Saturday, August 21, 2010

திருக்குர்ஆனும் அறிவியல் அற்புதங்களும் (மலை, மின்னல், எரிமலை)

மழையும் மாமறையும்
நாம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன், நமக்குப் பலனளிக்கும் நைட்ரஜன், வெப்பத்தைத் தக்க வைக்கும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றைத் தாங்கி நிற்பது வளி மண்டலம்! அந்த வளி மண்டலம் இண்டு இடுக்குகள் இல்லாமல் ஐந்து அடுக்குகளாக அமையப் பெற்று சூரியனின் புற ஊதாக் கதிர்களை உள்ளே ஊடுருவாமல், பிரமாண்டமான வால் நட்சத்திரங்களை உள்ளே நுழைய விடாமல் இந்தப் புவியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வளி மண்டலத்தைத் தன் கைவசம் வைத்திருப்பது புவி ஈர்ப்பு விசை என்பதை அறிந்தோம். இந்தப் புவி ஈர்ப்பு விசையின் இன்னொரு பயன் வானிலிருந்து மழையைப் பெற்றுத் தருவதாகும். அது எப்படி? என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால் தாகம் தீர்க்கும் மேகத்தைப் பற்றி முதலில் பார்ப்போம்.
பென்னம் பெரும் மலைகளைப் போல் வானத்தில் திரண்டு நிற்கும் கன்னங்கருத்த மேகத்தை நாம் பார்க்கின்றோம். இந்த மேகம் இவ்வாறு திரள்வதற்கு முன்பாக இரண்டு கட்டங்களைச் சந்திக்கின்றன. மூன்றாவது கட்டமாகத் தான், சூழ் கொண்ட இந்தத் திரட்சி நிலையை அடைகின்றன.
பஞ்சுகளைப் போல் திட்டு திட்டாக தனித்தனியாக மிதந்து நிற்கும் குட்டி குட்டி மேகங்களைக் காற்று தள்ளிக் கொண்டு செல்கின்றது.
இவை அனைத்தும் ஒன்றிணைகின்றன.
இவ்வாறு ஒன்றிணைந்த மேகங்கள் செங்குத்தாக விண்ணை நோக்கி எழுகின்றன. குவியக் கூடிய இந்த மேகங்களின் மத்திய தொகுதி ஓர் இழுவை சக்தியாக செயல்பட ஆரம்பித்து தன் இரு பக்கவாட்டிலும் உள்ள மேக சகாக்களை அரவணைத்து விண்ணை நோக்கி செங்குத்தாக இழுத்துச் செல்கின்றது. விண்ணகத்தின் குளிர்ந்த பகுதியை நோக்கி இது இழுத்துச் செல்லப் படுகின்றது. அவ்வாறு இழுத்துச் செல்லும் போது அந்த மத்தியப் பகுதியான இழுவை சக்தி குளிரினால் பொழிந்து சிந்தி விடாமல் பக்கவாட்டிலுள்ள மேகங்கள் பார்த்துக் கொள்கின்றன.
விண்வெளியின் குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில் ஆலங்கட்டிகள், நீர் திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. ஆக, அந்தரத்தில் கன்னங்கருத்த கனமான இமயத்தை விஞ்சும் அளவுக்கு 25,000 முதல் 30,000 அடி வரை ஒரு பெரும் மலை உருவாகின்றது.
தனது எல்லைக்குள் இப்படி ஆலங்கட்டிகள் தொகுப்பாக கனமான ஒரு மலையாக ஏறுவதை அனுமதிக்காக புவி ஈர்ப்பு விசை அம்மலையை கீழ் நோக்கி இழுக்கின்றது. அது தான் நம் மீது அருளாகப் பொழிகின்ற மழை! இது மழையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு! இப்போது விஷயத்திற்கு வருவோம்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று இந்த மேகங்களை நாம் மேற்கண்டவாறு வகைப்படுத்துகின்றனர். இப்படி சூல் கொண்டு திரண்டெழுந்து நிற்கும் இந்த மேகக் கூட்டத்திற்கு ஈன்ம்ன்ப்ர்ய்ண்ம்க்ஷன்ள், ஈப்ர்ன்க் என்று குறிப்பிடுகின்றனர். இன்று வானியல் வல்லுநர்களால் வகைப்படுத்தப் பட்ட இந்த மேகத் திரட்சியை, மழைப் பொழிவை எந்தப் பல்கலைக் கழகத்திலும் போய் படித்து மேதையாகிடாத, ஏடெத்துப் படித்திராத முஹம்மது (ஸல்) அவர்களால் எப்படிச் சொல்ல முடிந்தது? மேற்கண்ட நவீன கண்டுபிடிப்புகளை அச்சுப் பிசகாமல் அப்படியே அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்!
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)
இதிலிருந்து புனித ரமளான் மாதத்தில் இறங்கத் தொடங்கிய இந்த வேதத்தின் வசனங்கள் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்று சான்று கூறி நிற்கின்றன! இந்த வசனத்தில் அல்லாஹ், மேகங்களுக்குப் (பனி) மலைகள் என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். இன்று வானியல் ஆய்வாளர்கள் சொல்லும் இந்தக் கருத்தை அல்குர்ஆன் அன்றே சொல்லி முடித்திருக்கின்றது எனும் போது இது நூற்றுக்கு நூறு அல்லாஹ்வின் வேதம் தான் என்ற நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கின்றது.
மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது, “அதன் மின்னொளி கண்ணைப் பறிக்கப் பார்க்கின்றது” என்று சொல்லி முடிக்கின்றான். அதன் மின்னொளி என்றால் எதன் மின்னொளி? இதற்கான விளக்கத்தை அடுத்து வரும் மின்னல்’ என்ற தலைப்பில் பார்ப்போம்.
மின்னல்
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)
இந்த வசனத்தில் மின்னலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதன் மின்னல் என்று மின்னலை ஏதோ ஒன்றுடன் இணைத்து அல்லாஹ் கூறுகின்றான். எதன் மின்னல்? என்ற கேள்விக்கு நாம் விடையைத் தேடினால் இந்த வசனத்திலேயே இதற்கு முன்பாக ஆலங்கட்டியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது. அதன் மின்னல்’ என்பது ஆலங்கட்டியின் மின்னல்’ என்று திருக்குர்ஆன் பதில் கூறுகின்றது.
அது சரி! ஆலங்கட்டிக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது. எனவே இந்த மின்னலைப் பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
ஒன்றாகத் திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள், அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும் பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித் தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.
இதன் விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன. சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின் அடிப்பாகத்தில் விழுகின்றன.
கீழே விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம் வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 C அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 60000 C) இந்த அளவுக்கு வெளியாகும் வெப்பம் காற்றை வெகு வேகமாக விரிவுபடுத்துகின்றது. இதில் உருவாவது தான் இடி முழக்கம்!
இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் மின்னல் என்று கூறியதன் மூலம் மின்னலுக்குக் காரணம் ஆலங்கட்டி தான் என்று அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்ன உண்மையை இன்று வானிலை ஆய்வாளர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் அல்குர்ஆன் தூய நாயனான அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு ஓர் அற்புதமான அறிவியல் சான்றாகும்.
விண்ணகத்தில் வெப்பத்தைப் பிரசவித்து வெளிவரும் இந்த மின்னல் மண்ணகத்தில் என்ன சாதித்துக் கொண்டிருக்கின்றது? இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் நாம் வியக்கும் வண்ணம் கூறுகின்றான்.
அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன். (அல்குர்ஆன் 13:12,13)
இவ்விரண்டு வசனங்களும் மின்னல், இடியைப் பற்றி விளக்குகின்றன. இடி, மின்னல் எவ்வாறு உருகின்றன என்பதை மேலே நாம் கண்டோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விரண்டில் மின்னலைப் பற்றி குறிப்பிடும் போது, அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலைக் காட்டுகின்றான் என்று கூறுகின்றான்.
மின்னல் பளிச்சென்று வெட்டி மறையும் போது நம்முடைய நாடி நரம்புகளில் அச்ச அலைகள் ஓடிப் பரவுகின்றன. 30,0000 ஈ வெப்பத்தை ஏற்படுத்தும் மின்னலைப் பற்றி அச்சம் தரக் கூடியது என்று அல்குர்ஆன் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மின்னலில் எதிர்பார்ப்பு, ஆதரவு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து என்ன கருத்தை அவன் சொல்ல வருகின்றான் என்று எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம்.
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன என்பதை வளி மண்லத்தில் கலந்திருக்கும் வாயுக்கள் என்ற தலைப்பில் முன்னர் கண்டோம்.
ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது.
ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.
வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.
மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.
மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப் படுகின்றது.
சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளனான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்!
மின்னலில் பொதிந்திருக்கும் இந்த ஆற்றலை அறிவியல் உலகம் கண்டு பிடிப்பதற்கு முன்னால் அன்றே நபி (ஸல்) அவர்கள் மூலம் குர்ஆனில் சொல்லி முடித்த அந்த நாயன் மிகப் பெரியவனே! அல்லாஹு அக்பர்!
எரிமலையும் இறைமறையும்
வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் மிகவும் பிரபலமானது பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் துணைக் கோள்களும் நட்சத்திரங்களும் ஒரே பொருளாகத் தான் இருந்தன.
இந்தப் பொருள் பூமியை விட 318.5 மடங்கு எடையைக் கொண்டதாகவும் மிக மிக அடர்த்தியானதாகவும் இருந்தது. அந்தப் பொருள் ஏதோ ஒரு வானியல் மாற்றத்தால் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இது சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
இதற்குப் பிறகு புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுப் படலம் ஈர்ப்பு விசையின் காரணமாக சிறிது சிறிதாக இணைந்து பெரிதாகி இப்போதுள்ள கோள்கள், துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றின. இவ்வாறு தூசுப் படலத்திலிருந்து பிரிந்து கோள்கள் உருவான நிகழ்வு சுமார் 500 கோடி முதல் 750 கோடி வருடங்களுக்கிடையில் நடைபெற்றது. இது தான் பெரு வெடிப்புக் கொள்கை (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) ஆகும்.
மனிதன் தன்னுடைய விஞ்ஞான அறிவையும் நவீன கருவிகளையும் கொண்டு இந்தப் பேரண்டம் எவ்வாறு தோன்றியது என்ற வரலாற்றை தற்போது கண்டறிந்துள்ளான். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி யாருக்காவது தெரிந்திருந்ததா? பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றைப் பற்றி வெறும் கதைகளையும் கற்பனைகளையும் நம்பிக் கொண்டிருந்த காலம். இன்று கூட மற்ற மதங்களின் வேதங்களில் இந்தக் கதைகள் தான் கூறப்படுகின்றன. பேரண்டத்தின் தோற்றம் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. (அல்குர்ஆன் 41:11)
என்ன அற்புதமான வார்த்தைகள்! பூமியும் இதர கோள்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரே பொருளாக இருந்தன என்பதையும் அதன் பிறகு புகை போன்றிருந்த நிலையில் தான் அனைத்தும் உருவாயின என்பதையும் இவ்விரு வசனங்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலே நாம் கூறியுள்ள பெரு வெடிப்புக் கொள்கையையும் (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) இந்த இரு வசனங்களையும் படித்துப் பாருங்கள்! உண்மையிலேயே நமது உடலைப் புல்லரிக்கச் செய்கின்றதல்லவா? இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். எனவே திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.
அடுப்பிலிருந்து ஒரு தீக்கங்கை கிடுக்கியில் தனியாக எடுத்து ஓரிடத்தில் வைக்கின்றோம். நேரமாக நேரமாக அந்தத் தீக்கங்கின் மேற்பகுதி குளிர்ந்து விடுகின்றது. ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கனன்று கொண்டிருக்கின்றது. சூரியனிலிருந்து பிரிந்து வந்த பூமி மேற்பகுதியில் குளிர்ந்து, அதன் மீது தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் அது அவ்வப்போது எரிமலைகளைக் கொப்பளிக்கின்றது. இந்தப் பூமி ஒரு காலத்தில் சூரியனுடன் ஒன்றாக இருந்தது என்பதற்கு இந்த எரிமலைகள் அக்கினி சாட்சிகளாகத் திகழ்கின்றன! நெருப்பைப் பஞ்சு மெத்தையாக்கி எங்களை வாழ வைக்கும் இறைவா! நீ தூயவன்! என்று தினமும் அந்த வல்ல இறைவனைத் துதிப்போமாக!
source: tntj.net

Monday, August 16, 2010

சீர்குலையாத பகுத்தறிவுக் கொள்கை !

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் "முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்" (அஹ்மது : ஹதீஸ் எண்: 12141)

இஸ்லாம் நடுநிலையையும் நீதியையும் பேணும் மார்க்கமாகும். ஆன்மீகத்தின் பெயரால் வரம்பு மீறுதலை ஒருபோதும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதனால் தெளிவான ஏகத்துவக் கொள்கையில் சிறிதும் பிறழாமல் மேலோங்கி நிற்கிறது. அதன் இறைக் கொள்கைக்குக் களங்கம் விளைவிக்கும் சிறு செயலைக் குறித்தும் அது எச்சரிக்காமல் விட்டதில்லை.

இஸ்லாமிலிருந்து வழிதவறிச் சென்ற மதங்கள் மகான்கள் மற்றும் புண்ணிய புருஷர்கள் மீது கொண்ட வரம்பு மீறிய பக்தியால் அவர்களை இறைவனின் தன்மைக்கு உயர்த்தின. இதனால் இறைவனின் தன்மைக்குக் களங்கம் கற்பித்து இணைவைப்புக் கொள்கையில் சென்றுவிட்டன. மனிதர்களை இறை அவதாரங்களாகவும் இறைவனின் புதல்வர்கள் எனவும் நம்பிக்கை கொண்டு அவர்களை வணக்கத்துக்குரியவர்களாகவும் ஆக்கிக்கொண்டனர். உண்மையில் இத்தகைய நம்பிக்கை இறைவனின் மேன்மைக்கும் மகத்துவத்திற்கும் களங்கம் கற்பிக்கும் நம்பிக்கையாகும்.

சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலை மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம்!
தெளிவான ஏகத்துவக் கொள்கையை உலகுக்கு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் தன் சமுதாயம் சிஞ்சிற்றும் வழிதவறாத வண்ணம் சீரிய வழிகாட்டுதலை விட்டுச் சென்றார்கள். ஏகத்துவக் கொள்கைக்கு களங்கம் ஏற்படும் சிறிய காரியங்களைக் கூட அவர்கள் சமூகத்துக்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. மக்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வதால் இறைவனின் தன்மைக்கு தம்மை உயர்த்தி அதனால் இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் படுபாதகச் செயலில் அது அவர்களைக் கொண்டு சேர்த்து விடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் தான் இத்தகைய வரம்பு மீறிய புகழ்ச்சிகளை மக்கள் செய்யும் போது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், சாத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம் என்று கூறி எச்சரித்தார்கள்.

இதனால் தான் இன்றளவும் மதத் தலைவர்களும் ஏன் அரசியல் தலைவர்களுக்குக் கூட சித்திரங்களும் சிலைகளும் செய்யப்பட்டு மாலை மரியாதைகளுடன் வணங்கப்படும் போது ஒரு கற்பனை உருவம் கூட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுக்காமல் அதன் ஏகத்துவக் கொள்கையில் இஸ்லாம் சிறந்து விளங்குகிறது. இதனால் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்பனையாக வரையப்படுவதைக்கூட முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை.

"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே! திண்ணமாக உங்கள் இறைவன் ஒரே இறைவன் என எனக்கு (இறைவனிடமிருந்து) வெளிப்பாடு வருகின்றது, யார் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் அறச்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும் என்று (நபியே!) நீர் கூறும்!" (திருக்குர்ஆன் 18: 110)

Friday, August 13, 2010

"இது"மூலமும் எயிட்ஸ் வரும்

‘டாட்டூ’ (பச்சை) குத்திக் கொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் வரும் அபாயம் அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவு பழங்குடியினர் பயன்படுத்திய வார்த்தை ‘டட்டாவ்’. இதையும் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வசதியாக உச்சரித்து ‘டாட்டூ’ என ஆக்கியதில் உலகம் முழுவதும் பேஷன் ஆக்கிவிட்டனர்.
இப்போது லேசுபாசாக விழித்துக் கொண்டு கிராமத்துக்காரர்கள் பச்சையை மறந்து விட்டனர்.
ஆனால், பச்சை அப்படியே டாட்டூவாக்கி மேல்தட்டு நாகரிக நகரவாசிகள் இன்னும் அதை தொடர்கின்றர்.உடம்பில் மறைவிடங்கள் உட்பட எல்லா பாகங்களிலும் பச்சை (டாட்டூ) குத்தி கொள்கின்றனர்.
அதிகளவில் டாட்டூ குத்துவது ஆபத்து என்று தற்போது தெரியவந்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக ஒரு ஆய்வு. அமெரிக்கா, ஈரான், இத்தாலி, பிரேசில் உள்பட 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 124 ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு ரிப்போர்ட் தயார் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பது:
டாட்டூ போடும்போது தோல் ஒரு வினாடிக்கு 80 முதல் 150 முறை பஞ்சர் செய்யப்படுகிறது. மேலும் ரத்தம் உள்ளிட்ட உடல் திரவங்கள் மீது இக்கருவியின் ஊசிமுனை படுகிறது. கருவியை முறையாக ஸ்டெரிலைஸ் செய்யாமல் பலருக்கும் பயன்படுத்தினால் கிருமிகள் பரவி நோய் ஏற்படும். டாட்டூவில் பயன்படுத்தப்படும் நிறமிகளும் பெரும்பாலும் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை. நோய்களை பரப்புவதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு.
டாட்டூ அகற்றும்போதும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. டாட்டூ அகற்ற தெர்மல் இன்ஜுரி, டெர்மப்ரேஷன், க்ரயோதெரபி போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதிலும் அதிக கவனம், பாதுகாப்பு அவசியம். சுத்திகரிக்கப்படாத கருவிகளை பயன்படுத்தினால் எச்.ஐ.வி., எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் வரலாம்.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


இஸ்லாம் பச்சை குத்துவதை அன்றே முற்றிலும் தடை செய்துள்ளது. நபிகள் (ஸல்) அவர்கள் இவர்களை சபித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பச்சை குத்திக்கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்! புகாரி- 2238

Wednesday, August 11, 2010

மறைவான வணக்கம்

இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:

    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183
    இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?
    நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.
    ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் 'ஸஹ்ரில்' சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.
    உறுதியான நம்பிக்கையின் அடையாளம்
    நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.
    அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!
    மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!
    இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! 'மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.
    சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.
    இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.
    யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.
    அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.
    செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்.

Monday, August 9, 2010

போலீஸ் தேவையில்லை ?

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இசுலாமியர்களுக்கு போலீஸ் சான்றிதழ் இல்லாமல் 8 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி முதல் பாஸ்போர்ட் சென்னையில் வழங்கப்பட்டது.
சாதாரணமாக பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தால் முகவரி மற்றும் பிற தகவல்கள் உண்மையானவை எனச் சான்றழிக்கும் போலீஸ் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதனால் அனாவசிய தாமதம் ஏற்படுகிறது.
மக்காவுக்கு புனித ஹஜ் பயணம் வருபவர்களுக்கு சர்வதேச கடவுச்சீட்டு  அவசியம் என சமீபத்தில் சவூதி அரேபிய அரசு அறிவித்ததையடுத்து ஹஜ் யாத்ரீகர்களின் நலனுக்காக, விரைந்து பாஸ்போர்ட் வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஹஜ் யாத்திரிகர்கள் போலீஸ் சான்றிதழ் இல்லாமலேயே 8 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகத் தக்க சர்வதேச பாஸ்போர்ட் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் 8 மாதத்திற்கான தற்காலிக ஹஜ் பாஸ்போர்ட் வழங்கப்படும். நிரந்தரமாக மாற்றிக் கொள்ள விரும்பினால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிறகு போலீஸ் சான்றிதழ் உள்ளிட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்த பாஸ்போர்ட்டாக அது மாற்றித்தரப்படும்.
இதுகுறித்து அனைத்து வட்டார பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் மத்திய வெளியுறவுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,
ஹஜ் கமிட்டி கவர்எண் உள்ள அனைத்து ஹஜ் விண்ணப்பத்தாரர்களுக்கும் புதிய திட்டப்படி உடன டியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும். தனியார் ஹஜ் பயண முகவர்களுக்கு 45 ஆயிரம் பயண கோட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.ஆகஸ்டு 13-ம் தேதிக்குள் தகுந்த நிரூபண ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் புதிய பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்த ஒருவருக்கு15 நாட்களுக்குள்  பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக துணை பாஸ்போர்ட் அதிகாரி K.S. தவுலத் தமீம் அறிவித்தார்.

Sunday, August 8, 2010

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

    நோன்பாளி செய்யக் கூடாதவை
    எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல்  பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

    நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"  என்று  கூறி விடவும். நபி (ஸல்)  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

    நோன்பின் தற்காலிக சலுகைகள்
    நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.  (அல்குர்ஆன்: 2:185)

     எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

    அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு  நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்  கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்  பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.  நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

    நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
    நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

    நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்  வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

    நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ  செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான்.  நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

    சஹர் செய்தல் 
    நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

    ஒரு ரமழானில் சஹர்  உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

    நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

    நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

Wednesday, August 4, 2010

ரியா !மறைவான இணைவைப்பு? விமர்சனத்திற்கு அஞ்சுதல்.தொடர்19

 விமர்சனத்திற்கு அஞ்சுதல்

தனது செயல்களில் உள்ள குறைகள் விமர்சனம் செய்யப்படுவதை யாரும் விரும்புவதில்லை. மார்க்க விஷயங்களில் விமர்சனம் செய்வதை விரும்பாதவர்களை இரண்டு வகையாகப் பிாிக்கலாம்.

    (அ) தன்னுடன் இருப்பவர்களின் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக அல்லாஹ்வின் ஆணையை நிராகாிக்கும் மனிதர்கள் முதல் வகையினர். மனிதர்களிடையே புகழை இழப்பதை விட அல்லாஹ்வின் ஆணைகளைப் புறக்கணிப்பது மேல் என்று கருதுபவர்கள் இவர்கள். உதாரணமாக:- சில ஆண்கள் தாடி வைக்க விரும்புவதில்லை. இதே போல் தங்கள் தோழியர் விமர்சிப்பார்கள் என்று அஞ்சி சில பெண்கள் உாிய முறையில் பர்தா அணிவதில்லை. இவையெல்லாம் ஹராம் (தடுக்கப்பட்டது) தான். இவை 'ரியா"வின் கீழ் வராது. இறை நம்பிக்கையாளர்கள் குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

    நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோாிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போாிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போாின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். நாடியோர்க்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாரளமானவன். அறிந்தவன். (திருக்குர்ஆன் 5:54)

    படைப்பினங்களின் விமர்சனம், படைப்பாளனாக அல்லாஹ்வின் விமர்சனத்துடன் ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என்பதை உண்மையான நம்பிக்கையாளர்கள் நன்கு உணர்வார்கள்.

    (ஆ) அல்லாஹ்விற்காக அல்லாமல், மனிதர்கள் தன்னை ஏளனமாகப் பார்ப்பார்கள், தன்னைக் குறை சொல்வார்கள் என்பதற்காக இஸ்லாத்தின் சில கட்டளைகளைப் பின்பற்றுபவர்கள் இரண்டாம் வகையினர் ஆவர். உதாரணமாக வீட்டிலே தொழுது கொள்கிறார் என்று மற்றவர்கள் குறை சொல்வார்கள் என்பதற்காக அல்லது அவர் தொழுவதே இல்லை என்று மக்கள் எண்ணக் கூடாது என்பதற்காக ஒருமனிதர் பள்ளிவாசலில் தொழலாம். அல்லது மார்க்கக் கூட்டங்களின் போது அங்கு வரும் தனது மார்க்கச் சகோதாிகள் அல்லது உரையாற்றுபவர் தன்னைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக ஒரு முஸ்லிம் பெண்மணி பர்தா அணியலாம்.



  மற்ற மக்களிடம் உள்ள செல்வங்களுக்காக பேராசைப்படுதல்
  

  மற்ற மக்களிடம் உள்ள பணம், அதிகாரம் அல்லது செல்வாக்கு மீது ஒருவருக்குப் பேராசை ஏற்பட்டால், பிறகு தன்னைப் போன்று மற்றவர்களும் தன் மீது பொறாமை கொள்ள வேண்டும் என்று அவன் விரும்புகிறான். உதாரணமாக சமுதாயத்தில் குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ள மனிதர் மீது ஒருவருக்கு பொறாமை ஏற்பட்டால், அதே அந்தஸ்தை தானும் அடைய எல்லா வகையிலும் அவன் முயலுகிறான். இந்த எண்ணத்தின் விளைவாகத் தனது வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக் கொள்கிறான். அவனது பணம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவை மற்றவர்களுக்குப் பகட்டாகக் காண்பிக்கப் படுகின்றது. மார்க்க விஷயங்களும் கூட பகட்டாக காட்டப்படுகிறது. இறுதியில் 'ரியா" என்னும் பெரும் பாவத்திற்கு இவை இழுத்துச் செல்கின்றன.

    அண்ணல் நபி அவர்களின் பின்வரும் அமுத மொழி இந்த மூன்று வகையினரையும் சுட்டிக் காட்டுகின்றது.
    அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமனிதர் நபிகள் நாயகம் அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் (பிறர் தன்னைக் குறை சொல்வதைத் தவிர்ப்பதற்காக) தனது கண்ணியத்தைத் தற்காத்துக் கொள்வதற்காகப் போாிடுகிறார். இன்னொருவர் தனது துணிச்சலை (அதற்காக பாராட்டப்பட வேண்டுமென்பதற்காக) நிரூபிப்பதற்காகப் போாிடுகிறார். மூன்றாமவர் (தனது அந்தஸ்தைப் பிறர் அறிய வேண்டுமென்பதற்காக) பகட்டிற்காகப் போாிடுகிறார். இந்த மூவாில் அல்லாஹ்வின் பாதையில் போாிடுபவர் யார்? என்று கேட்டார்.

நாயகம் அவர்கள் (பின் வருமாறு) பதில் சொன்னார்கள்.

    எவர் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க வைக்க (அதாவது, இஸ்லாத்திற்கு கண்ணியம் சேர்ப்பதற்காகவும், இஸ்லாத்தை இந்த பூமியில் நிலை நாட்டவும்) போாிடுகிறாரோ அவர் தான் அல்லாஹ்வின் பாதையில் போாிடுபவர் ஆவார்." ஆதாரம்: புகாாி 123, 2810, 3126, 7458, முஸ்லிம், அபூதாவூத்

Friday, July 30, 2010

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன்                                              தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்   இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர் களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.

அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.

இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …

கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.

அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர். மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !

இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.

இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
 
பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள : +91 99658 92706

Thanks : Samarasam Tamil Fortnightly ,May 16-31,2010

தகவல்: முதுவை ஹிதாயத்

Tuesday, July 27, 2010

அல்லாஹ்வையே கூலியாகக் கொண்ட - அருட்கொடை மாதமே வருக!!!



நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு  நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 கை நீட்டியவர்களுக்கு கையிலுள்ளதைக் கொடுத்து கண்ணீரைத் துடைக்கத் தூண்டும் காருண்ய மிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்த மனிதவள மேம்பாட்டிற்கு வழி வகுத்த மாமறைக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
  
தலையில் பிறந்தோன் காலில் பிறந்தோன், என்று ஆதிக்க வர்க்கத்தினர் பூட்டிய அடிமை விலங்கை உடைத்தெறிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்றுக்கூறி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திய சங்கைமிகு குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கருப்பன் - சிவப்பன் என்ற நிறவெறியை காலில் போட்டு மிதித்து அனைவரும் ஆதம் என்ற ஒரு மனிதரின் பிறப்புகளே என்று முழங்கிய அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அழகிய உபதேசங்களை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

பெண் இனத்தின் உடலில் உயிரோட்டம் இருக்கிறதா ? என்ற ஆய்வுக்குட்படுத்திய சித்ரவதையிலிருந்து மீட்டெடுத்து அவளும் உன்னைப் போன்ற மனித இனமே என்று முழங்கி பெண் இனத்தை அழிவிலிருந்து மீட்டி சமூக நீதிக்காத்த திருமறைக்குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஆண்டவன் பெயரால் அப்பாவி மக்களை சுரண்டி வயிறு வளர்த்த புரோகிதக் கூட்டங்களை ஒழித்துக்கட்டி அல்லாஹ் ஒருவன் என்றக் கொள்கையை முழங்கிய மாமறைக் குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

அன்புள்ள சகோதரர்களே !
நன்மைகள் அதிகரிக்கவும் பாவங்கள் மன்னிகப்படவும், நல்ல எண்ணத்துடன் ரமளான் மாதத்தை அணுகுங்கள்.
ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.' நூல்: புகாரி. 1899.

ரமலான் மாதத்தில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) கூறினார். நூல்: புகாரி.1901


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அதிரை ஏ.எம்.பாரூக்

Tuesday, July 20, 2010

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்?

சமீபத்தில் பெரியார்தாசன் ‘அப்துல்லாஹ்’ ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.           தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன்.

திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி – அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். தீவிர அம்பேத்கர் இயக்கத் தவராகத் திகழ்ந்த சு. ராஜேஸ்வரன் மொழி, இனம், பொதுவுடைமை, கம்யூனிசம் எனும் இவையெல்லாம் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க இயலாதவை; உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாதவை என்பதைத் தெளிந்து, ஏகத்துவத்தை ஏற்று அதன் வழிதான் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதை உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார். சு. ராஜேஸ்வரன் இப்போது சு. ராஷித் அலியாகவும் இவரது மனைவி சாந்தி இப்போது சாரா பீவியாகவும் சமுதாயச் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

இஸ்லாத்தில் இணைவதற்குத் தனக்கு அடிப்படைச் சிந்தனையாக அமைந்தது எது என்பதை இதோ அவர் விளக்குகிறார். மொழியாலோ, இனத்தாலோ, பொதுவுடைமையாலோ, கடவுள் மறுப்பாலோ சமூகத்தில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் சாதிய கட்டமைப்பு ஒழிக்கப்படாதவரை அது ஓர் உண்மையான நிலையான சமத்துவமிக்க சமுதாயமாக இருக்க சாத்தியமே இல்லை என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியலை மையமாக கொண்டதே எனது கருத்தியல்.

மொழி, இனம், பொதுவுடைமை, கடவுள் மறுப்பு என்கிற கருத்து நிலைகளை மையமாக வைத்துக் கொண்டு சதுரங்கம் விளையாடுகிற அலங்காரமான அரசியல்வாதிகளை அல்லது சீர்திருத்தவாதிகளைக் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க கூடிய மூல செயல் வடிவமான சாதி ஒழிப்பை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டே வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. சாதி ஒழிப்பைக் கூர்மைப்படுத்தினால் இந்துத்துவம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும்… என்பதை இவர்களெல்லாம் அறியாதவர்கள் அல்ல.

இவர்களை பொறுத்தவரை முதலில் இந்துத்துவத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டுதான் மற்ற எல்லா வகையான சீர்திருத்தத்தையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் அடிமைகள் இருந்தால்தானே தனக்கான தளம் இருக்கும். அப்படிப்பட்ட தளம் இருந்தால்தானே அதன் மேலே வலுவாக நின்று கொண்டு தொடர்ந்து கூச்சல் போட முடியும். அப்படி கூச்சல் போட்டால் தானே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனது பிழைப்பை நடத்த முடியும் என்கிற தீர்க்கமான முற்போக்கான அறிவாளிகள்தாம் இந்த தேசம் முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துநிலை சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தாம் அவற்றால் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எவ்விதமான சமூக விடுதலையையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பதையும் உணர முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான தீர்வு சமூக சீர்திருத்தமா? அல்லது சமூக விடுதலையா? என்கிற கேள்வி வருகிறபோது சமூக விடுதலைதான் என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தான் நிரந்தரமானது என்கிற உண்மையை அறிவுத் தளத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், தனது அற்ப பிழைப்பு வாதத்துக்காக விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை விட்டு விட்டு வெறும் சீர்திருத்தநோக்கிலேயே செயல்பட்டு வரும் இவர்களை எண்ணி நெஞ்சம் ரணமாகிறது.

மொழியால், இனத்தால், பொதுவுடைமையால் கடவுள் மறுப்பால் மக்களை ஒன்று சேர்ப்பதாகவும் அதன் மூலம் சமத்துவம் உருவாகும் என்றும் சொல்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுகிறது. மொழியாலும் அந்த மொழி பேசுகிற இனத்தாலும் ஒன்றுபடலாம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஊரை உருவாக்கும்போதே சேரியை உருவாக்கி அந்த மக்களைத் தீண்டதகாதவர்களாக்கிப் பொதுப் பாதை, பொதுக்குளம், பொதுக்கோயில் இப்படி அனைவருக்கும் பொதுவான அனைத்து வகையான இடத்திலிருந்தும் தள்ளிவைத்து அவர்கள் வாழும் சேரி, குடிசைகளைக் கொளுத்திக் கொலை வெறித் தாண்டவம் ஆடியது யார்? ஜெர்மானியமொழி பேசுகிற ஜெர்மானியர்களா? அல்லது சீனமொழி பேசுகிற சீனர்களா? இல்லையே விளிம்பு நிலை மனிதர்கள் தாய்மொழியாக கொண்ட அதே தமிழ் மொழி பேசுகிற தமிழ் இனம்தானே.

பொதுவுடையைப் பேசுகிற கம்யூனிசவாதிகளாவது உழைக்கும் வர்க்கமெல்லாம் ஒரே வகைப்பாடுகளில் உள்ளவர்கள், நமக்குள் வர்க்க வேற்றுமைதவிர சாதிய வேற்றுமைகள் எதுவும் கிடையாது. உழைக்கும் வர்க்கம் என்கிற அடிப்படையில் ஒரே இடத்தில் வாழ் விடங்களை அமைத்துக் கொள்வது, சமூக ஒழுங்கிற்கு உட்பட்டு உழைக்கும் வர்க்கத்தாரின் யாருடைய வீட்டிலும் யாரும் திருமண பந்தம் வைத்துக் கொள்வது என்கிற செயலாக்கத்தைக் கொண்டு வந்தார்களா? மாநில அளவில் வேண்டாம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கிராம அளவிலாவது இந்தியாவின் எந்த மூலைப் பகுதியிலேனும் ஒரு புரட்சிகரமான கிராமத்தை அவர்களால் உருவாக்க முடிந்ததா? (சாதிய கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் மார்க்சியம் செல்லுபடியாகாது) என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தானே இன்று உண்மைக்குச் சாட்சியாக நிற்கிறது.)

கடவுள்தான் சாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வழிநடத்துகிறது என்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் சாமிதான் காரணம் என்றும் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொல்லி வந்தார்களே இவர் களாவது சாதி ஒழிப்பை முன்னெடுத்தார்களா? சாதி மறுப்புத் திருமணங்கள், வாழ்விடங்கள் குடியிருப்புகள் என ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது போன்ற அடிப்படையான விஷயங் களில் ஒன்றிணைந்தார்களா? கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் புரோகிதர் மறுப்பில் கவனம் செலுத்தியவர்களால் பாவம் சாதி மறுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை போலும். (இப்படி கூறுவதனால் பகுத்தறிவாதிகளைக் குற்றம் குறை சொல்லுவதாகவோ அவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகவே எண்ணி மிகுந்த பிணக்கு கொள்வார்கள்.)

மேற்படி கொள்கைவாதிகளிடம் கேட்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் உண்டு. இங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிக மிக சாதாரண அடிப்படையானவைகள் மட்டும்தான். இதற்கே இவர்களிடம் பதில் இருக்காது. அவர்களைப் பார்த்து, அம்பேத் கரியம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்; உங்களின் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகளுக்கான கருத்தியலால் சாதி ஒழிக்கப்பட்ட சமத்துவ சமூகத்தை இன்றுவரை ஏன் உருவாக்க முடிய வில்லை. அப்படியானால் “சாதிய கட்டமைப்பை அழித்தொழிக்காமல் எந்த கருத்தியலும் மக்களிடம் புரட்சியை உருவாக்காது. அப்படி ஒரு புரட்சி நடக்காமல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க முடியாது” என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் பேரறிஞர் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னவைதாமே இன்றைக்கும் விளிம்புநிலை மனிதர் களாக, பஞ்சைப் பராரிகளாக குடிசைகளிலே வாழ்க்கை நடத்தும் கடைசி மனிதர்களுக்கு உண்மைகாட்சியாய் நிற்கிறது. அத்தனை பெரிய அறிவு படைத்த மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1936 ம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழிகளாக (Annihilation Of caste) மிகத் தீர்க்கமான கருத்தியலை முன் வைத்தார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு நிற்கும் வரை விளிம்பு நிலை மனிதர் களுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் இறுதியாக தனது நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடும் மிகுந்த ஆதங்கத்தோடும் அதிர்ச்சியோடும் சொன்னார்கள்.

சாதியத்தின் மூலம் இழிவுகளையும் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளையும் உருவாக்கியது இந்துத்துவம்தான். இப்படி மனிதனைச் சாதி ரீதியாகக் கொடுமைப்படுத்திய கொடூரம் உலகத்தின் எந்த மூலையிலும் நடத்தப் படவில்லை. ஆகவே இந்திய தேசத்தில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் எவராக இருந்தாலும் இந்துத்துவம் என்கின்ற ஒன்று ஒழிக்கப்பட்டால்தான் சமத்துவம் சாத்தியமாக்கப்படும் என்பதையும் இந்துத்துவத்தை ஒழிக்க முனையும் முன்பாக முதலில் தன்னை இந்து அல்லாதவனாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் தன்னை ஒரு இந்துவாகவே நிலைப்படுத்திக் கொண்டேதான் இந்துத்துவத்தை வேரறுக்கப் போகிறேன் என்கிறார்கள். இது விந்தையாக இருக்கிறது.

ஒரு மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அந்த மரத்தை ஆணி வேரோடு சாய்க்கமுடியாது என்பது எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான உண்மையோ அதைப் போன்றுதான் மேற்படியாளர்களின் இந்துத்துவ ஒழிப்பு என்பதும் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர், நம்மை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கடைசி மனிதனாகக் குடிசையிலே உட்காரவைத்து சமூகத்தில் உள்ள அனைத்துக் கொடூரங் களையும் செய்து வருகின்ற இந்து சமூகத்தில் இருந்து நம்மை நாமே வெளியேற்றிக்கொண்டு தான் நம்மீது திணிக்கபட்டுள்ள சாதிய இழிவைத் துடைக்க முடியுமே ஒழிய வேறு எத்தகைய தீர்வும் சாத்தியமானது அல்ல என்று உறுதிபட கூறினார்.

அதனடிப்படையிலேயே மொழியும் இனமும் எம்மைசமமாகப் பார்க்க வில்லை. பொதுவுடைமையும் கம்யூனிசமும் எமது இழிந்த நிலையை ஒழிக்கவில்லை, ஆகவே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிய சகதியில் உழலுவதைவிட இறைவனை ஏற்று கொண்டாவது சாதியத்தை ஒழிப்பதுதான் எமக்கான சமூக விடுதலை என்று உறுதியாக எண்ணியே “லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்கிற உயிர்ப்பான வரிகளை நெஞ்சம் நிறையச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்”

நன்றி : இனிய திசைகள்.(ஏப்ரல் 2010)

Saturday, July 17, 2010

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை!

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன்,மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார்.அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும்,இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன். "இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்."ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத். மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிரார்த்திப்போம்.

Monday, July 5, 2010

மேற்கல்விக்காக ஏங்கும் ஏழை சகோதரனுக்கு உதவிடுங்கள்.

    ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


மாணவன் பெயர்:அஹமது
தந்தை பெயர்:        ஷேய்க் அப்துல்லா
தாய் பெயர்:           சகர் பானு
படிப்பு:                     12th standard
வயது                      18
மதிப்பெண்            962
அந்த மாணவனின் தந்தை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.தாய் EPS பள்ளியில் உஸ்தாதாக பணி புரிந்து கொண்டுள்ளார்.

மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில்,எப்படியும் மேற் படிப்பு படித்து முன்னேற வேண்டும் என துடிக்கும் இவருக்கு உதவ யாரும் இல்லாத நிலை.

இவருடைய இச் சூழ்நிலையை எண்ணி,அல்லாஹ்வுக்காக,இவருடைய கல்விக்கு உங்களால் முடிந்த அளவு உதவி,அல்லாஹ்வின் நல் அருளை பெற்றுக் கொள்வோம்.

அந்த மாணவனின் தொடர்பு முகவரி
 S.AHAMAD
29/12 GODOWN STREET,
ADIRAMPATTINAM
CONTACT # 9843535710

தகவல் உதவி :அப்துல் ரஜாக்
கலிபோர்னியா

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!