Saturday, June 11, 2011

நாளை துவக்க விழா:தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல்


வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை, நாளை மாலை மத்திய அமைச்சர் வாசன் துவக்கி வைக்கிறார். இதற்கான கட்டண விவரங்கள், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"பிளமிங்கோ லைனர்ஸ்' என்ற தனியார் நிறுவனம் சார்பில், "ஸ்காட்டியா பிரின்ஸ்' பயணிகள் கப்பல் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கும் இயக்கப்படவுள்ளது. இருவழித் தடத்திலும், மாலை 6 மணிக்கு புறப்படும் இக்கப்பல், மறுநாள் காலை 8 மணிக்கு (14 மணிநேரம்) மறுமுனையை சென்றடையும். துவக்கத்தில், வாரம் இருநாட்கள் இயக்கப்படவுள்ள இச்சேவை, பின், வாரம் மூன்று முறையாக அதிகரிக்கப்படவுள்ளது. ஒன்பது அடுக்குகளைக் கொண்ட இந்த,"ஏசி' கப்பலில், 1,044 பயணிகளும், 200 ஊழியர்களும் பயணம் செய்யலாம். ஒன்பது மாலுமிகளைக் கொண்ட இக்கப்பல், மணிக்கு 13 முதல் 18 கடல் மைல் வேகத்தில் செல்லும். 111 எக்கனாமி வகை அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 2 சிறப்பு வசதி அறைகள், 22 டீலக்ஸ் அறைகள், 169 சூப்பர் டீலக்ஸ் அறைகள், 11 முதலாம் வகுப்பு அறைகள், 2 சூட் அறைகள் என, மொத்தம் 317 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் 250 பேர் அமர்ந்து உணவு உண்ணக்கூடிய ஓட்டல், மீட்டிங் ஹால், மருத்துவமனை, நடன அரங்கம், பார் ஆகியவை உள்ளன. 300 டன் சரக்குகளையும் கொண்டு செல்ல முடியும்.

 இங்கிருந்து கொழும்பு செல்ல, குறைந்தபட்ச கட்டணம், 2,990 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 19,550 ரூபாய். கொழும்புவில் இருந்து தூத்துக்குடி வர குறைந்தபட்ச கட்டணம், 3,128 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 20,470 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவக்க விழா சிறப்பு கட்டணம், 2,243 ரூபாய். கப்பலுக்குச் சென்றவுடன் தரப்படும் குளிர்பானம் மற்றும் வரையறுக்கப்பட்ட இரவு உணவு விலை ஆகியவையும் பயணக் கட்டணத்தில் அடங்கும். இதுதவிர, கப்பலிலுள்ள கேன்டீனிலும் பணம் கொடுத்து தேவைக்கேற்ப உணவுப் பொருட்களை வாங்கலாம். இதில், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு, கட்டணச் சலுகையும் உண்டு. இதற்கான டிக்கெட் விற்பனை உரிமத்தை, தூத்துக்குடி மூன்று தனியார் நிறுவனத்தினர் பெற்றுள்ளனர். டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.

 கப்பலில் பயணம் செய்பவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்பே வரவேண்டும். டிராவல்பேக், லேப்-டாப் பேக் உள்ளிட்ட ஏதாவது இருபொருட்களை தங்களது அறைக்கு எடுத்துச் செல்லலாம். இதுதவிர, எக்கனாமி வகுப்பு பயணிகள், 100 கிலோ எடை வரையும், முதல் வகுப்பு பயணிகள், 200 கிலோ எடை வரையும் லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். வெளியில் வாங்கப்பட்ட மதுபானங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

 இக்கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இலங்கை சென்றவுடன், அவர்களுக்கு அந்நாட்டு அரசு சார்பில், சுற்றுலா விசா வழங்கப்படும். 30 நாட்கள் வரை இது செல்லுபடி ஆகும். அதற்குள், அவர்கள் கொழும்பிலிருந்து தூத்துக்குடி வர வேண்டும்.

 இக்கப்பல் சேவை துவக்க விழா, நாளை மாலை தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் நடக்கிறது. மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன், கொடியசைத்து, கப்பலை இயக்கி வைக்கிறார். இச்சேவை மூலம் இந்தியா-இலங்கை நாடுகளிடையே கலாசாரம், பண்பாடு, சுற்றுலா, வணிகம் மேம்படும்.

No comments:

Post a Comment