Wednesday, October 27, 2010

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை: ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் பரிந்துரை

 இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.


 மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.


 பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.


 இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது

Sunday, October 24, 2010

நீதிமன்றத்தில் அழுதுகொண்டே சாட்சியமளித்தார் ஜாகியா ஜாஃப்ரி !

 கடந்த 2002 குஜராத் கலவரங்களின் போது, குல்பர்க் சொசைடி என்ற பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி. யான இஹ்ஸான் ஜாஃப்ரி இந்துத்துவாவினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த அவரது மனைவி ஜாகியா ஜாஃப்ரி, இஹ்ஸான் ஜாஃப்ரி தனது வீட்டிலிருந்து கொலைவெறி பிடித்த கும்பலால் இழுத்து வரப்பட்டு, அவரது உடைகள் கிழிக்கப்பட்டு, வெட்டப்பட்டு பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டார்; இதனை எனது வீட்டின் முதல் தளத்தில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தேன் என்று அழுதவாறே நீதிமன்றத்தில் கூறினார்.

3000 பேர் கொண்ட ஆயுதம் தரித்த கும்பலால் தாக்குதலுக்குள்ளான அன்றைய தினத்தில் (ஃபிப்ரவரி 28, 2002) தானும் குல்பர்க் சொசைடியைச் சேர்ந்த மக்களும் எவ்வாறெல்லாம் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோஷி முன்னிலையில் விளக்கினார் திருமதி ஜாகியா. கோத்ரா ரயில் விபத்து நடந்த அடுத்த நாள் நடந்த இக்கொடூரத் தாக்குதலில் மட்டும் மொத்தம் 69 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் அவர் அந்த துயர சம்பவத்தை விளக்கிக் கூறுகையில், வெறிபிடித்த கூட்டம் ஒன்று குல்பர்க் சொசைடியின் வாயிலையும், ஒருபக்க சுற்றுச்சுவரையும் உடைத்துக் கொண்டு உள்நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வாள்களாலும், இன்ன பிற ஆயுதங்களாலும் தாக்கியது; பல உயிர்கள் பறிக்கப்பட்டன; அவர்களது உடல்கள் எனது வீடெங்கும் பரவிக் கிடந்தது என்று கூறினார்.
போலீசார் மாலை நேரத்திலே சம்பவ இடத்திற்கு வந்த பிறகே நான் முதல் தளத்திலிருந்து கீழே வர முடிந்தது. கீழே வந்து பார்த்த போது, வராண்டாவில் எனது பக்கத்து வீட்டுக்காரரான கஸம்பாயினுடைய மனைவியின் உடலும் கர்ப்பிணியான அவரது மருமகளின் உடலும் மோசமாக பாதிக்கப்பட்டு கிடந்தது; அந்த கர்ப்பிணிப்பெண் வயிற்றுப் பகுதியில் கத்தியால் கிழிக்கப்பட்டிருந்ததால் அவரது கர்ப்பம் வெளியில் கிடந்தது என்றும் ஜாகியா கூறினார். தனது வீட்டின் பின்புறமும் பல உடல் கிடந்ததாக மேலும் அவர் கூறினார். பின்னர் அவர் எதிர்தரப்பு வழக்கறிஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.
2002ல் நடைபெற்ற குஜராத் கலவரம் முஸ்லிம்களுக்கு எதிராக ஆளும் அரசே கட்டவிழ்த்து விட்ட ஒரு இன அழிப்பு என்றும், மதச்சார்பற்ற இந்தியாவின் இறையாண்மைக்கே ஏற்பட்ட அவமானம் என்றும் மனித உரிமை அமைப்புக்களும், சமூக நல ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். குஜராத் அரசு நீதிமன்றங்களின் கண்டணங்களுக்கு ஆளானதும், கலவரம் குறித்த பல்வேறு வழக்குகள் குஜராத் நீதிமன்றங்களிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதும், குஜராத் கலவரத்தை காரணம் காட்டியே முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விசா வழங்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Thursday, October 21, 2010

குவைத்தில் B- (B Negative) வகை இரத்தம் தேவை - மிக அவசரம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
 
குவைத்தில் பணிபுரிந்து வரும் இப்ராஹீம் என்ற நண்பருக்கு அவசரமாக செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கு B- (B negative) வகை இரத்தம் மிக தேவைப்படுகின்றது. இரத்த வங்கியில் இவ்வகை இரத்தம் இல்லாததன் காரணத்தால் அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டுள்ளது.
 
இரத்தம் கொடுக்க விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +965-97250927 (பொறியாளர் மணி கண்டன் -maximamani@aim.com)
 
இந்த செய்தியை தயவு செய்து பரவச் செய்யவும்.  

Monday, October 18, 2010

நபிமொழி

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) 
எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால்,அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். 4:85

Thursday, October 7, 2010

.இலஞ்சவாதிகளை காட்டிக்கொடுக்க வேண்டுமா?

பெங்களூரில் ஜனகிரஹா என்கிற, வணிக நோக்கற்ற சமூகநல அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு சமூகத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. 
அதிகரித்து வரும் இலஞ்சம், கையூட்டு போன்ற குற்றங்களுக்கெதிராக இந்த அமைப்பு அண்மையில் ஒரு புதிய வழிமுறையை, அதாவது இணையத்தைத் திறந்துள்ளது.

அந்த இணையத்தின் முகவரி www.ipaidabribe.com ஆகும். இந்த இணையத்தில் சென்று கையூட்டு அளித்துக் கசந்த அனுபவங்களையோ, கையூட்ட மறுத்த வீரத்தையோ, அதனால் வஞ்சிக்கப்படும் சோகத்தை (அ) அவலத்தையோ, அதுவுமில்லாவிட்டால் இந்த வஞ்சகமிக்க இலஞ்சாதிகார வர்க்கத்தின் மீதான கோபத்தையோ கொட்டி வைக்கலாம். நீங்கள் தனிநபர் அல்ல என்று தெரிவிக்கிற இந்த இணையதளம், உங்களுடன் இணைந்து, இலஞ்ச ஊழலுக்கெதிராகப் போராடி, கையூட்டும் சதிகாரத்துக்கு கைபூட்டு போடவைக்கும் என்று தெரிவிக்கிறது.

இந்த இலஞ்சம் என்கிற சமூக பூதத்தை ஒழிப்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ள இணையதளம் தனிநபர்கள் குறிவைக்கப்படமாட்டார்கள் என்று உறுதி கூறுகிறது.

இந்தியாவின் 63வது சுதந்திர தினத்தன்று பணியாற்றத் தொடங்கிய இந்த இணையதளம், இதுவரை 130 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 10 முதல் 12 வரையிலான தன்னார்வத் தொண்டு இளைஞர்களே இதில் பங்கெடுத்துள்ளனராம்.

