Monday, October 27, 2008

“கிறித்தவ சகோதரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள்....?

இயேசுவின் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே’ என்ற வார்த்தைகளை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரார்த்தனைக் கூட்டங்களிலும் நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம். இந்த வார்த்தைகள் உரைப்பவர்களின் உதடுகளிலிருந்து வெளிப்பட்டு, கேட்பவர்களின் செவிகளோடு மட்டும் நின்று விடுகிறது என்பதே கசப்பான உண்மை.

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மதம் மாறியவர்களே. இருந்தபோதும் முஸ்லிம் மதத்தில் காணப்படும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் கிறிஸ்தவ மதத்தில் காணப்படுவதில்லை.

இந்தியாவில் பிராமணர்கள் முதல், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வரை அனைத்து சமுதாய மக்களும் முஸ்லிம்களாக மாறியுள்ளனர். அவர்கள் அனைவரும் கடலில் கலந்த நதிகளைப் போல் மற்ற அடையாளங்களை உதறித் தள்ளிவிட்டு, ‘முஸ்லிம்’ என்ற அடையாளத்தோடு காணப்படுகிறார்கள்.நாம் நினைக்கலாம்… “முஸ்லிம்களுக்குள்ளேயும் பிரிவினைகள் உண்டு” என்று. முஸ்லிம் என்ற பெயரோடு பிரிவின் பெயரை இணைத்து சாதி சங்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடத்தில் இல்லை. மதம் என்ற ஓர் அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களிடையே திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே உண்மை. பிரிவுகளை பெரிதுபடுத்துவதில்லை.கிறிஸ்தவம் என்ற மதத்தின் பெயரோடு சாதியின் பெயரை இணைத்து சங்கங்கள் வைப்பது போன்றவை இஸ்லாமிய மதத்தில் கிடையாது.

இந்துத்துவாவின் அடிப்படையில் ஏற்பட்டதே வருணாஸ்ரம தர்மம். வருணாஸ்ரமத்தின் அடிப்படையில் நான்கு வருணங்கள். அவற்றிலிருந்து பிரிந்தவையே சாதிக் கொடுமைகள். பிரிவினைவாதங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகிய கொடுமைகளே பலர் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. இந்துத்துவாவின் வழியில் ஏற்பட்ட சாதி பிரிவினைகளை உதறித் தள்ளியதன் மூலம் இந்துத்துவாவிலிருந்து முழுமையாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள் இஸ்லாமியர்கள். இவர்களெல்லாம் இந்துத்துவாவின் சாதியின் பெயரையோ, சாதிக்குரிய அடையாளத்தையோ தங்களோடு இணைத்துக் கொள்ளாமல், முழுமையாக களைந்து விட்டார்கள் என்பது கண்கூடு.

ஆனால் நாம் தேவாலயங்களிலும், பிரார்த்தனைக் கூடங்களிலும் ஒரே பாத்திரத்தில் கலங்கலாக காணப்படும் எண்ணெய்யும், தண்ணீருமாக இருக்கின்றோம். பின்பு எண்ணெய் வேறு, தண்ணீர் வேறாகப் பிரிந்து செல்கின்றோம்.பெண் கல்வி, பெண் விடுதலை, கைம்பெண் மறுமணம், குடும்ப நலம், சமூக நீதி, சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம் ஆகிய சீரிய கொள்கைகளை தனது கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது ஒன்றே ஒன்று மட்டும்தான். அதுதான் ‘சாதி’ என்ற தனது ஆதங்கத்தை இக்கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் சில வரிகள்…

மேதினிக்கு சேசுநாதர் எதற்கடி தோழி? -
முன்புவெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா-
அந்தப் பாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி? -
இந்தபாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா -
இவர்ஏதுக்கு நன்மைகள் ஏற்றவில்லை உரை தோழி -
இங்குஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா
ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி தோழி? -
அந்தஇந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா -
மிகமோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி -
அடமுன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா -
அவன்நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி? -
சட்டம்நால்வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா -
ஏசின்ஆசை மதம் புகப் பேதம் அகன்றதோ? தோழி -
அந்தத்தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அதைப்போதாக்குறைக்கு முப்போகம் விளைத்தனர் தோழா -
அடிஎல்லையில் பேதம் இழைத்தது தான் எவர் தோழி? -
அடஇந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா…
பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன தோழி? -
இவைபாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா -
இங்குகொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ?
தோழி, ஒப்புக்கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்குநெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன தோழி? - தினம்நேர்மையில் கோயில் வியாபாரம் செய்து தோழி -
அந்தக்கோல நற் சேசு குறித்தது தானென்ன தோழா? - ஆஹா கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா -
அந்தஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர் -
எனில்அன்னியர், தான் என்ற பேதமில்லாதவர் தோழா!-


நெல்லை மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் முஸ்லிம்களாக மதம் மாறிய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை திருமணங்களின் வாயிலாக இஸ்லாமியர்கள் தங்களோடு இணைத்துக் கொண்டார்கள். இதற்கு முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வே காரணம்.

