Friday, July 27, 2012

அமெரிக்காவிலேயே இந்தக் கதை


ஹோட்டல் அறைகளில் சுகாதாரம் எப்படி இருக்கிறது என்று அமெரிக்காவின் பிராந்தியங்களில் ஆராய்ச்சி செய்தார்கள்.ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே நீல் இந்த ஆய்வு முடிவுகளை நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஹோட்டல் அறைகள் என்பது ஓரிரு நாள்களுக்கு மட்டுமே தங்குவதற்காக விருந்தினர்கள் வந்துபோகும் இடம்தான்அங்கு மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தைப் போல கிருமி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்ஆனாலும் நாம் பார்க்கும்போது தூய்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும் ஹோட்டல் அறைகளில் நமக்கே தெரியாத ஆபத்துகள் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு புலப்படுத்துகிறது. (அமெரிக்காவிலேயே இந்தக் கதை என்றால் நம்ம ஊரு ஹோட்டல்களை நினைத்தால்....ஆத்தாடி!)

எல்லா அறைகளிலும் கதவு கைப்பிடிகளிலும் டி.வி. ரிமோட்டுகளிலும் கிருமிகள் அதிகம். எந்த அளவுக்கு என்றால் - அந்த அறையில் உள்ள டாய்லெட் இருக்கை விளிம்புக்கு அடியில் இருப்பதை விட! இன்னொரு இடமும் இருக்கிறது. அது படுக்கைக்கு அருகிலேயே இருக்கும் பெட்ரூம் ஸ்விட்ச்தான் அது. ஹோட்டல் அறையில் உள்ள டி.வி. ரிமோட்டுகள் அசுத்தமானவை என்றால் அதை எதனுடனாவது ஒப்பிட வேண்டும் அல்லவாவீடுகளில் இருக்கும் டி.வி. ரிமோட்டுகள் அளவுக்கு அசுத்தமானவை என்கிறது ஆய்வு. அதாவது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதில் ஆயிரக்கணக்கில் குடியிருக்கின்றன.

நல்ல ஸ்டார் ஹோட்டல்கள் என்றால் அறையை தினமும் சுத்தம் செய்வார்களேஅப்படியுமா கிருமிகள் வந்துவிடுகின்றன என்று சிலர் கேட்கக்கூடும். அதற்கும் இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கேட்டி கிர்ஷ் பதில் வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு அறையையும் 30 நிமிஷங்களுக்குள் சுத்தப்படுத்துகிறார்கள். படுக்கை விரிப்புகள்தலையணை உறைகள்போர்வைகள் ஆகியவற்றை தோய்க்க எடுத்துக்கொள்கிறார்கள். பாத்ரூம்டாய்லெட் உள்பட அறை முழுவதையும் "மாப்புபோட்டுத்தான் சுத்தப்படுத்துகிறார்கள். அதற்குப் பயன்படுத்தும் தண்ணீரில்தான் விசேஷமே அடங்கியிருக்கிறது. ஏதாவது ஓரிடத்தை முதலில் மெழுகும்போதே அதில் ஆயிரக்கணக்கான கிருமிகள் தொற்றிவிடுகின்றன. அதையே மீண்டும் மீண்டும் நீரில் நனைத்து மெழுகுகிறார்கள். மாப்பை அவர்கள் நல்ல நீரில் சுத்தம் செய்துஅழுக்குத் தண்ணியை ஹோட்டல் அறையின் கழிவுநீர்ப்பாதையில் கொட்டிய பிறகு அவர்கள் எடுத்துவரும் தள்ளுவண்டிக்கு இடம்பெயர்கின்றன கிருமிகள். அங்கு மட்டுமல்லாது பக்கெட்டிலும் மாப்பின் கைப்பிடியிலும் அடிப்பாகத்திலும்இண்டு இடுக்குகளிலும் இடம்பிடித்துவிடுகின்றன.

இதனால் கிருமிகள் எந்தக் குறையும் இல்லாமல் அந்த ஹோட்டலிலேயே வாசம் செய்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கே தங்குபவர்களின் பெட்டிகள்பைகளில் ஏறி அவர்களுடைய ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றன. ஹோட்டலில் தங்குகிறவர்கள் அனைவருமே பாதிக்கப்பட வேண்டுமே என்று கேட்கலாம். அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்வரை கிருமிகள் அடக்கியே வாசிக்கும். சக்தி குறைந்தால் போட்டுப் பார்த்துவிடும்!

Tuesday, July 24, 2012

அனைத்திலும் ஜோடி
விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125
விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.
ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.
இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.

கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி

மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்-) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்- பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம் உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்- பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்- (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்- இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்- அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. அல்குர்ஆன் 22:5
பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்- பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்- பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்- பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்- பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். அல்குர்ஆன் 23:14
இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது 'பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் இரண்டு மூன்று மாதங்கள் அவற்றுக்கான வடிவத்தை பெருவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.
இதைத் தான் 'பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது- அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66
உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.
உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகிறன்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்னபிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.
இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உறுமாகிறது.
அதாவது அறைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அதே வார்த்தைகளைச் சுற்றி வளைக்காமல் நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்- ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது- மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர்ஆன் 25:53
இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்- அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா- ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது- மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்- மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது- அதை அவை மீறமாட்டா. அல்குர்ஆன் 55:19-20.
திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியருப்பதாகக் கூறுகிறது.
இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி தெரியும்?.
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

அனைத்திலும் ஜோடி

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்- இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்- அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3
'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்- இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்- மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்- இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்' (என்று இறைவன் கூறுகிறான்). அல்குர்ஆன் 20:53
பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். அல்குர்ஆன் 36:36
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். அல்குர்ஆன் 51:49
திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.
தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்.
தூவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.
அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்த சொல் இல்லை, இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பெருவெடிப்பு கொள்கை

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30
இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்து என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன.
திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.

சூரியனும் கோள்களும்

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்- நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள் பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான் இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான் (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2
'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான்- இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்' என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன- அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்- இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்- அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது- இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது- இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்- அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்- இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்- சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது- (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்- மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5
சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.
பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.
இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது- சூரியனையும் சுற்றுகிறது- தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.
பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.
ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல- ஓடிக் கொண்டே இருக்கின்றது- அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.
இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.
இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்தையல்ல- கடவளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.

ஓரங்களில் குறையும் பூமி

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்- அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் 13:41
எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்- நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? அல்குர்ஆன் 21:44
நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.
எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.
தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். 'நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), 'பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்' (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது- அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு- நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 16:68-69
இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.
உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.
இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள். தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனா. இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.

Monday, July 23, 2012

திறப்போம் விரைந்து,பெறுவோம் அல்லாஹ்வின் அன்பை!


''நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாகஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். புகாரி: 1957

''ஆரம்ப நேரத்தில் (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடையஅடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்'' என்று அல்லாஹ்கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி)அறிவிக்கிறார். நூல்: திர்மிதி.

''ஆரம்ப நேரத்தில்> (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடையஅடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்'' என்று அல்லாஹ்கூறுவதாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய விதம் நோன்பு துறந்துசுன்னத்தை ஹயாத்தாக்கிய நற்செயலை செய்ததாகவும்> அல்லாஹ்வின்விருப்பத்திற்குரிய அடியார்களில் ஒருவராகவும் ஆகமுடியும்.

நோன்பு துறப்பதை அதன் நேரத்தை கடக்க விடாமல் சரியான நேரத்தில் துறப்பவர்கள் நன்மையில் நீடிப்பார்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் அதை அலட்சியம் செய்யாமல் நன்மையில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற நற்சிந்தனையில் நோன்பு துறப்பதை விரைவு படுத்தி அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார்களில் ஒருவராக நம்மை ஆக்கிக் கொள்ள தயார் படுத்துவோமாக !

கணவருடன் எரிக்க முயற்சி


மற்றொரு நிகழ்சியையும் பார்ப்போம். அவுரங்கஜெபுக்கும் பார்ப்பனர்களுக்கும் நடந்த உரையாடல்

"என்ன நடக்கிறது இங்கே?"

"அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டான்"

"அதற்காக "

"அந்த பெண்ணும் அவனுடன் இறக்க வேண்டும்"

"சரி"

"அவள் மறுக்கிறாள்"

"அதனால்"

"நாங்கள் அவளை கணவருடன் எரிக்க முயன்று கொண்டிருக்கிறோம்"

"இது படுகொலை"

"இல்லை, இது எங்களின் பண்பாடு,மதச்சடங்கு"

"காட்டுமிராண்டித்தனம்"

"எங்கள் மதச்சடங்கைத் தடுக்க,விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை"

தொடர்ந்து படிக்க: http://generationneeds.blogspot.in/2012/07/blog-post_20.html
வோட் லிங்க்: http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1175531


Saturday, July 21, 2012

ஏழைகளை நேசிப்போம்,இறைவனுக்காக


''நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசுவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கும் படி தூண்டவுமில்லை. ஆகவே, இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் வடியும் சீழைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக் கூறப்படும். அதனைக் குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் புசிக்க மாட்டார்கள்''
 
''ஜாக்கிரதை! நீங்கள் அநாதைகளை கண்ணியப்படுத்து வதில்லை. ஏழைகளுக்கு உணவளிக்கும் படி தூண்டுவதும் இல்லை. பிறருடைய வாரிசுப் பொருளைப் பேராசையுடன் விழுங்குகின்றீர்கள். மேலும், நீங்கள் மிகவும் அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள்'

அல்குர்ஆன் 

Tuesday, July 17, 2012

வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது


புனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை.
 
உண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். நோன்பானது உடல் உள, ஆன்மிக ரீதியாகவும் முஃமின்களுக்கு பயன் அளிப்பதனை, பல் நன்மைகளை வழங்குவதனை காண்கின்றோம்.
 
புனித நோன்பு பசியின் கொடுமையை, வறுமையின் வன்மையை ஒவ்வொருவருக்கும் மானசீகமாக, செயல்முறையில் உணர்த்தி நிற்கும் பாங்கு எவ்வளவு அற்புதமானது? பசியின் ருசியை அறியாது தாகத்தின் கசப்பை உணராது சுக போகத்தில் வாழ்ந்த ஒருவன் எல்லா மனிதர்களும் தன்னைப் போன்றே வாழ்கின்றார்கள் என்று நினைக்கலாம். ஆனால், நோன்பு இத்தகைய மனிதனுக்கும் பல உண்மைகளை நிதர்சனமாக உணர்த்தவல்லதாக அமைகின்றது.
 
உண்மையான சமவுடைமைக்கும் பூரண சமத்துவத்திற்குமான தெளிவான வெளிப்பாடாக நோன்பு இருக்கின்றது என்றால் அது மிகைப்படக் கூறியதாக அமையாது. அல்லாஹ் நோன்பை அறிமுகப்படுத்தி அனைவருக்குமான வரியாக விதித்துள்ளான். இந்த வரியை மாட மாளிகையில் வாழும் குபேரனும் செலுத்த வேண்டும். குடிசையில் வாழும் பாமர ஏழையும் கொடுக்க வேண்டும்.
 
காய்ந்த குடல்களை, காலியான வயிறுகளை, பசியின் அகோரத்தை தணித்துக் கொள்ளத் துடிக்கும் ஜீவன்களை அனைவரும் நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது. நோன்பு உள்ளம் உருகி, மனம் கசிந்து, ஏழைகளின் கண்ணீர் துடைக்க வேண்டும் என்ற உணர்வு எல்லோர் உள்ளங்களிலும் பிரவாகம் எடுக்க புனித நோன்பு வழி அமைக்கின்றது.
 
நபி யூஸுப் (அலை) அவர்கள் எகிப்து நாட்டின் வளங்களுக்கும் நிதித்துறைக்கும் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் அதிகம் நோன்பு நோற்று வந்தார்கள். இதற்கான காரணம் அவர்களிடம் வினவப்பட்ட போது அவர்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்தது.'நான் சாப்பிட்டு பசியாறிய நிலையில் இருந்தால் ஏழையின் பசியை மறந்து விடுவேனோ என்று பயப்படுகின்றேன். அதனால் அதிகம் நோன்பு நோற்று வருகின்றேன்' என்றார்கள்.
 
புனித ரமழானில் நாங்கள் அனுஷ்டிக்கும் நோன்பு சமூகத்தில் உள்ள ஏழைகள், அநாதைகள், அகதிகள் போன்றோர் மீது எங்களில் கருணை பிறக்க வழியமைக்க வேண்டும். அது எங்களில் ஈகையை வளர்க்க வேண்டும். நபி(ஸல்) அவர்களும் ஏனைய காலங்களை விட ரமழானில் அதிகமாக தானதர்மங்களை செய்பவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
 
ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கொடை கொடுப்பதில் மனிதர்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். குறிப்பாக அன்னார் ரமழானில் மிகக் கூடுதலாக வாரி வழங்கும் தன்மை படைத்தவர்களாக இருந்தார்கள் என அறிவிக்கின்றார்கள் நபித்தோழர்கள்.
 
'தர்மத்தில் சிறந்தது ரமழானில் வழங்கப்படும் தர்மமாகும்' என்றும் நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
 
சமூகத்தில் அனாதரவற்றோரின் அவலங்களை நினைத்துப் பார்ப்பது, அவர்களின் துயர் துடைக்க முடியுமான வழிகளில் முனைப்புடன் செயற்படுவது ஒரு பொறுப்பான சன்மார்க்கக் கடமையாகும் என்பதனை நாம் உணராமல் இருக்கக் கூடாது.
 
வறுமை மிகவும் கொடியது. அதனால் விளையும் ஆபத்துக்கள் பயங்கரமானவை.
 
வறுமையானது ஈமானுக்கே சவால் விடக்கூடியதாகும். பயங்கர வறுமையானது ஒருவனின் ஈமானையே பறித்து விடாது என்று கூறுவதற்கில்லை. இதனால்தான்
 
'வறுமையானது குப்ரையும் ஏற்படுத்திவிடக் கூடியது' என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
 
குப்ரிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபியவர்கள் அதனுடன் இணைத்து 'பக்ர்' என்ற வறுமையில் இருந்தும் பாதுகாப்புத் தேடியமை அவையிரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பையே எடுத்துக் காட்டுகின்றது.
 
வறுமையானது மனிதனின் ஈமானுக்கு மாத்திரமன்றி அவனது நடத்தைக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்தாக அமைவதுண்டு.
 
வறுமை ஒருவனை இழிசெயல்களுக்குத் தூண்டலாம். பண்பாடற்ற துர்நடத்தைகளுக்குத் தூண்டலாம். முறைகேடான விடயங்களில் ஈடுபடத் தூண்டலாம்.
 
'ஒருவன் கடன்காரனாகி விட்டால் பேசினால் பொய் சொல்லக் கூடும், வாக்களித்தால் மாறு செய்யக் கூடும்' என்று சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள்.
 
கொடிய வறுமையானது மனிதனின் சிந்தனையையும் அறிவையும் கூட பாதிக்க முடியும். இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: 'வீட்டில் உண்பதற்கு கோதுமை மா இல்லாத நிலையில் இருப்பவனிடம் சென்று ஆலோசனை கேட்காதே'
 
ஏனெனில் வீட்டில் உண்ண உணவின்றி இருப்பவன் சிந்தனை சிதறி அறிவு கெட்ட நிலையில்தான் இருப்பான். இந்த அடிப்படையில்தான் ஒரு நீதிபதி பசியுடன் இருக்கும் போது தீர்ப்புகள் வழங்கக் கூடாது என இஸ்லாமியச் சட்ட அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
 
குடும்ப அமைப்பின் சீர்குலைவுக்கும் வறுமையானது பல வழிகளிலும் காரணமாக அமைவதுண்டு. ஆரம்பமாக திருமணத்திற்கே தடையாக அமையும் வறுமை பின்னர் குடும்பங்கள் சிதறுவதற்கும் சீரழிவதற்கும் எவ்வளவு தூரம் வழி கோலுகின்றது என்பதனை நாம் அறிவோம்.
 
இத்தகைய பேராபத்துக்களை விளைவிக்கக் கூடிய வறுமை, ஒரு சமூகத்தில் நிலவுவது எவ்வளவு பயங்கரமானது? என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தப் பாரதூரமான ஆபத்தை நீக்க முயல்வது எத்தகைய மகத்தான பணியாக, நன்மையைத் தரக் கூடிய அமலாக அமையுமென்பதை நாம் உணரத் தவறக்கூடாது.
 
சமூகத்தில் உள்ள அநாதரவானவர்களை அரவணைக்காதவர்கள் அநாதைகளைப் பராமரிக்காதவர்கள் மார்க்கத்தையே பொய்ப்படுத்துபவர்கள் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். இத்தகையவர்கள் தொழுபவர்களாகவும் நோன்பு நோற்பவர்களாகவும் இருந்தாலும் சரியே.
 
இஸ்லாம் அநாதைகள் விடயத்தில் கூடிய கரிசனை காட்டுகின்றது. ஸூறதுல் அன்பியாவின் 41 வது வசனம், ஸூறதுல் ஹஷ்ரின் 7வது வசனம், ஸூறதுல் பகராவின் 177, 215, 82, ஸூறதுன்னிஸாவின் 36வது வசனம் போன்ற பல அல்குர்ஆன் வசனங்கள் அநாதைப் பராமரிப்பின் அவசியம் பற்றி வலியுறுத்துகின்றன.
 
தீனைப் பொய்ப்பிக்கின்றவன் யார்? என்பதனை விளக்க வந்த ஸூறா அல்மாஊன்: ''அவன்தான் அநாதைகளைக் கடிந்து விரட்டுபவன்'' என்று கூறுகின்றது.
 
ஏழைகளை ஆதரிக்காதவனும் வறுமையை ஒழித்துக் கட்டத் தனது பங்களிப்பைச் செலுத்தாதவனும் தீனை உண்மைப்படுத்தாதவனாகவே கொள்ளப்படுகின்றான். மார்க்கத்தைப் பொய்ப்பிக்கின்றவனைப் பற்றி குறிப்பிடும் ஸூறா அல்மாஊன்:
 
''அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டவும் மாட்டான்''என்று கூறுகின்றது.
 
இங்கு, அல்லாஹுத்தஆலா தானும் ஏழைகளுக்கு உணவளித்து பிறரையும் அதன் பால் தூண்டி வறுமையை ஒழித்து பசியை விரட்டும் பணியில் ஈடுபடாதவரைப் பற்றியே குறிப்பிடுகின்றான். தனிப்பட்ட முறையில் தானும் ஏழைகளுக்கு உணவளிக்கும் அதே நேரத்தில் பிறரையும் பிறரையும் அதற்காகத் தூண்டி வறுமை ஒழிப்பு முயற்சியை ஓர் அமைப்பாக கூட்டாக மேற்கொள்ளும் விடயத்தில் ஒருவர் தனது பங்களிப்பை செலுத்தாத வரை மார்க்கத்தைப் பொய்ப்பிப்பவராகவே கருதப்படுகின்றார்.
 
அல்குர்ஆன் மற்றும் பல இடங்களிலும் இதே கருத்தை வலியுறுத்துகின்றமையைக் காண முடிகின்றது.
 
''நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசுவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கும் படி தூண்டவுமில்லை. ஆகவே, இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் வடியும் சீழைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக் கூறப்படும். அதனைக் குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் புசிக்க மாட்டார்கள்''
 
''ஜாக்கிரதை! நீங்கள் அநாதைகளை கண்ணியப்படுத்து வதில்லை. ஏழைகளுக்கு உணவளிக்கும் படி தூண்டுவதும் இல்லை. பிறருடைய வாரிசுப் பொருளைப் பேராசையுடன் விழுங்குகின்றீர்கள். மேலும், நீங்கள் மிகவும் அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள்'' என்றெல்லாம் அல்குர்ஆன் கண்டிக்கின்றது.
 
தான் தனிப்பட்ட முறையில் தனி மனிதன் என்ற வகையில் தன் மீதுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றினால் போதுமானது, சமூகக் கடமைகளை நிறைவேற்றும் தேவை தனக்கில்லை என நினைத்துச் செயற்படுவோருக்கு இந்த வசனங்கள் பெரும் சாட்டையடி கொடுக்கின்றன.
 
உண்மையில் அநாதைகளை அரவணைக்கத் தூண்டாத வணக்கங்கள், ஏழைகளை ஆதரிக்கத் தூண்டாத இபாதத்கள் போலியானவையும் பகட்டானவையுமாகும். இத்தகைய வணக்கங்களால் நன்மையன்றி கேடே விளையும் எனக் கூறுகின்றது அல்குர்ஆன்.
 
நாம் நிறைவேற்றும் தொழுகையும் அனுஷ்டிக்கும் நோன்பும் பிற வணக்கவழிபாடுகளும் எமது உள்ளங்களுக்கு பக்குவத்தையும் பண்பாட்டையும் வழங்கி சகோதர மனிதர்களுக்கு நன்மை செய்ய, நல்லது செய்ய தூண்டுபவையாக அமைய வேண்டும். அப்போதுதான் இபாதத்துகள் அர்த்தமுள்ளவையாக, நன்மை பயக்கக் கூடியவையாக அமையும்.
 
'எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும், எவர் (ஆடை கொடுத்தோ அல்லது குறைகளை மறைத்தோ) ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான். ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கின்றான்'
 
ஈகையினதும் கருணையினதும் மாதமான இந்த புனித ரமழானில் சமூகத்தில் உள்ள வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி இந்த நபிமொழி குறிப்பிடும் ஈருலக பாக்கியங்களை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முயல்வோமாக.
 

அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத், இலங்கை

Sunday, July 15, 2012

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

பர்மியர்களோடு நான் தபூக்கில் இருந்த போது நிறைய பழகி இருக்கிறேன். சொந்த தொழில் செய்வதில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். மியான்மரில் இவர்களுக்கு கொடுக்கப்படும் கொடுமைகளை கருத்தில் கொண்டு அகதிகள் அந்தஸ்தில் பல லட்சம் பேர்களை சவுதி அரசு பராமரித்து வருகிறது. அவர்களுக்கு அகதிகள் என்ற தனி அட்டை ஒன்றை கொடுத்து பர்மாவில் பிரச்னைகள் முடியும் வரை சவுதியில் குடும்பத்தோடு தங்க அனுமதிக்கப்பட்டள்ளனர். அந்த வகையில் பல பர்மிய நண்பர்களை பெற்றுள்ளேன்.