Saturday, October 2, 2010

கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி

பெற்றோர்களின் எதிர்ப்பு பயந்து காதல் ஜோடிகள் போலீஸ் ஸ்டேஷன்களில்
தஞ்சம் புகுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நாகரீகத்தில் வளர்ச்சிகாணும் போதெல்லாம் ஆனந்தம் கண்ட நாம்அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சில நேரங்களில் வருந்த வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு சினிமா,"டிவி'போன்றவை இளம் பெண்கள்,இளைஞர்களை சீரழித்து வருகின்றன. படிக்கும் வயதில் காதல் என்ற பெயரில் கல்வியை கோட்டை விடும் சிறிசுகளின் செயல் சமீப காலமாகஅதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலைபார்ப்போர் அதிகம் உள்ளனர். அம்மாவின் அரவணைப்பு கிடைக்கும் அளவுக்கு அப்பாவின் கண்டிப்பு கிடைப்பதில்லை. இதனாலேயே மாணவிகள் சிலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். இன்னும் சில இடங்களில் பெற்றோரின் பொறுப்பின்மை குழந்தைகளை சீரழிவுக்கு அழைத்து செல்கிறது. "டிவி'யில் ஒளிபரப்பாகும் தொடர்களை தங்கள் மகளுடன் உட்கார்ந்து பார்க்கும் தாய்மார்களுக்குஅதனால ஏற்படும் விபரீதம் புரிவதில்லை. இன்று சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காமமும்,குரோதமும் தொடர்களில் தான் ஒளிபரப்பாகிறது. இதனால் மாணவிகளின்மனம் திசை மாறி ,காதல் வலையில் சிக்கிவிடுகின்றனர். அதன் பின் பெற்றோரை உதாசினப்படுத்தி வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகளும் சினிமா மற்றும் "டிவிகளில் கண்முன்னே காட்டிவிடுகின்றனர். இதற்காக சட்டரீதியாக செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைக்கின்றனர். இதையை தங்களின் காதலுக்கு போதனையாக எடுத்துக்கொண்டு மாணவிகள் பலரும் காதலனுடன் படி தாண்டுகின்றனர். எல்லாம் அறிந்த பெற்றோரும் வேறு வழியின்றி தனது பெண்ணை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்கின்றனர். பெண்ணேதன்னை விரும்பியவரை திருமணம் செய்து கொண்டு கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்துவிடுகிறார். அதன் பின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுதுபுலம்புகின்றனர். இது தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்ட பிறகே,அதை தடுக்க பெற்றோர் முன்வருகின்றனர். அதே அக்கறையை தங்கள் குழந்தைகளின் கண்காணிப்பிலும்வளர்ப்பிலும் காட்டினால் இது போன்ற கசப்பான சம்பவங்களை தடுக்கலாமே. கல்விக்கும்குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி'போன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் இது போன்ற கசப்பான அனுபவங்களையும் தவிர்க்கலாம்.

கடவுளில்லா உலகம்...?

                                                           ஓரிறையின் நற்பெயரால்...
கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை...?
 இன்று உலகில் கடவுளை ஏற்போர் \ மறுப்போர் உட்பட யாரும் கடவுளை நேரில் பார்த்ததில்லை.கடவுளை காணமுடியாதற்கு காரணம் குறித்துக்காணும்பொழுது இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று சொல்வதாக இருந்தால் அவர் மிகப்பெரிய ஒரு சக்தியாக தான் இருக்கமுடியும்.அவ்வாறு மிகப்பெரும் சக்தி மிகுந்த ஒன்றை அனைத்து படைப்புகளை விடவும் பலவிதமான பலஹீனங்களை தன்னுள் கொண்ட மனிதன் தனது கண்களால் பார்க்க வேண்டும் என நினைப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்? பார்த்து தான் கடவுளை நம்புவேன் என்பது சிந்திக்கக்கூடியவர் ஏற்றுக்கொள்ளும் சீரிய வாதமா? சர்வ வல்லமை படைத்த கடவுளை நம் சாதாரண கண்களால் பார்க்க முடியாது என எண்ணுவது அறிவுக்கு உகந்ததா..?

பொதுவாகவே ஒருவர் இறை மறுப்பாளாராக இருக்க இரண்டு அடிப்படை காரணங்களே உள்ளது ஏனெனில் நாத்திகனாக யாரும் உருவாவதில்லை., மாறாக உருவாக்க படுகிறார்கள் .,
<>தனக்கோ தன் குடும்ப,சமுக மக்களுக்கோ மதத்தின் பெயரால் நேரடியவோ,மறைமுகமாகவோ ஏற்படும் பாதிப்பின் விளைவே -கடவுள் மறுப்புக்கு அடிப்படை காரணம்.இதுவே நாத்திக உருவாக்கத்திற்கு முதற்காரணம்
<>நமக்கு ஒரு இக்கட்டான நேரத்தில் ஏற்படும் இல்லாமையோ,அல்லது கோபத்தின் அடிப்படையில் ஏற்படும் இயலாமையோ ஏனைய செயல்பாட்டின் மீது வெறுப்பு கொள்ள வழிவகுக்கிறது., அவ்வெறுப்பின் வெளிப்பாடு நமக்கு எது நமக்கு பலன் தரவில்லை என எண்ணுகிறோமோ அதன் மீது நிலைத்து விடுகிறது. அப்படித்தான், நாத்திகர்களுக்கு கடவுள் குறித்த கோட்பாட்டில் ஏற்பட்ட வெறுப்புகள்.,
மூன்றாவதாய் ஒரு காரணமொன்று இருக்குமேயானால் அது அவர்களின் "பிடிவாதமே" ஆக பாதிப்பு,வெறுப்பு மற்றும் பிடிவாதம் ஆகியவையே பிரதான காரணங்களாகும். கடவுள் மறுப்புக்கு இதை தாண்டி ஆயிரம் காரணங்கள் அவர்கள் மனதில் அடியாளாய் அணிவகுத்து நின்றாலும் இஸ்லாம் என்ற ஒற்றை சொல் குறித்து அவர்களை தெளிவாக அறிய செய்தால் போதும் கடவுள் இல்லை என்றுசொல்வோர்கள் சொல்வார்கள் அல்லாஹ்வை தவிர கடவுள் இல்லை என்று.,இன்று இஸ்லாத்தை நோக்கி வரும் ஏனையோர் அதற்கு சான்றாக உள்ளனர். அல்லாஹ் அத்தகையே நல்ல மக்களாக நம்மையும் ஆக்கட்டுமாக!
இன்று கடவுளை நிராகரிப்போர் அல்லது மறுப்போர் அவ்வாறு கடவுள் இல்லை என்று சொல்வதற்கு அறிவியல் ரீதியான காரணமென "பரிணாமவியல் கோட்பாட்டை" தாங்கிப்பிடித்து ஆதாரமாக காட்டுகின்றனர்.ஆனாலும் அதற்கான பதில்கள் மிக நேர்த்தியான முறையில் நம் சகோதர இணையங்களில் அறிவுப்பூர்வமாக தரப்படுகின்றன, மக்களுக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கில்லாமல் படைப்புவாத கொள்கைக்கு மாற்றமாக நாம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இங்கு பரிணாமவியல் கோட்பாட்டை கையிலேடுத்திருக்கிறார்கள் ஏனெனில்,இதுவரை ஏற்பட்ட உயிரின வளர்ச்சிக்கு உண்டான காரணங்களை (அறிவியல் ரீதியாக (?) பதில் என்று) சொல்கிறார்களே தவிர ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து தெளிவான பதில் அவர்களிடம் இன்னமும் இல்லை. மேலும் பரிணமாவியல் விஞ்ஞான அடிப்படையில் முழுக்க முழுக்க நிருப்பிக்கப்பட்ட நம்பகத் தன்மை வாய்ந்த ஓர் கோட்பாடல்ல என்பதை அக்கொள்கையே ஆதாரிப்பவர்கள் கூட வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்!
அடுத்து,அவர்கள் கடவுள் இல்லை என்பதை தர்க்க ரீதியாக நிருபிக்கிறோம் என குழம்பி ஸாரி,,, கிளம்பி இரு முக்கிய பதிவுகளை முன் வைக்கின்றனர்
1.கடவுள் பெயரால் மக்கள் மத்தியில் குழப்பங்கள்,கொலைகள் பயங்கரவாதங்கள் ஏற்படுகிறது
2.கடவுள் தன் படைப்பில் மக்களிடையே ஏன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்
ஒன்று கடவுளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினை மற்றொன்று கடவுள் மக்களுக்கு ஏற்படுத்திய பிரச்சினை- அதுக்குறித்து இனி காண்போம்
கடவுள் பெயரால் மனிதர்களிடையே இனக்கலவரங்கள், சண்டைகள், கலகங்கள், தற்கொலைப்படை தாக்குதல்கள் நடைபெறுவது உண்மைதான்.ஆனால் இதற்கெல்லாம் காரணம் கடவுளா...? அல்லது தன் போக்கில் இச்சைகளை பின்பற்றும் மனித மனங்களா? மனிதன் தனது ஆசை,கோபம்,விரக்தி,பாதிப்பு,அதிகப்படியான தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வாழும் காலசூழலில் தனது எண்ணத்தை ஈடேற்றம் செய்ய நன்மை மற்றும் தீமையான காரியங்களை மேற்கொள்கிறான். அவ்வாறு பேராசை காரணமாக தீமையான காரியங்கள் மேற்கொள்ளப்படும் போது மடமைக்கொண்ட மக்களின் மூலம் மதத்தின் பெயரால் தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறான்.தன் மார்க்கம் குறித்து போதிய அறிவற்ற அறிவிலிகளும் அவனுக்கு தூணை போகின்றனர். ஏனெனில் ஒருவன் மதப்பெயரால் மேற்கொள்ளும் அட்டுழியங்களுக்கு காரணம் தான் சார்ந்த சமுக இன மக்களால் தனக்கு பாதுக்காப்பு கிடைக்க வேண்டும் என்ற சுயநலமே தவிர மாறாக கடவுளோ.கடவுள் கோட்பாடுகளோ சொன்னதாக ஆதாரத்தை முன்னிறுத்தியல்ல.மேலும் சொல்லப்போனால் இஸ்லாம் இத்தகையே மனிதக்குல தாக்குதலை கண்டிப்பதோடு தனியானதொரு மனிதனுக்கு கூட துன்பம் விளைவிக்கக்கூடாது என்கிறது. அல்லாஹ் தன் திருமறையில் சட்டத்திட்டங்கள் குறித்துக்கூறும் பொழுது.,
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (2:178&179)
மேலும் பார்க்க:17:33, 6:140, 4:92, 2:111&217

