Thursday, February 27, 2014

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்!

அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல் ரஹீம் உட்பட 15 பேர் ஈடுபட்டு வரும் செய்தியோடு தொடர்புடைய சில விபரங்களை தமிழக மக்கள் அறிந்து கொண்டால், இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்.
நம் நாட்டின் சிறைச்சாலைகளில், விகிதாச்சார அடிப்படையில் அதிகமாக இருப்பது முஸ்லிம்கள் மட்டுமே என்ற ஒரு அறிக்கையை நீதிபதி சச்சார் கமிட்டி இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் வெளியிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கண்ட அதே நிலை தொடருவதை மனித உரிமை ஆர்வலர்  பேராசிரியர். அ. மார்க்ஸ் போன்றவர்கள் உறுதிபடுத்துகிறார்கள்.
சென்ற தி.மு.க ஆட்சியில் கலைஞர் அவர்களுடைய தலைமையிலான அரசு அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டுகள் கழித்திருந்த சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்தது. இன்னும் ஒரு படி மேல் சென்று - மதுரை லீலாவதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொடூர குற்றவாளிகளை 8 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழித்திருந்த போதும் அவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
ஆனால், விடுதலை ஆவதற்கு முழு தகுதிகள் முஸ்லிம்கள் சிறைவாசிகளுக்கு இருந்தும் கலைஞர் அரசு இவர்களை விடுதலை செய்ய ஏனோ முன்வரவில்லை. அதற்காக புதிதாக சில காரணங்களை முன் வைத்தார்கள். அந்த காரணங்கள் அனைத்தும் சட்டத்தில் இடம் பெறவில்லை.
இத்தனைக்கும் கோவை உட்பட பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அவை அனைத்தையும் மத பிரச்சினைகளால் ஏற்பட்ட மோதல்கள் அல்ல என்றே தங்களுடைய தீர்ப்புக்களில் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் நடைபெறாத விடுதலை ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சியில் நடக்குமா என்ன? என்ற கேள்வியை கொண்டே முஸ்லிம்கள் மௌனம் காத்து வந்தனர்.
ஆனால் சமீபத்தில் ஜெயலலிதா அவர்களுடைய அரசு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் மற்றும் ஆறு நபர்களுடைய விடயத்தில் எடுத்திருக்கும் முடிவை தமிழக மக்கள் அதிகமானோர் ஆதரிக்கும் பட்சத்தில் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்கள் மீதும் கருணை காட்டப்பட்டால் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த நன்றி உணர்வோடு பார்க்கும் அல்லவா ?
சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் மிக சாதாரண வருமானங்களை கொண்டவர்களாகவும், இன்னும் சில பேர்  தினக்கூலிகள் என்பதும், அவர்களை நம்பித்தான் அவர்களின் குடும்பங்கள் வாழ்கிறார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளலாமே..
உண்ணாநிலை போராட்டத்தை தொடர்ந்துள்ள தடா. அப்துல் ரஹீம் அவர்கள் 13 ஆண்டுகளுக்குப்பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தன் வாழ்கையின் இளமை பகுதியை சிறையிலேயே கழித்தவர். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுதலை பெற்றவர். தன்னை போன்றே சிறைச்சாலைகளில் இருக்கும் மற்ற சிறைவாசிகளும் விடுதலை பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவராக இருந்து களமாடி வருபவர். இவர் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலை போராட்டத்தை நீதியின் முன் நம்பிக்கை கொண்ட மக்கள் யாவரும் ஆதரித்திட வேண்டும். குறிப்பாக இயக்கங்களாக பிரிந்து கிடக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை கடந்து சகோ. ரஹீம் அவர்களுக்கு பின்னால் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்யும் விடயத்திலாவது ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
இவரை போன்று சிறையில் இருக்கும் அப்பாவி சிறைவாசிகளை அவர்கள் சிறையில் இருந்த காலத்தை கணக்கில் கொண்டு நம் தமிழக அரசு விடுதலை செய்திட்டால், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை போன்று சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்களின் குடும்பங்கள் அனைத்தும் ஆனந்த கண்ணீரில் மிதக்கும் அல்லவா ?
ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். ஆனால், இன்று எத்தனை முஸ்லிம்கள் 16 ஆண்டுகள் கடந்தும் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்கள் என்பதை நேர்மையான உள்ளத்தோடு தமிழக மக்களாகிய நாம் சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம். 
சிறையின் ஒரு நிமிடமும் - நரக வாழ்வின் ஒரு பகுதியே என மகாத்மா காந்தி அவர்கள் குறிப்பிட்டதை நினைவில் கொண்டு, சிறைவாசம் என்ற இக்கொடுமையை களைய நம்மால் முடிந்த உழைப்பை செய்ய முன் வருவோம். வாருங்கள்! வாருங்கள்!!
- பூவை அன்சாரி

 http://inneram.com/opinions/readers/5357-innocent-muslim-inmates.html

Saturday, February 22, 2014

சவூதியில் தொலையாத ஆடுகள்

சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டை தமக்கு தரச்சொல்லி கேட்க, 

அவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆடுகள்' என்று கூறி தரமறுக்க, 

அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட கேட்க... 

அவரோ... '200,000 ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை விற்க தரமாட்டேன்' என்று கூற, 

அந்த சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் யாரும் உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் பயம் கொள்கிறீர்?' என்று வறுபுறுத்த, 

அதற்கு அந்த முஸ்லிம் சகோதரன் கூறியவார்த்தை... 'அல்லாஹ் எங்கு சென்றான்... 

அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா... 

அவன் நம்மை பார்க்கிறானே... " என்று பதில் கூறி ஆட்டை தர/விற்க திடமாக மறுத்துவிடுகிறார். 

இது பற்றிய காணொளி யூ ட்யூபில் வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது. 

அல்ஹம்துலில்லாஹ்.



ஆம்..! அந்த சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் 200,000 சவூதி ரியால் பணத்தை அந்த சகோதரனுக்கு பரிசாக கொடுத்துள்ளது. 

மாஷா அல்லாஹ். 

இன்னொரு இடத்தில் 20,000 சவூதி ரியால் வெகுமதி கிடைத்துள்ளது. 

மேலும் 20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் கிடைத்துள்ளது.


அல்லாஹ் தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான்.

"(அல்லாஹுவை அஞ்சினால் )அவர் எண்ணியிராத விதத்தில் வாழ்வாதரங்களை அல்லாஹ் வழங்குவான் எவர் அல்லாஹுவின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன் "(63 - 3 )

இறைவா..! வறுமையிலும் இறையச்சத்துடன் கையூட்டு பெறாமல் பொய் சொல்லாமல் நேர்மையாக வாழ்ந்த இந்த சகோதரனை போல்... உன்மீதான அச்சத்தை எனக்கும் அதிகப்படுத்துவாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
 
 
Thanks to kalam kathir
abu dhabi 

Thursday, February 20, 2014

வேண்டுமென்றே சுட்ட போலீஸ்,முஸ்லிம் சிறுவன் படுகாயம்.

