Monday, October 20, 2008

சமுதாய வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம்!

இறை நம்பிக்கையின்மை மனித வர்க்கத்தின் மீதும் சமுதாயங்கள் மீதும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மார்க்கத்திலிருந்து அகன்று அல்லது அதைப் புறக்கணித்து வாழும் சமுதாய மக்களிடையே அநீதியும், தன்னலமும், ஒருவரை ஒருவர் நம்பாத நிலையுமே நிறைந்து காணப்பெறும்.

இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களின் இயல்பும் இவ்விதமே காணப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மார்க்க நடைமுறைகளும் பண்புகளும் தாம் தனி மனிதர்களுடையவும் சமுதாயங்களுடையவும் ஒழுக்க மேம்பாட்டை உறுதி செய்யத்தக்கவை. இறைவன் மீதும் மறுமையிலும் நம்பிக்கையுடையவர்களே, அவர்கள் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே வாழ்வதால் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். இறைவனுக்குப் பயந்து மிக்கக் கவனத்துடன் தீயச் செயல்களைத் தவிர்த்துக் கொள்வார்கள்; இறைவன் விரும்பாத மனப்பான்மையையும் நடத்தையையும் விலக்கிக் கொள்வார்கள். இத்தகைய மக்களைக் கொண்ட சமுதாயம் பிரச்சினைகளுக்கு உள்ளாகாது.

ஆனால், இறை நம்பிக்கையற்றவன், தன்னுடைய செயல்களின் விளைவாக இறுதியில் நற்கூலி வழங்கப்படுவான் அல்லது தண்டிக்கப்படுவான் என்ற உணர்வின்றி, இறைவன் வகுத்தளித்த நியதிகளைப் பேணத் தவறி விடுகிறான். நீதிப் தீர்ப்பு நாளை நம்பாத அவன் தன்னுடைய தீயச் செயல்களிலிருந்து நீங்கும் எண்ணமே இல்லாமல் வாழ்ந்து வருகிறான். சமுதாயம் ஆதரிக்காத சில நடைமுறைகளைத் தவிர்க்கும் ஏராளமான மக்கள், நிர்ப்பந்ததிற்கு உள்ளாகும் போது, தூண்டப்படும்போது அல்லது வாய்ப்பு கிட்டும் போது மற்ற தீய நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்க மாட்டார்கள்.


இறை நம்பிக்கையின்மைக்கு இலக்கானவர்கள் இங்கே இவ்வுலகில் வாழ்ந்திருக்கும் போதே தொல்லைகளுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் தங்களுடைய இதயங்களில் மார்க்க (நற்)பண்புகளைப் பேணி நடக்க வேண்டும் என்ற உணர்வுடையவர்கள் இல்லாமல் இருக்கமுடியாது. ஒவ்வொரு மனிதனும் 'மனச்சாட்சி'யுடனேயே படைக்கப்பட்டுள்ளான். இறை நம்பிக்கையாளர்களிடம் இந்த அமைப்பு மிகுந்த இணக்கத்துடன் இயங்குகிறது; மார்க்கப் பண்புகைளப் பேணாதவர்களிடம் இது நேராகச் சீராக இயங்குவதில்லை. இதை வேறு விதமாகக் கூறுவதானால், மனச்சாட்சிக்கு இசைந்து நடக்காதவர்கள் மார்க்கப் பண்புகளை விட்டு அகன்று ஆன்மீக அவலங்களுக்கு உள்ளாகிறார்கள் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் உண்மையில் அவனைப் படைத்த ஒருவன் உண்டு என்றும், அவனிடம் நாம் கணக்குக் கொடுத்தாக வேண்டும் என்றும் ஒழுக்கத்தில் மேம்பாடும் நிறைவும் உடையவர்களாக வாழ வேண்டும் என்றும் அறிந்தவர்கள் தாம். ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் அவனுடைய இவ்வுலக ஆசாபாசங்களோடு மோதுகின்றவையே.


