புதுச்சேரி: காஞ்சி சங்கராச்சாரியாரியார்
ஜெயேந்திரர் மீதான
சங்கரராமன் கொலை வழக்கில் நாளை புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
சங்கரராமன்
வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்து வந்தார். சங்கர மடத்தில்
ஜெயேந்திரர் பொறுப்பில் நடைபெறும் தில்லு முல்லுகளை கண்டுபிடித்து அரசுக்கு
கடிதம் அனுப்பிக் கொண்டே வந்தார். இதனால் ஜெயேந்திரர் தரப்புக்கும்
சங்கரராமன் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில்
சங்கரராமன் 2004ம் ஆண்டு வரதராஜ பெருமாள் கோயிலேயே வெட்டி படுகொலை
செய்யப்பட்டார். இந்த வழக்கின் தொடக்கத்தில் சிலர் நீதிமன்றத்தில்
சரணடைந்தனர். ஆனால் அவர் தாங்கள் போலி குற்றவாளிகள் என்றும் தங்களை
சிலர்தான் சரணடைய வைத்தனர் என்று சொல்லப் போக வழக்கு விஸ்வரூபம் எடுத்தது.
பின்னர்
பிரேம்குமார், டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், சக்திவேல் ஆகிய போலீஸ்
அதிகாரிகள் அடங்கிய டீம் நடத்திய நடத்திய தீவிர விசாரணையில் காஞ்சி
சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் சுந்தரேச அய்யர்,
ரகு, கே.எஸ்.குமார், ரவுடி அப்பு உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் கதிவரன் என்பவர் அண்மையில் சென்னையில் வெட்டி கொலை
செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நடைபெற்ற இந்த வழக்கை புதுச்சேரிக்கு
மாற்றக் கோரி ஜெயேந்திரர் தரப்பு வழக்கு போட்டது. இதனால் இந்த வழக்கு
புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது.
அத்துடன் இந்த வழக்கு தொடங்கிய
உத்திரமேரூர் நீதிமன்றம், செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றங்களில்
ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொன்ன 187 பேரில் 82 பேர் நாங்கள் போலீஸ்
பயமுறுத்தியதால் ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொன்னோம் என புதுவை
நீதிமன்றத்தில் சொன்னார்கள்.
ரவுடிகளுக்கும் ஜெயேந்திரருக்கும் உள்ள
தொடர்புகளை பற்றி சொன்ன அப்ரூவர் ரவிசுப்ரமணியனும் பல்டி சாட்சியானார்.
அதேபோல் கொலையாளிகளை நேரில் பார்த்ததாக சொன்னவர்களில் சங்கரராமனின் மனைவி
பத்மாவும் மகள் உமாவும் மகன் கணேஷும் அடக்கம். அவர்களும் கூட தங்களுக்கு
எதுவும் தெரியாது என பிறழ் சாட்சியாகி விட்டனர்.
மேலும்
புதுச்சேரியில் வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமியை ஜெயேந்திரர் தரப்பு
வளைத்தது. இது தொடர்பாக இளம்பெண் ஒருவர் நீதிபதி ராமசாமி, ஜெயேந்திரர்
ஆகியோருடன் பேசும் தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி பெரும்பரப்பை
ஏற்படுத்தியது. அதனால் அந்த நீதிபதி மாற்றப்பட்டார்.
கடந்த 9
ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதி பல முறை
ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று
நீதிபதி முருகன் அறிவித்தார்.
இதனால் நாளை குற்றம்சாட்டப்பட்டோர்
அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் ஏற்கெனவே உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில்
நாளை வழங்கப்பட இருக்கும் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது.