Thursday, January 6, 2011

நாம் நமக்காக படிக்கின்றோம்

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து,நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.

அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள்  :
நல்ல கல்லூரியில் இடம் : அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் குறைந்த (அரசு நிர்ணயித்த) கட்டணத்தில் எளிதில் இடம் கிடைக்கின்றது. மதிப்பெண் குறையும் போது பல லட்சம் கொடுத்துதான் இடம் (சீட்) வாங்க வேண்டியுள்ளது அல்லது தரம் குறைந்தகல்லூரியில்தான் இடம் கிடைகின்றது. மேலும் அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் மட்டுமே இடம் கிடைக்கும்.

நல்ல தரமான கல்வி :  நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதால் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நமக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கின்றது. இதன் மூலம் நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) வளர்கின்றது. மேலும் பட்ட படிப்பிலும் அதிக மதிப்பெண் எடுக்க முடிகின்றது. குறைவான மதிப்பெண் எடுத்து தரமற்ற கல்லூரிகளில் சேர்வதினால் பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் ஃபெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது.

வேலை வாய்ப்பு : நல்ல கல்வி கிடைக்கும் போது நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities)  வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேருவதற்கு ஆங்கில பேச்சாற்றல், (English speaking skill) பிறருடன் கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill)வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம். 

 
மேலும் படிக்கும் காலத்தில்  பிற கல்லூரிகளில் நடக்கும், (நாம் படிக்கும் துறை சார்ந்த) போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும், வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன. இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கான வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும்.    தரமற்ற கல்லூரிகளில் படிக்கையில் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாக இருக்கும் போது பிற திறன்களை வளர்த்துகொள்ள இயலாமல் போகின்றது.

கல்வி உதவி :  அதிக மதிப்பெண் எடுத்தால் கல்வி உதவி எளிதில் கிடைக்கின்றது. ஏனெனில் கல்வி உதவி செய்யும் செல்வந்தர்கள் முதலில் பார்ப்பது மதிப்பெண்னைத்தான், பிறகுதான் குடும்ப வறுமையை பார்கின்றார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் வறுமையான குடும்பமாகஇருந்தாலும் கல்வி உதவி செய்ய தயங்குகின்றனர்.  அதிக மதிப்பெண்எடுப்பவர்களுக்கு அரசும் பல்வேறு உதவி தொகைகளை வழங்குகின்றது.உதாரணத்திற்க்கு +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ.1000  வழங்குகின்றது.

அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்
 நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால்  நமக்குநம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம், என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level).  இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். என்னால் இது இயலாது, எனக்கு வசதி இல்லை, பெற்றோர்கள் படிப்பறிவில்லாதவர்கள் எனக்கு உதவ யாரும் இல்லை, எனக்கு படிப்பு வராது போன்ற எதிர்மறை சிந்தனைகளை (Negative thoughts) தூக்கிபோடுங்கள். ஒரு காரியம் நம்மால் இயலாது என நினைக்கலாம், ஆனால் நம்மை படைத்த இறைவனால் அது இயலும். இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாதநம்பிக்கை வைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

உறுதியான நம்பிக்கை இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள்அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், நிச்சயம்அல்லாஹ்வின் உதவியோடு அதை உங்களால் சாதிக்க முடியும், நமக்கு பண வசதி இல்லாமல் இருக்கலாம், நம் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம் இப்படி  என்ன தடை இருந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெரிந்து நமக்கு உதவி செய்ய அல்லாஹ் இருகின்றான்.

 "(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்". (அல் குர் ஆன் : 33:3 ).

நமக்கு உதாவாமல் போவதற்க்கு அல்லாஹ் இயலாதவனோ, இரக்கம் இல்லாதவனோ இல்லை.  உங்களுக்கு உதவ அல்லாஹ்விடம் செல்வமும் உண்டு, பேரறிவும் உண்டு, கொடுக்கக்கூடிய கருனையும் உண்டு. அல்லாஹ்விடம் கேளுங்கள் அல்லாஹ் நிச்சயம் உங்கள் கனவை நினைவக்குவான் .

 ".....நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது".  (அல் குர் ஆன் : 30: 47 ).

 நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்பதற்க்கு ஒரு வழியும் இல்லையே என கவலை பட வேண்டம், நமக்கு அல்லாஹ் இருக்கின்றான் வழிகாட்டுவதற்க்கு.

"அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்". (அல் குர் ஆன் : 26 : 62).


ஆர்வம்

  
எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “இந்த பாடம் கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது,” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, சில பாடங்கள் ஒரு முறை படித்தால் புரியும், சில பாடங்கள் பல முறை படித்தால் புரியும். நீங்கள் கடினம் என நினைக்கும்பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். முயற்சி எடுத்துமீண்டும் மீண்டும் படித்தால் எல்லா கடினமான பாடங்களும் எளிதாகிவிடும்.விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

மறதி :
மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால்படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன்கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம்செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டுகேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில்இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது, இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பதுமுழுமையா நமது மனதில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.

மறதியை போக்க  :
கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டுகேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study)தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள்.ஆர்வமாக படித்தால் எதுவும் மறக்காது

நாம் நமக்காக படிக்கின்றோம் : 
நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான், என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும். (இன்ஷா அல்லாஹ்)

சினிமா பாட்டு கேட்க்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை வளர்த்துகொள்ள பயன்படுத்தவேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும்,கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதேவேலையாக அலைகின்றனர்.  இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)

கடின உழைப்பு

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டோம், இனிமேல் படிக்க வேண்டாம் எல்லம் தானாக நடந்துவிடும் என்று படிக்காமல் இருக்கக் கூடாது. அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்துவிட்டு கவனத்துடனும் படிக்க வேண்டும்,  கடுமையாக உழைக்க வேண்டும்.


  "நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்."  (அல் குர் ஆன் : 29: 69).



1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும்,படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும்,ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.

 2. எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட  எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது  அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும், எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.

3. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் :  படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.


4. குறிபிட்ட பாடத்திற்க்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது : பொறியியல் சேர்வதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதே போல் மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல்,விலங்கியல்) முக்கியமானதாகும்.  எனவே குறிபிட்ட பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

தேர்வு எழுதும் முன்

தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை  படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம்

1. படிக்கும் முறை  : பொதுவாக நாம் தேர்விற்க்காக  படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு,  படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை  கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

2. திட்டமிடுதல் :  எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால்  நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி  நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும். இதில் நாம் 10 மணி நேரம் படிபதற்க்காக செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள 2 மணி நேரத்தில் படித்ததை மீண்டும் நினைவில் நிறுத்த (Revise பன்ன) பயன்படுத்த வேண்டும். அதே போல் நாம் படிக்கும் ஒவ்வொறு  மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிறுத்த (Revise பன்ன) பயன்படுத்த வேண்டும்.

 3. சுயபரிசோதனை  (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுயபரிசோதனை செய்ய (Check - பன்ன) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம், இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதைஅறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது)வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும்.மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.

4. தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும் போதே படிப்பதை நிருத்திகொள்ள வேன்டும், புதிதாக எதையும் படிக்காமல் இது வரைபடித்ததை நினைவில் நிறுத்த (revise பன்ன) வேண்டும். எனவே நாம் திட்டமிடும் போது (Time table- போடும் போது) தேர்விற்க்கு 2 அல்லது 3வாரத்திற்க்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்து விடும் படியாக திட்டமிட வேண்டும்.

5. பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும், எதாவது பாடம் கடினமாக இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

. ……. என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக! (அல்-குர் ஆன் 20 : 114)
 by siddiq

முஸ்லிம்களுக்கு உயர்பதவிகளில் அறியவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கீழ்கண்ட தமிழக அரசின் உயர் பதவிக்கான (GROUP 1 ) வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மிக முக்கியமானது ஆகும். தமிழக அரசின் உயர்பதவிகளை நம் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் எட்டிப்பிடிக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுத்துவரும் இவ்வேளையில், இத்தேர்விற்க்கு நம் சமுதாயதிணை சேர்ந்தவர்கள் முன்னுரிமை கொடுத்து, எல்லா ஜும்மாவிலும் முன்னறிவிப்பு செய்தும், நம் சமுதாயத்தில் தகுதி உள்ளவர்களை இத்தேர்வை எழுதும்படி உடனடி பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் இது களத்தில் இறங்கவேண்டிய தருணம். இதை மற்ற இணையதளத்திலும் செய்தியாக வெளியிட்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இத்தேர்விற்காண விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 28-01-2011 ஆகும்.


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION NOTIFICATION / ADVERTISEMENT
Applications are invited upto 5.45 p.m. on 28-01-2011 for direct recruitment to the vacancies in the following posts included in Group-I Services (Service Code. 001):-.

