி ரசீதுக்கு எங்கு போவேன். மனைவி, மகனின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருகிறோம்.இலவச அரிசிக்காகவாவது, ரேஷன் கார்டு தேவைப்படுகிறது. இதுவும் கிடைக்காமல் சில நேரங்களில், பசியை போக்குவது கூட சிரமமாக உள்ளது. ரேஷன்கார்டு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் கூறுகையில், "கடலாடி தாசில்தாரிடம் விசாரிக்க கூறியுள்ளேன். விரைவில் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment