கடந்த 2002 குஜராத் கலவரங்களின் போது, குல்பர்க் சொசைடி என்ற பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி. யான இஹ்ஸான் ஜாஃப்ரி இந்துத்துவாவினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த அவரது மனைவி ஜாகியா ஜாஃப்ரி, இஹ்ஸான் ஜாஃப்ரி தனது வீட்டிலிருந்து கொலைவெறி பிடித்த கும்பலால் இழுத்து வரப்பட்டு, அவரது உடைகள் கிழிக்கப்பட்டு, வெட்டப்பட்டு பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டார்; இதனை எனது வீட்டின் முதல் தளத்தில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தேன் என்று அழுதவாறே நீதிமன்றத்தில் கூறினார்.
3000 பேர் கொண்ட ஆயுதம் தரித்த கும்பலால் தாக்குதலுக்குள்ளான அன்றைய தினத்தில் (ஃபிப்ரவரி 28, 2002) தானும் குல்பர்க் சொசைடியைச் சேர்ந்த மக்களும் எவ்வாறெல்லாம் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோஷி முன்னிலையில் விளக்கினார் திருமதி ஜாகியா. கோத்ரா ரயில் விபத்து நடந்த அடுத்த நாள் நடந்த இக்கொடூரத் தாக்குதலில் மட்டும் மொத்தம் 69 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் அவர் அந்த துயர சம்பவத்தை விளக்கிக் கூறுகையில், வெறிபிடித்த கூட்டம் ஒன்று குல்பர்க் சொசைடியின் வாயிலையும், ஒருபக்க சுற்றுச்சுவரையும் உடைத்துக் கொண்டு உள்நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வாள்களாலும், இன்ன பிற ஆயுதங்களாலும் தாக்கியது; பல உயிர்கள் பறிக்கப்பட்டன; அவர்களது உடல்கள் எனது வீடெங்கும் பரவிக் கிடந்தது என்று கூறினார்.
போலீசார் மாலை நேரத்திலே சம்பவ இடத்திற்கு வந்த பிறகே நான் முதல் தளத்திலிருந்து கீழே வர முடிந்தது. கீழே வந்து பார்த்த போது, வராண்டாவில் எனது பக்கத்து வீட்டுக்காரரான கஸம்பாயினுடைய மனைவியின் உடலும் கர்ப்பிணியான அவரது மருமகளின் உடலும் மோசமாக பாதிக்கப்பட்டு கிடந்தது; அந்த கர்ப்பிணிப்பெண் வயிற்றுப் பகுதியில் கத்தியால் கிழிக்கப்பட்டிருந்ததால் அவரது கர்ப்பம் வெளியில் கிடந்தது என்றும் ஜாகியா கூறினார். தனது வீட்டின் பின்புறமும் பல உடல் கிடந்ததாக மேலும் அவர் கூறினார். பின்னர் அவர் எதிர்தரப்பு வழக்கறிஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.
2002ல் நடைபெற்ற குஜராத் கலவரம் முஸ்லிம்களுக்கு எதிராக ஆளும் அரசே கட்டவிழ்த்து விட்ட ஒரு இன அழிப்பு என்றும், மதச்சார்பற்ற இந்தியாவின் இறையாண்மைக்கே ஏற்பட்ட அவமானம் என்றும் மனித உரிமை அமைப்புக்களும், சமூக நல ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். குஜராத் அரசு நீதிமன்றங்களின் கண்டணங்களுக்கு ஆளானதும், கலவரம் குறித்த பல்வேறு வழக்குகள் குஜராத் நீதிமன்றங்களிலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதும், குஜராத் கலவரத்தை காரணம் காட்டியே முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விசா வழங்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment