Wednesday, August 26, 2015

அதிரையில் சம்பவம்:புது மாப்பிள்ளை கடத்தி,சிறை வைப்பு!!

நமதூரில் கடந்த சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒரு வினோதமான, வக்கிரமான, கண்டிக்கத்தக்க பழக்கம் நிலவி வருகின்றது!  அதாவது, இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்றால், அவரின் ‘ஆப்த நண்பர்கள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் விடலைகள் உஷார் ஆகித் தமக்குள் திட்டம் போட்டுக்கொள்கிறார்கள்.

அது என்ன ?

‘எப்படியாவது புது மாப்பிள்ளையைப் புதுப் பெண்ணுடன் முதலிரவில் சேர விடக் கூடாது’ என்ற வக்கிரமான – நமதூர்ப் பரிபாஷையில், ‘பெரலி பண்ணும்’ – வன்முறைக் கலாச்சாரம்!  இதில் பல முறைகளைக் கடைப்பிடித்துக் காலித்தனம் செய்கின்றனர் நம் இளைஞர்கள்!

- புது மாப்பிள்ளையை அன்றிரவு happy ride என்று சொல்லி ஏற்றிக்கொண்டு, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்களில் அந்தத் ‘தோழப் பிள்ளைகள்’ வெளியூர்களுக்கு எங்காவது கொண்டுபோய் இரவு முழுவதும் மறைத்து வைப்பது.

- புது மாப்பிள்ளைக்கும் தோழப் பிள்ளை(!)களுக்கும்கூட அறிமுகமில்லாத கிராமப்புறங்களுக்குள் சென்று, அன்றிரவு முழுவதும் அரட்டை அடிப்பது. (இன்னொன்றும் அடிப்பார்களோ என்னவோ, தெரியாதப்பா.)

- எல்லோருமாகச் சேர்ந்து Second show சினிமாவுக்குப் போய், சினிமா பார்ப்பது! அந்தப் புது மாப்பிள்ளைக்கு சினிமாவில் கவனம் இருக்குமா என்ன?

- அல்லது, ஊரிலேயே, பெண் வீட்டுப் பந்தலிலேயே, புதுப் பெண்ணின் மனக் குமுறலுக்கு முன்னாலேயே, புது மாப்பிள்ளையைச் சூழ்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டு, அவனை வீட்டுக்குள் செல்லவிடாமல் அன்றிரவு முழுவதும் – அதாவது விடியும்வரை - ‘கேரோ’ பண்ணி வைத்துக்கொள்வது.

- அல்லது, புதுப்பெண் – புது மாப்பிள்ளையின் அலங்கார அறையில் கூடி அமர்ந்துகொண்டு, பெண்ணையும் மாப்பிள்ளையையும் முதலிரவில் தனிமையில் சந்திக்க விடாமல் தடுத்து வைப்பது.

- இத்தியாதி, இத்தியாதி.....

இது போன்ற ‘கழிசடைக் கலாச்சாரம்’ எங்கிருந்து கிடைத்தது இவர்களுக்கு?! திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், இரவும் பகலும் இதய வேட்கையால், என்னவெல்லாம் அந்தப் புது மணமக்கள் கனவு கண்டுகொண்டு இருந்திருப்பார்கள்!?  இதைத் தவிடுபொடியாக்கும் இந்தத் தறிகெட்ட பழக்கம் நம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வரலாமா?  அவர்கள் சிந்திக்கட்டும்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்!

“அப்புடித்தாண்டீ, என்னட மப்ளையையும் கடத்திக்கிட்டு போய்ட்டானுவ. இங்கே, வூட்லே வாப்பா கத்துறாஹ. காக்கா, மாமாமார் அங்கங்கே ஓடித் தேடினா, எங்கேயுமே இல்லெ!  கடைசீலே, அடுத்த நாள் காலைலே மொகத்தெத் தொங்க போட்டுக்குட்டு வந்தாரு என் மாப்ளே” என்று பழைய மணப்பெண் ஒருவர் அங்கலாய்ப்பது நம் காதில் விழுகின்றது!

இளைஞர்களே!  இஸ்லாமியப் பண்பாட்டின் பக்கம் திரும்பி வாருங்கள்!  வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உங்கள் Islamic Identity யைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்!

இது மட்டுமில்லை!  நமது பண்பாட்டிற்கே உலைவைக்கும் ‘வெடி வெடிப்பு’ப் பழக்கம்!  திருமணத்தன்று பின்னிரவில் செவிப்பறைகளைத் தாக்கும், கண் பார்வையைக் கெடுக்கும் வெடிவெடிப்பைச் சர்வ சாதாரணமாகச் செய்கின்றனர், திருமண வீட்டுக்குப் பக்கத்தில்!  பிறந்து சில நாட்களே ஆன சிறு குழந்தைகள், முதியோர்கள், இதய நோயாளிகள் போன்றோருக்குத் தீங்கு விளைக்கும் இந்த வெடிக் கலாச்சாரம் யாருடையது?  மாற்று மதத்தினர், கல்யாணமென்றும் கருமாதி என்றும் பாராமல், வெடி வெடித்துக் மகிழ்வர். அவர்களுடையதை நாம் பின்பற்றலாமா?  சிந்தியுங்கள், வாலிபர்களே!

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் சொன்னதை இங்கு உங்களுக்கு நினைவூட்டுவது பொருத்தம் என்று கருதுகின்றேன்:
من تشبه بقوم فهو منهم

(எவரொருவர் பிற சமுதாயத்தைப் போன்று செய்வாரோ, அவர், அவர்களைச் சார்ந்தவராவார்.)

மேற்கண்ட எண்ணக் குமுறலை எழுத்தில் வடித்து இணையத்தில் பதிக்க நினைத்துக்கொண்டிருந்தபோது என் பேரப்பிள்ளை ஒருவன் சொன்ன செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

அண்மையில் நமதூரில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினான்.  புது மணமக்கள் எப்படியோ, தோழப் பிள்ளைகளின் கண்ணைக் குத்திவிட்டு, மணவறைக்குள் நுழைந்துவிட்டார்களாம்.  இதையறிந்த ‘தோழப் பிள்ளைகள்’, ‘விடக் கூடாது இவனை’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு, பெண் வீட்டாரிடம், “அந்த ரூமைத் திறந்து தாருங்கள்” என்று அடம் பிடித்தார்களாம். ஊம்.....!  பெண் வீட்டார் அசைந்து கொடுக்கவில்லை!

“அப்டினா, நாங்க இந்த அறைக்கு முன்னாலேயே படுத்துக்குவோம்” என்று கூறி, அடுத்தடுத்துப் பரவலாகப் படுத்துக்கொண்டார்களாம் - இரவு முழுதும், விடியும்வரை!

“அடப் பாவமே!” என்று நான் ஆச்சரியத்துடனும் சினந்தும் உணர்ச்சியை வெளிப்படுத்தியபோது, அந்தப் பேரன் சொன்னான்:

“இல்லப்பா!  இந்தப் புது மாப்புளேயும் இதுக்கு முன் பலரின் கல்யாணத்திலும் இதுபோல் செஞ்சிருக்கான், அப்பா!”

என்னத்தச் சொல்ல?

அபூ பிலால்

http://www.adirainews.net/2015/08/blog-post_757.html#comment-form

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!