Thursday, August 11, 2011

இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானதா?


ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காக எப்படிப் படைத்திருக்கின்றான்  என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன்:71-15)
இஸ்லாமிய மார்க்கம் அகிலத்தின் இரட்சகனான வல்ல அல்லாஹ்வால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட நெறியாகும். இந்த மார்க்கம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் மனிதனுக்குப் போதித்திருக்கின்றது. உலகம் அழியும் நாள்வரை மனிதர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் தீர்வுகளைக் கூறிக்கொண்டிருக்கிறது. காரணம் இந்த மார்க்கம் முழுமையான மார்க்கம். மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாக வல்ல இறைவன் அல்லாஹ் கூறுகின்றான்.


இன்றைய தினம் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிவிட்டேன். மேலும் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகவும் தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்குர்ஆன்:5-3)

மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கின்ற பரிசுத்த குர்ஆன் மனிதன் எக்காலத்திலும் சந்திக்கின்ற மார்க்கம் சம்பந்தப்பட்ட விசயங்களானாலும் சரி அறிவியல் விசயங்களானாலும் சரி எல்லாவற்றையும்; விளக்கிக் கூறுகின்றது. மனிதன் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வணக்க வழிபாடு என்னென்ன என்பதைக் குறிப்பிடுகின்றது திருக்குர்ஆன். அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை இறைத்தூதர் விளக்கிக் கூறியிருக்கின்றார்கள்.

இவ்வாறே ஒவ்வொரு காலத்திலும்  ஏற்படுகின்ற அறிவியல் மாற்றங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் அறிவிக்கின்றது. திருக்குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில் இன்று நாம் கண்டுகொண்டிருக்கின்ற எந்த அறிவியல் வளர்ச்சியும் இருந்திருக்கவில்லை. ஆனால் அறிவியல் வளர்ச்சியில் மனிதன் ஈடுபடவேண்டுமென்று அன்றே இறைவன் மனிதனுக்குக் கட்டளையிட்டுவிட்டான்.

திருக்குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்க்கும் போது இதை நம்மால் புரிய முடியும். மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யுமாறு தூண்டுகின்ற வசனங்களைச் சிந்தித்துப் பார்ப்பது இறைநம்பிக்கையாளர்கள் மீது கடமையாக இருக்கின்றது.

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காக எப்படிப் படைத்திருக்கின்றான்  என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன்:71-15)

அல்லாஹ் ஏழு வானங்களைப் படைத்திருக்கின்றான் என்றும் அதை அடுக்கடுக்காகப் படைத்திருக்கின்றான் என்றும் குர்ஆன் கூறுகிறது.  இந்த விசயத்தை நீங்கள் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டாமா என்று   மக்களைப் பார்த்து இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் கேட்டார்கள். இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தூதராக அனுப்பப்பட்டவர்தான் நூஹ்(அலை)  அவர்கள்.

அப்படியானால் மனிதன் அல்லாஹ்வுடைய படைப்பைச் சிந்தித்து ஆராய்ச்சி செய்யுமாறு ஆதிமுதலே இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்பது தெரியவருகின்றது. மேலும் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்! நிச்சயமாக வானங்களும்  பூமியும் முதலில் இணைந்திருந்தன என்பதையும்  அவற்றை நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் நீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். வானில் தத்தமது வட்டவரையறைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.  (அல்குர்ஆன் 21:33)

வானங்கள், பூமி என்ற பிரபஞ்சத்தையும் அல்லாஹ் படைத்துள்ள மற்ற படைப்புகளையும் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?  (அல்குர்ஆன் 7:185)

சூரியன் தன் வரையறைக்குள் சென்று கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தோனும் யாவற்றையும் நன்கு அறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும். இது அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
இன்னும்  உலர்ந்து வளைந்த பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது.

இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்ட வரையறைக்குள் நீந்தி வருகின்றன. (அல்குர்ஆன்:36:38-40)

இது போன்ற வசனங்களை வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனின் நூற்றுக்கணக்கான இடங்களில் சொல்கின்றான் என்றால் அவற்றைப் படித்துவிட்டுக் கடந்து செல்வதற்காக அல்ல. சிந்தித்து ஆராய்வதற்காகவும் அவற்றைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பதற்காகவுமே கூறுகின்றான்.

சிந்தனையைத் தூண்டுகின்ற இவை போன்ற வசனங்களையெல்லாம் ஆய்வு  செய்யக்கூடியவர்களும் அதிலிருந்து பயன்பெறக்கூடியவர்களும் பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்களாகவே இருக்கின்றனர். அல்லாஹ்வுடைய படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து பயன்பெறுகின்ற பொறுப்பை மாற்றான் கையில் கொடுத்துவிட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் விசயங்களை நம்புவதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் முஸ்லிம் சமுதாயம் மிகவும் பின்னடைந்து இருக்கிறது.

குறிப்பாக அரபி மதரசாக்களில் குர்ஆன், சுன்னா கல்வியைக் கற்பவர்கள் குர்ஆன் கூறுகின்ற இவை போன்ற உண்மைகளைப் பற்றி ஆய்வதை விட்டும் கண்ணை மூடிக்கொள்கின்றனர். வளர்ந்து வருகின்ற அறிவியல் உலகத்தில் இஸ்லாம் எந்த வகையிலும் உண்மையான அறிவியலுக்கு மாற்றமானதில்லை என்பதை நிரூபிப்பதற்கு மார்க்கம் கற்ற அறிஞர்கள் முன் வரவேண்டும்.

நாம் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்வராவிட்டாலும் அல்லாஹ்வுடைய படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து வெளியில் கொண்டுவருகின்ற ஆராய்ச்சியாளர்களின் சரியான ஆய்வுகளை இஸ்லாத்திற்கு விரோதமில்லாதிருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொண்டு செயல்படவேனும் முன்வர வேண்டும்.

அவர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன்:4:82)
 

 

1 comment:

  1. அருட்கொடையாம் தொழுகை.

    தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

    ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

    கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

    ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

    அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

    இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

    ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

    தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

    ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

    உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

    இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

    உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

    தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

    நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

    உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

    பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

    "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

    இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

    தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

    இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

    தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

    நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

    தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

    தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


    CLICK AND READ.

    >>> முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா? <<<

    >>> முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கிய‌த்துவம் ஏன்? <<<


    >>>
    முஸ்லீம்களே அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் ?
    <<<

    >>>
    க‌ட‌வுளின் உருவங்க‌ள‌ற்ற‌ பள்ளிவாச‌ல்க‌ள் எப்ப‌டி புனித‌மாக‌ இருக்க‌முடியும்?
    <<<

    வாஞ்சையுடன் வாஞ்சூர்.

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!