அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக குஜராத் கலவர வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் மூலம் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை மோடி புரிந்துள்ளதாக அமெரிக்கா நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு ஒன்று மனுத்தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் சம்மனை பெற்ற 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த கெடுவுக்குள் பதில் அளிக்காவிட்டால் ஒரு தரப்பாக தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே மனித உரிமைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு சர்வதேச சட்டத்தின் படி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இடம் உண்டு.
அந்த வகையில் தொடரப்பட்டுள்ள மோடிக்கு எதிரான வழக்கில் 2002-ம் ஆண்டு கலவரத்தின் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக இனபடுகொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் நிருபிக்கபட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும். குஜராத் கலவரத்திற்கு பின்னர் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது.
9 ஆண்டு கால விசா தடை மோடி பிரதமரானதும் அமெரிக்க அரசால் விலக்கிகொள்ளப்பட்டது. பிரதமர் ஆனதும் மோடி முதல் முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாடடு மண்ணில் கால் வைப்பதற்கு முன்பாகவே நீதிமன்ற சம்மன் அனுப்பபட்டுள்ளது.
இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அமெரிக்கா சென்றிருந்த நிலையில் 1984ஆம் ஆண்டு சீக்கியர் கலவரம் தொடர்பாக வழக்கு தொடர்ப்பட்டு நீதிமன்றம் சம்மன்கள் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment