மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையே, அகல ரயில்பாதை அமைப்பதற்கான நில சர்வே முடிந்து விட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் அகல ரயில்பாதை முடியாமல், ரயில் பயணம் சுமையாக இருக்கும் போது இது மிகவும் அவசியமானதா என்று புரியவில்லை.
மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடைப்பட்ட தூரம், 39 கி.மீ., இங்கு அகலரயில்பாதை அமைப்பது என்றால், 39 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கும் நூறு மீட்டர் அகலத்திற்கும் குறைந்த பட்சம் நிலம் தேவை. அதன் அளவு, 983 ஏக்கர் ஆகும்.75 லட்சம் பேர் உணவு: இப்பகுதியில் உள்ள வீட்டு மனைகள் மற்றும் ஆற்றுப்பகுதி, புறம்போக்கு நிலங்களை அதில் கழித்து விட்டால், குறைந்த பட்சம், 900 ஏக்கர் நிலம் தேவை. இப்பகுதியில் அதிகம் நெல் விளையும் நஞ்சை நிலப்பரப்பு அதிகம். நெல்விவசாயம் பாதிக்கப்படும். இப்பகுதியில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு குறைந்தது, 50 மூட்டை நெல் விளையும். ஒரு மூட்டையின் எடை 60 கிலோ. ரயில் பணிக்கு எடுக்கப்படும், 900 ஏக்கர் நிலத்தில் மொத்தம், 27 லட்சம் கிலோ நெல் கிடைக்கும். இதனை அரிசியாக மாற்றினால் ஒரு நாளைக்கு 75 லட்சம் பேருக்கு உணவாகும்.
அதே சமயம் ஏற்கனவே காரைக்குடியில் இருந்து திருவாரூர்வரை , மீட்டர்கேஜ் ரயில் பாதை இருக்கிறது. அதை அகலரயில்பாதையாக்கினால், புதிதாக நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை. விளைநிலங்கள் அழியாது. அந்தப் பாதை அகலரயில் பாதையாக்கப்படும் போது, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி போன்ற நகராட்சிகளும், மூன்று தேர்வு நிலை நகராட்சிகளும் பயன் பெறும். அப்பகுதி மக்களும் அதிக போக்குவரத்து வசதியால், பொருளாதார வளம் பெறுவர்.இதைத் தவிர திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள, வேதாரண்யத்தில் வருடத்திற்கு ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில், உப்பு உற்பத்தி நடக்கிறது. இதைச் சென்னை போன்ற பகுதிகளுக்கு, ரயில் மூலம் கொண்டு செல்லவும், ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கவும் உதவிடும்.
மேலும், சென்னையில் இருந்து மாயாவரம், திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சென்றது உண்டு. ராமேஸ்வரம் வரை மக்கள் பயணிக்க வசதியாக இருந்தது. இந்த வழித்தடத்தில், மீட்டர் கேஜை மாற்றி அகலரயில்பாதை அமைத்தால் மக்களுக்கு அதிக வசதி ஏற்படும். பின்தங்கிய பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைவர். தவிரவும் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை ஏற்கனவவே உள்ள மீட்டர்கேஜ் பாதை அகலரயில் பாதையாக மாற்றும் திட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக ரயில்வே துறையால் கிடப்பில் போடப்பட்ட திட்டம்.இவற்றை எல்லாம் பார்க்கும் போது பட்டுக் கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு புதிய ரயில் பாதை அவசியம் தானா? அரசுப்பணம் விரயம் ஆவதில், மக்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?
அகலரயில்பாதையாக மாற்றும் முக்கியத் திட்டங்கள் பலவும் முழுவதும் நிறைவேறாமல் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் போது, பட்டுக்கோட்டைக்கும் மன்னார்குடிக்கும் இடையே புதியதிட்ட சர்வே ஏன் என்பது தெரியவில்லை என்று, இப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர். தவிரவும் விளைநிலங்களை இழக்க நேரிடுமோ என்று விவசாயிகளும் அச்சப்படத் துவங்கி விட்டனர். இத்திட்டத்திற்கு ஓர் அரசியல்வாதி மிகவும் ஆர்வம் காட்டுவது ஏன் என்றும் புரியவில்லை.
- நமது சிறப்பு நிருபர் -
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=425233#comment
No comments:
Post a Comment