சுமார் 1500000 இலட்சம் முஸ்லி்ம்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இதில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பர்மியர்கள். மீதமானவர்கள் வங்காளிகள். இந்தியாவில் இருந்து சென்றவர்கள். தமக்கென தனியான மொழி கலாச்சாரங்களை கொண்டவர்கள். அராபிய மன்னன் அரகனினால் பலாத்காரமாக நாடுகடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள் வணிக கலம் நடுக்கடலில் விபத்துக்கு உள்ளானதனால் பர்மாவின் பக்கம் வந்து சேர்ந்தனர். பர்மிய பெண்களை மணந்து அங்கேயே கீழைத்தேய வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இது நடந்தது 9ம் நுற்றாண்டுகளில். மொகாலாய படைகள் தங்கள் எல்லைகளை விரித்த போது இவர்கள் அவர்களிற்கான வர்த்தக முகவர்களாக செயற்பட்டனர். இதன் பலனாக அதிகாரம் மிக்கவர்களாகவும், பணபலமிக்கவர்களாகவும் திகழ்ந்தனர். இது தான் இன்றைய தினத்தில் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. பர்மாவை காட்டி கொடுத்தவர்கள். பர்மாவின் செல்வங்களை அரேபியாவிற்கு சுரண்டி விற்றவர்கள், பர்மிய பெண்களை கற்பழித்தவர்கள் பலாத்காரமாக மணந்தவர்கள் போன்ற அரசியல் குற்றச்சாட்டுகளே இன்றைய இனவாத சங்காரத்தின் ஊற்றுவாய்கள்.


(அன்பை போதித்த புத்தர் வழி வந்த புத்த பிக்குகளா இவர்கள்?)

1950 களில் ரோகீங்கியா பிரதேசம் தனி பிரதேசமாக இனங்காணப்பட்டது. இதில் இந்திய வங்காள இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து காணப்பட்டனர். அராஜகமான தங்கள் இராணுவ அரசியல் இருப்பினை பேணிக்கொள்ள பர்மிய ஜெனரல்கள் ரோகீங்கிய முஸ்லிம்களிற்கு எதிரான இனவாத அரசியலை அதன் செயல்நெறிகளில் சுயமாக செயற்பட அனுமதியளித்தனர். பிக்குகள் சொல்லும் திசையில் சுடுமாறு போலிஸாரையும் பிக்குகள் காட்டும் பக்கத்தில் குண்டெறியுமாறு இராணுவத்தையும் பணித்தார்கள் இந்த பாசிஷ இராணுவ ஆட்சியாளர்கள். 

பர்மியா மலாய் முஸ்லிம்கள், பர்மிய சீன முஸ்லிம்கள் போன்றவர்கள் கவனமாக தவிர்க்கப்ட்டு இந்த ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டனர்.


(இந்த குழந்தைகள் அந்த பாவிகளை என்ன செய்தது? என்ன குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்?)

கூட்டாக பள்ளிவாசலில் தொழ முடியாது. பள்ளிவாசல் கட்ட முடியாது. மதரஸா நடத்த முடியாது. 

பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது.

இளைஞர்கள் போலிஸில் பதிவு செய்ய வேண்டும்.

மியன்மாரின் இரசாயன கழிவுகள் இவர்கள் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன.

கடல்களில் மீன் பிடிக்க முடியாது. 

1 ஏக்கரிற்கு மேல் விவசாயநிலங்களை வைத்திருக்க முடியாது.

அவசர பந்தோபஸ்து சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் தடுத்து வைக்க முடியும்.

பெண்கள் அவர்கள் சம்மதம் இன்றி கட்டாய குடும்ப கட்டுப்ப்பாட்டிற்கு உள்ளாக்கப்படுவர்.

கற்பழிக்கப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ வைத்திய சான்றிதழை பெறுவது குற்றம்.


(இந்த கோரத்தை செய்தது மனிதர்கள்தானா? அல்ல மிருகங்கள்)

இராணுவ அதிகாரிகள் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களை ட்ரக்குகளில் அள்ளி செல்வர். அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் முறைப்பாட்டாளர் பின்னர் பிணமாக்கபடுவார். 

பல ரோஹியான்கள் மியன்மார் இராணுவத்தில் கூலி வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆயுட்கால கொத்தடிமைகள். 


(சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை பிரியும் சோகமல்லவா?)

இவர்கள் இப்போது கண்ட இடத்தில் நாயை சுடுவது போல சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். வகைதொகையின்றி கற்பழிக்கப்படுகிறார்கள். உலக மீடியாக்கள் செய்தியாக சிலதை சொல்லி பலதை விட்டு விடுகின்றன. இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. அரபு நாடுகள் மௌனிக்கின்றன.
16.March.1997 - மண்டலாயின் முதல் மஸ்ஜித் தாக்கப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட பவுத்த கூட்டம் பள்ளிவாசலினுள் புகுந்து குரான் பிரதிகளை பற்ற வைக்கிறது. மஸ்ஜிதை நெருப்பிடுகிறது. பின்னர் உடனடியாக அந்த கூட்டம் முஸ்லிம் வர்த்தக மையங்களை சூறையாடுகிறது. அகப்பட்ட முஸ்லிம்களை போட்டு தாக்குகிறது. ஏன் கொலையும் செய்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளஞ்சிறுமியர் கற்பழிக்கப் படுகின்றனர். பெண்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றனர். இந்த அநியாயங்களை செய்தவர்கள் மியன்மாரிய இராணுவத்தினர் அல்ல. அங்குள்ள புத்த பிக்குகள். அவர்களே இந்த கொடூரங்களுக்கு தலைமை தாங்கினர். 100 பிக்குகள் கைது செய்ய்ப்பட்டு தேசிய வீரர்களாக பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர்.


(தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள். மற்றுமொரு காத்தான்குடி)

12.February.2001 - இம்முறை கலவரத்திற்கு ஆளான பிரதேசம் சிட்வே, மற்றும் டாவுன்கு. கேக் விற்பனையில் ஈடுபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேக் வாங்கி சாப்பிட்ட புத்த பிக்குகள் கும்பல் பணம் தருவதற்கு மறுக்கிறது. அவளுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட முனைகிறது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை தாக்க முற்படுகிறாள். அவள் உறவினர் உதவிக்கு விரைந்து அவர்களை விரட்டியடிக்கிறார். சில மணி நேர இடைவெளியில் தலைமை நாயக்க தேரர் தலைமையில் பிக்குகள் வந்து கலகம் செய்கின்றனர். அவர்கள் பின்னால் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். பற்றி எரிகிறது. நகரம். கொலை. கொள்ளை. சித்திரவதை. கற்பழிப்பு என எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது கும்பல். 200 முஸ்லிம்கள் வெறித்தனமாக கொல்லப்படுகின்றனர்.


(இந்த உடல்களை எல்லாம் கடலில் கலந்தால் கடலின் நிறம் கூட சிகப்பாக மாறி விடுமே!) 

15.May.2001 - தபூ பிரதேசம் கொளுந்து விட்டு எரிகிறது. முஸ்லிம்களிற்கு எதிரான துவேஷ பரப்புரைகள் பிக்குகளால் பன்சலைகளில் செய்யப்படுகின்றன. பன்சலை மணியை அடித்தவுடன் மக்கள் திரண்டு பிக்குகளை பாதுகாக்க முஸ்லிம்கள் மீது தாக்குதல் செய்யும் நிகழ்ச்சி நிரல் நாடு முழுதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தேவையான பொழுதுகளில் பன்சலை மணி அடிக்கப்படுகிறது. Han Tha மஸ்ஜிதுனுள் புகுந்த பவுத்த கூட்டம் அவர்களை அடித்து விரட்டுகிறது. பின்னர் பிக்குகள் கட்டளையிடுகின்றனர். ”முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது” என. அது சட்ட ரீதியற்ற ஆனால் அதிகாரமிக்க கட்டளையாக பர்மாவில் உருப்பெருகிறது. 


(பர்மிர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை விவரிக்கும் அந்த கால அராபிய எழுத்துருக்களைக் கொண்ட நாணயங்கள். இஸ்லாத்தின் அடிப்படையான 'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)

பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர். 

2012 June. இராணுவ ஒத்துழைப்புடன் முஸ்லி்ம்களி்ற்கு எதிரான அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கூட்டு கொலை, கூட்டு கற்பழிப்பு, கூட்டு சூறையாடல் என ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் குழுக்களாக இவை நிகழ்த்தி முடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் உள்நுழைய முடியாத இரும்பு திரைக்கு பின்னால் பல கொலைகளங்கள் உள்ளன.


கொத்து கொத்தாக இங்கே கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் சகோதரர்கள். முஸ்லிம் சகோதரிகள். பொஸ்னியாவை நினைவிற்கு கொண்டு வரும் கூட்டு கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்படுபவர்கள் முஸ்லிம் சகோதரிகள். ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. எகிப்தின் முர்ஸி பற்றி பெருமிதப்படும் இஹ்வான்கள் ஒரு அறிக்கையுடன் மியன்மாரை மறந்து விட்டனரா? கிலாபா கனவுகானும் ஹிஸ்பு தஹ்ரீர் தோழர்கள் ரத்தத்தினால் நிரம்பும் மியன்மார் பற்றி சிந்திக்க மாட்டார்களா. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா?

மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோக மயமானது. இங்கு காஷ்மீரின் கண்ணீர், காஸாவின் பஞ்சம், செச்னியாவின் அவலம், ஆப்கானின் இரத்தம், முள்ளி வாய்க்காலின் கொடூரம், ஈராக்கின் சோகம் என எல்லாமே கலந்து நிற்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின் “ த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் பர்மா” என டாக்குமெண்டரி தயாரிக்க பலர் உள்ளனர். ஆனால் கொல்பவர்களை தடுக்கவோ அல்லது கொல்லப்படுபவர்களை காக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு இறைவனைத் தவிர உதவ கூடியவர்கள் எவரும் இல்லை. அவர்களின் மரண ஓலங்கள் இன்றும் பல நாடுகளைக் கடந்தும் . நெடுந் தொலைவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சில வாரங்கள் முன்பு லண்டன் வந்திருந்த பர்மாவைச்சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ’’ஆங்க் சான் சூசீ ‘’ கூட ’’ரோகிங்னியா முஸ்லிம்கள் பர்மாவின் நிரந்தர பிரஜைகள் அல்ல’’ என்ற ரீதியில் தனது கருத்தை தெரிவித்தார். மேலும் ரோகிங்னியா முஸ்லிம்களின் படுகொலைகளை அவர் கண்டிக்கவுமில்லை,மாறாக நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.மிகவும் நுணுக்கமாக கையாளா வேண்டும்’’ என்றுமே குறிப்பிட்டார். இந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தற்போது உலகில் எந்த அரசும் தயாராக இல்லை.

தற்போதய பர்மிய முஸ்லிம்கள் எந்த அளவு பர்மாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை விவரிக்கும் பர்மாவில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமிய நாணயம்

எனவே தோழர்களே! தோழிகளே! உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த மக்களை நோக்கி திருப்பி விடுங்கள். ஜகாத் பணம், ஃபித்ரா பணம், அன்பளிப்பாக கொடுக்க நினைத்த பணம் அனைத்தையும் இந்த ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை போக்குவதாக இருக்கட்டும். பணம் கொழிக்கும் அரபு செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து வாழ்கின்றனர்.

"சீனா உலகத்தின் தாதா'வாக (வல்லரசு) நடந்து கொள்ள முயன்று வருகிறது. தனது நாட்டின் சக்தியை நிலைநாட்டிக் கொள்ளும் குறுகிய மனப்பான்மையுடன், வடகொரியா, பர்மா போன்ற மோசமான கொடுங்கோல் அரசுகளுக்குத் துணை நிற்கிறது. இந்தியாவும், சீனாவை அப்படியே காப்பி அடிக்க முயல்கிறது' என்கிறார் அமர்த்யா சென்.
"இந்தியா உலகளவில் செல்வாக்கற்ற நாடாக இருந்த காலங்களில் உலக நாடுகளுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுப்பதிலேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தோம். சீனா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இப்பொழுது ஆற்றல் பெற்றவுடன், ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, நமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறேம்'' என்கிறார் சென். “உலகின் மனிதாபிமானம் மிக்க தலைவர்களில் ஒருவரான, எனது இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மரின் கொலைகார ஆட்சியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் இணைந்து நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கிறார். இதனைப் பார்க்கும்போது, இந்தியாவின் விசுவாசக் குடிமகனான எனது இதயம் நொறுங்கி விட்டது'' என்று பேசியுள்ளார் அமர்த்யா சென். பர்மாவில் உள்ள கொடுங்கோலாட்சி பற்றியும் அங்கு உள்ள மோசமான மனித உரிமைச் சூழல் பற்றியும் இந்திய மக்களிடம் பொதுக்கருத்து சிறிதும் இல்லை என்கிறார் அமர்த்யா சென்.


வரும் ரமலானில் இந்த மக்களுக்காக அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். சவுதியில் ஜூம்ஆ பிரசங்கத்தில் சிரிய முஸ்லிம்களுக்காகவும் பர்மிய முஸ்லிம்களுக்காகவும் அதிகமதிகம் பிரார்த்திக்கப்படுகிறது. உங்களின் பிரார்த்தனையில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையான நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்த மக்களுக்கு உங்களால் ஆன சிறு உதவிகளையும் செய்ய மறக்காதீர்கள். 

பர்மிய முஸ்லிம்களும், ஈழத்து தமிழர்களும், சிரிய முஸ்லிம்களும் தங்களின் சொந்த நாட்டு பிரச்னைகளை சுமுகமாக முடித்து எல்லா வளமும் பெற்று சுகமாக வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இறைஞ்சி இந்த பதிவை முடிக்கிறேன்.

டிஸ்கி: இப்படி ஒரு பதிவை பதியச் சொல்லி வேண்டுகோள் விடுத்த குவைத்தில் உள்ள முபாரக்குக்கும், உடன் லிங்குகளை அனுப்பித் தந்த வாஞ்சூர் அண்ணனுக்கும், கைபர் தளத்துக்கும், விக்கி பீடியாவுக்கும் நன்றிகள்.


மேலும் விபரங்கள் அறிய

http://en.wikipedia.org/wiki/Rohingya_people

இந்த தளத்திற்கு சென்று உங்களின் கண்டனங்களையும் தெரிவியுங்கள்:


http://suvanappiriyan.blogspot.com/2012/07/blog-post_15.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!