Name of the Post Service                               

1. (i) Deputy Collector Tamil Nadu Civil Service                                                                                
No. of vacancies           33

(ii) Deputy Collector           
No. of vacancies:           23*
(Backlog vacancies for
SC/ST candidates only)                                                                     
(22 SC and 1 ST backlog vacancies in recruitment by transfer)

2. Deputy Superintendent of Police
(Category-I) Tamil Nadu Police Service
No. of vacancies: 29

3. Assistant Commissioner 
(Commercial Tax Officer)
Tamil Nadu Commercial Taxes Service
No. of vacancies    28

4. District Registrar
Tamil Nadu Registration  Service
No. of vacancies: 7

5. Assistant Director of Rural Development Department
No. of vacancies:  10
Tamil Nadu Panchayat Development Service

6. Divisional Officerin theFire                                                                                             
and Rescue Services
Department Tamil Nadu Fire and Rescue Services
No. of vacancies: 1 

Please visit for  more details:

http://www.tnpsc.gov.in/Notifications/257_not_eng_grp2k11.pdf
Thanks to MUJEEB.COM and ADIRAI MEERA

Sunday, January 2, 2011

எங்கே செல்லும் இந்த பாதை - பகுதி 5

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அஸ்ஸலாமு அலைக்கும்,

வருகிற ஜனவரி 14, 15 தேதிகளில் நம்மூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது, அதற்கான வேலைகளை அதிரைநிருபர் குழு, அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்து வருகிறோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏன்?

கல்வி விழிப்புணர்வு மாநாடு நடந்த வேண்டும் என்று 4 மாதங்களுக்கு முன்பே அன்பு சகோதரர்களிடமிருந்து பல கருத்துக்கள் கேட்டறியப்பட்டது, முஸ்லீம்கள் எல்லாவையிலும் பின்னதங்கியுள்ள நிலை தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இது இருந்து வருகிறது இதில் அதிரைப்பட்டினம் மட்டும் விதிவிலக்கா என்னா? கல்வி, அரசுவேலை, இந்தியாவில் வேலை போன்றவற்றில் தகுந்த வழிகாட்டல்கள் இல்லாத காரணத்தால் பின்னடைவில் இருக்கும் நம் சமுதாயத்தை தட்டி எழுப்ப கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு, அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட உள்ளது.  இன்ஷா அல்லாஹ்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏன்? இதை நடத்துவதால் என்ன பயன்? மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஏன் கலந்துக்கொள்ள வேண்டும்? என்று பலர் மனதில் தோன்றலாம், அவற்றிற்கான விளக்கத்தினை அனைவருக்கும் விளங்கும்படி எடுச்சொல்வது எமது கடமை.

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் நம்மூர் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் பள்ளிகள் மிக பழைமையானவை. இதில் படித்து பயனடைந்தவர்கள் பலர் என்பது உண்மை. தமிழகத்தில் நீண்ட காலமாக இஸ்லாமியர்கள் நடத்தும் ஆங்கில வழி பள்ளிகூடங்களில் இமாம் ஷாஃபி பள்ளியும் ஒன்று. இதில் பயனடைந்தவர்கள் பலர் இன்று நல்ல நிலையில் உள்ளார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் கடந்த 20 வருடங்களில் நம்மூர் கல்வி நிறுவனங்களின் கல்விதரத்தின் அடிப்படையில் நாம் கொஞ்சம் அலசிப்பார்த்தால், நமக்கு கிடைப்பது கீழே குறிப்பிட்டுள்ள சில கேள்விகள் மட்டுமே.

எத்தனை முஸ்லீம் மருத்துவர்கள் உருவாகினார்கள்? எத்தனை பேர் அதிரையில் உள்ள மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள்?

எத்தனை பெண் முஸ்லீம் மருத்துவர்கள் உருவாகினார்கள்?

எத்தனை பெண் ஆசிரியர்கள் உருவாகினார்கள்?

எத்தனை கல்லூரி ஆசிரியர்கள் உருவாகினார்கள்?

எத்தனை பேர் அரசு வேலைகளுக்கு சென்றார்கள்?

எத்தனை பேர் IAS IPS IFS ஆக உருவானார்கள்? எத்தனைபேர் இது தொடர்பான தேர்வுகளைப் பற்றியாவது அறிந்துள்ளார்கள்?

எத்தனை வக்கீல்கள் உருவாகினார்கள்? இதில் எத்தனைப் பேர் நம் சமுதாயத்துக்காக நீதிமன்றங்களில் வாதாடுகிறார்கள்?

எத்தனை பேர் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றார்கள்?

இன்னும் நிறைய கேள்விகள் நீண்டுக்கொண்டே போகும்.