மேற்கூறிய திருவசனங்கள் தேவையில்லாமல் ஒருவனை கொலை செய்யக்கூடாது என்று சொல்வதோடு நின்றுவிடாமல்,அவ்வாறு ஒருவனை கொன்றால் அஃது அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் என்ற எச்சரிக்கையும் விடுக்கிறது. இதை விட தனி மனித பாதுக்காப்புக்கு ஓர் உயர் வரையறை அளவுகோலை யாராலும் நிர்ணையிக்க முடியுமா?
ஆக,மனிதன் தனது சுயநலத்தின் மூலம் ஆதாயம் பெற வேண்டும் என்ற அடிப்படையே எந்த ஒரு கொலைக்கும்,கொள்ளைக்கும்,ஏனைய கலவரங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணமே தவிர கடவுளோ.அவரது கோட்பாடுகளோ அல்ல, தன் மார்க்கம் கூறும் ஒரு செயல்பாடு குறித்த காரணத்தை சரிவர புரிந்துக்கொள்ளாததும் மதத்துவேசத்துக்கு ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.இதையும் தாண்டி தனி மனித உயிர் இழப்புக்கும் ஏனைய சமுக நல பாதிப்புக்களுக்கும் மதம் தான் காரணம் என உச்சாணி கொம்பில் ஒய்யரமாய் அமர்ந்து உச்சஸ்தாயில் உரக்க கத்துவோர் கீழ்காணும் கேள்விக்களுக்கு காரணம் சொல்லட்டும்...
<> ஒரே குடும்பத்தில் பிறந்து ஒன்றாய் வாழும் அண்ணன் தம்பிக்குள் வயல்வெளி,வாய்க்கால்,வரப்பு தகராறில் ஒருவரை ஒருவர் வெட்டிச்சாய்த்து கொள்கிறார்களே அதற்கு எந்த மதம் காரணம்...?
<>பூர்விக சொத்தை அடைவதில் தகப்பன்,மகனுக்கு இடையில் ஏற்படும் போட்டி பொறாமைகளில் ஏற்படும் உயிர் இழப்பிற்கு யாரின் மதம் காரணம்..?
<>அடுத்தவன் மனைவியே அடைவதற்கு அவளின் கணவனையே கொல்வதற்கு மேற்கொள்ளும் மட்டரகமான செயல்களுக்கு எவர்களின் மதம் காரணம்...?
<> உதாரணத்திற்கு தான் மேற்குறிப்பிட்ட செய்திகள் எல்லாம். இன்னும் எத்தனையோ மோசங்கள்,அசிங்கங்கள்,குற்றங்கள் ஆயிரமாயிரம் உள்ளன.இந்நிகழ்வுகள் யாவும் அங்கொன்றும்,இங்கொன்றுமாய் நடக்கவில்லை,மாறாக செய்திதாள்களிலும் ஏனைய ஊடங்கள் வாயிலாகவும் நாம் அன்றாடம் காணும் அவலங்கள் தான்! இதன் மூலம் தனி மனித கொடுமைகளுக்கும்,சமுக நல கெடுதிக்கும் காரணம் சுயநலம் என்பது தெளிவு.,
அடுத்து இரண்டாவது கேள்விக்கு வருவோம்,கடவுள் ஏன் ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களை படைத்தார் என பார்ப்பதற்கு முன்பு, ஒருவேளை உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் சம்மாய்,அதாவது அவர்கள் வாழ தேவையான வாழ்வாதார வசதிகளுடனும் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டதுப்போலவே உயரம்,நிறம்,பருமன், ஏனைய உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் மற்ற மனிதர்கள் யாவருக்கும் அதே அளவில் வழங்கப்பட்டால் தான் உலக மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லா நிலை ஏற்படும்.இப்படி ஒரு நிலையில் உலகம் இயங்குவதாக கொண்டால், உலகில் பொருளாதார விசயங்களில் யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் வராது சரிதான்.,ஆனால் அனைத்து ஆண்களும் ஒரே முகச்சாயலுடனும்.அதேப்போல அனைத்து பெண்களும் ஒரே முகச்சாயலுடனும் தான் இருப்பார்கள்.அப்படி இருந்தால்தான் கடவுள் மனிதர்கள் மத்தியில் அணு அளவிற்கு கூட ஏற்றத்தாழ்வை உண்டாக்கவில்லை என்று சொல்ல முடியும். கற்பனை செய்துப்பாருங்கள்... தாயிக்கும்,தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆண்களும், தந்தைக்கும்,கணவனுக்கும்.பிள்ளைக்கும்,வித்தியாசம் தெரியாமல் பெண்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள், பாதிப்படைவார்கள்.,இப்படிப்பட்ட நிலையில் உலகம் சமச்சீராய் இயங்குமா? ஆக உலகம் சீராய் இயங்குவதற்கு மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு வேண்டும் என்பதை கடவுள் மறுப்போர் கூட உடன்பட்டோ,முரண்பட்டோ ஏற்றுத்தான் ஆக வேண்டும் இல்லை...இல்லை.. உருவத்தில் வேண்டாம் உலகளவில் மட்டும் கடவுள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க செய்யலாமே என பாதி சமச்சீர் நிலைக்கு பலத்த ஆதரவு தெரிவிப்போர் <a href="http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_15.html">இங்கே</a> பார்வையிடவும்.பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்கள் மத்தியில் இருந்தால் தான் உலகில் அனைத்து செயல்களும் தொடர்ந்து இயங்க முடியும்.
சொல்லப்போனால் கடவுள் மறுப்போர் உலகம் இவ்வாறு ஏற்றத்தாழ்வுடன் இருப்பதற்கு காரணம் என்னவென்று சொல்ல முடியுமா...?உருவ மாறுப்பாட்டிற்கு வேண்டுமானால் வாழும் கால சூழல்,தட்ப வெப்ப நிலை காரணம் என்று பதில் சொல்லலாம். பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு என்ன காரணம் கூறுவார்கள்? ஏனெனில் ஒருசெல் உயிரி உட்பட அனைத்து உயிரினங்களும் தனக்கு உடல் மட்டும் ஏனைய செயல்களுக்கு தேவையானவைகளை தானாகவே பிறர் தயவின்றி பெறும் போது அனைத்து உயிரினத்தின் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டு உருவாகும் மனிதன் தனது அடிப்படை தேவைகளுக்கு கூட பிறரை சார்ந்து வாழ்வதேன்?
விடை தருமா கடவுளில்லா உலகம் செய்ய விரும்பும் பகுத்தறிவாளர்களின் (?) பரிணாம்...?

