Sunday, July 8, 2012

மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?


மாமல்லபுரத்தில் கடந்த ஜுன் மாதம் 28ம் தேதி அங்குள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சார்பாக தொடர் முழக்க போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் வாழும் மக்களின் வழிப்பாட்டு உரிமை மற்றும் வாழ்வுரிமையை பறிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இயற்றியுள்ள புராதானச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் மற்றும் எஞ்சியவை திருத்தச் சட்டம் (இந்திய தொல்லியியல் புராதானச் சின்னங்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம்); 2010ஐ எதிர்த்து தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் வாழும் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து நடத்திவரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு இயற்றியுள்ள இந்த சட்டத்தின்படி புராதானச் சின்னம் அல்லது இடம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியை சுற்றி 100 மீட்டர் அளவிற்கு தடைச் செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மக்கள் வாழும் பகுதிகளில் எவ்வித கட்டுமானப் பணியோ அல்லது தற்போது உள்ள கட்டங்களில் சீரமைப்பு பணிகளோ நடைபெறக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த 200 மீட்டர் பகுதி வரையறுக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் பயன்படுத்தும் கட்டடங்களில் பழுதுபார்த்தல் அல்லது சீரமைத்தல் பணிகள் தேசீய புராதானச் சின்னங்கள் ஆணையத்தின் முன் அனுமதிப் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அச்சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக மின்சார உபகரணங்களை மாற்றி அமைப்பதாக இருந்தாலும் முன் அனுமதியின்றி எதுவும் செய்ய இயலாது என்று மத்திய அரசு திருத்திய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இந்திய தொல்லியல் துறை (Archeological Survey of India) வழிப்பாடு இல்லாத 32 பழங்கால கோயில்கள் மற்றும் புராதான இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் முன்பே கொண்டு வந்தது. தற்போது புதிய சட்டத்தின் கீழ் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பிறகு 14ம்; நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டு மக்கள் வழிப்பாட்டில் இருக்கும் தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னம் என தொல்லியில் துறை அறிவித்தது. இதன் காரணமாக ஹிந்துபெருங்குடி மக்களின் வழிப்பாட்டு உரிமை பறிக்கப்பட்டதுடன் இந்த கோயிலைச் சுற்றி 300 மீட்டர் அளவிற்கு வாழும் அனைத்து சமூக மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொல்லியியல் துறை எடுத்துள்ள 32 இடங்கள் மற்றும் கடைசியாக எடுத்த தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்தில் எவ்வித கட்டுமானப் பணியோ அல்லது புனரமைப்பு பணியோ அல்லது ஒரு மின்விசிறியை மாற்றி மாட்டும் பணியோ முடங்கிப் போகும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரத்தில் வாழும் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகள் உட்பட அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இப்படி தொல்லியில் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் வாழும் மாமல்லபுரத்தை மயான பூமியாக மாற்ற இந்திய தொல்லியியல் துறை திட்டமிட்டத்தை கண்டித்து தான் பல்வேறு போராட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த ஜுன் 28 அன்று தொடர் முழக்கப் போராட்டத்திற்கு மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகளை காலிச் செய்ய வேண்டும் என்ற நிலையில் கடல் மார்க்கத்தில் கல்பாக்கத்திற்கு வெகு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் குடியிருப்புகள் இருக்க கூடாது என்பதும் மத்திய அரசின் ஒரு மறைமுக திட்டமாகும்.
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் எனக்கும் இந்த போராட்டத்தில் அழைப்பு அளிக்கப்பட்டது. உள்ளூர் தமுமுகவினரும், ஜமாஅத்தினரும், வியாபாரிகளும் நான் இந்த போராட்டத்தில் பங்குக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர். இப்போராட்டத்தில் அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக பிரதிநிதிகள் உட்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன், மதிமுக சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான், காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திருகச்சூர் ஆறுமுகம், பா.ஜ.க. சார்பாக இல. கணேசன் முதலியோர் அழைக்கப்பட்டார்கள்.
விழா ஏற்பாட்டாளர்கள் இல. கணேசன் பேசி விட்டு சென்ற பிறகு நானும் சகோதரர் திருமாவளவனும் கடைசியாக மேடைக்கு வந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் நாங்கள் மாமல்லபுரத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். போராட்டம் தொடங்கி வெகு நேரம் ஆன பின்பும் இல. கணேசன் வராத சூழலில் நானும் திருமாவளவனும் மேடைக்கு அழைக்கப்பட்டோம். போராட்டம் தொடர்ந்தது. இந்த சூழலில் மாமல்லபுரம் வந்த இல. கணேசனை போராட்ட குழுவினர் முதலில் விடுதிக்குச் சென்று சற்று ஒய்வெடுத்து விட்டு மேடைக்கு வரலாம் என்று வற்புறுத்திய பிறகு அதை மறுத்து நேரடியாக மேடைக்கு வந்து எனக்கு அருகில் தான் உட்காருவேன் என்று அடம் பிடித்து என் அருகில் அமர்ந்துக் கொண்டார். உடனே பத்திரிகையாளர்கள் அனைவரையும் எழுந்து நின்று புகைப்படம் எடுக்க கைகோர்த்து நிற்கச் சொல்ல மேடையில் இருந்த நெருக்கடியின் காரணமாக நான் நகர முடியாமல் மனதில் பெரும் வருத்தத்துடன் இல. கணேசனுடன் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.