மேல் சொல்லப்பட்டவைகள் அதிரைவாசிகள் மற்றும் முஸ்லீம்களிடம் நம்மால் கேட்கப்படும்  கேள்விகளே. பதில் இருக்குமா என்றால், அது குறைவே... எந்த குறிக்கோள்களும் இல்லாமல் செல்லும் நம் சமுதாய மக்களின் பாதை (எதிர்காலம்) எங்கே செல்கிறது? என்றாவது சீரியசாக சிந்தித்திருக்கிறோமா?

சரி நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனியாவது கொஞ்சம் சுதாரிக்க வேண்டாமா? சுதாரித்தே ஆகவேண்டும், இல்லையென்றால் காலம் போரப்போக்கில் வருங்கால சமுதாயத்தின் நிலை இஸ்லாமிய நிலையிலிருந்து தடுமாறி, ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிக்கும் அடக்குமுறைக்கு அடிபணிந்துக்கொண்டிருக்க போவது தொடரத்தான் போகிறது. அல்லாஹ் காப்பாத்துவானாக.

அதிரையில் நடக்கவிருக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சிறந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது, தமிழகத்தின் தலைச்சிறந்த மார்க்க பற்றுள்ள கல்வியாளர்கள் வருகைத்தர உள்ளார்கள் இவர்களின் அனுபவங்கள் ஆலோசனைகள் நிச்சயம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் ஹுசைன் கல்லூரி பேராசிரியர். டாக்டர். ஆபிதீன் அவர்களும், தமிழகத்தில் கல்வி விழிப்புணர்வுக்கு புகழ் பெற்ற CMN சலீம் அவர்களும் கலந்துக்கொள்கிறார்கள். இம்மாநாட்டில் சொல்லப்படும் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டல்கள் நிச்சயம் நல்ல பயனுல்லதாக இருக்கப்போகிறது. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இருக்கும்.

இனி, நம் சமுதாயத்தில் குறிப்பாக அதிரை போன்ற முஸ்லீம் ஊர்களில் நிறைய மருத்துவர்கள், IAS ஆபீசர்கள், IPS ஆபீசர்கள், IFS ஆபீசர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், உயர் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என்று மிகப் பெரிய பட்டாலத்தை உருவாக்க வேண்டும். இதற்கான சந்தர்பத்தை அதிரையில் நடைப்பெற உள்ள கல்வி விழிப்புணர்வு மாநாடு உருவாக்கப்போகிறது.  அன்பான மாணவ, மாணவிகளே, பெற்றோர்களே இந்த அறிய சந்தர்பத்தை பயன்படுத்தி கல்வியில் ஆர்வமுள்ள அனைவரும் வந்து கலந்துக்கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

-- தாஜுதீன்

Wednesday, December 29, 2010

இஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்

மும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொலுசன்ஸ் என்ற அமைப்புடன் இனைந்து மும்பை பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய நிதி கொள்கைகளை பின்பற்ற கூடியவையாக இருக்கும். இதில் தற்போது டாடா கன்ஷல்டன்ஸி சர்வீஸஸ், பாரதி டெல், ரிலையன்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் இனணைந்துள்ளன. இஸ்லாமிய பங்கு வர்த்தகத்தில் இணையும் நிறுவனங்கள், தக்வா அட்வைசரி நிறுவனத்தின் கடுமையான பரிசீலனைக்கு பிறகே வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதில் இனைய விரும்பும் நிறுவனங்கள், மது, சூதாட்டம், வட்டி  போன்ற வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.
இந்த பங்கு வர்த்தகத்தில் மத ரீதியான எந்த வித தடங்கலும் இல்லை. யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். ஆரம்பித்த நாள் முதல் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து இருப்பதாக மும்பை பங்கு சந்தை தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு, இந்தியாவில் முஸ்லிம்களி நிலை குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்கள் முதலீட்டு விவகாரங்களில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று கூறியிருந்தது

