Tuesday, June 14, 2011

கனிமொழி கைதும் கருணாநிதி புலம்பலும்!


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமத்தை ஸ்வான் நிறுவனத்திற்கு முறைகேடாக விற்றதற்குப் பரிசாக லஞ்சப் பணம் ரூபாய் 214 கோடி, கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்டதற்கு, ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் கனிமொழியும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கனிமொழியின் சிறையிருப்பு, ஒரு தந்தை என்ற நிலையில் கருணாநிதிக்குத் துயரத்தை அளித்திருக்கிறது. தாம் பிறந்தநாளில் குடும்பத்தினர் அனைவரும் தமக்கு வாழ்த்துச் சொல்ல வரிசையாக நின்ற வேளையில், பாசமகள் கனிமொழி தம்மோடு இல்லையே என்ற வருத்ததுடன் இருந்த கருணாநிதி, கடந்த வாரம் (05/06/2011) திருவாரூரில் நடந்த திமுக நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில், கனிமொழி சிறையில் வாடுவது பற்றிச் சொல்லிக் கண்ணீர் விட்டுள்ளார். "திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதைச் சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில். அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி" என்று கூறினார்.

பெற்ற பிள்ளை சிறையில் வாடும்போது எந்தத் தந்தைக்கும் ஏற்படும் உணர்வுதான் இது. அதை யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் பொது வாழ்வில் - அரசியலில் - ஈடுபட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் அரசுப் பதவியைப் பயன்படுத்தி லஞ்ச ஊழல் குற்றம் புரிந்துள்ளார் எனச் சிறையில் இருப்பதை ஏதோ தியாகம் செய்ததுபோல் சொல்லிக் காட்டுவது தான் விமர்சனத்துக்குரியது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கோடிக்கணக்கில் பணம் பெற்ற ஆ.ராசாவுடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டுச் சற்றொப்ப 214 கோடி ரூபாய் பணத்தைக் கலைஞர் டி.வி.க்காகக் கனிமொழி பெற்றார் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக ஸி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக் கூறியே கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி ஸி.பி.ஐ. நீதிமன்றமும் டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. இதையொட்டி திமுகவின் உயர்நிலைக் குழு கூடி விவாதித்துள்ளது. அவர்கள் கூடி விவாதித்து என்ன செய்ய முடியும்? திமுகவின் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டபோது கூட்டப்படாத திமுகவின் உயர்நிலைக்குழு கனிமொழிக்காக இரு முறை கூடியது, கருணாநிதியின் மகள் என்பதற்காகவே. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியைவிடக் கருணாநிதியின் மகள் என்ற தகுதியே முன்னிலைக் காரணமானது.

கனிமொழி கைது செய்யப்பட்டது, அரசியல் எதிரி ஜெயலலிதாவால் முன்னர் கருணாநிதி கைது செய்யப்பட்டதுபோல் இல்லை; வழக்கும் அரசியல் காரணங்களால் இல்லை. இந்தியக் குற்ற நடைமுறைச் சட்டப்படி வழக்குத் தொடுக்கப்பட்டுக் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளர். "பெண்” எனும் எனும் ஸென்டிமென்ட் காரணத்தைச் சொல்லிக் கனிமொழியின் ஜாமீன் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதாவைக் கருணாநிதி கைது செய்து சிறையில் வைத்தபோது "பெண்" என்ற ஸென்டிமென்ட் எங்கே போனது?

கருணாநிதியும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இந்தப் பெண் எனும் சாக்கைப் பலமுறை கையாண்டுள்ளார். கனிமொழி கைது செய்யப்படுவதற்கு முன், முதல்வராக இருந்த கருணாநிதியிடம் பெண் பத்திரிகையாளார் ஒருவர்,"ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்படுமா?" என வினவியபோது, "ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதயத்தை எடுத்து வைத்துவிட்டு இது போன்ற கேள்வியைக் கேட்கக்கூடாது" என்றார். அதுபோல நீரா ராடியாவுடனான அமைச்சர் பூங்கோதையின் தொலைபேசி உரையாடலைப் 
பற்றி வினவிய செய்தியாளரிடம், "இரண்டு பெண்மணிகள் தானே பேசிக்கொண்டார்கள்; அதில் உங்களுக்கென்ன" எனத் திருப்பி வினவினார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கால் கருணாநிதி தடுமாறியிருந்தார். கனிமொழி கைதுக்குப் பின் நிலைகுலைந்து போயுள்ளார். எதைச் சொல்கிறோம்; ஏன் சொல்கிறோம்; மக்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற சிந்தனை இன்றி அறிக்கை விடுகிறார். கடந்த மாதம் (மே 22) கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,"என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை. இறுதிப் போரில் வெல்வோம்" என்று கூறியுள்ளார். லஞ்சக் குற்றசாட்டைச் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திதுக் கொண்டிருக்கும் அதே வேளையில் இப்படிப் பட்ட அனுதாபம் தேடும் புலம்பல்களையும் கண்ணீரையும் கருணாநிதி கைவிட வேண்டும்.

"என் மகள் கனிமொழி" குற்றமற்றவள்; வஞ்சனையாளர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்" எனப் புலம்பும் கருணாநிதி தம் ஆட்சிக் காலத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடிய அப்பாவிகளின் கண்ணீரை என்றாவது நினைத்துப் பார்த்திருப்பரா? சான்றுக்கு, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் வடவேங்கடம் முதல் தென் குமரி வரை தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல்துறை நடத்திய அத்துமீறல்களை இவர் என்றாவது கண்டித்தாரா? ஆயிரக் கணக்கான கோடிகள் பணமும் ஐந்து நட்சத்திரச் சொகுசு வாழ்வும் வாழும் கனிமொழிக்காகக் கண்ணீர் விடும் கருணாநிதி, குடும்பத்தைக் காப்பாற்ற வருவாய் ஈட்டும் கடமையில் இருந்த இளைஞர்களைப் பொய் வழக்குப் புனைந்து சிறையில் இட்டபோது, சோற்றுக்கு வழியின்றிக் கதறிய அந்த ஏழைத் தாய்மார்களின் கண்ணீரைக் கற்பனை செய்திருப்பாரா? அவ்வழக்கில் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடி, நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர்களின் கண்ணீருக்கு மதிப்பளித்தாரா?

மக்கள் விழிப்புடனே இருக்கிறார்கள். அனைத்தையும் கவனிக்கிறார்கள். எனவே புலம்பல்களால் மக்களைத் திசை திருப்பி விட முடியாது என்பதை உணர்ந்து, எதையும் தைரியத்துடன் எதிர்கொண்ட, எதற்கும் கலங்காத, போர்க்குணம் மாறாத கருணாநிதியாய் வழக்கைச் சந்தித்து மகளை மீட்கச் சட்டப்படி  முயல்வதே கருணாநிதிக்கு நல்லது. அனுதாபம் தேடுவதை கருணாநிதி தொடர்ந்தால், அனுதாபத்தைவிட அருவருப்பே மிஞ்சும்.

- ரஸ்ஸல்
inneram.com

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!