                                           அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Friday, October 1, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.
எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே  அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.
ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.
நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் 

Monday, September 27, 2010

இல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்

(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார்.அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா   -ஆசிரியர்)



அயோத்திப் பிரச்னை  குறித்து  திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க. காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன். நான் கேட்டது மட்டுமில்லை ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும் மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றன.

கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங், ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம் முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமைந்திருந்தன.

கோல்வால்கரின் பாசிச கருத்துகள்

பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும் கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரின் கோட்பாடு. இந்திய தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும் அவர் நிராகரிக்கிறார். ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின் இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின்  அடிப்படையில் உருவாகிய இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். அவரது எழுத்துகள் அனைத்திலும் ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம் வெளிபடுகின்றது. தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.

ஹிட்லரின் பாசிசத்தை பெரிதும் பாராட்டி தனது  (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன்ஹுத் டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

'தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது.'

இன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:

'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.' முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது.

நாம் வாழும் இந்திய ஒரு பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின் எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு. கோல்வால்கரின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின் விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.

'பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.

'கோடிக்கணக்கான இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின் விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த வேண்டும் என்பதே.'

பாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை என்று கூறுகிறார் திரு.கணேசன். 450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத் தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சந்தித்தேன்.

ராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்?

அயோத்தி காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான்  கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.

வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

'இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை.  கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது.  16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.'

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது. அதில்:

'மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை கிடைக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்'

இது மட்டுமா?

டாக்டர் ராதி சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின் 458ம் பக்கத்தில் புகழ் பெற்ற ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான் பொறுப்பு  என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில் உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சுக்லா தெரிவிக்கிறார்.

பாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால் கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார். (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162)

பாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்?

திரு. கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன? அவற்றை  இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா? பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா?

பாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு. இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும். பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் மாட்டிறைச்சி உண்ணாதே என்றும்  மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை இடித்திருப்பாரா? மக்களுக்கு புரியும் மொழியில்  ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில் இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து  ஸ்ரீராமருக்கு  கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும் தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க மாட்டார்கள். பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள். இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம். காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்.

Friday, September 24, 2010

நிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்..?

                                                     ஓரிறையின் நற்பெயரால்  
                   அன்றாட வாழ்வில் மனிதர்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு செயல்களிலும் இறைவனுக்கு பயந்து நன்மைகளை செய்து தீமைகளிலிருந்து தவிர்த்து வாழ்வதே இஸ்லாம் கூறும் இவ்வுலக வாழ்வின் அடிப்படை சாரம்சம்.மேலும் இறைவன் கூறிய இவ்வடிப்படையில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ளும் மனிதர்களுக்கு இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில் அதற்கான வெகுமதியாக அவனுக்கு சொர்க்கம் வழங்கப்படுகிறது.மாறாக மனிதன் தன் மன இச்சையின் படி செயல்பட்டு கடவுள் சொல்லுக்கு மாறுப்பட்டு சக மனிதனுக்கு துன்பம் விளைவிப்பானால் அவன் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வில் அதற்கு பகரமாக நரகமும் கொடுக்கப்படும்
பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். 23:16


எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. 4:14

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். 4:30

    மேற்குறிப்பிட்ட பத்தியே படித்ததும் தம் கடவாய் பல் தெரிய சிரிக்கும் போலி பகுத்தறிவாளர்கள் கீழ்காணும் பத்தியேயும் பார்வையிட்டு பின்பு தங்களது சிரிப்பை அதிகப்படுத்தட்டும்,கடவுள் இல்லாத உலகத்தை உருவாக்க முனைவோர்., மார்க்க போதனைகளை விட அழகிய முறையில் அமைந்த சட்டத்திட்டங்களை மனித சமுதாயம் முழுமைக்கும் வழங்க வேண்டும்.அதற்காக எந்த ஏற்பாடவது செய்தார்களா...?  "ஏற்கனவே நாடுக்கு நாடு பின்பற்றும் சட்ட வரையறைகளே மனித சமுகத்திற்கு போதுமானது புதிதாக யாரும் எதுவும் இயற்ற வேண்டாம்" என ஆறறின் உள் நின்று அறிவுமிக்க ஒரு பதிலை (?) தருவார்களேயானால் பின்னால் அணிவகுக்கும் கேள்விகளுக்கு பதில் தரட்டும் பரிணாமத்தின் வயிறு வளர்க்கும் பகுத்தறிவாளர்கள்
 முதலில் நாடுக்கு நாடு அதன் எல்லைக்குட்பட்டு தனக்கென தனியானதொரு சட்டம் இயற்றும்போதே மொத்த சமுதாயத்திற்கும் ஓரே மாதிரியாக தீர்ப்பு வழங்க முடியாது என்றாகி விடுகிறது., இவ்வாறு நாடுக்கு நாடு ஏற்படுத்தும் சட்ட வரையறைகளை வைத்து மனித குல முழுமைக்கும் பொது விதியே எப்படி இயற்றுவது...?
 சரி., ஒவ்வொரு நாட்டிலும் வாழும் அந்த மக்களின் கால சூழலுக்கேற்ப சட்டங்களை உருவாக்கிருந்தாலும் அதன் மூலமும் சட்டங்களை சம்மாக வழங்க முடியாது எப்படி...