Tuesday, December 28, 2010

கேமரா பேனாக்கள்

கேமரா பேனாக்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் விஷமிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளம்பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். மொபைல் போன் மூலம் இளம் பெண்களை ரகசியமாக படம் எடுத்த சில விஷமிகளுக்கு வசதியாக தற்போது கேமரா பேனாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமான தோற்றத்தில் இருக்கும் பேனாவில் புள்ளி அளவில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. பேனா மேல் பகுதியை அழுத்தியதும் "ரெக்கார்டிங்' உறுதி செய்யப்படும்.இதன் மூலம் சகஜமாக பேசியபடி எதிரில் நடப்பதை ஆடியோவுடன் கூடிய வீடியோவாக பதிவு செய்யலாம். தைவான் நாட்டு தயாரிப்பான இதில் "2 பிக்சல்" கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் "4 ஜி.பி., முதல் 8 ஜி.பி., " வரை பதிவு கொள்ளலாம். யு.எஸ்.பி., போர்ட் மூலம் "சார்ஜ்' செய்வதுடன் வீடியோவும் "டவுன்லோடு" செய்யலாம். தமிழகத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பேனாவின் விலை 7 ஆயிரத்து 500 ரூபாய் . இளம் பெண்களே கேமரா பேனா விஷமிகளிடம் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள உஷாராக இருங்கள் .

               

Tuesday, December 14, 2010

மரண அறிவிப்பு


கடற்கரைத்தெரு மர்ஹூம் சிவத்த மரைக்காயர் அவர்களின் பேத்தியும்,துலுக்கா பள்ளி தெரு (நடுத்தெரு)மர்ஹூம் நெ.கா.மி.நெய்னா முஹம்மது சாஹிப் அவர்களின் மகளும்,மர்ஹூம் முஹம்மது மீரான் மரைக்காயர் அவர்களின் மனைவியும்,அப்துல் ரஜாக்,நெய்னா முஹம்மத்,தையுப்,முஹம்மது இப்ராஹீம் ஆகியோர்களின் தாயுமான ஹவ்வா அம்மாஅவர்கள் அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் உள்ள அவர்களின் வீட்டில் (செக்கடிக்குளம் வடக்கு)இன்று காலை மரணித்துவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா,இன்ஷா அல்லாஹ் இன்று மாலை தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மக்பிரத்துக்காகவும்,ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்கவும் துவா செய்யும் படி வேண்டுகிறோம்.

4:78.“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!.

6:61.அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.

மரண சிந்தனை 

Sunday, December 5, 2010

விதி! மாற்றமா -ஏமாற்றமா?

                                           ஓரிறையின் நற்பெயரால்
           அனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவுளே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை  கடவுள் நமக்கு வழங்க வேண்டும் .. நியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,
இப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக
"உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே....!"
  என்ற மாநபி கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.
                                                                                    
     பொதுவாக அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படித்தான் நடக்கிறதென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு விதி குறித்த இக்கருத்து அல்லாஹ்வின் பேராற்றலை பிரதிபலிக்கும் வல்லமையின் வெளிபாடாக சொல்லப்படுகிறது அதாவது இப்பூவியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளும் அவன் அறியாமல் நடந்தேறாது.
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்." 3:29
     எனினும் தர்க்கரீதியாக விதிக்கு கடவுளை காரணம் காட்டி தமது தீய செயலுக்கு நியாயம் கற்பிப்பது பொருத்தமான வாதமா?
   அல்லாஹ் மனித இனத்திற்கு ஏனைய படைப்புகளை போலல்லாமல் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுத்ததும் திறனுடன் படைத்திருக்கிறான். ஆக எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவன் தனது சிந்தனைக்கு உட்பட்டு இது தவறு இது சரி என தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். இன்று விதியின் மேல் பழிபோடும் ஒரு இறை நிராகரிப்பாளர் இறைவன் நாடியதால் தான் நான் இறை நிராகரிப்பாளான இருக்கிறேன் என்று கூறுவாரேயானால் அது அவர் இறை குறித்து தனது சிந்தனையை ஆராய முற்படாததே தவிர இறைவன் காரணமல்ல ஏனெனில் அஃது அவரது வீட்டில் திருட்டோ அல்லது அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டாலோ இதுவும் இறைவன் நாட்டப்படி (விதிப்படி) தான் நடக்கிறது என்று சும்மா உட்கார மாட்டார் அதை தொடர்ந்த ஆயத்த பணிகளை செய்து தான் தீருவார்,  அஃதில்லாமல் தமது வாழ்வாதார  தேவைக்கும், அதிகப்படியான பொருளாதார தேவைக்கும் நாமே முயன்று தேடித்தேடி நல்லவற்றை பெற முயலும் ஒருவர் இறைக்குறித்தும் அவனது போதனை குறித்தும் அறிய முற்படாமல் அவனது நாட்டத்தால் தானே நான் இறைவன் குறித்து அறியாமல் இருக்கிறேன் என்று கூறுவது அறிவுடைய வாதமா?
   இறுதியாக, அனைத்து நிலைகளிலும் இறைவன் தான் மக்களின் அனைத்து காரியங்களுக்கும் முழு முதற் பொறுப்பு என்று கூறி தீமையான செயல்களுக்கு விதி மூல(லா)ம் பூச முற்பட்டால் அதே இறைவன் தான் மனிதர்கள் எல்லா நிலையிலும் நல்லனவற்றை பின்பற்றி வாழ அந்தந்த கால கட்டத்தில் இறைத்தூதர்களை மக்கள் மத்தியில் அனுப்பியும் வைத்தான். அவர்களை பின்பற்ற வேண்டியதும் இறைவனின் நாட்டம் தானே அவர்களை பின்பற்ற தவறியது ஏனோ...? நாத்திகம் வளர்க்கும் பகுத்தறிவின் பதில் என்ன?
ஏனெனில் வேத வரிகள் மனித மனங்களைப்பற்றி கூறும் போது
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.9:115


