Tuesday, August 4, 2009

வெற்றிக்கு வழி! பெண்கள் கண்ணியமானவர்கள்!!தொடர் 3

ஆச்சரியப்பட்ட சண்முகம் ஏதோ யோசிக்கலானார்.இதற்கிடையே, டிய், டிய், சாய்,சாய் என்ற குரல் கேட்டு அனைவரும் செங்கல்பட்டு வந்துவிட்டதை அறிந்து,தங்கள் உணவுப் பொட்டலங்களை அவிழ்த்து உண்ண ஆரம்பித்தனர்.சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் கொண்டு வந்த சிக்கன் பிரியாணியை சண்முகம்,ரஞ்சிதம்மாளிடம் பகிர்ந்துகொள்ள,அவர்கள் கொண்டு வந்த இட்லி,சாம்பார் வகைகளை இவர்களும் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிடும் போது ஏக இறைவனின் திருப்பெயரை சொல்லி,சலீம் நானா,பஷீர் காக்கா சாப்பிட்டதையும்,எதையும் வீணாக்காமல் ,சுத்தமாக வழித்து உண்டதையும்,இடை இடையே இறைவனை துதிப்பது, சாப்பிட்டபின் இறைவனை புகழ்ந்தது,என எல்லாவற்றையும் அந்த தம்பதிகள் கவனிக்காமல் இல்லை.


திடீரென "அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர்,"என்ற ரம்மியமான குரலில் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கவே,எல்லாரும் குரல் வந்த திசை நோக்கி,திரும்பினர்.அங்கே இரு முஸ்லிம் தம்பதிகள் பாங்கு சொல்லிவிட்டு, இஷா என்ற இரவு நேர தொழுகை தொழ ஆரம்பித்தனர்.சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் ஒழு செய்துவிட்டு,தொழுது முடித்தனர்.சண்முகம்,ரஞ்சிதம்மால் கவனித்துக்கொண்டிருந்தனர்.

இப்போது ரஞ்சிதம்மால் கேட்டார்,"பாய்,எனக்கொரு சந்தேகம் பாய்.தல,உடம்பு என்று மூடி இருக்கிற அந்த பாயம்மாவை பாத்தொனே என் மனசில தோனுச்சி,எதுக்கு பொம்பளைங்களை இப்படி முக்காடு போட்டு மூடி வக்கிறீங்க,இது அடிமைத்தனம் இல்லையா?"

பஷீர் காக்கா சொன்னார்,"நல்ல கேள்விதாம்மா கேட்டிருக்கீங்க.அதாவது,இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக கற்றுத்தருகிறது.

மனிதனின் இயற்கையான உணர்வான வெட்கம் என்பது மனிதர்களுக்கே உரித்தான உயர்ந்த சிறந்த பண்பாகும். வெட்கமின்றிச் செயல்படுதலை இஸ்லாம் நடை, உடை, பாவனை என எல்லா காரியங்களிலும் தடை செய்கிறது.

நாகரீகம் வளர்ச்சி அடையாத காலங்களில் கூட மனிதன் தன் உடம்பை இலை, தழைகளை வைத்து மறைப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டான். எனில் உடம்பை மறைத்தல் என்பது மனிதர்களுக்கு இடையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய செயல் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அத்தகைய சமூகத்தில் மரியாதையும் கண்ணியமும் பெற்றுத் தரும் உடை விஷயத்தில் இஸ்லாம் அதிகக் கவனம் செலுத்துகிறது. உடை என்பது சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. எனவேதான் ஒருவர் உடை அணியும் விதம் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பாத விதத்தில் இருப்பதற்கும், தங்களது மறைவான பகுதிகள் வெளியில் தெரியும்படியான இறுக்கமான ஆடைகளை தவிர்க்கும்படியும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இது இருபாலருக்குக்கும் பொதுவானதுதான்.

பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் கை மணிக்கட்டுக்கு கீழ் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு மறைப்பதற்கு ஏதுவான உடையாக தற்காலத்தில் வடிவமைத்திருக்கும் பர்தா இருப்பதனாலேயே இஸ்லாம் கூறும் அறிவுரையை மனப்பூர்வமாக பேணும் பெண்கள் இதனை அணிகின்றனர். கண்ணியத்தையும் பாதுகாப்பையும் சமுதாயத்திலிருந்து பெற விரும்பும் பெண்களுக்கான சிறப்பான பரிந்துரையாகவே இஸ்லாம் இதனைக் கூறுகிறது. இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பெண்கள் மட்டுமே பர்தாவை அணிகின்றனர். இதனை தங்கள் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையை வைத்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பர்தா போன்ற உடை அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறை திருக்குர்ஆனின் 33 வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப்பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும், அவர்கள் சமூகத்தில் மோசமானவர்களால் விளையும் தொல்லைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும் தான் பர்தா போன்ற உடையை உபயோகிக்க இஸ்லாம் பெண்களுக்குப் பரிந்துரைக்கிறது."

ரஞ்சிதம்மால் அந்தக் கருத்தை ஆமோதிக்கும் வண்ணம்,தன்னை அறியாமலே தன தலையை மூடிக்கொண்டதை,பஷீர் காக்கா கவனிக்கத் தவறவில்லை.

இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!