ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான,வேலைவாய்ப்பு முகாம் திருவள்ளூரில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, கலெக்டர் அஷிஷ் சட்டர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு செயல்படுத்தி வரும், 108 அவசர சேவை ஆம்புலன்ஸில் பணிபுரிய, ஓட்டுனர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணிக்கு திருவள்ளூர் டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள, 108 அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், நடைபெறும் இப்பணிக்கு, கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கீழ்க்காணும் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
மருத்துவ உதவிப் பணியாளர்: 20-30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., நர்சிங் அறிவியல் பட்டய படிப்புடன் அல்லது குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளநிலை பட்டப்படிப்புடன் , 12ம் வகுப்பில் அறிவியல் பாடம் படித்திருக்க வேண்டும்.
ஓட்டுனர் பதவி: 25-32 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். உயரம், 162.5 செ.மீ.,க்கு குறையாமல், குறைந்தது, 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
ஊதியம் முறையே மருத்துவ உதவியாளருக்கு, 7,250 ரூபாயும், ஓட்டுனருக்கு, 6,600 ரூபாயும் வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
நேர்காணல் குறித்த விவரங்களுக்கு, 044-28888060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், நேர்காணலில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment