Thursday, November 27, 2008

மும்பை பயங்கரவாத வெறியாட்டம்!

நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் நேற்று இரவு முதற்கொண்டு தாஜ், ஓபராய், டிரைடன்ட் போன்ற நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. சுமார் 100 பேரை பலி கொண்டும், இரு நூறுக்கும் மேற்பட்டோரைப் படுகாயப் படுத்தியும் உள்ள இந்தக் கொடூர தாக்குதலை தமுமுக வன்மையாகக் கண்டிக்கிறது..

தாக்குதல் நடந்த ஒருசில நிமிடங்களில் டெக்கான் முஜாஹ்தீன் என்ற அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. தீவிரவாதத் தாக்குதல்களை தீர விசாரிக்காமல், கடந்த காலங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டது தான், உண்மைக் குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கும், விசாரணைகள் தேங்கி நிற்பதற்கும் காரணமாகும். காவி பயங்கரவாதத்தின் முகத்திரை கிழித்து வரும் இச்சூழலில் இப்பயங்கரவாதச் செயல் நடந்துள்ளதும் கவனிக்கத் தக்கதாகும்.

மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணைகளை சரியான திசையில் செலுத்தி, சங்பரிவார முக்கியப் புள்ளிகளை ஆதாரங்களோடு கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே இத்தாக்குதலில் கொல்லப் பட்டிருப்பது நியாயவான்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் உள்ளிட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நேர்மையாக விசாரித்த ஓர் அதிகாரிக்கு நேர்ந்துள்ள முடிவு தேசத்தின் மனசாட்சியை உலுக்குகிறது. விஜய் சாலஷ்கர், அஷோக் காம்தே போன்ற காவல்துறை உயரதிகாரிகளும், 11 காவலர்களும் இத்தாக்குதலில் கொல்லப் பட்டிருப்பது பெரும் துயராகும்.

பயங்கரவாதச் செயல்களுக்கும், அதில் அப்பாவிகளைச் சிக்க வைக்கும் சதிகாரர்களுக்கும் எதிராக தேசம் தன் உறுதியைக் காட்ட வேண்டிய தருணம் இது. நாட்டு மக்கள் பயங்கரவாதிகளின் எதிர்பார்ப்புக்கு இடம் தந்து விடாமல், ஒன்று பட்டு நின்று, தேச விரோதிகளை முறியடிக்க வேண்டும் என தமுமுக கேட்டுக் கொள்கிறது. இப்படுபாதக காட்டுமிராண்டிச் செயலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளையும் சதிகாரர்களையும் கைது செய்து துரித நடவடிக்கை எடுக்க தமுமுக கோருகின்றது.

பயங்கரவாதிகளை துணிவுடன் எதிர்கொண்டு தன் இன்னுயிரையும் நீத்த காவல்துறை அதிகாரிகள், அப்பாவி பொது மக்களின் குடும்பத்தினருக்கு தமுமுக தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
-------------------------------------------

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!