ஹோட்டல் அறைகளில் சுகாதாரம் எப்படி இருக்கிறது என்று அமெரிக்காவின் 3 பிராந்தியங்களில் ஆராய்ச்சி செய்தார்கள்.ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே நீல் இந்த ஆய்வு முடிவுகளை நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஹோட்டல் அறைகள் என்பது ஓரிரு நாள்களுக்கு மட்டுமே தங்குவதற்காக விருந்தினர்கள் வந்துபோகும் இடம்தான், அங்கு மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தைப் போல கிருமி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்; ஆனாலும் நாம் பார்க்கும்போது தூய்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும் ஹோட்டல் அறைகளில் நமக்கே தெரியாத ஆபத்துகள் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு புலப்படுத்துகிறது. (அமெரிக்காவிலேயே இந்தக் கதை என்றால் நம்ம ஊரு ஹோட்டல்களை நினைத்தால்....ஆத்தாடி!)
எல்லா அறைகளிலும் கதவு கைப்பிடிகளிலும் டி.வி. ரிமோட்டுகளிலும் கிருமிகள் அதிகம். எந்த அளவுக்கு என்றால் - அந்த அறையில் உள்ள டாய்லெட் இருக்கை விளிம்புக்கு அடியில் இருப்பதை விட! இன்னொரு இடமும் இருக்கிறது. அது படுக்கைக்கு அருகிலேயே இருக்கும் பெட்ரூம் ஸ்விட்ச்தான் அது. ஹோட்டல் அறையில் உள்ள டி.வி. ரிமோட்டுகள் அசுத்தமானவை என்றால் அதை எதனுடனாவது ஒப்பிட வேண்டும் அல்லவா? வீடுகளில் இருக்கும் டி.வி. ரிமோட்டுகள் அளவுக்கு அசுத்தமானவை என்கிறது ஆய்வு. அதாவது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதில் ஆயிரக்கணக்கில் குடியிருக்கின்றன.
நல்ல ஸ்டார் ஹோட்டல்கள் என்றால் அறையை தினமும் சுத்தம் செய்வார்களே, அப்படியுமா கிருமிகள் வந்துவிடுகின்றன என்று சிலர் கேட்கக்கூடும். அதற்கும் இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கேட்டி கிர்ஷ் பதில் வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு அறையையும் 30 நிமிஷங்களுக்குள் சுத்தப்படுத்துகிறார்கள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், போர்வைகள் ஆகியவற்றை தோய்க்க எடுத்துக்கொள்கிறார்கள். பாத்ரூம், டாய்லெட் உள்பட அறை முழுவதையும் "மாப்பு' போட்டுத்தான் சுத்தப்படுத்துகிறார்கள். அதற்குப் பயன்படுத்தும் தண்ணீரில்தான் விசேஷமே அடங்கியிருக்கிறது. ஏதாவது ஓரிடத்தை முதலில் மெழுகும்போதே அதில் ஆயிரக்கணக்கான கிருமிகள் தொற்றிவிடுகின்றன. அதையே மீண்டும் மீண்டும் நீரில் நனைத்து மெழுகுகிறார்கள். மாப்பை அவர்கள் நல்ல நீரில் சுத்தம் செய்து, அழுக்குத் தண்ணியை ஹோட்டல் அறையின் கழிவுநீர்ப்பாதையில் கொட்டிய பிறகு அவர்கள் எடுத்துவரும் தள்ளுவண்டிக்கு இடம்பெயர்கின்றன கிருமிகள். அங்கு மட்டுமல்லாது பக்கெட்டிலும் மாப்பின் கைப்பிடியிலும் அடிப்பாகத்திலும், இண்டு இடுக்குகளிலும் இடம்பிடித்துவிடுகின்றன.
இதனால் கிருமிகள் எந்தக் குறையும் இல்லாமல் அந்த ஹோட்டலிலேயே வாசம் செய்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கே தங்குபவர்களின் பெட்டிகள், பைகளில் ஏறி அவர்களுடைய ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றன. ஹோட்டலில் தங்குகிறவர்கள் அனைவருமே பாதிக்கப்பட வேண்டுமே என்று கேட்கலாம். அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்வரை கிருமிகள் அடக்கியே வாசிக்கும். சக்தி குறைந்தால் போட்டுப் பார்த்துவிடும்!
//அமெரிக்காவிலேயே இந்தக் கதை///
ReplyDeleteஅமெரிக்கா என்ன பெரிய பூலோக சொர்க்கமா?