  •   உதாரணத்திற்கு, ஒருவர் ஒரு கொலை செய்கிறார்., அவருக்கு அதிகப்பட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது., மற்றொருவர் ஒரு கொலையும் ஒரு கற்பழிப்பும் செய்கிறார் அவருக்கு அரசாங்கம் என்ன தண்டனை கொடுக்கும்? சரி அவருக்கும் அதே தண்டனையே வழங்குவதாக இருக்கட்டும் ஒருவர் பத்து கொலைகளும் பத்து கற்பழிப்பும் அத்தோடு வங்கி கொள்ளையும் செய்தவராக இருந்தால் ...என்ன பத்து முறை அவருக்கு தூக்கு தண்டனையா...?         
  •   கொலையும் கொள்ளையும் பல நாளாய் செய்து இறுதியில் காவல் துறையிடம் மாட்டும் போது தனது பண பலத்தால் அந்த நபர் வெளியே வருவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம் இதற்கு பெயர் தான் சரியான தண்டனையா..?
  •   அப்படியும் காவல் துறை சிறப்பாக நியாயமாக செயல்பட்டு அந்த குற்றவாளியே நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போது நீதிபதி சரியான மற்றும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்நிலையே குற்றவாளிக்கு சாதமாகி அவரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பெழுதினால் அதற்கு பெயர் நீதமான தீர்ப்பா...?
  •   அதுப்போலவே அப்பாவி ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கு எதிராக பொய் சாட்சியங்கள் புனையப்பட்டு நீதிபதியும் சாட்சியங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளியாக கருதப்பட்டு அவர் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுகிறாரே அங்கு என்ன செய்யும் மனித நீதி...?
  •  அதுப்போலவே திருடப்பட்ட பொருட்கள் குறித்து காவல் துறையிடம் புகார் செய்தும் அது திரும்ப கிடைக்கவில்லையென்றால்..அல்லது அவரது வாழ் நாள் முடிந்து கிடைக்கப்பெற்றால் அதனால் அவருக்கு என்ன பயன்...?
  • காப்பீடு மூலம் திரும்ப கிடைக்கப்பெறலாம் என யாரெனும் ஓரத்தில் நின்று மௌன குரல் கொடுத்தால் -அவ்வாறு காப்பீடு செய்யாதவர்களின் நிலை..?
  •  வங்கியிலிருந்தோ,யாரிடமோ கடனாக வாங்கிவரும் பணம் தவறுதலாக தொலைந்து போகும் போது அவருக்கு நஷ்ட ஈடு யார் தருவது மனித சட்டமா...?
  •   அனைத்து கெட்ட செயல்களும் தொடர்ந்து செய்யும் மனிதர்கள் அவர்கள் மரணமடைந்தப்பின் அவைக்குறித்து அரசுக்கு தெரிய வரும்போது என்ன செய்ய முடியும் மனித் உருவாக்க சட்டங்கள்...?
  •  பிறரின் உழைப்பை உறிஞ்சி அவர்களின் செல்வத்தையெல்லாம் வட்டியாக மாற்றி வயிறு வளர்க்கும் வணிக பெரு முதலைகளுக்கு நிரந்தர வேலியிட்டு வட்டியின் வாயடைக்க முடியாதது ஏன்...? அதற்கு என்ன காரணம்...?
  •   அனைத்து நிறுவனங்களிலும் கடன் வாங்கி தன் வாழ்க்கையே ஆடம்பரமாக வாழ் நாள் இறுதிவரை கழித்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி கொண்டு யாரும் காணாத இடத்திற்கு ஓடிப்போய் விடுகிறான் என்றால் அப்போது என்ன செய்யும் சமுக நீதி...?
  •  நஷ்ட ஈடு வேண்டுமானால் பாதிப்படைந்தவனுக்கு தரலாம்., ஓடிப்போவனுக்கு என்ன தண்டனை தர முடியும்...?
  •   அதுப்போலவே ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பயங்கரவாதிகள் ஒரு நாள் அகப்படும்போது எழுதப்பட்ட சட்டத்தால் என்ன தண்டனை அதிகப்பட்சமாக தரமுடியும்...? இறந்தவர்களின் வாழ்வு என்னாகும்..?
  •  மக்கள் திரளாக இருக்கும் இடங்களின் தற்கொலைப்படை தாக்குதல்கள்- தன் உயிர் இழப்புக்கு பகரமாக ஆயிரமாயிர உயிர்கள் எடுத்தவனுக்கு  இலட்சக்கணக்கான நீதிமான்கள் ஒன்றுக்கூடி சட்டம் இயற்றினாலும் அணுவளேவேணும் தண்டனை வழங்க முடியுமா...?
  •  பல்லாயிர முறை மோசடி, வட்டி, கொலை,கொள்ளை,கற்பழிப்பு, விபச்சாரம், போதைப்பொருள் இன்னும் உலகில் எத்தனை உண்டோ அத்தனை தவறுகளும் செய்யும் மனிதர்கள் வாழ் நாள் முழுதும் தன் தவறை நீதியின் கண்களுக்கு மறைத்து வாழ்ந்து மறையும் போது தவறுகளை தண்டிக்கும் சட்டம் என்ன செய்யும்...இவர்களை எப்படி இனங்காணும்?
  •   நூறு வயது வரை அயோக்கியனாய் வாழும் மனிதர்களுக்கிடையே நன்மைகளை மட்டும் செய்து தீமைகளிலிருந்து விலகி வாழும் ஒரு சிறு வயது நற்பிறப்பு தீடிரென்று இயல்பாகவோ,விபத்திலோ மரணமடைய நேரிட்டால் அவர் மேற்கொண்ட தூய வாழ்விற்கு உலக சட்டங்கள் மொத்தமாக கூடினாலும் பகரமாக எதையேனும் வழங்குமா..?
  •  அதுப்போலவே சிசு கருவிலேயே மரணமடைதல்,சிறு வயதில் மரணம்  அடையும் ஒன்றுமரியா குழந்தைகள் மற்றவர்கள்(நாம்) அனுபவித்ததைப்போல வாழ்வை அனுபவிக்க எந்த சமுகம் சட்ட இயற்றும்...?
  •   பிறவியேலே ஊமை.நொண்டி,குருடு,செவிடு மற்றும் குணப்படுத்த முடியா ஏனைய உடல் ஊனங்களுக்கு பிரதிப்பலனாய் அவ்வுயிர்கள் நம்மைப்போல இயல்பாய் வாழ இவ்வுலகச்சட்டம் புது வரையறை தருமா...?
  •    மக்கள் நில நடுக்கம்.பூகம்பம்,புயல் சூறாவளி,வெள்ளப்பெருக்கு,எரிமலை சீற்றம்,சுனாமி போன்ற கடல் மூலம் ஏற்படும் சீரழிவு போன்றவற்றில் உயிரிழக்க நேரிடும் போது அவர்கள் சார்பாக ஏனையோருக்கு நஷ்ட ஈடு தருவது இருக்கட்டும் அரசாங்க பதிவேடுகளில் கூட பெயர் இல்லாத ஆயிரக்கணக்காணோருக்கு மனித உருவாக்க சட்டங்கள் என்ன செய்யும்...?
 *சுருக்கமாக கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டத்தால் வாழ்நாள் முழுவதும் தீமைகள் செய்வதையே மூலதாரமாக கொண்டு வாழும் மனித மூலங்களுக்கு முழுமையான தண்டனையே தர முடியாது.அவ்வாறு நீதியின் முன் நிறுத்தப்பட்டாலும் தனது ,பண,வர்த்தக,அரசியல் செல்வாக்கு பின்புலங்களின் மூலம் மிக எளிதாக நீதியின் கண்களிலிருந்து தப்பி விடுகின்றனர்.அஃதில்லாமல் சட்டமும் தன் கடமையே மிகச் சரியாக செய்து அவர்களுக்கும் மரண தண்டனை விதித்தாலும் அவர்கள் வாழ் நாள் முழுவதும் செய்த குற்றங்களுக்கு,அட்டுழியங்களுக்கு பிரதிபலனாக துடிக்கக்துடிக்க உயிர் போகும் வரை தூக்கு மேடையில் ஏற்றினாலும் அதிகப்பட்சமாக அரை மணி நேரம் மட்டுமே அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்.இந்த தண்டனை அவர்கள் செய்த அனைத்து தீங்குகளுக்கும் போதுமானதா..?
       ஆனால் இவ்வுலக சட்டங்கள் இவ்வாறு நடைமுறை படுத்தப்பட்டாலும் "கடவுள் இருக்கிறார்" எனும்போது அவ்வாறு சமுதாயத்தில் பிறர் நலன் கெடுப்பவனுக்கும் கொலைகள் பல செய்தவனுக்கும் அவன் எந்த அளவிற்கு கொலை,கொள்ளை போன்ற தனி மனித மற்றும் சமுக குற்றங்கள் செய்தானோ அவனுக்கு இறைவன் புறத்திலலிருந்து இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில் தண்டனை வழங்கப்படும்.

..எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே, அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.2:81

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். 4:56

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். 4:10

   இவ்வாறு தாம் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை இந்த உலகத்தில் போதிய அளவு தரப்படாது என்றிந்தாலும் மறுமையில் இறை புறத்தில் அதே அளவிற்கோ அல்லது அதை விட அதிகமாகவோ தண்டனைகள் வழங்கப்படும் என்ற நிலையே ஒருவன் உணரும் போது மனிதர்கள் மேற்கொள்ளும்  சமுக குற்றங்கள் குறைய வாய்பிருக்கிறதா...? இல்லையா...? அதுப்போலவே கருவறை ,இளவயது மரணம், விபத்தில் மரணம், இயற்கை சீற்றங்களில் மரணமானவர்கள் ஆகிய யாவருக்கும் அவர்கள் அதுவரை மேற்கொண்ட செயல்களின் அடிப்படையில் இறை புறத்திலிருந்து மீண்டும் வாழ்வு வழங்கி வெகுமதியோ,தண்டனையோ தொடர்ந்து வழங்கப்படும். மேலும் அதுப்போலவே ஏனைய உடல் ஊனங்கள் கொண்டவர்கள் தம் வாழ்வை பொறுமையாக இவ்வுலகில் மேற்கொண்டதற்காக பின்னுள்ள வாழ்வில் நிரந்தர நல்வாழ்வு அமைத்து தரப்படும்.
    மனித மனங்கள் தங்களது மனசாட்சியின் படி இறைவழிகாட்டுதல் இல்லாமல் வாழ்ந்தாலே போதுமானது எனும் போது ஒருவருக்கு தவறேன படுவது பிறிதொருவனுக்கு சரியேனப்படும் எனவே மனச்சாட்சி என்பது ஒரு தற்காலிக தீர்வை மட்டுமே ஏற்படுத்தும்.அவ்வாறு தனது மன இச்சையின்படி வாழ்வை மேற்கொள்ளும் போது ஏற்படும் தவறுகள் தவிர்க்க இயலாதாக ஆகிவிடுகிறது எனவே நாளுக்கு நாள் இவ்வுலகில் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன அதற்கு கீழுள்ள FBI யின் குற்றவியல் சார்ந்த ஆய்வறிக்கையே சான்றாக இருக்கிறது மேலும் மனித சட்டங்களாலும் பொதுவான நீதியே மனிதக்குல முழுமைக்கும் ஏற்படுத்த முடியாது. இறைவன் உண்டு என்பதை உணர்ந்து அவனது மறுமை தண்டனைக்கு பயந்து வாழ்வை மேற்கொண்டால் மட்டுமே இவ்வுலகம் நேரிய பாதையில் இயங்க முடியும். எனினும் அதைப்பொருட்படுத்தாமல் தீமையே நாடுவோருக்கும் நிலையான தண்டனை இறைவனிடத்தில் உள்ளது.,

கற்பழிப்பு


கள்ளநோட்டு புழக்கம்
வங்கிக் கொள்ளை
போதைப்பொருள் உபயோகம்
தனி மனித கொலைகள்
சொத்துக்கள் தொடர்பான...
வன்முறைகள் தொடர்பான...


நிலுவையிலுள்ள வழக்குகள்


           உண்மையான பகுத்தறிவாளர்கள் இப்போது சொல்லட்டும்
                          நிதியே மிஞ்சும் நீதி எதில் சாத்தியமென்று!

  இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று "ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)" என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான். 6:30  
                                      
                                                        அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Wednesday, September 22, 2010

அமைதி காப்போம்

பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி அலஹபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.


 வதந்திகள், உணர்ச்சியை தூண்டக்கூடிய பொய்ப்பிரச்சாரங்கள் முதலியவற்றிற்கு பதிலளிக்கவோ எதிர்வினைகளில் ஈடுபடவோ வேண்டாம். இதுபோன்ற விஷமிகளின் வன்முறையை தூண்டும் முயற்சிகளுக்கு நாம் பலியாகிவிட்டால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஏற்படும் எனவே இவர்களின் இம்முயற்சிகளுக்கு அடிபணிந்து விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது. இப்பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நாம் முயற்ச்சிகளை மேற்கொள்வோம் இன்ஷா அல்லா.