இஸ்லாமிய சகோதரர்களிடையே உள்ள நல்ல செயல்களை நாம் முன்னுதாரணமாகக் கொள்வோம்.கொள்கை ரீதியாகவும், மொழி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பல சிந்தனையாளர்களும், சீர்திருத்தவாதி களும், சித்தாந்தவாதிகளும், வேதாந்தவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும், பொது உடைமைவாதிகளும் மக்களை ஒருங்கிணைக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தோல்வி கண்டார்கள். மார்க்க ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம்.

மேலும், அவர்களிடையே காணப்படும் உலகளாவிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுக்குக் காரணம், அவர்கள் இன்றவும் உலகளாவிய பொது வழிபாட்டு மொழியைக் கடைப்பிடிப்பதேயாகும்.

பல பெயரை நம் பெயராகக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரையும், சாதியின் பட்டத்தையும் சேர்த்துக் கொள்வது அந்தப் புனிதரை அவமானப் படுத்துவதற்கா? அல்லது சாதியை பெருமைப் படுத்துவதற்கா? கிறிஸ்தவர்கள் மதத்தைவிட சாதிக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. மதத்தின் பெயரால்நம்மால் ஒன்றுபட முடியுமா?இந்துக்களோடு சாதியின் பெயரால் உறவுகளை சிலர் நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் வெள்ளையர்கள், கருப்பர்கள் என்ற வேறுபாடு கிருத்துவ மதத்தில் பரவலாக முன்பு காணப்பட்டன.வெள்ளையர்களும், கருப்பர்களும் வேறு வேறு மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். மொழியால், கலாச்சாரத்தால், நாகரீகத்தால், உணவு பழக்க வழக்கங்களால் முற்றிலும் மாறுபட்டவர்கள். வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் நம்மிடையே அவ்வாறு இல்லை. ஒரே மண்ணின் மக்கள். ஒரே மொழியைப் பேசுபவர்கள். கலாச்சாரத்தால், நாகரீகத்தால் ஒன்றுபட்டவர்கள். நம்மிடையே சாதி அடிப்படையில் பிரிவினைகள் ஏற்படுத்தியது ஆதிக்க இந்துக்கள்.“நாம் பலராயினும் கிருத்துவில் ஒருவரே நம்மில் யூதன் என்றும், கிரேக்கன் என்றும் இல்லை. அடிமை என்றும் சுதந்திர மனிதன் என்றும் இல்லை. ஆண் என்றும் பெண் என்றும் இல்லை” என்று சொன்ன கிருத்துவம் இந்திய மண்ணில் இந்துத்துவாவின் மாமுல்களை மாற்றியமைக்க முற்படாமல் கால் ஊன்றத் தொடங்கியது. இந்நிலை கண்ட தந்தை பெரியார் ஒருமுறை “கிறித்தவ சகோதரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

டாக்டர் அம்பேத்கர் “ஒரு தீண்டப்படாதவனுக்கு தன்னுடைய பழைய மதத்தின் பின் இணைப்பாகவே கிறித்தவ சமயம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இந்தியாவை பொருத்தவரை தனித்தன்மையோடு விளங்குபவை முஸ்லிம் மார்க்கம் மட்டுமே. மீதி மதங்கள் அனைத்தும் இந்துத்துவாவின் பாதிப்பிலிருந்து விடுபடாமல் உள்ளன. ஞானஸ்நானம் பெறுகின்றோம், அப்போது நம் மீதுள்ள ஜென்மப் பாவங்கள் கழுவிக் களையப்படுகின்றன. அப்போதே ஜென்மப் பாவத்தினால் ஏற்பட்டுள்ள இந்துத் துவாவின் கறையான சாதியும் நம்மை விட்டு நீங்கியிருக்க வேண்டும். கொசுக்களை வடிகட்டி தூர எறிந்துவிட்டு ஒட்டகத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவில் சிலுவையின் நிழலில் கீறல்கள் காணப்படுகின்றன.

------------------------------------------------------------

மார்க்கம் ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம்” என்று கூறும் இக்கட்டுரை ‘எங்கே கிறித்தவம்? யார் கிறித்தவர்?’ என்ற தலைப்பில் தமிழகச் திருச்சபையின் தனிப்பெரும் அரசியல் ஆன்மீக சமூக வார இதழான ‘நம்வாழ்வு’ ஜனவரி 01-08, 2006-ல் பிரசுரமானது

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!