இதனால் தான் தனி மனிதர்கள், ஒன்று முழுமையாக மார்க்கத்தை நிராகரித்து விடுவார்கள்; அல்லது, “நான் நேர்மையானவன், நல்லவன், உண்மையாளன்” என்று கூறி குர்ஆனின் அறிவுரைக்கு உகந்து வாழாமல் இருப்பதற்குச் சாக்குப் போக்குச் சொல்வார்கள். ஆனாலும் இந்த இரு சாராருமே உண்மையில் உள்ளுக்குள் இறைவன் அங்கீகரிக்கும் முறையில் வாழ வேண்டும் என்பதை அறிவார்கள். மார்க்கப் பண்புகளை உதாசீனப்படுத்தி வாழும் சமுதாயங்களில் காணப்பெறும் மனவேதனைக்கும், உளவியல் ரீதியான மற்றும் ஆன்மீக அவலங்களுக்கும் எல்லாம் காரணம் இந்த ஆன்மீகத் தளர்வுதான். இதை “மனச்சாட்சியின் வேதனை” என்கிறோம்.

இவ்வுலகில் வாழும்போதே இந்த அவலத்தை நுகர்பவர்களின் நிலையை குர்ஆன் இவ்வாறு வர்ணிக்கிறது:

அவர்கள், “மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் நீங்கள் கூறுவது எப்போது நிறைவேறும்?” என்று கேட்கிறார்கள். இதற்கு நீர் கூறுவீராக “நீங்கள் விரைவில் நிகழ வேண்டும் என்று நினைப்பவற்றில் சில இப்பொழுதே உங்களைப் பின் தொடரலாம். (27: 71,72)

"மனச்சாட்சியின் வேதனை" என்பது, இறை நம்பிக்கையற்றவர்கள் மறுமையில் நுகரவிருக்கும் தாங்க முடியாத ஆன்மீகத் துயரத்தில் ஒரு சிறிய பகுதியே ஆகும். மனிதன் இவ்வுலகில் துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், அவன், தான் படைக்கப்பட்ட நோக்கத்திற்கு நேர்மாறான மனப்பான்மையையும், கண்ணோட்டத்தையும், வாழ்க்கை நெறியையும் மேற்கொள்வதுதான். மார்க்கத்திற்கு முரணான மனப்பான்மையும் நடத்தையும் உடையவனாக விளங்கும் காலம் வரை மனிதன் இவ்வுலகில் ஆன்மீக அவலத்திற்கு உள்ளாகியே தீர்வான். இதனால் தான் அவன் தன் மனச்சாட்சியின் குரலை அடக்கி ஒடுக்க முயல்கின்றான்; அதன் மூலம் தன் வேதனையை நீக்க விழைகின்றான்.

உள்ளத்தாலும், உடலாலும் மனிதன் இயல்பாகவே மார்க்கப்பண்புகளையே நாடுகிறான். மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்குரிய நேரான வாழ்க்கை நெறியையும் வகுத்தளித்தான்.எனவே, இறைவன் வகுத்தளித்த வரையறையை மீறுவது தனி மனித அளவிலும் சமுதாய அளவிலும் குழப்பங்களையே விளைவிக்கும். இந்தக் குழப்பங்கள் எல்லாம் மனித வரலாற்றில் மானிடர் மீது எதிர்மறையான தாக்கத்தையே உருவாக்கின. இந்தக் குழப்பங்களை எல்லாம் நீக்குவதற்கு உரிய ஒரு வழி மார்க்கப் பண்புகளைப் பேணி நடப்பது தான். இந்த குழப்பங்கள் ஒவ்வொன்றிற்கும் யதார்த்தத்தில் நிவாரணம் அளிப்பது மார்க்கமே!

மூலம்: ஹாரூன் யஹ்யா, தமிழாக்கம்: H. அப்துஸ்ஸமது, என்ஜினீயர்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!