இவ்வளவு கஷ்டமும் ஒரு மனுஷனுக்கு, ஒரே நாள்ல அடுத்தடுத்து வந்தா அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாயிர மாட்டான்..? ஆனால் இதுவெல்லாம் வராது என்று நினைக்காதீர்கள். வரும்.. நிச்சயமாக வரும். இதுதான் மனித வாழ்க்கை..
கஷ்டங்களெல்லாம் சொல்லி வைத்தாற்போல் சேர்ந்துதான் வரும். நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்தக் கஷ்டங்கள் வருகிறது..? மனிதன் எதையோ செய்கிறான். ஏன் செய்கிறான்? அவனுக்கு அவன் செய்த செயல் தொடர்பாக ஒரு ஆசை. அந்த ஆசையினால் அந்தச் செயலை செய்யப் போய் சிக்கலில் மாட்டுகிறான். ஆக எல்லாவற்றிற்கும் அடிப்படை இந்த ஆசைதான்.
நியாயமான ஆசைகளாக இருந்தாலும் அதற்காக நாம் கஷ்டப்படத்தான் வேண்டும். இங்கே கஷ்டம் என்பது பெற்றோர்களின் கடமை, பிள்ளைகளை வளர்ப்பது, பிள்ளைகள் பெற்றோரை காப்பது.. இதற்காக அவர்கள் சில தியாகங்களைச் செய்வது போன்றவற்றிற்குள் அடங்கும்.
ஆனால் நியாயமில்லாத ஆசைகளினால் துன்பங்களை அனுபவித்தால் யார் அதற்கு பொறுப்பாவது..?
சுருக்கமாக ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.
ஒரு பையன். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். 50 சதவிகித மதிப்பெண்கள்தான் எடுத்திருக்கிறான். ஆனால் அவனது பக்கத்து வீட்டுப் பையன் 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறான். இவனது அப்பா இவனை பொறியியல் படிக்க வைக்கிறார்.
இதேபோல் 50 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த பையனையும் அவனது தந்தை பொறியியல் படிக்க வைக்க முயல்கிறார். அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில்தான் கிடைக்கிறது. ஆனால் இதற்கு பணம் நிறைய செலவாகும். ஆனால் வேறு வழியில்லை. தன் பையனை பக்கத்து வீட்டுப் பையனைப் போல பொறியாளனாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொள்கிறார்.
மனைவியிடம் இருந்த நகைகளை விற்றுக் காசாக்கி பையனை தனியார் கல்லூரியில் நுழைத்துவிடுகிறார். பையனும் பெயருக்கு கல்லூரிக்குப் போகிறான். படிப்பதைப் போல் ஏதோ செய்கிறான். அப்பா அடுத்த செமஸ்டருக்கு பீஸ் கட்ட பணமில்லாமல் கடன் வாங்குகிறார். பின்பு இந்தக் கடனை அடைக்க வேறொருவரிடம் பெரிய அளவிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறார்.
கடன் கழுத்தை நெரித்த வேளையில் தாங்க மாட்டாமல் இதனை அடைக்க வேண்டி தான் வேலை பார்க்கும் அரசு வேலையில் முறைகேடாக நடந்து கொள்ள முயல்கிறார். லஞ்சம் வாங்குகிறார். முதல் முயற்சி ஜெயிக்கிறது. தொடர்ந்து கொண்டே செல்கிறார். பையன் அரியர்ஸில் குளித்துக் கொண்டிருக்கும்போது இவர் லஞ்சத்தில் குளிக்கிறார்.
கடைசியாக ஒரு நாள் பிடிபடுகிறார். ஜெயிலுக்கு போகிறார். இப்போது இவரது மனம் சொல்கிறது நான் என் பையனுக்காகத்தான் செய்தேன் என்று.. பையன் சொல்கிறான் இது அப்பாவின் கடமைதானே என்று..
இது நியாயமில்லாத ஆசைதானே..? இந்தப் பையனுக்கு இருக்கின்ற அறிவை வைத்து, எடுத்திருக்கின்ற மதிப்பெண்களை வைத்து, அவனால் பொறியியல் படிப்பை படிக்க முடியுமா? முடியாதா? என்றல்லவா அந்தத் தகப்பன் சிந்தித்திருக்க வேண்டும்..?
பொறியியல் துறை இல்லையென்றால் பாலிடெக்னிக், கம்ப்யூட்டர், ஐ.டி.ஐ. என்று பல்வேறு பிரிவுகளில் திருப்பிவிடலாமே.. நிறைய வழிகள் இருக்கிறதே.. செய்யவில்லையே இந்தத் தந்தை..
அவரது இந்த அர்த்தமற்ற ஆசைக்கான விலையை அவர்தானே கொடுக்க வேண்டும். இத்தனையையும் வரிசையாக செய்துவிட்டு "எனக்கு ஏன் இப்படி சோதனையைக் கொடுக்கிறாய்..?" என்றால் என்ன நியாயம்..?
நான் இன்றைக்கும் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பிக் கொண்டிருப்பதற்கும் நானேதான் காரணம். எனக்கே நன்கு தெரிகிறது. சினிமா துறையில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் இந்நேரம் நான் எத்தனை கஷ்டப்பட்டாலும் ஏதாவது ஒரு இயக்குநரிடம் ஒட்டியிருக்க வேண்டும். நான் செய்யவில்லை.
சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதுவேன் என்று நினைத்து முனைப்போடு போராட நினைத்திருந்தால் இந்த பிளாக்கையெல்லாம் இழுத்து மூடிவிட்டு அங்கே ஓடியிருக்க வேண்டும். அதையும் நான் செய்யவில்லை.
இங்கே பாதி கால்.. அங்கே பாதி கால் என்று வைத்து அலம்பிக் கொண்டிருப்பதினால்தான் எனது நிலைமை இப்போதுவரையிலும் திரிசங்கு சொர்க்கமாக இருக்கிறது. எனக்கே நன்கு தெரிகிறது.. தவறு என் மீதுதான் என்று.
"இது தொடர்பாக ஏதாவது ஒரு முயற்சியை நான் எடுக்கிறேன். அதற்கு ஏதேனும் ஒருவகையில் நீ எனக்குத் துணையிரு. அது போதும்.. வழியைக் காட்டு. நான் ஓடுகிறேன். ஆளைக் காட்டு. நான் பேசுகிறேன்.." என்று ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தில்தான் எனது நம்பிக்கையான வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் எனது ஆசை சினிமா என்பதால் அதற்கு என்ன விலை கொடுத்தாக வேண்டுமோ அதனை நான் கொடுத்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
இந்நேரம் எனக்கு சாதாரணமாக ஐயாயிரம் ரூபாயில் டிடிபி வேலை கிடைத்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் செட்டிலானால் போதும் என்று நான் நினைத்திருந்தால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் எனக்கு வந்திருக்காதே.. ஆக.. இந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாவதே நமது ஆசைகளினால்தான்..
போதும் என்ற மனதோடு.. வாழ்க்கையை ஆண்டவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு.. எப்போது வேண்டுமானாலும் எதிர்நோக்கி காத்திருப்பவனுக்கு எந்த ஒரு வழிபாடும் தேவையில்லை.
மனசு நிறைய கனவுகளோடு, நிறைய எதிர்பார்ப்புகளோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களை திடீரென்று அழைத்துக் கொள்கிறானே என்பதை நினைக்கின்றபோது அவனை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.
நான் இப்போதே இறக்கத் தயார் என்று சொல்வதாலேயே உடனேயே எனக்கு இறப்பு வந்துவிடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் இருக்கும் ஒரு கூடுதல் வசதி என்னவெனில், எதன் மீதும் அதிகம் நாட்டம் வராது.. இருப்பதே போதும் என்று ஆசையை அளவோடு வைத்துக் கொள்ளலாம்.
"நாம் உழைத்துக் கொண்டேயிருப்போம். இறப்பை பற்றிக் கவலைப்படாமல் உழைப்போம். இறைவன் எப்ப கூப்பிடுறானோ அப்போ போய்க்குவோம்... எதுக்கு அதைப் பத்தி நினைக்கணும்"னு சொல்கிறவர்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மாதிரி மனப்பான்மை உள்ளவர்கள்தான் ஒரு போதும் நித்தி மாதிரியான சாமியார்களிடமோ, பாதிரியார்களிடமோ அல்லது ஏமாற்றும் ஹஜ்ரத்துகளிடமோ போகவே மாட்டார்கள்.
வெற்றியும், தோல்வியும், இன்பமும், துன்பமும், லாபமும், நஷ்டமும் வாழ்க்கையில் சகஜம். அதற்காக துவண்டு போகக் கூடாது. அதைத் தூக்கிப் போட்டுட்டு மேலும், மேலும் உழைக்க வேண்டும்.. எல்லாமே கடந்து போகும் என்கிற மனநிலை நமக்குக் கிடைத்தால் நிச்சயம் இந்த மாதிரியான மனித போலிகளான சாமியார்களின் தயவு நமக்குத் தேவையிருக்காது.
நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என்னை படைத்த இறைவனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. நமக்கு அவன் மட்டுமே உதவுவான். இதுவே எங்களுக்கு போதும்..
//இது நியாயமில்லாத ஆசைதானே..? இந்தப் பையனுக்கு இருக்கின்ற அறிவை வைத்து, எடுத்திருக்கின்ற மதிப்பெண்களை வைத்து, அவனால் பொறியியல் படிப்பை படிக்க முடியுமா? முடியாதா? என்றல்லவா அந்தத் தகப்பன் சிந்தித்திருக்க வேண்டும்..?
ReplyDeleteபொறியியல் துறை இல்லையென்றால் பாலிடெக்னிக், கம்ப்யூட்டர், ஐ.டி.ஐ. என்று பல்வேறு பிரிவுகளில் திருப்பிவிடலாமே.. நிறைய வழிகள் இருக்கிறதே.. செய்யவில்லையே இந்தத் தந்தை..
அவரது இந்த அர்த்தமற்ற ஆசைக்கான விலையை அவர்தானே கொடுக்க வேண்டும். இத்தனையையும் வரிசையாக செய்துவிட்டு "எனக்கு ஏன் இப்படி சோதனையைக் கொடுக்கிறாய்..?" என்றால் என்ன நியாயம்..?
//
நியாயமான பதிவுங் பாய். அல்லாஹ் எல்லா பெற்றோர்களுக்கும் இந்த புரிதலை தர வேண்டும். !!