Wednesday, August 19, 2009

இன்னொரு கமலா சுரையா!பர்தாவே கண்ணியம்!!போலி பெண்ணியம் பேசுவோரின் முகத்திரை கிழிந்தது!!!

சகோதரி சுகைனா (சுமஜ்லா)அவர்கள் தங்கள் எழுத்து மூலம் சமூக தொண்டு செய்து வருபவர்கள்.பிரபல வார இதழ்களில் தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதிவருவதோடு,தங்கள் தளத்திலும் கதை,கவிதை,கட்டுரை,என எழுதி வருகிறார்.இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான பொய் பிரச்சாரம் நிகழும்போதெல்லாம்,அதை முறியடித்து எழுத்துப் போர் செய்து வரும் ஒரு எழுத்துப்போராளி.சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் பர்தா பற்றிய பொய் பிரசாரத்துக்கு அவர் கொடுத்த பதிலடியின் சுருக்கமே,கீழே நீங்கள் காண்பது.அவரை இன்னொரு கமலா சுரையா என்றால் அது மிகை அல்ல.
-----------------------------------------------

ஒரு மனைவி கணவனுக்கு ஆடையாகவும், ஒரு கணவன் மனைவிக்கு ஆடையாகவும் இருக்கிறான் என்பது ஹதீஸ்.

நான் முழுபர்தாவில் இருக்கிறேன். எனக்கு இது மிகப்பெரும் பாதுகாப்பு கவசமாகும். ஆனால், இது என் முன்னேற்றத்தை எவ்விதத்திலும் தடுக்கவில்லை. மாறாக, ஒரு மரியாதையைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது.

நான் பர்தாவில், டூ வீலர் ஓட்டுகிறேன். அதோடு, என் கணவரின் எல்லா விஷயங்களுக்கும் உறுதுணையாக இருக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், பர்தாவில் இருக்கும் எல்லாரும் கட்டுப் பெட்டிகள் அல்ல.

ஆனால், எனக்கும் இது போன்ற அனுபவம் நேர்ந்திருக்கிறது. என்னை ஒரு கட்டுப் பெட்டியாக பலரும் பார்த்து, என் தோற்றத்தை வைத்து என்னை எடை போட்டிருக்கிறார்கள். அத்தகையவர்களை நான் என் நுனிநாக்கு ஆங்கிலத்தை வைத்து மிரட்டி இருக்கிறேன்.

பர்தாவால் கேன்சர் வருகிறது என்றால் இது என்ன புகையிலையா, சிகரெட்டா? அப்படியானால், நூற்றுக்கணக்கான கிறிஸ்த்துவ சிஸ்டர்ஸுக்கு ஏன் கேன்சர் வருவதில்லை? அவர்களும் ஒரு வித பர்தா தானே அணிந்திருக்கிறார்கள்!

பர்தா என்பது ஒரு கவசம். என்னுடைய அழகு என் கணவருக்கு மட்டும் தான். யாருக்கும் நான் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அழகை பார்த்து தான் ஒருவரை ஆராதிக்க வேண்டுமானால், அத்தகைய ஆராதனை கேடாய் தான் முடியும்.

நினைத்து பாருங்கள், ஒரு சமூகத்தில், 100 விழுக்காடு பெண்கள் பர்தாவுடன் சென்றால், அங்கே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்குமா? ஈவ் டீசிங் நடக்குமா?

பர்தாவில் இருப்பதால், என்னுடைய எந்த முன்னேற்றமும் பாதித்ததில்லை. நான் B.A ஆங்கில இலக்கியம், M.Com படித்து, தற்சமயம், கரெஸ்ஸில் M.A. ஆங்கில இலக்கியமும், காலேஜ் சென்று B.Ed ம் பயின்று வருகிறேன். அதோடு, ஹிந்தியில் 2 எக்ஸாம் எழுதியிருக்கிறேன். டைப் ரைட்டிங் ஹையர் முடித்திருக்கிறேன். கணினியிலும் பரந்து பட்ட அறிவு உள்ளது. ஆனால், நான் முழு பர்தாவில் இருக்கிறேன், என்னுடைய 12வது வயது முதல்.

என்னை யாரும், என் கணவர் உட்பட கட்டாயப்படுத்தியதில்லை. அதே போல யாரிடமும் நான் என் கருத்தை திணிக்கவில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு பெண்ணாக இருந்து சொல்கிறேன், எனக்கு பிடித்திருக்கிறது. அதில் பாதுகாப்பு உணர்கிறேன். அணிகிறேன்.