எனவே பொதுமக்கள் கீழ்காணும் வழிமுறையை கடைபிடித்து பொறுமையுடன் அமைதி காப்போம்

  1. வதந்திகளுக்கு செவிசாய்க்க, பரப்புவதற்கு உதவ வேண்டாம்
  2. மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய SMS அனுப்ப வேண்டாம் அது பிரார்தனையாகவோ செய்தியாகவோ அல்லது நீதிமன்ற தீர்ப்பாக இருந்தாலும் சரியே
  3. முஹல்லா அல்லது ஏரியா சமுதாய தலைவர்கள் காவல்துறையினரின் தொடர்பில் இருக்கவேண்டும்
  4. ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக தெரிந்தால் உடனேயே அதனை காவல்துறையினரிடம் தெரியப்படுத்திவிடவேண்டும்
  5. இளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம், எனவே தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும்
  6. நீதித்துறையின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கவேண்டும் எனவே நீதிமன்ற தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் . அதில் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கும் வழிவகை உள்ளது
அமைதிக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து பாடுபட வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அனைத்து தரப்பு மக்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .

எதிர்காலத்தில் உலகளாவிய தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில் உள்ளதால் முழு உலகமே இந்தியாவை உற்று நோக்கிக்கொண்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்

Monday, September 20, 2010

இறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் -"மலக்குகள்"

                                               ஓரிறையின் நற்பெயரால்...
    சமீபத்தில் நாத்திக நண்பருடன் நடந்த உரையாடலின் போது மலக்குகள் இருப்பதை விஞ்ஞான ரீதியாக நிருபிக்க முடியுமா? என தொடர்ந்த அவரது கேள்வியின் விளைவே இக்கட்டுரை. மலக்குகள் இருப்பதை விஞ்ஞான அடிப்படையில் நிருபிக்க முடியாது.அப்படியென்றால்.... 
 மேன்மைமிகு மலக்குகள் குறித்து முஸ்லிம்களுக்கு ஒரு புரிதலுக்காகவும், அஃதில்லாதவர்களுக்கு சிறு விளக்கமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை

இறையின் படைப்பில்

    இறைவன் தன் எண்ணத்திற்கேற்ப (தேவைக்கேற்ப அல்ல)தனது படைப்பை பற்பல நிலைகளில் ,கோணங்களில்,சுழலில் உருவாக்கி இருக்கிறான்.அவ்வாறு உருவாக்கப்பட்ட படைப்பினங்களை நாம் ஐந்து பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.

1.மலக்குகள்

2.ஜின்கள்

3.மனிதர்கள்

4.மனிதர்கள் அல்லாத இவ்வுலகில் உள்ள ஏனைய உயிரினங்கள் மற்றும்

5.உயிரற்ற பொருட்கள்

இங்கு மலக்குகள் குறித்து மட்டுமே பார்ப்பதால் ஏனைய படைப்பினங்கள் பற்றிய பார்வை வேண்டாம்.மேலே உள்ள பட்டியல் அப்படைப்பினங்களின் தரத்திற்கேற்பவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.ஆக மலக்குகள் மனித,ஜின் வர்க்கங்களை விட உயர்ந்த படைப்பு என்பது தெளிவு! அதை அடிப்படையாக வைத்தே இனியும் கட்டுரையை தொடருங்கள்.

மலக்குகள் யார்?

இறைனின் ஏவல்களை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்களே மலக்குகள். அவனின் அனைத்து ஆணைகளுக்கும் உடன்படுவதே அவர்களின் தனிச்சிறப்பு. மேலும்,அதுவே அவர்கள் படைக்கப்பட்டதன் நோக்கமும் கூட,

...அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 சுருக்கம்)
      இவ்வாறு இறை படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மலக்குகள் மேற்கொள்ளும் செயல்கள் குறித்து குர்-ஆனில் சிலவற்றை பார்ப்போம்.
     பொறுப்புகள் பல அவர்கள் மீது சாட்டப்பட்டாலும் மனித சமுகத்தோடு அவர்களுக்கு உள்ள மிக முக்கியமான தொடர்புகள் குறித்து,

    *இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனுடைய தூதுவர்களுக்கு இறை புறத்திலிருந்து வெளிபடும் வேத வெளிப்பாட்டை (வஹீயை) அறிவிப்பது அவர்களின் தலையாய பணியாகும்.
அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்" என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான். (16:02)

*மனிதர்கள் மேற்கொள்ளும் நன்மை/தீமைகளின் அடிப்படையில் அமைந்த அனைத்து செயல்களையும் பதிவு செய்கின்றனர்.
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- (50:17)
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.(82:10-12)

*மனிதர்களுக்கு தாயின் கர்ப்ப அறைக்குள் உயிர் ஊதுவதும்,மனித வாழ்நாள் தவணை முடிந்ததும் அவர்களின் உயிரை கைப்பற்றுவதும் அவர்கள் செய்யும் பிறிதொரு பணியாகும்.
"உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், "மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும். (32:11)
ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும், (47:27)

     மலக்குகள் செயல் பாட்டை மேற்கூறிய வசனங்களில் அறியலாம். மேலும் அவர்களை குறித்து அறிய...
அவர்களுக்கு மனிதனோடு கொண்ட தொடர்பு பற்றி
(2:30, 2:34, 7:11, 17:61, 18:50, 20:116, 38:73, 13:11, 82:10,86:4, 8:12, 40:7, 42:5, 3:123-126, 8:9,10) 

இறைவனுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி
(2:30, 39:75, 40:, 42:5, 79:1-3)

பிற
(3:42, 2:98, 6:111,158, 15:78, 16:2,33, 25:21, 41:30, 97:4, 6:9, 17:95, 35:1, 37:149,150, 43:19, 53:26-28)
இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி,மலக்குகளுக்கு தனியானதொரு சக்தியோ,இறைவனுக்கு தன் தேவையின் அடிப்படையிலோ அவர்களுக்கு அச்செயல்பாடுகள் வழங்கப்படவில்லை.மாறாக இறைவனின் வல்லமையின் ஒரு வெளிப்பாடாகவே இது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏனெனில் தன் திருமறையில்

 அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்; 'ஆகுக!' என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது. (40:68)
மேலே குறிப்பிடப்பட்டவை மலக்குகள் குறித்த ஆன்மிக பார்வை
இனி,.

