Monday, March 23, 2009

வியாபாரம்! "நஷ்டமடைந்த அவர்கள் யார்?"தொடர் 2



'விற்பவரும், வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரம் பரக்கத் செய்யப்படும். அவர்கள் பொய் சொல்லி மறைத்தால், அவர்களுக்கு இலாபம் கிடைக்கலாம். ஆனால், வியாபாரத்தில் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷான் (ரலி) நூல்:புகாரி

இது மட்டுமல்லாமல், இத்தகைய தவறான நடவடிக்கைகளை அல்லாஹ் கடுமையாக கண்டிக்கிறான்.

"மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களைப் பார்க்க மாட்டான். அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் உண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நஷ்டமடைந்த அவர்கள் யார்?" என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்" செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன், (பெருமைக்காக) தனது வேஷ்டியைத் தரையில் படுமாறு அணிபவன், தனது சரக்குகளை பொய்ச் சத்தியம் செய்து விற்பவன்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூதர் (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ

மேலும், அரபு நாட்டில் செங்கடலுக்கு வடமேற்கு பகுதியில் "மத்யன்" என்ற பகுதி இருந்து வந்தது. இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அளவிலும், எடையிலும் பயங்கர பொருளாதார மோசடிகளைச் செய்து வந்தார்கள். அம்மக்களைத் திருத்துவதற்காக சுஐபு நபியை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர் உபதேசித்தார். அதை அம்மக்கள் கேட்கவில்லை. அவரைப் புறக்கணித்தனர். அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது. இது பற்றி திருமறை குர்ஆனின் வசனங்களை (7: 85-92 வரை)க் காணலாம்.

"ஆகவே,அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது.அதனால்,அவர்கள் (காலையில்) தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர்." (அல் குர்ஆன் 7:91)

சுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர். சுஐபைப் பொய்ப்பித்தவர்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள். (அல் குர்ஆன் 7:92)

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் கூறும் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும். இந்தியாவில் சமீப காலத்தில் பூகம்பம் நடந்த பகுதி குஜராத் மாநிலமாகும். இந்த மாநிலம் தான் இந்தியாவிலேயே அதிகமாக வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்ற பகுதியாகும். என்ன விதமான மோசமான வர்த்தக, வியாபார முறைகேடுகளில் ஈடுபட்டார்களோ, அவர்களையும் பூகம்பம் பிடித்துக் கொண்டது. எனவே, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இன்ஷா அல்லாஹ் நேர்மையான வியாபாரம் செய்வோமாக!

by S.ஃபாத்திமா தாஹிரா, சென்னை

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!