சென்னை நீலாங்கரை அருகே கைதான சிறுவன் தமீம் அன்சாரி மீத் காவல்துறை அதிகாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் பொய்யான தகவல் அளிக்கப்பட்டதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
"சென்னை நீலாங்கரைக்கு அருகேயுள்ள வெட்டுவாங்கேணியில் ஒரு கோவிலின் உண்டியல் திருட்டு போனது சம்மந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற 14 வயது சிறுவனை விசாரணைக்காக கடந்த ஜனவரி 7ம் தேதி அழைத்துச் சென்ற நீலாங்கரை காவல் நிலைய போலீசார், கோவில் உண்டியலை திருடிய குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி கடுமையாக மூன்றாந்தரச் சித்திரவதைகளைச் செய்துள்ளனர்.
இரண்டு போலீஸாக தொடைகளில் ஏறி நின்று கொள்ள, கிரைம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சிறுவன் அன்சாரியின் வாயில் வெறும் துப்பாக்கியை நுழைத்து மிரட்டி விட்டு, பின்னர் அவன் கண்ணெதிரே துப்பாக்கியில் குண்டொன்றை பொருத்தி வயிறு, நெஞ்சு, வாய் என பல இடங்களில் துப்பாக்கியை வைத்து மிரட்டி விட்டு, கழுத்தில் வைத்து மிரட்டியபோது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு முன் கழுத்தில் நுழைந்து பின் கழுத்து வழியாக வெளியேறியுள்ளது.
இத்தகைய கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது அதற்குரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், பணி இடைநீக்க உத்தரவோடு, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 388வது பிரிவின் கீழ் மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவு, கொடூரமான காயத்தை ஏற்படுத்துதல்; இதற்கு தண்டனையாக சாதாரண சிறைவாசம் அல்லது வெறும் ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையுடன் குற்றவாளியை விடுதலை செய்து விடுதல் என்பதாக உள்ளது.
காவல்நிலைய வன்முறை மற்றும் கொலை வழக்குகளில் ஆர்.டி.ஓ., மாஜிஸ்ட்ரேட் விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளானவர் உயிருடன் இருந்தால் முதலில் அவரும், அவரது குடும்பத்தினரும், சாட்சிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்தும் சிறுவன் தமீம் அன்சாரி வழக்கில் இவையெல்லாம் மிக காலதாமதமாக நிகழ்ந்துள்ளன.
இது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பேரம் பேசவும், மிரட்டி ஒப்புதல் பெறுவதற்குமே வழி வகுக்கும். இந்த வழக்கிலும் இப்படி நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இச்சூழலில் தனது மகனை ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்; இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுவனின் தாய் சபீனா பேகம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 12ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலாங்கரை ஆய்வாளர் பாஸ்கர் காவல்துறை சார்பில், "சிறுவன் தமீம் அன்சாரி உணவு உண்டு விட்டு தரையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தனது துப்பாக்கியைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு உறையினுள் வைத்தபோது துப்பாக்கி தவறி கீழே விழுந்து விட்டது. அப்போது அதிலிருந்த குண்டு சிறுவனின் கழுத்தில் பாய்ந்து காயம் ஏற்படுத்தியது' என்று பொய்யான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சட்ட நெறிமுறைகளைப் பேணாமல், மனித உரிமை மீறலில் ஈடுபட்டு, வன்முறைத்தனமாக விசாரணை நடத்தி தமீம் அன்சாரி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை காப்பாற்றும் நோக்கில் போலீசாரின் மேற்கண்ட விளக்க அறிக்கை அமைந்துள்ளது.
* காவல்துறையின் இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
* இந்த சம்பவத்தில் வெறும் 1000 ரூபாய் அபராதத்துடன் குற்றவாளி விடுதலையாகி விடும் வாய்ப்புள்ள 388வது பிரிவில் வழக்குப் பதிவு செய்திருப்பதை நீக்கி விட்டு, கொலை முயற்சி மற்றும் சிறப்பு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை மாற்றி, இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
* இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஏனைய காவல்துறை அதிகாரிகளுக்கு படிப்பினையாக இருக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜுக்கு அதிகப்பட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
* இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால், "துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்தது' என்று காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவுக்கு புறம்பான அறிக்கையை நீதிமன்றம் ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.
* இந்த சம்பவத்தில் ஆர்.டி.ஓ. விசாரணையை மாற்றி நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
* தமீம் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையான ஒரு லட்ச ரூபாய் போதுமானதாகாது என்பதால் இழப்பீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும்.
* ஆய்வாளர் புஷ்பராஜை காப்பாற்றும் முயற்சியை கைவிட்டு சட்டப்படி அவர் மீது கடும் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை முன் வர வேண்டும்.
* தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ச்சியாக காவல்துறை வன்முறைகளை கண்டித்தும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தும் வருகிறார். இந்நிலையில் குற்றவாளியை காவல்துறை காப்பாற்ற முயற்சிப்பது முதல்வரின் விருப்பத்திற்கு மாற்றமானதாகும் என்பதை காவல்துறை தலைமை உணர வேண்டும்.
என்பன போன்ற கோரிக்கைகளையும், கண்டனத்தையும் பதிவு செய்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று (20-02-2014) பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நீதிக்குப் புறம்பான காவல்துறையின் போக்கை கண்டித்தும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேரா. அ. மார்க்ஸ் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தமீம் அன்சாரியின் வழக்கில் ஆஜராகி வருபவருமான சங்கர சுப்பு ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட சிறுவனான தமீம் அன்சாரியும் தனக்கு நேர்ந்த சித்திரவதைகள், துப்பாக்கிச் சூடு நடந்த விதம் குறித்து செய்தியாளர்களிடம் நேரடியாக வாக்குமூலம் அளித்தான்.
இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளான ஃபிர்தவ்ஸ், அபு ஃபைஸல், முஹம்மது ஷிப்லி, முஹம்மது முஹ்யித்தீன், சிராஜ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 http://inneram.com/news/tamilnadu/5269-fake-report-to-court.html

Monday, February 10, 2014

கூண்டுக்கிளி...