இதன் பிறகு நான் போராட்டக் குழுவினரிடம் உடனடியாக நான் பேசிவிட்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக எனக்கு பேச வாய்ப்பளிக்கப்ட்டது.
எனது உரையின் தொடக்கத்தில் மேடையில் வீற்றிருந்த பா.ஜ.க.வின் இல. கணேசனுக்கும் அவரது கட்சியினருக்கும் பிற சமய மக்களின் வழிப்பாட்டு உரிமையை எவ்வாறு இஸ்லாம் பாதுகாத்துள்ளது என்பதை பறைச்சாற்றும் வகையில் அமைத்துக் கொண்டேன். தொடக்கமாகவே பிற மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் மார்க்கம் அல்ல இஸ்லாம் என்பதற்கு சான்றாக கலீபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியின் கீழ் ஜெருசலம் நகரம் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் வந்த நிலையில் அந்நகரில் கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு அவர்களை அந்நகரின் கிறிஸ்த்தவ தலைமை குரு சோபோர்னிசிஸ் அந்நகரைச் சுற்றிக் காட்டிய நிகழ்ச்சியையும் ஏசு நாதர் பிறந்ததாக சொல்லப்படும் தேவலாயத்திற்கு (Church of Nativity) சென்று அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பாங்குச் சொல்லப்பட்ட வேளையில் அந்த தேவலாயத்திலேயே தொழுகையை நிறைவேற்றும்படி அந்த பாதிரியார் கேட்டுக் கொள்ள அதனை உமர் ரலி மறுத்ததையும் எடுத்துக் கூறினேன். நான் இங்கு இப்போது தொழுதால் பிற்காலத்தில் முஸ்லிம்கள் இது எங்கள் கலீபா தொழுத இடம் என்று உங்கள் வழிப்பாட்டு உரிமை கோரக்கூடும். அதற்கு நான் வழி வகுக்க விரும்பவில்லை என்று உமர் (ரலி) தொழுவதற்கு மறுப்புத் தெரிவித்ததற்கான காரணத்தை விளக்கி பேசினேன். நான் இந்த கருத்தைத் தெரிவித்தப் போது போராட்டத்தில் பங்குக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தின் இந்த அற்புதமான சகிப்புத்தனத்தை அங்கீகரிக்கும் வகையில் பெரிய கரகோஷத்துடன் அதனை வரவேற்றனர். இல. கணேசன் போன்றோருக்கு அது பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். இதனைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை மக்களின் உணர்வுகளை மதிக்காமல் எவ்வாறு செயல்பட்டு வருகின்றது என்பதை விவரிக்கும் போது வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமையை பறித்து இந்திய முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறித்த விபரத்தையும் அதனை மீட்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராடி வரும் வரலாற்றையும் எடுத்துரைத்தேன். இதே போல் மாமல்லபுரத்தில் வழிபாடு இல்லாத கோயில்களை தன்வயப்படுத்தி அவற்றை பாதுகாக்க தவறி வரும் இந்திய தொல்லியியல் நிறுவனம், மக்களால் பாதுகாக்கப்பட்டு வழிபாடு நடந்து வரும் தலசயானப் பெருமாள் கோயிலை தமிழக இந்து அறநலத்துறையிடமிருந்து தன் வயப்படுத்தி வழிப்பாட்டு உரிமையை பறிப்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு முரணானது என்பதை சுட்டிக் காட்டினேன். வழிப்பாட்டு உரிமையுடன் வாழ்வுரிமைiயும் பறிக்கும் வகையில் 2010 இயற்றப்பட்ட சட்டம் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி இச்சட்டத்தின் கீழ் தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே தலைமைச் செயலககத்தில் முதலமைச்சரின் அறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் தொல்லியியல் துறையின் முன் அனுமதிப் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும், மத்திய அரசு இச்சட்டததை கைவிட வேண்டும் என்று பேசினேன்.
நான் பேசிய மேடையில் மாமல்லபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவரும் இருந்தார். பேசி முடித்த பிறகு மக்ரிப் தொழுகைக்காக மாமல்லபுரம் பள்ளிவாசலுக்கு அவருடன் தான் சென்றேன். இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிதாக கட்டப்பட்டுள்ள அந்த பள்ளிவாசலும் பாதிக்கப்படும் நிலை உள்ளதை என்னால் அறிய முடிந்தது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று புதிய அரசு ஆட்சியில் அமைச்சரவை பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு குஜராத் கொடியவன் மோடி வருகிறான் என்று தெரிந்த பிறகு நாம் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொள்ளவில்லை. இதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. பா.ஜ.க. என்ற பாசிச கட்சியின் எதிர்ப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஆனால் மாமல்லபுரத்தில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் இல. கணேசன் பங்குக் கொள்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நாம் அதில் பங்குக் கொள்ளாமல் இருந்திருந்தால் மாமல்லபுரத்தில் வாழும் 800க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். நான் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொண்டதை வைத்து கடும் விமர்சனத்தை சிலர் இப்போது செய்து வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றி நாம் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் நாம் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம் தான்.; செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுதமொழிக்கேற்ப தான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொண்டேன். நான் அந்த நிகழ்ச்சியில் எந்த எண்ணத்துடன் பங்குக் கொண்டேன் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். நான் அப்போராட்டத்தில் பங்குக் கொண்டு உரிமைக்காக குரல் கொடுத்ததை தம் வாழ்வுரிமையை இழக்கும் நிலையில் உள்ள முஸ்லிம்கள் உட்பட மாமல்லபுரம் மக்கள் நன்றியுடன் நினைவு கூறுகிறார்கள். அம்மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம்.

 பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா



No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!