எத்துணையோ இணைய நட்புகள் இருக்கிறார்கள். ஆனால், யார் எவ்வளவு தூரம் கேட்டும், போனிலோ, மெஸ்ஸஞ்சரிலோ நான் பேசியதில்லை. பெண்களிடம் பேசி இருக்கிறேன். காரணம் இதெல்லாம் தேவையில்லாத பின் விளைவை ஏற்படுத்தும்.

போன வாரம் கூட யூ.எஸ்ஸில் இருக்கும் ஒரு தோழர், என் பிடிவாதம் கண்டு தன் மனைவியிடம் சொல்லி என்னிடம் பேச சொன்னார்.

பர்தா அணிகிறேன். ஆனால், நான் பர்தா அணியாதவர்களை விட சுதந்திரமாக உள்ளேன். சந்தோஷமாக உள்ளேன்.

போலியான வெளி அலங்காரம் எனக்கு தேவையில்லை. என் வாழ்க்கை என் கணவருக்காகவே! அவருக்கு திருப்தி தராத ஒன்று எனக்கு வேண்டாம்.

இதை ஒவ்வொரு பெண்ணும் எண்ணினால், எப்படி இருக்கும் நம் சமுதாயம்?

மற்ற மதங்களிலுள்ள முட்டாள்தனங்களை யாராலும் பட்டியலிட முடியும். ஆனால், அந்த மதத்திலும், எமக்கு உயிர் நண்பர்கள் உள்ளனர், அவர்கள் மனம் ஒரு போதும் புண்பட்டு விட கூடாது!

Your Freedom stops before others nose என்பதை யாவரும் புரிந்து செயல்பட வேண்டும்.

பெண்ணினமாகிய எமக்கே, அது ஒரு பாரமாக தெரியாத போது, அதை ஒரு சுதந்திர உணர்வாக நினைத்து பெருமைப்படும் போது, அதை பற்றி மாற்று மத அன்பர்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்பது என் எண்ணம்.

சினிமாவில் காட்டப்படுவது எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. புற்றுக்கு பால் வார்த்தால் புண்ணியம் என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம்.

அடுத்தவர் மத நம்பிக்கை புண்படாத வகையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது தான் நம் மரபு.

இந்த சுதந்திர நன்னாளில் அதை நாம் கைகொள்ள முயற்சிப்போமாக!

3 comments:

  1. நண்பரே,
    ரொம்ப பெரிய அளவில் என்னை உயர்த்தி விட்டீர்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!

    எங்கே இருந்து அவ்வளவு வார்த்தைகள் கொட்டியதோ தெரியவில்லை. ஒரே மூச்சில் இதை டைப் செய்து முடித்தேன். சிறுமை கண்டு பொங்கும் என் குணத்தால், நான் சாதித்தது, சாதனைகள் மட்டுமல்ல, கெட்ட பேரும் தான். ஆனால், அதை ஒரு போதும் பொருட்படுத்துவதில்லை.

    நான் படித்தது உயர்தரமான ஒரு பள்ளியில்! என் வகுப்பில் நான் ஒருத்தி மட்டுமே முஸ்லிம். ஆனாலும், என் கிருஸ்துவ பிரின்சிபாலும், என் ஹிந்து மத தோழிகளும், என் தொழுகைக்கும் பர்தாவுக்கும் கொடுத்த கண்ணியத்தை இன்றளவும் மறக்க முடியாது. அதனால், எனக்கு எல்லா மத நண்பர்கள் மேலும், சகோதரத்துவ எண்ணம் ரொம்பவே இருக்கிறது. அதே போல அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.

    நான் ஏற்கனவே பல முறை பல நல்ல இடுகைக்கு பதில் தர முயன்றும் முடியவில்லை. அதற்கு காரணம் எர்ரர் மெஸேஜ் தான். இது, எக்ஸ்ப்ளோரரில் மட்டும் வரும். ஃபயர் பாக்ஸில் வராது. அது குறித்து இந்த இடுகையை படித்து பாருங்கள். http://sumazla.blogspot.com/2009/06/blog-post.html

    ReplyDelete
  2. நீங்கள் அதற்கு தகுதியானவர்தான்.உங்கள் துணிச்சல்,உங்கள் எழுத்தில் தெரிகிறது.எல்லாம் வல்ல அல்லாஹ்,உங்கள் சேவைகளை பொருந்திக் கொள்வானாக.வெற்றி தருவானாக.

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!