    முடிவுற்ற ஒரு செயல் நமக்கு பாதகமாக அமைந்தாலோ அல்லது நன்கு முயற்சித்து மேற்கொண்ட ஒரு செயலின் விளைவு தோல்வியில் முடிந்தாலோ அங்கே விதி என்னும் அளவுகோலை அல்லாஹ் பயன்படுத்த சொல்கிறான்., ஏனெனில் அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெறவும் நம்மை நாமே தாழ்வு மனப்பான்மையில் ஆளாக்கி கொள்ளமாலும் இருக்க செய்வதற்கே; அதுப்போல நாம் ஒரு திறன் மிக்க செயலை மேற்கொண்டு கிடைக்கும் புகழ், பொருள் மூலம் நாம் (அதிகம்) கர்வமடையாமல் இருக்கமுமே எல்லாம் இறை நாட்டமே எனும் விதி அங்கு அவசியமாகிறது.,
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. -57:23
    ஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செயலாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்ததே  தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை
    ...மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. 53:39
                        
                                       அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Thursday, December 2, 2010

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் !

மகளின் தயவில் தாய் : 
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி 50
*குடிசைகள் கோபுரமாகும்*
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 7121
*விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
*தகுதியற்றவர்களிடம் பொறுப்பு*
'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று விடையளித்தார்கள். நூல் : புகாரி 59, 6496
*பாலை வனம் சோலை வனமாகும்*
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது நூல் : முஸ்லிம் 1681
*காலம் சுருங்குதல்*
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். 
(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். நூல் : திர்மிதீ 2254)

*கொலைகள் பெருகுதல்*
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

*நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்*
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல்: புகாரி 1036, 7121
*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016, 12079, 12925, 13509.
*நெருக்கமான கடை வீதிகள்*
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: அஹ்மத் 10306.
*பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

*ஆடை அணிந்தும் நிர்வாணம்*
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும். நூல் : முஸ்லிம் 3971, 5098

*உயிரற்ற பொருட்கள் பேசுவது*
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 11365

*பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்*
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511

*தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்*
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493
*பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்*
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493
*சாவதற்கு ஆசைப்படுதல்*
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.நூல்: புகாரி 7115, 7121

*இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: புகாரி 3609, 7121
*முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*
'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள். நூல்: புகாரி 3456, 7319

*யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.நூல்: புகாரி 2926

*கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.நூல் : புகாரி 5179
*யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 7119
*கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. நூல் : புகாரி 3517, 7117
*அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 5183
*எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 5191
*செல்வம் பெருகும்*
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. நூல் : புகாரி 1036, 1412, 7121
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 1424

*மாபெரும் யுத்தம்*
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

*பைத்துல் முகத்தஸ் வெற்றி*
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4.நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6.மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள். நூல் : புகாரி 3176

*மதீனா தூய்மையடைதல்*
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 2451
*அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 3546

*மாபெரும் பத்து அடையாளங்கள்*
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.
*புகை மூட்டம்*
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும். (அல்குர்ஆன் 44:10,11)
உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)  நூல்: தப்ரானி

*யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை*
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள். (அல்குர்ஆன் 21:96)

*ஈஸா(அலை) அவர்களின் வருகை*
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)

*மூன்று பூகம்பங்கள்*
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.

*பெரு நெருப்பு*
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.
இன்ஷாஅல்லாஹ் நேரம் கிடைக்கும் போது இதனையும் கேளுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த கியாம நாள் வரையிலான முன் அறிவிப்புகள். உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
இங்கே சொடுக்கவும் - >
நன்றி : இஸ்லாம் தமிழில்
அன்புடன்,
நாஷித் அஹமத் 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!