Monday, April 11, 2011

ஓட்டு பணம் லஞ்சம் ஹராம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துவிட்டது வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நாள். மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்று அநேகம் முடிவு செய்திருப்பார்கள். இச்சூழலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போக்கு தமிழக அளவில் அதிகரித்துள்ளது. இதை யார் செய்கிறார்கள் என்பது நாடறிந்த விசயமாகிவிட்டது. தன் அணிக்கு ஒட்டுப்பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்வதில் அதிரைவாசிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு ஓட்டுறிமை ஒரு ஜனநாயக கடமை, காசுக்காக ஓட்டு போடுவதும் ஓட்டுப்போட வைப்பதும் நம் நாட்டில் சட்டப்படி குற்றம். சட்டத்தை இயற்றும் அவைக்கு செல்பவனே சட்டங்களை மதிப்பதில்லை இந்நாட்டில் எவன் சட்டத்தை எல்லாம் மதிக்கிறார்கள், மக்களுக்கு ஓசியில் காசு கிடைக்குது இதுக்கேல்லாமா ஒரு கட்டுரை? என்ற முனுமுனுப்பு இதை படிக்கும் சிலருக்கு தேன்றும். உண்மை தான். ஜனநாயகத்தை மதிக்கும் இந்தியனாக அனுகுவதற்கு முன்பு இதை ஒர் இஸ்லாமிய பார்வையில் அனுகுவதே ஒவ்வொரு முஸ்லீகளின் கடமை. சிந்திப்பீர்..




ஓட்டுக்காக (தீர்ப்புக்காக) பணம் வாங்குவது லஞ்சம் இது ஹராம் என்பதை பின் வரும் இறைவசனங்களும், நபி மொழிகளும் நமக்கு நன்கு உணர்த்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (அல்-குர்ஆன் 4:29)

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் இறை வசனமும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

அதிரையை ஆண்டுவரும் பாரம்பரியமிக்க இரு பெரும் கட்சிகள் கடந்த பல தேர்தல்களில் பணம் பட்டுவாடா செய்து ஓட்டுக்கள் பெற்றார்கள் என்பதை ஊரில் உள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் அறிவார்கள். மார்க்கத்தை விளங்காத காலத்தில் சில தெருக்களில் பிரபலமான நம்மூர் பெண்கள் (பெருசுகள்) இரவோடு இரவாக வீடுவீடாக சென்று பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெரும் முயற்சியில் ஈடுப்பாட்டார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் சிறுபிள்ளைகளாக இருந்தகாலத்தில் கண்டிருப்பார்கள். பாவம் அந்த பெருசுகளுக்கு இது போன்ற ஹதீஸ்கள் குர் ஆன் ஆயத்துக்கள் தெரியவில்லை. யா அல்லாஹ் ஓட்டுக்காக பணம் லஞ்சம் பட்டுவாடா செய்த அந்த பெண்மணிகளை மன்னித்துவிடுவாயாக. ஆனால் இன்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவலம் தொடருகிறது என்பது தான் வேதனை. தேர்தல் அல்லாத நேரத்தில் மார்க்கத்தை பேசும் சிலரும் இது போன்ற ஹராமான செயல்களை நம் சமூகத்தவர்கள் செய்கிறார்கள் என்று அறிந்தும் அதை தடுக்க மறுக்கிறார்கள், என்ற செய்திகளை கேள்விபடும்போது போது மிக வேதனையாக உள்ளது.

சில செய்திகள் நட்புவட்டாரத்தின் மூலமாக அறிய முடிகிறது. கடந்த சில நாட்களாக அதிரையில் ஓட்டுக்காக பணம் விநியோகம் மிக துரிதமாக நடந்துவருகிறது. ஒரு சில வீடுகளின் ஓட்டு எண்ணிக்கையை வைத்து 5000 ரூ வரை கொடுக்கப்படுகிறதாம். தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர் 1000ரூபாயில் 100ரூபாய் பட்டுவாடா கமிஷன் என்று சொல்லி எடுத்துக்கொள்கிறார்  சொல்லப்படுகிறது. என்ன கேவலமோ...  இது உண்மையா? அல்லது பொய்யா? என்பதை அல்லாஹ் நன்கறிவான்.

இது நம் பணம் தான் என்று சீமான் சொல்லுகிறார், ஜெயலலிதா சொல்லுகிறார் ஏன் நாம் இதை வாங்கிக்கொள்ளக்கூடாது? என்று ஒரு சில அறிவாளிகள் வாதாடுகிறார்கள். இவ்விருவர் சொல்லுவதால் அது நம் பணமாகிவிடுமா? அடுத்த தேர்தல் தேதிக்குள் எனக்குள்ள பங்கு பணம் தரவேண்டும் என்று இந்த அரசியல் கொள்ளைகார கூட்டத்துடன் நம் மக்கள் அக்ரிமண்ட் போட்டுத்தான் சென்ற தேர்தலில்  தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?  ஓசியில் பணம் எவன் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள வெட்கமில்லையா நம் மக்களுக்கு?

அன்பானவர்களே ஓட்டுக்காக பணம் வாங்குவது லஞ்சம், அது ஹராம் என்பது மேல் சொல்லப்பட்ட இறைவசனங்களும்,  நபிமொழியும்  நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதை அதிரையில் உங்கள் உறவுகளிடம் எடுத்துச்சொல்லுங்கள், பணம் வாங்கியிருந்தால் தந்தவரிடமே அதை திருப்பி கொடுத்துவிட சொல்லுங்கள். ஊருக்கு நல்லது செய்பவர் யார் என்பதை முடிவு செய்து ஓட்டுப்போட சொல்லுங்கள்.

ஏகத்துவத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி, இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் திருப்தியை அடைவதை மட்டுமே லட்சியம் என்பதை மறந்து, கட்சிகளுக்கு நம் பலம் காட்ட வேண்டும் என்று கச்சைக்கட்டி உண்மைகளை மறைத்து பொய்களை மெய்படுத்தி மேடை மேடையாக பேசிவந்த நம் சமுதாய சகோதரர்களுக்கு கிழ் வரும் இறைவசனத்தை கேள்வியாக வைத்து இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)

அல்லாஹ் போதுமானவன்.

தயவு செய்து ஓட்டுமட்டும் மறந்திடாம உங்களுக்கு பிடித்த நல்ல வேட்பாளருக்கு போடுங்க.

அன்புடன் தாஜுதீன்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!