மலக்குகள் இருப்பதை அறிவியலால் நிருப்பிக்க முடியுமா...?
     மலக்குகள் மனிதனை போன்றே ஒரு படைப்பை தவிர மனித படைப்பின் எத்தகையை அம்சமும் அவர்களுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் வைத்து தொடருங்கள்.,
    அறிவியல் கோட்பாடுகளுக்கும்,இறைவனின் வார்த்தைகளான குர்-ஆனிய கோட்பாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்., இன்று நம்மிடையே அறிவியல் என உள்ளவைகளை, அவை எவ்வாறு ஏற்பட்டது,ஏற்படுத்திய விளைவு முதலிய காரணிகளை கையில் வைத்து கொண்டு,பிறகே நாம் அதை உண்மை என்கிறோம்.
   ஒரு எளிய நிகழ்வுதாரணம், இன்று நம் கையில் இருக்கும் வானவில் குறித்த வரைவிலணத்தின் படி அவை எப்படி ஏற்படும், ஏன் ஏற்படும்,எவ்வளவு நேரம் ஏற்படும் போன்ற தகவல்களை மிக துல்லியமாக தர முடியும்., அதற்கு (மாறுபடாமல் இருப்பதற்கு) பெயர் தான் அறிவியல், காரணம் பல்வேறு கால சூழ்நிலைகளில், நேரங்களில், இடங்களில் ஏற்பட்ட வானவில் தோற்றங்கள் குறித்த நிகழ்வுகளை ஒருசேர இணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் வானவில் குறித்து மிக தெளிவாக அறிகிறோம்.
     இவ்விடத்தில் ஒன்றை நன்றாக கவனியுங்கள் நமக்கு கிடைக்கபெற்ற ஒரு முழுமைப்பெற்ற செயல் வடிவத்தை வைத்து கொண்டே அதன் தொடர் செயலாக்கம் மற்றும் ஏற்கனவே அவை செயல் பட தொடங்கிய விதம் குறித்து உண்மையே வெளிபடுத்த முடியும்., மாறாக உலகில் முன்முதலில் வானவில் தோன்றுவதற்கு முன்பே இன்னின்ன காலங்களில் நேர அளவில் நிறங்களில் வானவில் தோன்றும் என யாரும் கூறவில்லை. இதற்கு விளக்கம்- எந்த அறிவியலாரிடமும் இருக்கிறதா...?வானவில் குறித்து அவர்கள் அறியாததே- என்ற ஒரு காரணமே விடையாக இருக்கும், மேலும் இன்று நாம் வகுத்திருக்கும் வானவில் குறித்த கோட்பாடுகள் அனைத்தும் நம் கண்ட ஆய்வின் அடிப்படையில் மட்டுமே கோட்பாடுகளாக வைத்திருக்கின்றோம்.மேலும் இதற்கு மேல் எந்தவித கோட்பாடும் வானவில் குறித்து இனி மாறாது என எவரும் சொல்ல முடியாது. இன்னும் பல ஆண்டுகள் கழித்து வானவில்லில் நிறப்பிரிகை மாறுபாடோ,தோன்றும் கால அளவில் ,சுழலில் மாறுபாடு ஏற்பட்டாலோ யாரும் இதுகுறித்து யாரும் ,ஏற்கனவே வானவில் குறித்து கூறப்பட்ட கோட்பாடுகள் பொய்யென கூற மாட்டார்கள் .மாறாக வானவில் குறித்த "அறிவியல் கண்டுப்பிடிப்பில்" மேலும் ஒரு மைல்கல் என பெருமிதம் கொள்வார்கள். ஆக,நம் கண முன் தெரியும் நிதர்சனமான உண்மைகளுக்கேற்ற வகையில் காரணத்தை மெல்ல மெல்ல அறிவதே அறிவியல்!,
         அதே போலத்தான் சந்திர /சூரிய கிரகணங்களும் இன்னும் 1000 வருடங்கள் கழித்து கூட எப்போது ஏற்படும்,எந்த நாட்டில் எவ்வளவு நேரம் தெரியும் என்பதை மிக துல்லியமாக சொல்ல முடிந்த அறிவியலாருக்கு முதல் கிரகணங்கள் ஏற்படுவதற்கு முன்பு இப்படி ஒரு கிரணக செயல் பாடுகள் ஏற்படுதல் குறித்த எந்த வித தகவல்களும் இல்லை., அதேபோலத்தான் ஏனைய பிற அறிவியல் செயல் பாடுகளும். எனவேதான் EXPIRY தேதிக்கு முன்னே கெட்டு போகும் உணவு பொருட்கள் மற்றும் EXPIRY தேதி முடிந்தும் செயல்படும் பாட்டரி போன்ற வேதி பொருட்களுக்கு அறிவியல் முரண்பாட்டை நாம் முன்னிருத்துவதில்லை
                இதற்கு நேர்மாறாக இஸ்லாத்தின் அடிப்படை இருக்கிறது.(அறிவியலுக்கு மாற்றமாக அல்ல,மேற்குறிப்பட்ட செயல்முறை விதிக்கு மாற்றமாக) இஸ்லாம் தன்னுடைய கோட்பாடுகளையும்,கொள்கைகளையும் மிக அழகாக, தெளிவாக மற்றும் விரிவாக முன்மொழிந்து, மேலும் அக்கொள்கைகள் எக்காலத்திருக்கும், யாருக்காகவும் எதற்காகவும் நெகிவுதன்மையடையாது என பிரகடனபடுத்திய பிறகே மனித சமுகத்திற்கு தன்னை அறிமுகப்படுத்துகிறது.அவ்வாறு விளக்கப்பட்ட அக்கொள்கைகளை செயல்படுத்த காரணங்களையும் கூறியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளில் மிக முக்கியமானது "மறைவானவற்றின் மீது நம்பிகை வைப்பது" இதன் கீழாக தான் நாம் பார்க்கும் மலக்குகள் சார்ந்த கோட்பாடுகள் வருகிறது.
         ஆக மலக்குகளின் தன்மையை விளக்கி அவர்களை இந்த உலகில் யாரும் நிகழ்வின் அடிப்படையில் அறிந்து கொள்ளமுடியாது என தெளிவுறுத்திய பின்னரே அவர்கள் குறித்த இன்னபிற நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்கிறது. குர்-ஆன் இத்தெரிவை யாரும் கேள்வி எழுப்பாமலே அவை குறித்து தன்னிலை விளக்கம் அளிக்கிறது. எனவே இன்று மலக்குகளை ஏற்க/நம்ப மறுப்போர் எவரும் மலக்குகள் குறித்து பேசும் போது அவர்(மலக்கு)கள் தொடர்பான மூலங்கள் குர்-ஆன்லிருந்தே பெறப்பட்டன என்பதை மறந்து விடக்கூடாது., எனவே யாரும் அறியாத ஒன்றை பற்றி அதற்கு ஒரு வரைவிலக்கணமும் கொடுத்து (அதுவும் யாரும் அதுகுறித்து கேள்வி கேட்காமலே)நிகழ்வின் அடிப்படையில் இவ்வுலகத்தில் யாரும் உணர்ந்து கொள்ளவும் முடியாது என அச்செயலுக்கு முழு வரையறை தரும் போது அறிவியல் ரீதியாக என்ன முரண்பாடு இருக்கிறது ஏனெனில் அறிவியலுக்கு முரண்படும் செயலானது,நிருப்பிக்கபட்ட அறிவியல் ஆய்வோடு நாம் ஒப்பிடும் ஒரு சோதனை முற்றிலும் வேறுபடுவதே ஆகும். மலக்குகள் குறித்து விஞ்ஞான ரீதியான ஒரு வரைவிலக்கணமோ அல்லது எந்த ஒரு அறிவியல் சோதனையோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே இங்கு அறிவியல் முரண்பாட்டிற்கு வேலையே இல்லை.
    அதுபோலவே ஏனைய மறுமை கோட்பாடுகள் குறித்த அறிவியல் நடவடிக்கையும்.,முரண்படாத அறிவியலுக்கு பொருந்தக்கூடிய எந்த செயலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே!ஒளியின் வேகத்தை விட,மிக வேகமாக செயல்படும் மலக்குகள் குறித்த ஆய்வை மனித உருவாக்க கருவிகளால் கண்டறிய முயல்வது எப்படி சாத்தியம்...அதுவும் அவர்கள் தனித்தன்மை தெளிவாக,விரிவாக கூறப்பட்ட பிறகும்...?
                                       அல்லாஹ் மிக்க அறிந்தவன்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!