(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார்.அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா -ஆசிரியர்)
அயோத்திப் பிரச்னை குறித்து திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க. காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன். நான் கேட்டது மட்டுமில்லை ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும் மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றன.
கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங், ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம் முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமைந்திருந்தன.
கோல்வால்கரின் பாசிச கருத்துகள்
பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும் கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரின் கோட்பாடு. இந்திய தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும் அவர் நிராகரிக்கிறார். ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின் இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகிய இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். அவரது எழுத்துகள் அனைத்திலும் ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம் வெளிபடுகின்றது. தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.
ஹிட்லரின் பாசிசத்தை பெரிதும் பாராட்டி தனது (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன்ஹுத் டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
'தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது.'
இன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:
'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.' முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது.
நாம் வாழும் இந்திய ஒரு பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின் எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு. கோல்வால்கரின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின் விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.
'பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.
'கோடிக்கணக்கான இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின் விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த வேண்டும் என்பதே.'
பாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை என்று கூறுகிறார் திரு.கணேசன். 450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத் தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சந்தித்தேன்.
ராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்?
அயோத்தி காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.
வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
'இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது. 16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.'
அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது. அதில்:
'மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை கிடைக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்'
இது மட்டுமா?
டாக்டர் ராதி சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின் 458ம் பக்கத்தில் புகழ் பெற்ற ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான் பொறுப்பு என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில் உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சுக்லா தெரிவிக்கிறார்.
பாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால் கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார். (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162)
பாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்?
திரு. கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன? அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா? பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா?
பாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு. இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும். பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் மாட்டிறைச்சி உண்ணாதே என்றும் மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை இடித்திருப்பாரா? மக்களுக்கு புரியும் மொழியில் ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில் இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும் தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க மாட்டார்கள். பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள். இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம். காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்.
No comments:
Post a Comment