சமீபத்தில் முடிவெட்ட சலூனுக்கு சென்றிருந்தேன். எனக்கு வழக்கமாக முடிவெட்டும் தலித் சகோதரர்(அவரை விட்டால் வேறு யார் வெட்டுவார்?) தருமபுரி சாதி கலவரத்தை பற்றி பேச்சு கொடுத்தார். எங்களிடையே நடந்த சம்பாஷனை இது.

"எங்கள்ட்ட முடிவெட்ட வந்தா, நாங்க ஜாதி பார்ப்பதில்லை. அனைவரையும் சரிசமமா மதிக்கிறோம். சேவை செய்கிறோம். ஆனால் அவர்கள் எங்களை மனுஷனாவே மதிப்பதில்லை. எங்க கடை ஓனர் ஒரு பாய். தங்கமான மனுஷன். வீட்டில் எந்த விசேசம் என்றாலும் எங்களை முதலில் கூப்பிட்டு அவரே விருந்து பரிமாறுவார். ஆனா உயர்ந்த ஜாதி ஹிந்துக்கள் எங்கள உள்ளாரவே நுழைய உட மாட்டாங்க. ஜாதிய ஒழிச்சாத்தான் இந்த நாடு உருப்படும்”.

"ஜாதி என்ன மூட்டைப்பூச்சியா மருந்தடிச்சு ஒழிப்பதற்கு?. எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களால் ஒழிக்கவே முடியாது”.

"அப்ப எண்ணன்னே பன்றது?”.

"ஜாதியை விட்டு வெளியேறுங்கள்" .

"அதெப்படிண்னே”?

"நாங்க முஸ்லிம்க எப்படி வெளியேறினோம்.?. அப்படி”.

அதற்குப் பிறகு நன்பர் பேசவில்லை. ஏதோ சிந்தனையில் மவுனமாகிவிட்டார்.
-----------

ஒரு நசுக்கப்பட்ட சகோதரனை முப்பது நிமிடங்களில் சிந்திக்க வைத்து விட்டேன். கூண்டுக்கிளியின் கதவு திறக்கப்பட்டு விட்டது. இனி சுதந்திர வானில் அது சிறகடித்து பறப்பதை, இன்ஷா அல்லாஹ் எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது.

ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு கூண்டுக்கிளியின் கதவை திறந்து விடுவேன் என்று சபதமெடுத்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் மோடி மஸ்தான் கும்பல் மாயமாய் மறைந்துவிடும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இனி இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் மானம் மரியாதையுடன் வாழவேண்டுமென்றால், கூண்டுக்கிளியின் கதவை உடைப்பதை தவிர வேறு வழியே இல்லை.

சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.



வாசகர் கருத்து

Sunday, February 9, 2014

யுவன் சங்கர் ராஜா,இஸ்லாத்தை தழுவினார்.இளையராஜா முழு சம்மதம்.

இஸ்லாம் மதத்தை தழுவிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,  தந்தை இளையராஜாவுக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடு என்று வந்த செய்தி வதந்தி என கூறியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா, "நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். நான் இவ்வாறு மதம் மாறியதற்கு என் குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நான் மூன்றாவதாக இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ததாக வந்த செய்தி வெறும் வதந்திதான். மேலும் என் தந்தை இளையராஜா எனக்கு எதிராக உள்ளார் என்று வந்த செய்தியும் வதந்தி தான்" என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.


அவர் தந்தை இளையராஜாவுக்கும்,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நேர்வழி கிடைக்க துவா செய்வோம்.


அமெரிக்காவில் அதிரையர் மரணம்,நெய்னா முகமது

http://adiraipost.blogspot.com/2014/01/blog-post.html

http://adiraipost.blogspot.com/2014/01/blog-post_27.html

http://adiraipost.blogspot.com/2014/01/blog-post_31.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!