பட்டுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில், தபால் துறைக்குச் சொந்தமான சில மூட்டைகள், கேட்பாரற்று கிடந்தன. சிறிது நேரத்துக்குப்பின், தபால் துறை ஊழியர் ஒருவர், சாவகாசமாய் வந்து அந்த மூட்டைகளை தஞ்சை செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு, முன்பக்கம் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். அதன்பின், விசாரித்த போது, அந்த மூட்டைகள், பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் என தெரிந்தது. பல மணி நேரம் அனாதையாக கிடந்த அந்த மூட்டைகளை வேண்டும் என்றோ, தவறுதலாகவோ யாரும் எடுத்து சென்றிருந்தால் விபரீதமாகி இருக்கும். பட்டுக்கோட்டையில் இருந்து, தஞ்சை வரை உள்ள விவசாய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் காய்கறி மூட்டைகளோடு மூட்டைகளாக பஸ்சில் இருந்து இறங்கும்போது எடுத்துச் சென்றிருந்தால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும்.
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் இந்த பகுதியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் விடைத்தாள்களை தனியாக ஒரு வேன் ஏற்பாடு செய்து சேகரித்து எடுத்துச்செல்வோம். விடைத்தாள்களை இன்ஸ்யூர்டு தபால் மூலம் பதிவு செய்வதாலும், மாணவ, மாணவியரின் எதிர்காலமே இந்த தபாலில் இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால், தற்போது திருச்சியில் உள்ள தமிழ்நாடு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவரின் தவறான உத்தரவின் பேரில், ஒவ்வொரு தபால் நிலையத்தில் இருந்தும், தனித்தனியாக பொதுத்தேர்வு விடைத்தாள்களை பஸ்களில் ஏற்றிச் சென்று, தஞ்சை ரயில்வே மெயில் சர்வீசில் சேர்க்க வேண்டும். அப்படி கொண்டு சேர்க்கும் போது தவறும் விடைத்தாள்களின் கதி என்ன என நினைத்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார். ஒரு சில மார்க்குகளில் எத்தனையோ மாணவர்களின் டாக்டர், இன்ஜினியர் கனவு கானல் நீராக போகிறது. இளைய சமுதாயத்தின் வாழ்க்கையையே மாற்றி போடக்கூடிய இந்த வினாத்தாள் மூட்டைகளை கொண்டு சேர்ப்பதில் கல்வித்துறை மற்றும் தபால்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
தினமலர்
No comments:
Post a Comment